Wednesday, July 4, 2012

*வீரத் துறவி விவேகானந்தர் – பாகம் 6


(இந்த கட்டுரையின் முந்தைய 5 பாகங்கள் 24, 26, 28, 30.06.2012 மற்றும் 02.07.2012 ஆகிய தேதிகளில் பதிவேற்றப்பட்டுள்ளன.)

இரண்டாம் முறை மேல் நாட்டுப் பயணம்:
சுவாமி துரியானந்தர்
தாம் மீண்டும் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யும்பொழுது தலைசிறந்த யோகி ஒருவரை அழைத்துவருவதாக சுவாமிகள் அமெரிக்க சிஷ்யர்களுக்கு வாக்கு கொடுத்திருந்தார். தாம் கருதியவண்ணமே துரியானந்த சுவாமிகளையும், சகோதரி நிவேதிதையுடன் 1899ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கல்கத்தாவிலிருந்து கப்பலில் செங்கடல், மத்திரயத்தரைக்கடல் வழியாக லண்டன் போய்ச் சேர்ந்தனர். அவர் லண்டனில் தங்கியிருக்க வசிதிகளையெல்லாம் அன்புடன் செய்து வைத்தவர் சகோதரி நிவேதிதையின் அன்னையார் ஆவார். சகோதரி நிவேதிதையை சிலநாள் லண்டனில் இருக்கச் செய்துவிட்டு அமெரிக்க சிஷ்யகளுடன் அமெரிக்கா சென்றார்.
கலிபோர்னியா:
சுவாமி அபேதானந்தர்
ஏற்கனவே நியுயார்க் நகருக்கு வந்திருந்த அபேதானந்த சுவாமிகளுடன் துரியானந்த சுவாமிகளை இருத்திவிட்டு மேற்குப் பிரதேசம் புறப்பட்டார். கலிபோர்னியா மாகாணத்தின் பற்பல ஊர்களில் சுமார் நூறு உபந்நியாசங்களுக்கு மேல் செய்தார்


கலிபோர்னியாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
 சுவாமிகளின் சிஷ்யர்களுள் ஒருவர் கலிபோர்னியாவின் மலைப்பிரதேசத்தில் 160 ஏக்கர் பூமியை சுவாமியின் வசம் ஒப்புவித்தார். யோக சாதனம் பயிலுதற்காக அங்கு “சாந்தி ஆஸ்ரமம்” என்ற பெயரில் நிலையமொன்று நிறுவப்பட்டது. அமெரிக்காவிற்கு அது முற்றிலும் அவசியமானது.

சாந்தி ஆஸ்ரமம்
சான்பிரான்ஸிஸ்கோ நகரில் வேதாந்த சிரவணம் பண்ணிவைப்பதற்கும் சாந்தி ஆசிரமத்தில் சாதகர்களுக்கு யோகம் பயிலுவிப்பதற்கும் யோகீஸ்வரராகிய துரியானந்த சுவாமிகளை நியூயார்க் நகரிலிருந்து வரவழைத்தார்.

நிற்பவர்கள் - இடதுபுறத்திலிருந்து சுவாமி விவேகானந்தர், சுவாமி அபேதானந்தர், சுவாமி துரியானந்தர்.
சான்பிரான்ஸிஸ்கோவில் சுவாமிகள்
பாரிஸ் நகர சர்வமத மகாசபை:
ஐரோப்பா கண்டத்தில் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் உலகக் கண்காட்சியைச் சார்ந்து அனைத்து மதங்களின் உற்பத்தியை ஆராய்வதென மகாநாடு கூட்டினார்கள்.  சுவாமி விவேகானந்தரையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்பட்டிருந்தார். சொற்பொழிவுகள் அனைத்தும் பிரெஞ்சு மொழியில் நடைபெறுவதாயிருந்தன. எனவே அம்மொழியை கற்று 2 மாதத்தில் பிரசங்கம், சம்வாதம் செய்ய வல்லவரானார்.
ஒவ்வொரு மதங்களின் ஆரம்பத்தையும் வளர்ச்சியையும் ஆராய வேண்டுமென்பதே இந்த மகாநாட்டின் நோக்கம். பண்புடன் உருவெடுத்திருப்பதில் கிறிஸ்தவ மதத்துக்கு நிகரானது வேறு எதுவும் இல்லை என்று நிரூபிக்க கிறிஸ்தவர்கள் முயன்றனர். ஹிந்து மதத்தின் பல அம்சங்கள் அநாகரிகமாகத் துவங்கியவைகள் என்று எடுத்துக்காட்ட கிறிஸ்தவ நிபுணர்கள் முயன்றனர். சுவாமிகள் ஹிந்து மதத்தின் மகோன்னத வளர்ச்சியை சாஸ்திரபூர்வமாக விளக்கிக் காட்டியதை மறுக்க அவர்களுக்கு இயலவில்லை. எனவே இந்த மகாசபையிலும் ஹிந்துமத வளர்ச்சியே மேன்மையுற்று விளங்குவதாயிற்று.
கீழ்வங்காள விஜயம்:
சுவாமிகள் தலைமை மடத்திற்கு வந்து 2, 3 மாதங்களுக்கு முன்பே கீழ் வங்காளத்துக்கு விஜயம் செய்யவேண்டுமென்று அம்மாகாணவாசிகள் பலமுறை வேண்டினர். இங்கு அவர் வேதாந்தத்தின் மாண்பைப்பற்றி அரிய சொற்பொழிவுகள் இரண்டு நிகழ்த்தினார்.
உடல் உபாதை:
சுவாமிகளை வாட்டி வந்த ஈளைநோய் டாக்காவிலிருந்தபோது அதிகமாக அல்லல்படுத்தியது. பிறகு மலைப்பிரதேசமான அஸ்ஸாம் மாகாணத்தின் தலைநகர் ஷிலாங் சென்றால் சுவாசகாசம் குணமடையலாம் என்று கருதி அங்கே அழைத்துச் செல்லப்பட்டார்


ஷிலாங்கில் உடல்நிலை சரியில்லாதபோது
அஸ்ஸாம் மாகாணத்துக்கு அப்போது Sir H.E.A. Cotton என்பார் கவர்னராக இருந்தார். சுவாமிகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டிருந்தார். அவரை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். ஷிலாங்கில் இருந்த அரசாங்க டாக்டரைக்  கொண்டு சர் காட்டன் சுவாமிகளின் சுவாசகாசத்தை குணப்படுத்த முயன்றார். அது திருப்திகரமான பலன் அளிக்கவில்லை.
தேசிய காங்கிரஸ் கூட்டம்:
1901ஆம் வருடத்தின் இறுதியில் இந்திய தேசிய காங்கிரஸின் ஆண்டுக் கூட்டம் கல்கத்தாவில் நிகழ்வதாயிற்று. இந்தியாவில் உள்ள மாகாணங்கள் அனைத்திலிருந்தும் தேசாபிமானிகள், கல்விமான்கள் வந்திருந்தனர். கிட்டத்தட்ட அவர்கள் எல்லாரும் சுவாமி விவேகானந்தரைப் பற்றி அறிந்திருந்தனர். திட்டம் வகுத்து நடந்த காங்கிரஸ் கூட்டம் கல்கத்தா நகரில் நிகழ்வதாயிற்று என்றால் திட்டம் போடாது அந்நியோந்நியமாக சுவாமிகளின் முன்னிலையில் மற்றொரு சிறிய காங்கிரஸ் கூட்டம் நிகழ்வதாயிற்று எனலாம்.
புத்த கயை, காசி யாத்திரை:
புத்த மதத்தின் சார்பில் ஜப்பானில் சர்வமத மகாசபை ஒன்று கூட்டுவதற்கு அந்நாட்டு மக்கள் முயன்று வந்தனர். அந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க வேண்டுமென்று திரு. ஓதா, திரு. ஆகாகுரா என்ற இருவர் சுவாமிகளை மிக வேண்டினர். அதற்குத் திருவருள் சம்மதிக்கவில்லை என்று இயம்பினார். அவர்களைத் திருப்திபடுத்துதற்பொருட்டு அவர்களுடன் புத்தகயைக்கும், காசிக்கும் ய䮾த்திரை போய்வர சுவாமிகள் சம்மதித்தார். அவர் மனதில் சங்கற்பித்திருந்தபடியே 1902ஆம் வருடத் துவக்கத்தில் சுவாமிகள் புத்த கயைக்குச் சென்றார். ஆங்கு மடாலயம் ஒன்றுக்கு அதிரபராயிருந்தவர்க்கு சுவாமிகளின் வருகை ஆனந்தத்தை அளித்தது.  உலகப் பிரசித்தி பெற்ற விவேகானந்தரைத் தாம் நேரில் சந்திக்க வேண்டுமென்று மடாதிபதி எண்ணியிருந்தார்.
காசிக்கு சென்றபோது, சுவாமிகளால் ஏற்கனவே அங்கு அனுப்பப்பட்டிருந்த சிஷ்யர் கல்யாணானந்தர் அரிய முறையில் நோயாளிகளுக்கு மருத்துவப் பணிவிடைகள் செய்து வந்தததைக் கண்டு மகிழ்வுற்றார். சுவாமிகள் காசியில் தங்கியிருந்தபோது அறிஞர்கள் பலர் அவரை அணுகி காசி க்ஷேத்திரத்திலே ராமகிருஷ்ண மடாலயம் ஸ்தாபிப்பது அவசியம் என்று வேண்டிக்கொண்டனர்.

சுவாமி சிவானந்தர்
சுவாமிகள் பேலூர் மடத்துக்குத் திரும்பிய பிறகு தமது குரு சகோதரர் சுவாமி சிவானந்தரையும், அவருடன் இரண்டொரு சீடர்களையும் காசிக்கு அனுப்பி வைத்தார். சுவாமி சிவானந்தர் காசிக்குச் சென்று “ஸ்ரீ ராமகிருஷ்ண அத்வைத ஆச்ரமம்” என்னும் மடாலயத்தை நிறுவி நடாத்தி வந்தார்.

ஸ்ரீ ராமகிருஷ்ண அத்வைத ஆச்ரமம்
துர்க்கை பூஜை:
வெறும் தத்துவபோதத்தைப் பொதுமக்களுக்கிடையில் வழங்கினால் அவர்களுக்கு அது ஏற்புடையதன்று. விழாக்கள் மூலமாக சாமானியமான வழிபாட்டு முறைகளையெல்லாம் கையாண்டால் அது பொதுமக்கள் கருத்துக்கு எட்டுகிறது. ஆதலால் நாட்டில் ஐதிகமாக வந்துள்ள விழாக்கள் சிலவற்றைக் கொண்டாடவேண்டுமென்று சுவாமிகள் முடிவெடுத்தார். அம்முடிவுக்கு ஏற்ப 1902ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் பேலூர் மடத்தில் துர்க்கை பூஜை கொண்டாடுதற்கு ஏற்பாடாயிற்று. துர்க்கா பூஜையைத் தொடர்ந்து லக்ஷ்மி பூஜை பௌர்ணமியன்றும், அதைத் தொடர்ந்து வந்த அமாவாசையன்று காளி பூஜையும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
ஸ்ரீ ராமகிருஷ்ண ஜெயந்தி விழா:
விவேகானந்தர் திருமேனி தாங்கியிருந்தபொழுது கலந்துகொண்ட விழாக்களில் இறுதியாக நிகழ்ந்தது ஸ்ரீ ராமகிருஷ்ண ஜெயந்தியாகும். 1902ஆம் வருடம் மார்ச் மாதத்தில் பேலூர் மடத்தில் நடைபெற்றது. அத்தருணத்தில் அவர் முக்கியமான கருத்து ஒன்றைத் தெரிவித்தார். பரமஹம்சரின் பெயரால் பல்லாயிரம்பேர் ஒரு தினம் கூடி ஆடிப்பாடி ஓலமிட்டுவிட்டுப் பிரிந்து போவதில் அதிக நன்மை விளையாது. பரமஹம்சர் புகட்டிய பாரமார்த்திகப் பெருநெறிகளையெல்லாம் துருவி ஆராய்தற்கும், அவைகளை அனுஷ்டிப்பதற்கும் சந்தர்ப்பங்கள் அளிக்க வேண்டும் என்று எடுத்துரைப்பாராயினார்.
மகாசமாதி:
1902ஆம் ஆண்டு ஜூன் மாதம் முழுவதிலும் அவர் உடலை உகுப்பதற்கு ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தார். அச்செயல்கள் மற்றவர்கள் மனதில் படவில்லை.
1. ஓராண்டுக்கு முன்பு கீழ்வங்காளத்துக்குப் போயிருந்தபொழுது “நான் இவ்வுலகில் இன்னும் ஓராண்டுதான் உடல் தாங்கியிருக்கப்போகிறேன்” என்று பேச்சுக்களுடையில் அவர் பகர்ந்ததைக் கேட்டவர்கள் வெறும் பேச்சென்று தள்ளிவிட்டனர்.
2. காசியிலிருந்து திரும்பி வந்தான பிறகு தமது சந்நியாசி சிஷ்யர்களை ஒருவர் பின் ஒருவராக சந்திக்க விரும்பினார். தமது கருத்தைத் தெரிவித்து அவர்களுக்குக் கடிதங்களை எழுதினார். இணங்கி பலர் அவரை வந்து சந்தித்தனர். வேறு சிலர் அவசரமான அலுவல்கள் காரணமாக  வர இயலவில்லை என்று கடிதம் வரைந்தனர்.
3.   “தான் யார் என்பதை நரேந்திரன் என்று அறிந்துகொள்கிறானோ அன்று அவன் உடலை உதறித் தள்ளிவிட்டு முக்திநிலை எய்துவான்” என்று பரமஹம்ஸர் கூறியிருந்தார். அதை மற்ற குரு சகோதரர்களும் அறிவர். ஏதோ சில பேச்சுக்களுக்கிடையில் “நீங்கள் யார் என்பதை அறீந்தீர்களா?” என்னும் கேள்வி வந்தது. “ஆம், நான் யார் என்பதை இப்பொழுது அறிகிறேன்” என்று விவேகானந்தர் விடைவிடுத்தார்.
4.   தாம் உடலை உகுக்க இன்னும் மூன்று நாட்கள் இருந்தபொழுது கங்கைக் கரையோரம் மூன்று பேருடன் உலாவிக்கொண்டிருந்தபோது ஓரிடத்தில் நின்றார். மடத்து நிலத்தின் தென்கிழக்குப் பகுதியில் வில்வமரம் ஒன்று இருந்தது. அந்த வில்வ மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்வது சுவாமிகளின் வழக்கம். அந்த வில்வமரத்தைச் சுட்டிக்காட்டி தாம் தேகத்தை உகுத்த பின்பு அதை இம்மரத்துக்கு அருகில் வைத்து தகனம் செய்துவிடும்படி சுவாமிகள் உத்தரவிட்டார். இந்த பேச்சைக் கேட்டவர்களுக்கு என்ன விடை சொல்வது என்று விளங்கவில்லை.
5.   சடலத்தைத் துடைப்பதற்கு இரண்டு நாளைக்கு முன்பு சுவாமிகள் தாமே அமுது சமைத்து அதைத் தமது சிஷ்யர்களுக்கு வழங்கினார். சிஷ்யர்களுக்குத் தம் கைப்படப் பரிமாறினார். உணவு அருந்தியான பின்பு கையலம்புதற்குத் தாமே நீர் வார்த்தார்.
6. ஜூலை 4ஆம் நாள் அமெரிக்கா சுதந்திர தினமாகும். நான்கு ஆண்டுகளுக்கு முன்பே காஷ்மீரில் அமெரிக்க சிஷ்யர்களுடன் அவர்களது சுதந்திரத் திருநாளைக் கொண்டாடியபோது சுவாமிகள் அதே ஜூலை 4ஆம் நாள் தமது மேனியினின்று விடுதலை பெறப்போவதாகவும், தமது பூலோக காரியங்கள் நிறைவேற்ற இன்னும் 4 ஆண்டுகள் மீதம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அவர் குறிப்பிட்ட நாள் 1902ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் நாள் இப்போது வருவதாயிற்று. இந்த நாளை பஞ்சாங்கத்தில் விடுதலைக்குரிய நாளாகக் குறிப்பிட்டு வைத்திருந்தார். அன்று மாசிய சிவராத்திரி. அதுவும் முற்றிலும் பொருத்தமான நாளாயிருந்தது.
ஜூலை 4ஆம் நாள் வழக்கத்துக்கு மாறாக காலையில் 8 மணியிலிருந்து 11 மணிவரை குருதேவரது பூஜையறைக்குள் சென்று தாளிட்டுக்கொண்டு தியானம் செய்தார். ஜன்னல்களையும் மூடி வைத்துக்கொண்டார். இறுதிக் காலத்தில் சிறிது ஆகாரத்தை உண்பவர் வழக்கத்துக்கு மாறாக நண்பகலில் தமது குரு சகோதரர்களுடனும், சிஷ்யர்களுடனும் பந்தியில் அமர்ந்து ஆகாரம் ஏற்கலானார். அவ்வேளையில் குதூகலமாக அனைவருடனும் உரையாடியது பந்தியில் இருந்தவர்களுக்கெல்லாம் பரமானந்தத்தை ஊட்டியது. நண்பகல் ஆகாரத்திற்குப் பிறகு சிஷ்யர்களை ஒன்று திரட்டி வைத்துக்கொண்டு 3 மணி நேரம் சம்ஸ்கிருத இலக்கணத்தைப் பற்றி சுவாமிகள் பாடம் நடத்த ஆரம்பித்தார்.
அன்று மாலையில் தமது குரு சகோதரர் பிரேமானந்த சுவாமிகளைத் தம்முடன் அழைத்துக்கொண்டு சுவாமி விவேகானந்தர் 2 மைல் தூரம் வெளியில் சென்று உலாவி வந்தார். மடத்துக்குத் திரும்பி வந்த சுவாமிகள் கங்கைக் கரையோரம் அமர்ந்து அனைவருடனும் ஆனந்தமாக உரையாடினார்.
சந்தியாவேளை வந்தது. குருதேவர் ஆலயத்தில் ஆராதனைக்கான மணி அடிக்கப்பட்டது. எல்லாரையும் அதில் கலந்துகொள்ளும்படி பணித்தார். சுவாமிகல் தனியாக தியானம் செய்ய தமது அறைக்கு பிரம்மச்சாரி ஒருவருடன் சென்றார். அறையினுள் ஆசனம் விரித்து கிழக்குமுகமாக கங்கையை நோக்கிய விதத்தில் சுவாமிகள் தியானத்தில் அமர்ந்தார். சுமார் 8 மணிக்கு அந்த பிரம்மச்சாரியை அருகில் அழைத்துத் தமது தலைக்கு மேலே விசிறி வீசும்படி வேண்டினார். பிறகு “தியானம் செய்துகொண்டு வாயிலில் காத்திரு” என்று சுவாமிகள் பணிவிடை செய்து வந்த பிரம்மச்சாரிக்குப்  பகர்ந்தார். இதுவே சுவாமிகள் பேசிய அருள் உரைகளில் இறுதியானது. இரவு 9 மணி 10 நிமிடங்களுக்கு சுவாமிகள் அகண்ட சச்சிதானந்தத்தில் நிர்விகல்ப சமாதி எய்திவிட்டார்.
சாய்ந்து கிடந்த சரீரத்துக்கு என்னென்னவோ சிகிச்சை முறைகளை டாக்டர்களும், மற்றவர்களும் கையாண்டு பார்த்தார்கள். நாசித் துவாரத்திலும், நாவிலும் இரண்டொரு துளி இரத்தம் கட்டியிருந்ததாகத் தென்பட்டது. குண்டலினி சக்தி பிரம்மரந்திரத்தைத் துளைத்துக்கொண்டு மேல் நோக்கிச் சென்றதன் புற அடையாளமாக அது நிகழ்ந்திருக்கலாம். இதைப் பற்றிய செய்தி தந்தி வாயிலாக உலகில் பல இடங்களுக்குப் பறந்தது. கணக்கற்றோர் மறுநாள் காலையில் கல்கத்தா வந்து கூடினர். ஒரு கட்டிலில் வைக்கப்பட்டிருந்த திருமேனியை ஆயிரக்கணக்கானோர் தரிசித்து வணங்கினர். அன்று மாலை கங்கைக் கரையோரம் வில்வமரத்தடியில் அம்மேனியானது அக்னி பகவானுக்கு அர்ப்பிக்கப்பட்டது. 
சுவாமி விவேகானந்தர் நினைவு ஆலயம் - பேலூர்



“நான் விரைவில் உடலை உகுத்துவிட்டு உருவமற்ற ஓசையாக இலங்குவேன் – I shall be a voice without form” என சுவாமிகள் சில நாளைக்கு முன்பு பகர்ந்திருந்தார். அன்றும், இன்றும், என்றுமே இனி அவர் உருவமற்ற அருள் ஓசையாக இருந்து வருவார்.


இந்த 6 பாக வரலாறும் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் இயற்றிய “ஸ்ரீ விவேகானந்தர் ஜீவிதம்” என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டவை. சுவாமி விவேகானந்தர் மகாசமாதி தினத்தை ஒட்டி இங்கு பதிவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment