மகாபுருஷ் மஹராஜ் சுவாமி சிவானந்தர் ஜெயந்தி
இன்று(08.01.2013) நமது பெரிய சாமி ஸ்ரீமத்
சுவாமி சித்பவானந்தரின் குருநாதர் ‘மகாபுருஷ் மஹராஜ்’ சுவாமி சிவானந்தர் அவர்களின்
ஜெயந்தி தினம் ஆகும். அதாவது பிறந்த தினம். 2012ஆம் ஆண்டு மஹராஜ் பற்றி ஒரு
கட்டுரை பதிந்திருக்கிறோம். அதை இங்கு சென்று பார்க்கலாம்: http://rkthapovanam.blogspot.in/2011_11_01_archive.html அந்த கட்டுரையில் அவரது
வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான சம்பவங்கள், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
மஹராஜ்க்கு செய்த உபதேசம், அன்னை சாரதா தேவியாரின் ஆசிகள், சுவாமி விவேகானந்தர்
இவர்பால் கொண்டிருந்த அன்பு மற்றும் அருட்திரு மூவரின் ஆசிகள் பல அவரது சிஷ்யரான
பெரிய சாமிக்கு எவ்வாறு கிடைத்துள்ளன என்றும், பெரியசாமியிடமிருந்து நமக்கு அருட்திருமூவரின்
கிருபை மஹராஜ் மூலமாக எப்படி கிடைத்துள்ளன என்பதையும் பார்த்தோம்.
‘மகாபுருஷ் மஹராஜ்’ சுவாமி சிவானந்தர் |
இந்த
முறை ‘மகாபுருஷ் மஹராஜ்’ அவர்களின் தவ ஆற்றலைத் தெரிந்துகொள்வோம். தக்ஷிணேசுவரக்
கோயிலில் கூடியிருக்கும் பக்தர்களில் பலருக்கு சமாதிநிலை சாத்தியமாகிறது என்பதை
தாரக் கவனித்திருந்தார். எனவே குருதேவரிடம் தமக்கும் அந்நிலை அருள வேண்டும் என்று
வேண்டினார். குருதேவர், ‘ஆகட்டும், ஆகட்டும். எதற்கு இப்படி அவசரப்படுகிறாய்? தக்க
நேரம் வந்ததும் அன்னை பராசக்தி கடைக்கண் பாலித்து, அனைத்தும் அருள்வாள். தற்சமயம்
உனக்கு சொரூப தரிசனம் கிட்டாது, பின்னாளில் ஏற்படும். உன் மனவமைப்பு வேறானது’
என்றார். இந்த அருளுரை அப்படியே பிற்காலத்தில் மெய்யானது. தாரக், சுவாமி
சிவானந்தராக மலர்ந்தபோது, குறிப்பாக அவருடைய கடைசிக் காலங்களில் ஆன்ம அனுபவம்
அவருக்கு இயல்பாகவே மாறிவிட்டது.
மகாபுருஷ்
மகராஜ் பேலூர் மடத்தின் தலைவராக இருந்த காலம் அது. ஒரு நாள் பேலூர் மடத்தில்
என்றுமில்லாத பரபரப்பு. அன்றுதான் மகாபுருஷ் மகராஜின் சீரிய தவ ஆற்றல் வெளிப்பட்டு
ஓர் அற்புத நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று சுவாமிகள் தமது அறையில் அமைதியாக
அமர்ந்திருந்தார். அப்போது ஒரு பெண்மணியும் அவரது கணவரும் சுவாமிகளைத் தரிசிக்க
வந்தனர்; அந்தப் பெண்மணி விவரிக்க முடியாத மகிழ்ச்சியில் திளைத்திருப்பதாகக்
காணப்பட்டார். அவளது மகிழ்ச்சியை அங்கிருந்தவர்கள் அனைவரும் கண்டு ஆச்சரியப்பட்டனர்.
அந்தப் பெண்மணி சுவாமிகளை வீழ்ந்து வணங்கிவிட்டு, கண்களில் ஆனந்தக் கண்ணீருடன்,
‘மகராஜ், உங்கள் அருளால் இறந்த என் மகன் வம்சியைக் கண்டேன். ஆம் மகராஜ், நான்
அவனைப் பார்த்தேன். அவன் இப்போது மிகவும் ஆனந்தமாக இருக்கிறான். அவன்
ஸ்ரீகிருஷ்ணனுடன் விளையாடிக்கொண்டிருந்ததையும் கண்டேன். மகராஜ், உங்கள் அருளால்
என் மகனை மட்டுமல்ல, பகவான் கிருஷ்ணனையும் என்னால் தரிசிக்க முடிந்தது’ என்று
கூறினார்.
அந்தப்
பெண்மணி தம் ஆனந்தத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தத்தளித்தார். அவரை அமைதியாக
கவனித்தபடி இருந்த சுவாமிகள், ‘எல்லாம் குருதேவரின் அருளம்மா, எனக்கொன்றும்
தெரியாது. நான் அவரின் கருவி மட்டுமே. என்னை இயக்குவது அவர்தான்’ என்று கூறினார். பிறகு
அந்தத் தம்பதியினர் இருவரும் சுவாமிகளைத் திரும்பத் திரும்ப வணங்கினார்கள்.
தாங்கள் கொண்டு வந்திருந்த காணிக்கைப் பொருட்களை அவர் முன் சமர்ப்பித்தனர்.
அவர்களின் செய்கையில் அவர்களுக்குக் கிடைக்க வேண்டியது ஒன்று கிடைத்தது போன்றும்,
அதன் காரணமாக சுவாமிகளுக்கு நன்றி தெரிவிக்கும் உணர்வும் தெளிவாகக் காணப்பட்டது.
அந்தத்
தம்பதிகள் வந்து சென்றது, அவர்கள் மிகவும் மகிழ்ச்சியும் காணப்பட்டது, அந்தப்
பெண்மணி இறந்த தம் மகனைக் கண்டதாகக் கூறியது - இவையெல்லாம் அங்கிருந்தவர்களைப்
பெரும் வியப்பில் ஆழ்த்தின. இதுதான் அன்றைய பரபரப்பிற்குக் காரணம். இறந்த ஒருவரை
மீண்டும் பார்க்க முடியுமா? முடிந்தது. நடக்க முடியாததை சுவாமிகள் தம் தவ ஆற்றலால்
நடத்தியுள்ளார். அந்த அற்புதம் பேலூர் மடம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
ஏனெனில் மூன்று நாட்களுக்கு முன்னர் இதே தம்பதியினரைக் கண்ணீரும் கம்பலையுமாக
பேலூர் மடத்தில் பலரும் பார்த்திருந்தார்கள். தாங்க முடியாத புத்திர சோகத்தினால்
பீடிக்கப்பட்டிருந்தவர்கள் சுவாமிகளின் அருளால் இன்று அமைதியடைந்தது வியப்பல்லவா!
மூன்று
நாட்களுக்கு முன்னர், இந்தத் தம்பதினர் சுவாமிகளைத் தரிசிக்க வந்திருந்தனர்.
அப்போது அந்தப் பெண்மணியால் பேசக்கூட முடியவில்லை. அழுது அழுது அவர் சோர்ந்து
காணப்பட்டார். அவர் கணவர்தான் சுவாமிகளிடம் அவர்களின் குறையைக் கூறிக் கண்ணீர்
வடித்தார்: ‘மகராஜ், உங்களைப்பற்றி நாங்கள் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். அதனால்
மிகவும் நம்பிக்கையோடு உங்களிடம் வந்துள்ளோம். இவள் என் மனைவி. தயவு செய்து இவளைக்
காப்பாற்றுங்கள்’. சுவாமிகள் விஷயத்தைக் கேட்டறிந்தார். அவர்களின் பிரியமான
மகன்-வம்சி என்று பெயர்-சில நாட்களுக்கு முன்பு திடீரென இறந்துவிட்டான். அன்று
முதல் அவர் மனைவி பித்துப் பிடித்தவர் போல சோகத்தினால் நிலைகுலைந்து
காணப்படுகிறார். சாப்பிடுவதில்லை, தூங்குவதில்லை, எப்போதும் அழுகைதான்.
அவர்களின்
குறையைக் கேட்டு சுவாமிகள் நெஞ்சுருகினார். “மகனே, மகளே, உங்கள் இருவருக்கும்
எவ்வாறு ஆறுதல் சொல்வது என்று புரியவில்லை. எல்லாம் வல்ல இறைவன்தான் உங்கள்
சோகத்தைத் தீர்க்க வேண்டும். கருணையே வடிவான அவர் நமக்கு ஏன் துன்பத்தைத்
தருகிறார்? என்று தெரியவில்லை...’ இவ்வாறு சுவாமிகள் அவர்களுக்கு ஆறுதல் சொல்லிக்
கொண்டிருக்கும்போதே, அந்தப் பெண்மணி சுவாமிகளிடம் கண்ணீருடன் கெஞ்ச ஆரம்பித்தாள்.
‘மகராஜ்,
என் வம்சியை நான் பார்க்கவே முடியாதா?’ என்று திரும்பத் திரும்பக் கேட்டார்.
சிறிது நேரத்திற்குப் பின்னர் சுவாமிகளின் பாதங்களைப் பிடித்துக்கொண்டு, ‘மகராஜ்,
நான் என் வம்சியை ஒரே ஒரு முறை பார்த்தால் போதும், என் துக்கமெல்லாம்
பறந்தோடிவிடும். தயவு செய்து எனக்கு என் வம்சியைக் காட்டியருளுங்கள்’ என்று
கேட்டாள். அவ்வாறெல்லாம் காட்ட முடியாது என்பதை மகாபுருஷ் மஹராஜ் பலவாறு எடுத்துரைத்தும்
அந்தப் பெண்மணி கேட்பதாயில்லை.
மகாபுருஷ் மஹராஜ் அந்தத் தாயின்மீது கருணை கொண்டார். அந்தத்
தாயின் கண்ணீரைக் கண்ட மகாபுருஷ் மஹராஜ் ஏதோ யோசனையில் ஆழ்ந்தார். பிறகு தலைநிமிர்த்திப்
பார்த்தார். மேலே பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் படமொன்று மாட்டப்பட்டிருந்தது. மகாபுருஷ் மஹராஜ் குருதேவரிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தார். அப்போது சுவாமிகளின்
முகம் தெய்வீக ஒளியுடன் பிரகாசித்தது. அந்த உயர் ஆன்மீக நிலையிலேயே அவர் அந்தப்
பெண்மணியிடம், ‘அம்மா, நீ ஒரேயொரு தடவை உன் மகனைப் பார்த்தால் போதும், உன் மனம்
அமைதியடைந்துவிடும் என்றுதானே சொல்கிறாய்... இறைவன் கருணை இருந்தால் அப்படியே
நடக்கும்... நீ உன் வம்சியைக் காண்பாய்...’ என்றார்.
இந்தச்
சொற்கள் மகாபுருஷ் மஹராஜ் அவர்களின் திருவாயிலிருந்து வந்ததுதான் தாமதம், அங்கே தெய்வீக
சாந்நித்தியம் வியாபித்தது. அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் தெய்வத்தின் குரலையே
தாங்கள் கேட்டது போன்ற ஓர் அனுபவம் கிடைத்தது. மகாபுருஷ் மஹராஜ் அவர்களின் ஆசீர்வாதம் அந்தத்
தம்பதியினருக்கு நம்பிக்கையையும் அமைதியையும் அளித்தது. அந்தப் பெண்மணி பெரிய
புண்ணியவதி. சுவாமிகளிடமிருந்து பெறுதற்கு அரிய ஆசீர்வாதத்தை அல்லவா அவர்
பெற்றுவிட்டார்! அடுத்த இரண்டு நாட்களில் அந்தப் பெண்மணியின் மனம் உயர் ஆன்மீக
நிலைகளில் சஞ்சரித்தது. அப்போதுதான் அவர் ஸ்ரீகிருஷ்ணனைத் தரிசித்தது, அதோடு இறந்த
தம் மகனையும் கண்டது. இதெல்லாம் அவர் உயர் ஆன்மீகக் காட்சியில்தான் கண்டிருக்க
முடியும். புத்திரசோகம் பீடித்த ஒரு சாதாரண மனத்தை பகவான் தரிசனம் கிடைக்கச்
செய்யுமாறு உயர்த்துவது மகாபுருஷ் மஹராஜ் போன்ற மகான்களால்தான் முடிகின்ற காரியம்!
அடுத்து
காணக் கிடைக்காத ஒரு சிறிய காணொளி சேர்த்துள்ளோம். அது கீழே உள்ளது. அந்த வீடியோ
மகாபுருஷ் மஹராஜ் உடல் தாங்கியிருந்த காலத்தில் எடுக்கப்பட்ட footage ஆகும். ஆங்கிலத்தில் வரும் commentaryயும் கேளுங்கள்.
ஜெய் ஸ்ரீ குரு மஹராஜ் கி! ஜெய்!
No comments:
Post a Comment