ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ‘செல்வத்துக்கு ஒருவன் பாலமாக இருக்க வேண்டும்’
என்று கூறியுள்ளார். பாலத்தின் ஒருபுறத்தில் நீர் வந்துகொண்டிருக்கும்.
மறுபுறத்தில் வந்த நீர் வெளியேறிக்கொண்டே இருக்கும். ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்
நேர்மையான முறையில் பொருளைச் சம்பாதிக்கவும் அவ்வாறே பொதுப்பணிக்கென்று
அப்பொருளைச் செலவழிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அன்பர்களுக்கு
எடுத்துரைப்பார். இவர் ஒரு சமயம் தம்மிடம் பொருளைப் பற்றிய பிரச்சனை ஒன்று
வந்தபோது அதனைத் தீர்த்துவைத்த பாங்கு மனத்தைக் கவரும்.
தபோவனத்தில் படித்த பழைய மாணவர் ஒருவர் இரும்புக்கடை வைத்திருந்தார்.
திடீரென்று இரும்பு விலை ஏறியதால் கொள்ளை லாபம் வைத்து விற்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
இரும்பை முன்னைய விலைக்கு விற்றால் அதை வாங்கியவன் பெருத்த லாபத்தை அடைவான்.
இந்நிலையை எப்படி சமாளிப்பது என ஸ்ரீமத் சித்பவானந்தரைக் கேட்டான்.
சுவாமிஜியின் பதிலாவது: ஒருவனுக்கே லாபம் போகக்கூடாது; தற்பொழுது கூடியுள்ள
விலைக்கே இரும்பை விற்றுவிடு. வருகின்ற லாபத்தில் உனக்கு உரியதை எடுத்துக்கொள்.
அதற்குமேல் உள்ள லாபத்தைப் பொதுப்பணியை நன்முறையில் ஆற்றுகின்ற பல
நிறுவனங்களுக்குப் பிரித்து நன்கொடையாகக் கொடுத்துவிடு. அந்த லாபம் பலருக்கும்
பயன்பட்டால் அது ஈசுவர ஆராதனை ஆகும். வாணிகத்தில் இது போன்ற எதிர்பாராத வாய்ப்பு
அமையுங்காலத்தில் உனக்குப் பொருட்பற்று வாராதிருக்க இந்த முறையைக் கையாண்டுவா.
No comments:
Post a Comment