Tuesday, March 19, 2013

*யதீஸ்வரி ஸ்ரீ சிவப்ரியா அம்பா அவர்களின் ஞான வாழ்வு – பாகம் 3



நோய் தாக்குதல்:
திருக்குற்றாலத்திலிருந்து திரும்பிய ஓரிரு வாரங்களில் கமலாம்பாளுக்குக் கடுமையான நோய் ஏற்பட்டது. நோய் உடலைத் தீவிரமாகத் தாக்கியது. 9 மாதங்களில் 3 முறை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

பெரிய சாமி இயற்றிய புத்தகங்களை வாங்குதல்:
இதுபோதுதான் எட்டாவது அத்தியாயத்தோடு விடப்பட்ட பகவத்கீதாசாரப் பாடலை 12ஆம் அத்தியாயம் வரை எழுத நேரம் கிடைத்தது. நோயால் உடல் நைந்திருக்க, வீட்டுப் பெரியவர்களின் கடும் சொற்களால் உள்ளமும் நொந்தது. இதை உணர்ந்த கணவர் நடராஜன் கமலாம்பாளுக்கு ஆறுதலாக இருக்கட்டும் என்று தயை கூர்ந்து 1951ல் திருக்குற்றால அந்தர்யோகத்திற்குச் செல்ல அனுமதித்தார். அந்தர்யோகத்தின்போது சுவாமிஜி அவர்கள் எழுதிய நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். அவற்றுள் விருப்பப்பட்டவற்றை வாங்கிக்கொள்ளச் சொல்லி ரூபாய் 20 கொடுத்து அனுப்பி வைத்தார்.

சற்றும் எதிர்பாராது கிடைத்த நல்லுதவிக்கு என்ன பிரதியுபகாரம் செய்யலாம் என்று எண்ணினார் கமலா. கணவருக்காக ‘சுவாமி விவேகானந்தர் சம்பாஷணை’ என்று நூலை வாங்கினார். அப்புத்தகத்தை எடுத்துக்கொண்டு சுவாமிஜி அவர்களிடம் சென்றார். புத்தகத்தில் கணவருடைய பெயரையே எழுதச் சொல்லி ஆசிர்வதிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அதன் பேரில் சுவாமிஜி அவர்களின் திருக்கரத்தால் வரையப்பட்டு திரு. நடராஜன் அவர்களின்  பெயரும், வாழ்வும் புனிதமாயின. மறுநாள் ஸ்ரீமத் பகவத்கீதைக்கு சுவாமிஜி எழுதிய விரிவான வியாக்யான நூலை ரூபாய் 9 கொடுத்து வாங்கினார் கமலாம்பாள்.

புத்தகம் வாங்கப் பணம் கொடுத்த கணவரிடம் அந்தப் புத்தகத்தைத் தான் எப்படிப் பயன்படுத்த விரும்பினார் என்ற தம் உள்ளக் கிடக்கையை வெளியிட்டார். ‘இந்தப் புத்தகத்தைப் பொதுவில் வாசிப்பதற்கென்று ஒரு சங்கம் ஏற்படுத்த விரும்புகிறேன். செய்யட்டுமா?” என்று வினயமாக மிகப்பணிவோடு கேட்டார். ‘நன்றாகச் செய்’ என்று உற்சாகமாக அனுமதி கொடுத்தார், திரு. நடராஜன். என்ன ஆச்சர்யம்! எல்லாம் அவன் செயல்!

சங்கம் அமைத்தல்:
கீதை கூறும் அடிப்படை உண்மைகளை ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்களின் வழி நின்று விளக்கியிருக்கிறார் சுவாமி சித்பவானந்தர். சித்பவானந்த அண்ணலின் ஞானாமிர்தத்தை நூல் வடிவில் உலகுக்குத் தந்த பெருமை சுவாமி சாந்தானந்தரைச் சாரும் என்றால் அந்த அமிர்தத்தைத் தானும் அருந்திப் பிறருக்கும் வழங்கிய சிறப்பு திருமதி. கமலாபாள் அவர்களையே சாரும்.
சுவாமி சாந்தானந்தர்
அருள் துணை மாதர் சங்கத்தின் துவக்க விழா:
1.12.1951 அன்று மதுரையில் சொக்கிக்குளம் பகுதியிலிருந்த அம்மா அவர்களின் இல்லத்தில் அருள் துணை மாதர் சங்கம் துவக்கப்பட்டது. இந்த ஆரம்ப விழாவே அம்மா அவர்களுக்கு அத்தகையதொரு நெருக்கடியாக அமைந்தது என்று சொல்லலாம். சங்கத்தில் பகவத்கீதை படிப்பது என்று முடிவு செய்திருந்ததால் கீதையை நன்கு படித்திருந்த ஓரு பெண்மணியை சங்கத்தைத் துவக்கி சிறப்புரை நிகழ்த்த ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் குறித்த நேரத்தில் அந்த அம்மையார் வரவில்லை. இறுதியில் இன்னும் காத்திருப்பதில் பயன் இல்லை என்று முடிவு செய்து அம்மா அவர்களின் தந்தையார் அவர்கள், “சங்கம் நடத்தப்போவது நீதானே. எனவே நீயே துவக்கி வைத்து உரை நிகழ்த்து” என்று சொன்னார்கள். முதலில் சிறிது தயங்கினாலும் சூழ்நிலையின் தேவைகளைப் புரிந்துகொண்டு உரை நிகழ்த்தினார்கள். இந்தத் துவக்க உரை மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.  இந்த ஆரம்ப விழாவில் கிருஷ்ணார்ஜுன ஸம்பாஷணை என்ற நாடக வடிவில் அமைந்த உரையாடல் நடித்துக்காட்டப்பட்டது.

க்குமி இல்லம்
சங்கத்தில் இடம்பெறும் நிகழ்ச்சிகள்:
வெள்ளிக்கிழமைதோறும் தவறாமல் சங்கம் நடந்து வந்தது. கீதை விளக்கவுரை படித்து முறையாக விளக்கி வந்தார் அம்மா. சங்கக் கூட்டங்களுக்குத் தாய்மார்கள் வருவது அதிகரித்தது. கீதை என்பது என்னவென்றே தெரியாதவர்கலுக்கும் கீதையைப் புகட்டினார்கள். ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் சுலோகம் சுலோகமாக எளிய விளக்கங்களைக் கொடுத்தார்கள். ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அந்தர்யோகங்களில் புகுத்திய நடைமுறையைப் பின்பற்றி நாம ஜபம், தியானம், கீதை விளக்கம், சந்தேகம் தெளிதல், அர்ச்சனை, ஆரதி என்று சங்கம் நடக்கும்.

ஸ்ரீமத் பகவத்கீதைக்கு சுவாமிஜி எழுதிய விளக்கத்தைப் படிப்பது என்று அளவில் சங்கம் துவக்கப்பட்டாலும் நாளடைவில் அதன் செயல்பாடுகள் விரிவடைந்தன. திருச்சி மலைக்கோட்டையில் தாயுமானவர் பாடலுக்கு சுவாமிஜி விளக்கம் சொல்லிவந்தபோது அதைத் தவறாமல் கேட்டு வந்தனர் அம்மாவும், ஐயாவும். அதன் பிறகு சங்கத்தில் தாயுமானவர் பாடல்களுக்கு சுவாமிஜியின் விளக்கங்களும் படிக்கப்பட்டன. அவ்வாறே திருவாசகத்திற்கும் விளக்கமளித்தார் அம்மா.

அருள் துணை சிறுவர் சங்கம்:
அருள் துணை மாதர் சங்கம் ஆரம்பித்த சில மாதங்களில் அருள் துணை சிறுவர் சங்கமும் ஆரம்பிக்கப்பட்டது. சங்கத் தாய்மார்கள் தம் குழந்தைகளை இச்சிறுவர் சங்கத்திற்கு அனுப்பினார்கள். சிறுவர் சங்கம் நடப்பதை அறிய வந்த வேறு பலரும் தம் குழந்தைகலை அதில் சேர்த்துவிட்டார்கள். சிறுவர் சங்கம் ஞாயிறுதோறும் நடைபெறும். இந்த சிறுவர் சங்கம் பண்டைக்கால குருகுலம் போல இருக்கும்.

கமலாம்பாள்
சங்கத்தின் நடைமுறை:
அருள் துணை மாதர்சங்கம் வாரத்தில் திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களிலும், சிறுவர் சங்கம் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தவறாமல் கூடின. நிறைவாக ஒவ்வோர் ஆண்டும் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்த ஆண்டு விழாக்கள் அந்தர்யோகமாகவும், கலைநிகச்சிகளைக் கொண்டும் கொண்டாடப்படும். ஸ்ரீமத் சுவாமிஜி எழுதிய நாடகங்கள் மற்றும் அம்மா அவர்கள் எழுதிய வில்லுப்பாட்டு, கதாகாலக்ஷேபம், நாடகங்கள் ஆகியவற்றை சங்கத்துச் சிறுவர்களையும் தாய்மார்களையும் கொண்டு மேடையேற்றுவார்கள்.

கிருஷ்ணார்ஜுன சம்பாஷணை நாடகம்:
சங்கத் துவக்க விழாவின் போது நடித்துக் காட்டப்பட்ட கிருஷ்ணார்ஜுன சம்பாஷணையை சுவாமிஜியின் கீதா வியாக்கியானத்தைப் படித்து அதன்படி 12 அத்தியாயங்களுக்கு விளக்கமாக எழுதி குற்றால அந்தர்யோகம்  சென்றபோது  ஸ்ரீமத் சுவாமிஜி அவர்களிடம் காண்பித்தார்கள். சுவாமிஜியும் படித்துப் பார்த்து, “நன்றாக இருக்கிறது. இன்னும் முயற்சி செய்து 18 அத்தியாயம் வரை எழுதுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே எழுதி முதலில் நடித்த இரு தாய்மார்களுக்கே பயிற்சி கொடுத்து கிருஷ்ணார்ஜுன சம்பாஷணையை சம்பூர்ணமாக்கினார்கள்.

ஆண்டு விழா:
1953ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்ரீமத் சித்பவானந்தரை சுவாமிஜியை சங்கத்திற்கு அழைத்திருந்தார்கள். அதுபோழ்து நிறைவு செய்யப்பட்ட கிருஷ்ணார்ஜுன சம்பாஷணை ஸ்ரீமத் சுவாமிஜியின் திருமுன் நடித்துக் காட்டப்பட்டது. நிகழ்ச்சி முழுவதையும் கூர்ந்து கவனித்த சுவாமியவர்கள் மிகவும் மகிழ்ந்து “நன்றாக இருக்கிறது. எல்லோருக்கும் விளங்கும்படி எளிய முறையில் உள்ளது. இங்கு வருகிறவர்களுக்கு அடிக்கடி போட்டுக் காண்பியுங்கள்” என்றார்கள். அன்றிலிருந்து ஸ்ரீ ராமகிருஷ்ண இயக்கத்தைச் சார்ந்த துறவியர்கள் தம் இல்லத்திற்கு வரும்போதெல்லாம் அந்நிகழ்ச்சியை தாய்மார்களைக் கொண்டு நடித்துக் காட்டச் செய்தார். வடநாட்டைச் சேர்ந்த தமிழ் தெரியாத துறவியர் கூட அதை மிகவும் ரசிப்பார்கள். நிகழ்ச்சியின் போது இடையிடையே இது இந்த அத்தியாயத்தில் வருகிறது என்று ஐயா ஆங்கிலத்தில் விளக்குவார்கள். சுவாமிகளும் அதைக் கேட்டு ஆனந்தமடைவார்கள். மாதர் சங்கம், சிறுவர் சங்கம் ஆகிய இரண்டையும் நடத்துவதில் அம்மா அவர்களுக்கு எல்லா வகைகளிலும் உறுதுணையாக இருந்தார் ஐயா திரு. நடராஜன் அவர்கள்.

சங்கத்தினர் தம்மிடமிருந்து பெற்ற அருட்கொடை யாவும் உண்மையில் அண்ணல் சித்பவானந்தருடையதே அன்றித் தனது அல்ல என்றுதான் அம்மா கூறிவந்தார்கள். பெரிய சுவாமிஜி அவர்களின் அருள் மகிமைகளை அம்மா அவர்கள் தானுணர்ந்த வண்ணம் பரவசத்துடன் எடுத்துக்கூறும்போது கேட்பவர்கள் உள்ளத்திலும் குருபக்தி என்னும் அக்கினி பற்றிக்கொள்ளும்.

திருத்தொண்டுகள்:
திருவேடக ஸ்தாபனம் ஆரம்பித்த புதிதில் சந்நியாஸிகள், பிரம்மச்சாரிகள் நால்வருக்கும் ஆளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு பழம் வீதம் வாரத்திற்கு 50 வாழைப்பழம் அனுப்பி வையுங்கள் என்று சுவாமிஜியவர்கள் ஐயா அவர்களைப் பணித்தார்கள். ஐயா அப்படியே தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருந்தார்கள். பழம் அனுப்புவதை நிறுத்துமாறு பிரம்மச்சாரிகள் எத்தனையோ முறை கேட்டுக்கொண்டபோதும் ஐயா அவர்கள் அதை நிறுத்தவில்லை. “நீங்கள் அதிகமாக உழைக்கின்றீர்கள். அதற்கிடையில் தியானம், ஜபம் செய்கின்றீர்கள். உங்களுக்கு இது மிகவும் தேவை” என்று சொல்லி நல்ல பழங்களாகத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருந்தார்.

திருவேடகம்
அந்தர்யோகம் நடத்துதல்:
மாதந்தோறும் தாயுமானவர் பாடலுக்கு விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்ததைப் போல இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மதுரையில் தமுக்கம் மைதானத்தில் ஒரு நாள் அந்தர்யோகம் சுவாமிஜியவர்களை அழைத்து நடத்தினார்கள். இந்த அந்தர்யோகங்களில் சுமார் 200முதல் 300வரை பக்தர்கள் கலந்துகொண்டு அருட்பேறு பெற்றார்கள். ஸ்ரீமத் சுவாமிஜியவர்களின் திருவாசக விளக்கவுரை நூலை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடிவீதியில் வைத்து மிக விமரிசையாக அரங்கேற்றினார்கள்.
திருவாசகம்
சாதுக்கள் வருகை:
தென்னாட்டுக்கு யாத்திரையாகவோ வேறு நிமித்தமாகவோ விஜயம் செய்த ஸ்ரீராமகிருஷ்ண மடத்துத் துறவிகள் எல்லோரையும் அம்மா அவர்களும் ஐயா அவர்களும் தம் இல்லத்திற்கு அழைத்தார்கள். சாதுக்கள் தங்குவதற்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார்கள்.

ஒருமுறை சுவாமி ரங்கநாதானந்த மஹராஜ்(சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருந்தவர்) அம்மா அவர்களிடம் “அத்வைதி ஏன் பயப்படுவதில்லை?” என்று வினவினார்கள். “அத்வைதி எல்லாவற்றையும் தெய்வமாகப் பார்க்கிறான், சுவாமி” என்று பதிலிறுத்தார் அம்மா. “பக்கத்தில் வந்துவிட்டீர்கள்” என்றார் நம் பெரிய சாமி. சற்று யோசித்து, “இரண்டு பொருள் இருந்தால்தானே பயப்படுவதற்கு? உள்ளது ஒரு பொருள்தானே. எதைக் கண்டு பயப்படுவான் அத்வைதி? அதனால்தான் அத்வைதிக்கு பயம் இல்லை” என்றார்கள் அம்மா. அம்மாவின் இந்த பதிலைக் கேட்டு சுவாமிகள் இருவரும் மகிழ்ந்தார்கள்.
சுவாமி ரங்கநாதானந்த மஹராஜ்

சந்தித்த மகான்கள்:
ஸ்ரீ ரமண பகவானும், பசு லக்ஷமியும்
திருவண்ணாமலையில் ஞானதீபமாகத் திகழ்ந்து வந்த ஸ்ரீ ரமண பகவானை தரிசித்து அருள் பெற்றிருக்கிறார்கள் அம்மா அவர்கள். ரமணரின் கண்களும் திருமுகமும், ஆசிரமத்தில் இருந்த லட்சுமி என்ற பசுவின் கண்ணும் திரும்பத்திரும்ப தம் மனதில் தோன்றி அவற்றையே ஆழ்ந்து தியானிக்க வைத்தன என்று அம்மா கூறுவதுண்டு. ரிஷிகேஷ் தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தின் ஸ்தாபகர் சிவானந்த மகராஜ், காஞ்சங்காடு ஆனந்த ஆஸ்ரமத்தின் ஸ்தாபகர் பப்பா என்று அன்புடன் அழைக்கப்பட்ட சுவாமி ராம்தாஸர், கல்கத்தா ஸ்ரீ சாரதா மடத்தின் முதல் தலைவரும் அன்னை சாரதா தேவியாருக்குத் தொண்டு செய்யும் பாக்கியம் பெற்றவருமான பிரவ்ராஜிகா பாரதிப்ராணா மாதாஜி ஆகியோர் அம்மா அவர்கள் சந்தித்த பிற அருளாளர்கள் ஆவர்.

பிரவ்ராஜிகா பாரதிப்ராணா மாதாஜி
தீர்த்த யாத்திரை-1:
1958ல் பெற்றோருடனும், அத்தை பாக்கியம்மாளுடனும் காசி, பிருந்தாவனம், ஹரித்வார் முதலிய இடங்களுக்கு யாத்திரை போய் வந்தார்கள். காசியில் கேதார் கட்டத்தில் கங்காஸ்நானம் செய்தபோது அம்மா அவர்களின் உள்ளத்தில் பேருணர்ச்சி எழுந்தது. காசியிலிருந்து பிருந்தாவனம் சென்றார்கள். தவழ்கின்ற தெய்வமாம் கிருஷ்ணரின் பால லீலைகள் நடந்த இடங்கள் ஒவ்வொன்றாகத் தரிசித்தார்கள்.

தீர்த்த யாத்திரை-2:
1966ல் இரண்டாம் முறையாகக் காசிக்குச் சென்றார்கள், அம்மா. இம்முறை சங்கத்தாய்மார்கள் அறுவருடன் யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. முதலில் கல்கத்தா, தட்சிணேஸ்வரம், கமார்புகூர், ஜெயராம்பாடி என்று அருட்திரு மூவர் வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட தலங்களுக்குச் சென்று தரிசித்துப் பெருமகிழ்வு அடைந்தார்கள். தட்சிணேஸ்வரத்தில் ஸ்ரீ சாரதா மடத்திற்கும் சென்றார்கள்.

கல்கத்தாவிலிருந்து காசிக்குச் செல்வதாய் இருந்தது. அதுபோழ்து மடத்துத் தலைவராய் இருந்த ஸ்ரீமத் சுவாமி வீரேஸ்வரானந்தர் அவர்கள் ஹரித்வார் ராமக்ருஷ்ண மடத்தில் தங்கியிருக்கிறார் என்று அறிந்து அவரை தரிச்சித்தற்பொருட்டு ஹரித்வார் சென்றார். அங்கு மஹராஜ் அவர்களைச் சந்தித்து வணங்கி ஆசி பெற்றார்கள்.
வீரேஸ்வரானந்த மஹராஜ்
ஹரித்வாரில் இருந்தபோது பிரவ்ராஜிகா சுப்ர ப்ராணா மாதாஜி, பிரவ்ராஜிகா அபய ப்ராணா மாதாஜி என்னும் கல்கத்தா ஸ்ரீ சாரதா மடத்து சன்னியாஸினிகள் இருவரைக் கண்டு பழகும் பாக்யம் கிடைத்தது. அன்னையாருக்குத் தம்மை அர்ப்பணித்துத் தூய வாழ்வு வாழும் அவர்களைக் கண்டு புளகாங்கிதம் அடைந்தார்கள்.

தமிழ்நாட்டில் தீர்த்தயாத்திரை:
ஆலயங்கள் மிகுந்த தமிழ்நாட்டில் பல சைவ, வைணவத் தலங்களுக்கும் சென்றிருக்கிறார் அம்மா. அவற்றுள் அவர்களை மிகவும் கவர்ந்தது சிதம்பரம், குறிப்பாக நடராஜர் சன்னிதி.

சிதம்பரம் நடராஜர் சன்னிதி
தேகவியோகமாவதற்குச் சில வருடங்களுக்கு முன்பு கூட சில தலங்களுக்குச் சென்று வந்தார்கள். அப்போது தரிசித்த தலங்களில் ஒன்று திருக்கோட்டியூர் என்னும் வைஷ்ணவத்தலம்.



(இதன் தொடர்ச்சி 4வது பாகம் 21.03.2013 வியாழன் அன்று இடம்பெறும்)
 

Sunday, March 17, 2013

*யதீஸ்வரி ஸ்ரீ சிவப்ரியா அம்பா அவர்களின் ஞான வாழ்வு – பாகம் 2

ஆன்மீகத்தில் ஈடுபாடு:
விவாஹத்திற்குப் பிறகு கமலாம்பாள் மதுரைக்கு வந்தாலும், இடையிடையே அருப்புக்கோட்டைக்குச் சென்று தங்கியிருப்பார்கள். அங்கு ஆத்மசாதனத்தில் ஈடுபாடு கொண்ட ஒரு அம்மையாரிடம் மந்திர தீட்சை பெற்றார். அந்த அம்மாள் நம:சிவாய மந்திரத்தின் எழுத்துக்களை வெவ்வேறு விதமாக மாற்றிப் போட்டு உபதேசித்தார். தீட்சை செய்து வைத்தவுடன் அவர்கள் சொன்னபடி செய்ய அப்பொழுது தியானத்தில் அமர்ந்தார் கமலா. மனம் ஆழ்ந்து ஒருமுகப்பட்டது. அதைக் கண்ட அந்த அம்மாள் அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டுக் காட்டி, “எப்படி தியானம் பண்ணுகிறாள் பார். இதெல்லாம் பூர்வஜென்ம ஸம்ஸ்காரம்” என்றாராம். பிறர் சொல்லித்தான் இந்த நிகழ்ச்சி கமலாவுக்குத் தெரிய வந்தது. தீட்சை செய்து வைத்த் அம்மாள் ஆர்வமுள்ள பெண்களைக் கூட்டி வைத்து நல்ல நூல்களை வாசித்து விளக்கம் சொல்வது வழக்கம். கமலா வந்த பிறகு, “எனக்கு இனிமேல் வாசிக்க முடியாது. நீ வாசித்துச் சொல்” என்று அவரிடம் கொடுத்துவிடுவார்.

மதுரையில் ஸத்ஸங்கம்:
மதுரையில் கமலா இல்லத்தில் தெய்வத்திருவுருவங்கள் வைத்து வழிபட்டு வந்தார். தினமும் காலையில் தியானம் செய்வார். அண்டை வீடுகளில் வசித்து வந்த உறவுப் பெண்கள் சிலரை அழைத்து தினமும் வீட்டில் ஸத்சங்கம் நடத்துவார். பட்டனார் கீதை, திருவாசகம், தாயுமானவர் பாடல், திருவருட்பா, திருக்குறள் ஆகிய நூல்களை படித்து விளக்கம் சொல்லுவார். விளக்க வகுப்புகளைச் சுவையாகவும் மனதில் பதியும் வண்ணமும் நடத்துவார்.

யோக சக்தி வெளிப்பட்ட விதம்:
அனைவரும் அடிக்கடி மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்வார்கள். சன்னதியில் நின்று கற்பூர ஆரத்தி பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டு திரும்பிவிடாமல் அதிக கூட்டம் இல்லாத தக்ஷிணாமூர்த்தி சந்நிதி மும் அமர்ந்து சிவநாமம் சொல்வார் கமலாம்பாள். அனைவரும் திருப்பிச் சொல்வார்கள். பின் சிறிது நேரம் தியானம் செய்துவிட்டுத் திரும்புவார்கள்.

ஒருமுறை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றபோது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்தவுடன் “அங்கு பாருங்கள் ‘சிவசிவ’ என்று ஒளிமயமாகத் தெரிகிறது” என்றார் கமலாம்பாள். உடன் வந்தவர்கள் பார்த்தபோது அவர்களுக்கும் அவ்வாறே தெரிந்தது. இந்த நிகழ்ச்சி நடந்த சில வாரங்களில் கமலாம்பாள் சுட்டிக் காட்டிய அதே இடத்தில் ‘சிவசிவ’ என்று நியான் விளக்கு ஒளியில் பளிச்சென்று தெரியும்படி எழுதி வைத்தது கோயில் நிர்வாகம். ஒருமுகப்பட்டு ஆழ்ந்து செல்லவல்ல ஆற்றல் கமலாம்பாளின் மனதிற்கு ஏற்கனவே இருந்தது. அது யோக சக்தியாக வடிவெடுத்துக் கொண்டிருந்தது என்பதையே இது போன்ற நிகழ்ச்சிகள் உணர்த்தின.
மீனாட்சி அம்மன் கோயில்
அருப்புக்கோட்டையிலிருந்தபொழுது பெற்ற சிவமந்திர தீட்சையும் உள்ளத்தில் நிலைத்த அமைதியையும் அளிக்கவில்லை. “சாதனம் இன்றி ஒன்றைச் சாதிப்பார் உலகிலில்லை” என்ற கைவல்ய வரிகள் அவர் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருந்தன. நூல்கள் வாயிலாகத் தானறிந்த மஹான்களைக் குருவாக ஏற்று சாதனங்கள் புரிந்தார். 1938ல் தாயுமான சுவாமிகளை மானஸ குருவாக ஏற்றுக்கொண்டு அவருடைய பாடல்களை உள்ளமுருகப் பாடி வந்தார்.

ஆன்மீக தாகம்:
1940ஆம் ஆண்டிலே கவியோகி சுத்தானந்த பாரதியின் புத்தங்கள் சிலவற்றைப் படிக்கும் வாய்ப்பு கமலாவுக்குக் கிடைத்தது. பாடல்கள் உள்ளத்தில் அருள் உணர்ச்சியை ஊட்டுவதாய் இருந்தன. தற்போதும் ஜீவித்திருக்கும் யோகி என்று நினைத்து சுத்தானந்த பாரதியை நேரில் சந்தித்து விண்ணப்பித்தால் அவர் தம்மை சிஷ்யையாக ஏற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் உண்டாயிற்று.
கவியோகி சுத்தானந்த பாரதி
 கவிஞரின் பாடல் தொகுப்பு நூலில் ‘அன்பு நிலையம், திருச்சி’ என்ற முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. அங்கு செல்வது என்று ஒரு நாள் இரவு நகைகளையெல்லாம் கழற்றி வைத்துவிட்டு வீட்டில் யாரிடமும் சொல்லாமல் கிளம்பிவிட்டார். ஆனால் வீட்டின் வாயில் வரையில் வந்துவிட்ட கமலாம்பாள் வாயிற்கதவைத் திறந்தபோது சப்தம் கேட்டு விழித்துவிட்டனர் வீட்டார். நிலைமையை அறிந்த கணவர் கமலாவின் வெகுளித்தனத்தை எண்ணி மனமிளகி கடிந்துகொள்ள மனமில்லாதவராய் சமாதானமாகப் பேசி வீட்டிற்குள் அழைத்து வந்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு வீட்டில் கெடுபிடிகள் அதிகரித்தன என்பது சொல்லத் தேவையில்லை. இப்படியே சில ஆண்டுகள் கடந்தன.

குருவை நாடி ஏக்கம்:
தன்னுடன் சாதனம் பயின்று வந்த சகோதரிகளிடம் கூறுவார், “நம் எல்லோருக்கும் நிச்சயம் குரு வாய்ப்பார். அவர் தாயுமான சுவாமிகளுக்கு வாய்த்த மௌன குரு போன்று சிவஞான போதம் வாய்ந்தவராக இருப்பார். அத்தகைய குருநாதர் விரைவில் வருவார். நாம் பகீரதன் போன்று விடாமுயற்சி செய்ய வேண்டும்”.  ஆனால் என்ன முயற்சி என்பது தெரியாது!
சிலவேளைகளில், “நம்முடைய மனதுதான் நமக்கு குரு. உள்ளேயே இருந்துகொண்டு அவர் உபதேசிப்பார். ஒன்று மட்டும் நிச்சயம். நமக்கு இது கடைசி ஜென்மமாக இருந்தால் சுவாமி விவேகானந்தரைப் போன்ற குரு கிடைப்பார்” என்று கூறுவார். இப்படியெல்லாம் ஏதேதோ எண்ணியும் பேசியும் நம்பிக்கையுடன் நாட்களைக் கழித்து வந்தார்.

குருவின் முதல் தரிசனம்:
1946ஆம் ஆண்டில் ஒரு நாள் வீட்டு வராந்தாவில் ஒரு நோட்டீஸ் கிடந்தது. ஒரு அன்பர் வீட்டில் மாலை 7 மணிக்கு பஜனையும், சுவாமி சித்பவானந்தர் அவர்களின் பகவத்கீதா உபன்யாசமும் நடைபெறும் என்று அந்த நோட்டீஸ் அறிவித்தது. நோட்டிஸா அது? இறைவன் அருளால் குருநாதர் அனுப்பிய தூதாக, ஆஞ்சநேயர் போன்று வந்ததல்லவா அது! ஆனால் இது போன்ற நோட்டீஸ் எத்தனையோ பார்த்தாயிற்றே; நாம்தான் போக முடியாதே என்று உணர்ந்த போது கமலாம்பாளுக்கு நோட்டீஸைப் படித்தபோது தோன்றிய உற்சாகம் வடிந்து போனது. இதைப் பற்றி பேசி எப்படி அனுமதி பெறுவது? வீண் சச்சரவுதான் உண்டாகும். இப்படி எண்ணிக் குழம்பிய கமலாம்பாள் ஓர் குறுக்கு வழியைக் கண்டுபிடித்தார். வீட்டில் யாருக்கும் தெரியாமல் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குச் சென்று அரைமணி நேரத்தில் திரும்பிவிடலாம் என்று முடிவு செய்தார். மாலை நேரத்தில் இடத்தை விசாரித்துக்கொண்டே விரைந்தார். அங்கே பஜனை நடந்து கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து கீதை விரிவுரை ஆரம்பிக்கப்போகிறது என்று ஒருவர் அறிவித்தார். உடனே சுவாமிஜி எழுந்தார். அவருக்காக அலங்காரம் செய்யப்பட்டிருந்த ஆசனத்தை வேண்டாமென்று ஒதுக்கிவிட்டு வேறொன்றில் அமர்ந்தார். “ஓம் பார்த்தாய ப்ரதிபோதிதாம்”  என்று தொடங்கினார். அவ்வளவுதான் கமலாம்பாளின் செவியில் பட்டது! தொடர்ந்து பேசியதொன்றும் கேட்கவே இல்லை. குருமூர்த்தியின் தரிசனம் ஆனந்தம்! அந்தப் பரவச நிலை செவியையும் செயலிழக்கச் செய்தது. தொலைவில் இருந்தபடியே குருமூர்த்தியின் தாமரைத் திருவடிகளை மானசீகமாகப் பன்முறை வணங்கிவிட்டு எழுந்து விரைந்து நடக்கலானார்.

சுவாமி சித்பவானந்தர்  1955

ஒவ்வொரு மாதமும் கீதா உபன்யாசம் நடைபெறுவதாகக் கேள்விப்பட்டார் கமலாம்பாள். போக முடியுமா? போகிறேன் என்று கேட்கத்தான் முடியுமா? இந்த அச்சத்தினால் வேதனையுடன் தன்னை அடக்கிக்கொண்டு இருந்துவிட்டார்.

இரண்டாம் முறை தரிசனம்:
ஒரு நாள் இறையருளால் குருதரிசனம் முதன்முதல் கிடைத்த அதே இடத்தில் காலை 7 மணிக்கு ஸத்ஸம்பாஷணையை முதல் முறை கேட்கும் பாக்கியம் கிடைத்தது. “மாமிசம் உண்ணலாமா?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு சுவாமி சித்பவானந்தரிடமிருந்து “உண்ணலாம்” என்ற உறுதியான பதில் வந்தது. “யாவரும் உண்ணலாமா?” என்று கேள்வி தொடர்ந்தது. “யானை மாமிசம் சாப்பிடாது. சிங்கம் உண்ணும்” என்று சுவாமிஜி விடையிறுத்தார். ரத்தினச் சுருக்கமான இந்த பதிலினால் சுவாமிஜியின் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சக்தி புரிந்தது. மாமிசம் உண்ணாதவருக்கும் வலிமை உண்டாகும். ஆனால் உண்பவர்க்கோ வலிமையோடு பரபரப்பும் ஆக்ரோஷமும் சேர்ந்து வளரும் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார். அடுத்த கேள்வி ‘கடவுள் உருவமா? அருவமா? என்பது. ‘உருவும் அருவும் இரண்டுமாக இருக்கிறார். பனிக்கட்டியும் நீரும் போல’. ஸத்ஸம்பாஷணையே இப்படி இருந்தால் உபன்யாசம் எப்படி இருக்கும்! அந்த கீதாமிருதத்தை நான் பருகவே முடியாதா? என்ற ஏக்கம் கமலாம்பாளின் உள்ளத்தைக்  கலக்கியது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ என்ற கவலையில் மனம் உத்வேகமடைந்து வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் நிகழலாயின. அவை உண்ணாவிரதம், அழுகை என்ற வடிவெடுத்தன.

எதிர்மறை முறையிலே போராடியது பலனளிக்கவில்லையாதலால் உடன்பாட்டு முறையைக் கையாண்டால் என்ன என்ற உத்தி தோன்றியது. நயந்து பயந்து பணிந்து கேட்டு ஓர் உபன்யாசத்திற்கு மட்டும், அதுவும் அரைமணி நேரத்திற்கு மட்டும், அனுமதி பெற்றார். இவ்வாறு முதலில் கேட்ட உபன்யாசத்தில் பகவத்கீதை 7ஆம் அத்தியாயத்திலிருந்து 2வது சுலோகத்தின் விளக்கத்தைக் கேட்டார்.
ज्ञानं तेऽहं सविज्ञानमिदं वक्ष्याम्यशोषत: ।
यज्ज्ञात्वा नेह भूयोऽन्यज्ज्ञातव्यमवशिष्यते ॥
ஞானம் தேஹேம் ஸவிக்ஞானமிதம் வக்ஷ்யாம்யசேஷத: |
யஜ்ஞாத்வா நேஹ பூயோந்யஜ்ஞாதவ்யமவசிஷ்யதே ||
“விக்ஞானத்தோடு கூடிய இந்த ஞானத்தை மிச்சமில்லாமல் நான் உனக்குச் சொல்லுகிறேன். இதை அறிந்த பின் மேலும் நீ அறிய வேண்டியது எதுவும் பாக்கியில்லை”.

ஆம். முதல் உபதேசத்திலேயே முற்ற முடிந்த உண்மையைச் சொல்கிறேன் என்று உத்தவாதம் அளித்தார் உத்தம குரு.

சமயோசித புத்தி:
சுவாமிஜி குற்றாலம், திருநெல்வேலி, தூத்துக்குடி முதலிய இடங்களில் நடத்திய அந்தர்யோகங்களைப் பற்றி அத்தை பொன்னம்மாள் மூலம் கேள்விப்பட்டார் கமலாம்பாள். உறவினர் இருவரை அந்தர்யோகங்களில் கலந்துகொள்ள அனுப்பி அவர்களைக் குறிப்பு எழுதிவருமாறு கேட்டுக்கொண்டார். அவர்கள் கொணர்ந்து கொடுத்த குறிப்புகளை வாசிப்பதும் அதைப் பற்றியே பேசுவதுமாக இருந்தார். விதியை நொந்துகொண்டிருக்காமல், அதைந்த சூழ்நிலையில் என்னென்ன வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொள்ள முடியுமோ அவற்றையெல்லாம் உருவாக்கிப் பயன்படுத்தி வந்தார்.

இதற்கிடையில் தெய்வாதீனமாக 1947ஆம் ஆண்டில் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தருடைய வானொலி உரை ஒன்றை இருவரும் சேர்ந்து கேட்கும் வாய்ப்பு கிட்டியது. அதிலிருந்து அடக்குமுறை கொஞ்சம் தளர ஆரம்பித்தது. இப்போது முழுநேர உபன்யாசம் கேட்டு வர அனுமதி கிடைத்தது.

கமலாம்பாள்(அம்பா) மற்றும் ஐயா திரு. நடராஜன் அவர்கள்
அம்பாளின் கட்டளை:
1948ல் மதுரையிலேயே இரண்டு நாள் அந்தர்யோகம் நடந்தது. கணவரிடமிருந்து போராட்டமில்லாது கிடைத்த இந்த அனுமதி மட்டற்ற மகிழ்ச்சியை உண்டாக்கியது. உபன்யாசத்திற்கு அவரும் வரவேண்டுமென்று கணவரை நச்சரிக்கலானார். இதற்கிடையில் ஒரு நாள்... 
கல்யாண மண்டபத்தில் சுவாமிஜி வந்து கொண்டிருந்தார். “கணவரையும் அழைத்து வா” என்று அம்பிகை கமலாம்பாள் ஏவினாள். “கூப்பிட வெளியே போனால் என்னை மறுபடியும் உள்ளே வர அனுமதிக்க மாட்டார். ஆகையால் போக மாட்டேன்” என்று கூறி மறுத்துவிட்டார் கமலா. சினமுற்ற அம்பிகையின் ஏவுதலின்படி நந்தியம்பெருமான் கமலாவின் நெற்றியில் சூடு வைத்துவிட்டார். விழித்துப் பார்த்தால் கனவு! ஆனால் உண்மையாகவே நெற்றியில் சூடு போடப்பட்டிருந்தது! கணவரிடம் கனவைக் கூறி காயத்தைக் காட்டினார் கமலா. அதைக் கண்டும் கேட்டும் கூட அவரது மனம் உடனே மாறி அமையவில்லை.

மூன்றாவது சந்திப்பு (முதல்முறை உரையாடியது):
1950ல் ஒரே ஒரு அந்தர்யோகத்திற்கு மட்டும் போக அனுமதி பெற்றுக்கொண்டு 27.11.1950 அன்று குற்றாலத்திற்குப் புறப்பட்டார். இதுதான் கமலாம்பாள் முழுமையாகக் கலந்துகொண்ட முதல் அந்தர்யோகம். இந்த அந்தர்யோகத்தின்போதுதான் 29.11.1950 அன்று ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்களைச் சந்தித்து முதன்முதலாகத் திருவடித்தாமரைகளை வீழ்ந்து வணங்கும் பேறு பெற்றார் கமலாம்பாள். வணங்கி எழுந்த நின்ற கமலாம்பாளை உடன் வந்திருந்த பெரியவர் பி.ஆர்.பி. பெரியசாமி என்பவர் சுவாமிகளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். ‘கீதாசாரப் பாடல்’ என்று கமலாம்பாள் எழுதி வைத்திருந்ததைத் திரு பி.ஆர்.பி. பெரியசாமி அவர்கள் சுவாமிஜிக்குக் காட்டினார். எட்டு அத்தியாயங்கள் மட்டுமே எழுதப்பட்டிருந்தன. அதை வாங்கிப் படித்துப் பார்த்தார் சுவாமிஜி. இந்த நூலைப் பற்றி என்ன சொல்லப்போகிறாரோ என்று ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த கமலாம்பாளை நோக்கி திருவாய் மலர்ந்தருளினார் சுவாமிஜி. குருநாதரிடம் கமலாம்பாள் முதன்முதல் கேட்ட வாக்கியம், “உள்ளத்தில் தெளிவு ஏற்பட வேண்டும். உள்ளம் தெளிவுபடத் தெளிவுபட இன்னும் மேலான கருத்துக்கள் தோன்றும். இங்கே (தன் மார்பில் கைவத்துக்காட்டி) தெளிவு ஏற்பட ஏற்பட அங்கே (பாடலைக் காட்டி) தானாகத் தெளிவு வந்துவிடும்” இதைக் கேட்டு உற்சாகமடைந்த கமலா, “குற்றமிருந்தால் திருத்த வேண்டும், சுவாமி” என்று பணிவோடு விண்ணப்பித்துக்கொண்டார். பாடலை மட்டுமல்லாது தன்னையும் திருத்த வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இவ்விதம் கேட்டார். சுவாமிஜி “இப்போது இதில் திருத்துவதற்கு குற்றம் ஒன்றும் இல்லை. ஆனால் கீதையின் அடிப்படை முற்றிலும் இதில் அமைந்துவிடாது. இது நல்ல முயற்சி. நல்ல சாதனம். இதிலே போக்கும் நேரம் மிக நல்ல நேரம். இது நல்ல பயிற்சி. இப்படியே இனியும் தொடர்ந்து செய்து வர வேண்டியது. அவசியம் இப்படியே செய்து கொண்டு வாருங்கள்” என்று உற்சாகப்படுத்தும் உரைகளை மொழிந்தார். பின் கைக்கூப்பி வணங்கினார். விடைகொடுத்துவிட்டார் என்பது கமலாம்பாளுக்கு விளங்கிவிட்டது. மீண்டும் நமஸ்கரித்து எழுந்தார். ஆனால் செல்ல மனம் இல்லாமல் நின்று கொண்டே இருந்தார். கண்கள் கலங்க ஆரம்பித்தன. பேச விழைந்தார். ஆனால் நா எழவில்லை. கமலாம்பாள் போகாமல் கைகூப்பியபடி நின்றுகொண்டிருப்பதைக் கண்ட சுவாமிஜி ‘சரி’ என்று கடாக்ஷித்து தலையை ஆட்டி மீண்டும் விடை கொடுத்தார்.


(இதன் தொடர்ச்சி 3வது பாகம் 19.03.2013, செவ்வாய்க்கிழமை அன்று இடம்பெறும்)