நோய் தாக்குதல்:
திருக்குற்றாலத்திலிருந்து திரும்பிய ஓரிரு வாரங்களில் கமலாம்பாளுக்குக்
கடுமையான நோய் ஏற்பட்டது. நோய் உடலைத் தீவிரமாகத் தாக்கியது. 9 மாதங்களில் 3 முறை
மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
பெரிய சாமி இயற்றிய புத்தகங்களை வாங்குதல்:
இதுபோதுதான் எட்டாவது அத்தியாயத்தோடு விடப்பட்ட பகவத்கீதாசாரப் பாடலை 12ஆம்
அத்தியாயம் வரை எழுத நேரம் கிடைத்தது. நோயால் உடல் நைந்திருக்க, வீட்டுப்
பெரியவர்களின் கடும் சொற்களால் உள்ளமும் நொந்தது. இதை உணர்ந்த கணவர் நடராஜன்
கமலாம்பாளுக்கு ஆறுதலாக இருக்கட்டும் என்று தயை கூர்ந்து 1951ல் திருக்குற்றால
அந்தர்யோகத்திற்குச் செல்ல அனுமதித்தார். அந்தர்யோகத்தின்போது சுவாமிஜி அவர்கள்
எழுதிய நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். அவற்றுள் விருப்பப்பட்டவற்றை வாங்கிக்கொள்ளச்
சொல்லி ரூபாய் 20 கொடுத்து அனுப்பி வைத்தார்.
சற்றும் எதிர்பாராது கிடைத்த நல்லுதவிக்கு என்ன பிரதியுபகாரம் செய்யலாம் என்று
எண்ணினார் கமலா. கணவருக்காக ‘சுவாமி விவேகானந்தர் சம்பாஷணை’ என்று நூலை
வாங்கினார். அப்புத்தகத்தை எடுத்துக்கொண்டு சுவாமிஜி அவர்களிடம் சென்றார்.
புத்தகத்தில் கணவருடைய பெயரையே எழுதச் சொல்லி ஆசிர்வதிக்க வேண்டுமென்று கேட்டுக்
கொண்டார். அதன் பேரில் சுவாமிஜி அவர்களின் திருக்கரத்தால் வரையப்பட்டு திரு.
நடராஜன் அவர்களின் பெயரும், வாழ்வும்
புனிதமாயின. மறுநாள் ஸ்ரீமத் பகவத்கீதைக்கு சுவாமிஜி எழுதிய விரிவான வியாக்யான
நூலை ரூபாய் 9 கொடுத்து வாங்கினார் கமலாம்பாள்.
புத்தகம் வாங்கப் பணம் கொடுத்த கணவரிடம் அந்தப் புத்தகத்தைத் தான் எப்படிப்
பயன்படுத்த விரும்பினார் என்ற தம் உள்ளக் கிடக்கையை வெளியிட்டார். ‘இந்தப்
புத்தகத்தைப் பொதுவில் வாசிப்பதற்கென்று ஒரு சங்கம் ஏற்படுத்த விரும்புகிறேன்.
செய்யட்டுமா?” என்று வினயமாக மிகப்பணிவோடு கேட்டார். ‘நன்றாகச் செய்’ என்று
உற்சாகமாக அனுமதி கொடுத்தார், திரு. நடராஜன். என்ன ஆச்சர்யம்! எல்லாம் அவன் செயல்!
சங்கம் அமைத்தல்:
கீதை கூறும் அடிப்படை உண்மைகளை ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்களின் வழி
நின்று விளக்கியிருக்கிறார் சுவாமி சித்பவானந்தர். சித்பவானந்த அண்ணலின்
ஞானாமிர்தத்தை நூல் வடிவில் உலகுக்குத் தந்த பெருமை சுவாமி சாந்தானந்தரைச் சாரும்
என்றால் அந்த அமிர்தத்தைத் தானும் அருந்திப் பிறருக்கும் வழங்கிய சிறப்பு திருமதி.
கமலாபாள் அவர்களையே சாரும்.
சுவாமி சாந்தானந்தர் |
அருள் துணை மாதர் சங்கத்தின் துவக்க விழா:
1.12.1951 அன்று மதுரையில் சொக்கிக்குளம் பகுதியிலிருந்த அம்மா அவர்களின்
இல்லத்தில் அருள் துணை மாதர் சங்கம் துவக்கப்பட்டது. இந்த ஆரம்ப விழாவே அம்மா
அவர்களுக்கு அத்தகையதொரு நெருக்கடியாக அமைந்தது என்று சொல்லலாம். சங்கத்தில்
பகவத்கீதை படிப்பது என்று முடிவு செய்திருந்ததால் கீதையை நன்கு படித்திருந்த ஓரு
பெண்மணியை சங்கத்தைத் துவக்கி சிறப்புரை நிகழ்த்த ஏற்பாடு செய்திருந்தார்கள்.
ஆனால் குறித்த நேரத்தில் அந்த அம்மையார் வரவில்லை. இறுதியில் இன்னும்
காத்திருப்பதில் பயன் இல்லை என்று முடிவு செய்து அம்மா அவர்களின் தந்தையார்
அவர்கள், “சங்கம் நடத்தப்போவது நீதானே. எனவே நீயே துவக்கி வைத்து உரை நிகழ்த்து”
என்று சொன்னார்கள். முதலில் சிறிது தயங்கினாலும் சூழ்நிலையின் தேவைகளைப்
புரிந்துகொண்டு உரை நிகழ்த்தினார்கள். இந்தத் துவக்க உரை மிகச் சிறப்பாக
அமைந்திருந்தது. இந்த ஆரம்ப விழாவில்
கிருஷ்ணார்ஜுன ஸம்பாஷணை என்ற நாடக வடிவில் அமைந்த உரையாடல்
நடித்துக்காட்டப்பட்டது.
இலக்குமி இல்லம் |
சங்கத்தில் இடம்பெறும் நிகழ்ச்சிகள்:
வெள்ளிக்கிழமைதோறும் தவறாமல் சங்கம் நடந்து வந்தது. கீதை விளக்கவுரை படித்து
முறையாக விளக்கி வந்தார் அம்மா. சங்கக் கூட்டங்களுக்குத் தாய்மார்கள் வருவது
அதிகரித்தது. கீதை என்பது என்னவென்றே தெரியாதவர்கலுக்கும் கீதையைப்
புகட்டினார்கள். ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் சுலோகம் சுலோகமாக எளிய விளக்கங்களைக்
கொடுத்தார்கள். ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அந்தர்யோகங்களில் புகுத்திய
நடைமுறையைப் பின்பற்றி நாம ஜபம், தியானம், கீதை விளக்கம், சந்தேகம் தெளிதல்,
அர்ச்சனை, ஆரதி என்று சங்கம் நடக்கும்.
ஸ்ரீமத் பகவத்கீதைக்கு சுவாமிஜி எழுதிய விளக்கத்தைப் படிப்பது என்று அளவில்
சங்கம் துவக்கப்பட்டாலும் நாளடைவில் அதன் செயல்பாடுகள் விரிவடைந்தன. திருச்சி
மலைக்கோட்டையில் தாயுமானவர் பாடலுக்கு சுவாமிஜி விளக்கம் சொல்லிவந்தபோது அதைத்
தவறாமல் கேட்டு வந்தனர் அம்மாவும், ஐயாவும். அதன் பிறகு சங்கத்தில் தாயுமானவர்
பாடல்களுக்கு சுவாமிஜியின் விளக்கங்களும் படிக்கப்பட்டன. அவ்வாறே
திருவாசகத்திற்கும் விளக்கமளித்தார் அம்மா.
அருள் துணை சிறுவர் சங்கம்:
அருள் துணை மாதர் சங்கம் ஆரம்பித்த சில மாதங்களில் அருள் துணை சிறுவர்
சங்கமும் ஆரம்பிக்கப்பட்டது. சங்கத் தாய்மார்கள் தம் குழந்தைகளை இச்சிறுவர்
சங்கத்திற்கு அனுப்பினார்கள். சிறுவர் சங்கம் நடப்பதை அறிய வந்த வேறு பலரும் தம்
குழந்தைகலை அதில் சேர்த்துவிட்டார்கள். சிறுவர் சங்கம் ஞாயிறுதோறும் நடைபெறும்.
இந்த சிறுவர் சங்கம் பண்டைக்கால குருகுலம் போல இருக்கும்.
கமலாம்பாள் |
சங்கத்தின் நடைமுறை:
அருள் துணை மாதர்சங்கம் வாரத்தில் திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய
நாட்களிலும், சிறுவர் சங்கம் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தவறாமல் கூடின. நிறைவாக
ஒவ்வோர் ஆண்டும் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்
அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்த ஆண்டு விழாக்கள் அந்தர்யோகமாகவும்,
கலைநிகச்சிகளைக் கொண்டும் கொண்டாடப்படும். ஸ்ரீமத் சுவாமிஜி எழுதிய நாடகங்கள்
மற்றும் அம்மா அவர்கள் எழுதிய வில்லுப்பாட்டு, கதாகாலக்ஷேபம், நாடகங்கள் ஆகியவற்றை
சங்கத்துச் சிறுவர்களையும் தாய்மார்களையும் கொண்டு மேடையேற்றுவார்கள்.
கிருஷ்ணார்ஜுன சம்பாஷணை நாடகம்:
சங்கத் துவக்க விழாவின் போது நடித்துக் காட்டப்பட்ட கிருஷ்ணார்ஜுன சம்பாஷணையை
சுவாமிஜியின் கீதா வியாக்கியானத்தைப் படித்து அதன்படி 12 அத்தியாயங்களுக்கு
விளக்கமாக எழுதி குற்றால அந்தர்யோகம்
சென்றபோது ஸ்ரீமத் சுவாமிஜி
அவர்களிடம் காண்பித்தார்கள். சுவாமிஜியும் படித்துப் பார்த்து, “நன்றாக
இருக்கிறது. இன்னும் முயற்சி செய்து 18 அத்தியாயம் வரை எழுதுங்கள்” என்று
சொன்னார்கள். அவ்வாறே எழுதி முதலில் நடித்த இரு தாய்மார்களுக்கே பயிற்சி கொடுத்து
கிருஷ்ணார்ஜுன சம்பாஷணையை சம்பூர்ணமாக்கினார்கள்.
ஆண்டு விழா:
1953ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்ரீமத் சித்பவானந்தரை சுவாமிஜியை சங்கத்திற்கு
அழைத்திருந்தார்கள். அதுபோழ்து நிறைவு செய்யப்பட்ட கிருஷ்ணார்ஜுன சம்பாஷணை ஸ்ரீமத்
சுவாமிஜியின் திருமுன் நடித்துக் காட்டப்பட்டது. நிகழ்ச்சி முழுவதையும் கூர்ந்து
கவனித்த சுவாமியவர்கள் மிகவும் மகிழ்ந்து “நன்றாக இருக்கிறது. எல்லோருக்கும்
விளங்கும்படி எளிய முறையில் உள்ளது. இங்கு வருகிறவர்களுக்கு அடிக்கடி போட்டுக்
காண்பியுங்கள்” என்றார்கள். அன்றிலிருந்து ஸ்ரீ ராமகிருஷ்ண இயக்கத்தைச் சார்ந்த
துறவியர்கள் தம் இல்லத்திற்கு வரும்போதெல்லாம் அந்நிகழ்ச்சியை தாய்மார்களைக்
கொண்டு நடித்துக் காட்டச் செய்தார். வடநாட்டைச் சேர்ந்த தமிழ் தெரியாத துறவியர்
கூட அதை மிகவும் ரசிப்பார்கள். நிகழ்ச்சியின் போது இடையிடையே இது இந்த
அத்தியாயத்தில் வருகிறது என்று ஐயா ஆங்கிலத்தில் விளக்குவார்கள். சுவாமிகளும்
அதைக் கேட்டு ஆனந்தமடைவார்கள். மாதர் சங்கம், சிறுவர் சங்கம் ஆகிய இரண்டையும்
நடத்துவதில் அம்மா அவர்களுக்கு எல்லா வகைகளிலும் உறுதுணையாக இருந்தார் ஐயா திரு.
நடராஜன் அவர்கள்.
சங்கத்தினர் தம்மிடமிருந்து பெற்ற அருட்கொடை யாவும் உண்மையில் அண்ணல்
சித்பவானந்தருடையதே அன்றித் தனது அல்ல என்றுதான் அம்மா கூறிவந்தார்கள். பெரிய
சுவாமிஜி அவர்களின் அருள் மகிமைகளை அம்மா அவர்கள் தானுணர்ந்த வண்ணம் பரவசத்துடன்
எடுத்துக்கூறும்போது கேட்பவர்கள் உள்ளத்திலும் குருபக்தி என்னும் அக்கினி
பற்றிக்கொள்ளும்.
திருத்தொண்டுகள்:
திருவேடக ஸ்தாபனம் ஆரம்பித்த புதிதில் சந்நியாஸிகள், பிரம்மச்சாரிகள்
நால்வருக்கும் ஆளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு பழம் வீதம் வாரத்திற்கு 50 வாழைப்பழம்
அனுப்பி வையுங்கள் என்று சுவாமிஜியவர்கள் ஐயா அவர்களைப் பணித்தார்கள். ஐயா
அப்படியே தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருந்தார்கள். பழம் அனுப்புவதை நிறுத்துமாறு
பிரம்மச்சாரிகள் எத்தனையோ முறை கேட்டுக்கொண்டபோதும் ஐயா அவர்கள் அதை
நிறுத்தவில்லை. “நீங்கள் அதிகமாக உழைக்கின்றீர்கள். அதற்கிடையில் தியானம், ஜபம்
செய்கின்றீர்கள். உங்களுக்கு இது மிகவும் தேவை” என்று சொல்லி நல்ல பழங்களாகத்
தேர்ந்தெடுத்து தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருந்தார்.
திருவேடகம் |
அந்தர்யோகம் நடத்துதல்:
மாதந்தோறும் தாயுமானவர் பாடலுக்கு விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்ததைப் போல
இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மதுரையில் தமுக்கம் மைதானத்தில் ஒரு நாள் அந்தர்யோகம்
சுவாமிஜியவர்களை அழைத்து நடத்தினார்கள். இந்த அந்தர்யோகங்களில் சுமார் 200முதல்
300வரை பக்தர்கள் கலந்துகொண்டு அருட்பேறு பெற்றார்கள். ஸ்ரீமத் சுவாமிஜியவர்களின்
திருவாசக விளக்கவுரை நூலை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடிவீதியில் வைத்து மிக
விமரிசையாக அரங்கேற்றினார்கள்.
திருவாசகம் |
சாதுக்கள் வருகை:
தென்னாட்டுக்கு யாத்திரையாகவோ வேறு நிமித்தமாகவோ விஜயம் செய்த ஸ்ரீராமகிருஷ்ண
மடத்துத் துறவிகள் எல்லோரையும் அம்மா அவர்களும் ஐயா அவர்களும் தம் இல்லத்திற்கு
அழைத்தார்கள். சாதுக்கள் தங்குவதற்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார்கள்.
ஒருமுறை சுவாமி ரங்கநாதானந்த மஹராஜ்(சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவராக
இருந்தவர்) அம்மா அவர்களிடம் “அத்வைதி ஏன் பயப்படுவதில்லை?” என்று வினவினார்கள்.
“அத்வைதி எல்லாவற்றையும் தெய்வமாகப் பார்க்கிறான், சுவாமி” என்று பதிலிறுத்தார்
அம்மா. “பக்கத்தில் வந்துவிட்டீர்கள்” என்றார் நம் பெரிய சாமி. சற்று யோசித்து,
“இரண்டு பொருள் இருந்தால்தானே பயப்படுவதற்கு? உள்ளது ஒரு பொருள்தானே. எதைக் கண்டு
பயப்படுவான் அத்வைதி? அதனால்தான் அத்வைதிக்கு பயம் இல்லை” என்றார்கள் அம்மா.
அம்மாவின் இந்த பதிலைக் கேட்டு சுவாமிகள் இருவரும் மகிழ்ந்தார்கள்.
சுவாமி ரங்கநாதானந்த மஹராஜ் |
சந்தித்த மகான்கள்:
ஸ்ரீ ரமண பகவானும், பசு லக்ஷமியும் |
திருவண்ணாமலையில் ஞானதீபமாகத் திகழ்ந்து வந்த ஸ்ரீ ரமண பகவானை தரிசித்து அருள்
பெற்றிருக்கிறார்கள் அம்மா அவர்கள். ரமணரின் கண்களும் திருமுகமும், ஆசிரமத்தில்
இருந்த லட்சுமி என்ற பசுவின் கண்ணும் திரும்பத்திரும்ப தம் மனதில் தோன்றி அவற்றையே
ஆழ்ந்து தியானிக்க வைத்தன என்று அம்மா கூறுவதுண்டு. ரிஷிகேஷ் தெய்வீக வாழ்க்கைச்
சங்கத்தின் ஸ்தாபகர் சிவானந்த மகராஜ், காஞ்சங்காடு ஆனந்த ஆஸ்ரமத்தின் ஸ்தாபகர்
பப்பா என்று அன்புடன் அழைக்கப்பட்ட சுவாமி ராம்தாஸர், கல்கத்தா ஸ்ரீ சாரதா
மடத்தின் முதல் தலைவரும் அன்னை சாரதா தேவியாருக்குத் தொண்டு செய்யும் பாக்கியம்
பெற்றவருமான பிரவ்ராஜிகா பாரதிப்ராணா மாதாஜி ஆகியோர் அம்மா அவர்கள் சந்தித்த பிற
அருளாளர்கள் ஆவர்.
பிரவ்ராஜிகா பாரதிப்ராணா மாதாஜி |
தீர்த்த யாத்திரை-1:
1958ல் பெற்றோருடனும், அத்தை பாக்கியம்மாளுடனும் காசி, பிருந்தாவனம்,
ஹரித்வார் முதலிய இடங்களுக்கு யாத்திரை போய் வந்தார்கள். காசியில் கேதார்
கட்டத்தில் கங்காஸ்நானம் செய்தபோது அம்மா அவர்களின் உள்ளத்தில் பேருணர்ச்சி
எழுந்தது. காசியிலிருந்து பிருந்தாவனம் சென்றார்கள். தவழ்கின்ற தெய்வமாம்
கிருஷ்ணரின் பால லீலைகள் நடந்த இடங்கள் ஒவ்வொன்றாகத் தரிசித்தார்கள்.
தீர்த்த யாத்திரை-2:
1966ல் இரண்டாம் முறையாகக் காசிக்குச் சென்றார்கள், அம்மா. இம்முறை
சங்கத்தாய்மார்கள் அறுவருடன் யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. முதலில் கல்கத்தா,
தட்சிணேஸ்வரம், கமார்புகூர், ஜெயராம்பாடி என்று அருட்திரு மூவர் வாழ்க்கையில்
சம்பந்தப்பட்ட தலங்களுக்குச் சென்று தரிசித்துப் பெருமகிழ்வு அடைந்தார்கள்.
தட்சிணேஸ்வரத்தில் ஸ்ரீ சாரதா மடத்திற்கும் சென்றார்கள்.
கல்கத்தாவிலிருந்து காசிக்குச் செல்வதாய் இருந்தது. அதுபோழ்து மடத்துத்
தலைவராய் இருந்த ஸ்ரீமத் சுவாமி வீரேஸ்வரானந்தர் அவர்கள் ஹரித்வார் ராமக்ருஷ்ண
மடத்தில் தங்கியிருக்கிறார் என்று அறிந்து அவரை தரிச்சித்தற்பொருட்டு ஹரித்வார்
சென்றார். அங்கு மஹராஜ் அவர்களைச் சந்தித்து வணங்கி ஆசி பெற்றார்கள்.
வீரேஸ்வரானந்த மஹராஜ் |
ஹரித்வாரில் இருந்தபோது பிரவ்ராஜிகா சுப்ர ப்ராணா மாதாஜி, பிரவ்ராஜிகா அபய
ப்ராணா மாதாஜி என்னும் கல்கத்தா ஸ்ரீ சாரதா மடத்து சன்னியாஸினிகள் இருவரைக் கண்டு
பழகும் பாக்யம் கிடைத்தது. அன்னையாருக்குத் தம்மை அர்ப்பணித்துத் தூய வாழ்வு
வாழும் அவர்களைக் கண்டு புளகாங்கிதம் அடைந்தார்கள்.
தமிழ்நாட்டில் தீர்த்தயாத்திரை:
ஆலயங்கள் மிகுந்த தமிழ்நாட்டில் பல சைவ, வைணவத் தலங்களுக்கும் சென்றிருக்கிறார்
அம்மா. அவற்றுள் அவர்களை மிகவும் கவர்ந்தது சிதம்பரம், குறிப்பாக நடராஜர் சன்னிதி.
சிதம்பரம் நடராஜர் சன்னிதி |
தேகவியோகமாவதற்குச் சில வருடங்களுக்கு முன்பு கூட சில தலங்களுக்குச் சென்று
வந்தார்கள். அப்போது தரிசித்த தலங்களில் ஒன்று திருக்கோட்டியூர் என்னும் வைஷ்ணவத்தலம்.
(இதன் தொடர்ச்சி 4வது பாகம் 21.03.2013 வியாழன் அன்று
இடம்பெறும்)
No comments:
Post a Comment