மதுரை சாரதா ஸமிதி:
11 ஆண்டுகள் இப்படி சேலத்தில் பயிற்சி கொடுத்து பிரம்மச்சாரிணிகளில் எழுவர்
சந்நியாஸமும், புதிய சகோதரிகள் எழுவர் பிரம்மச்சரிய தீட்சையும் பெறுவதைப் பார்த்து
அக மகிழ்ந்தார்கள், சுவாமிஜி. குருநாதர் சங்கல்பம் நிறைவேறுகிறது அல்லவா! அதன்
பிறகு 1984ல் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் “சேலத்தில் அடிப்படை
போட்டாகிவிட்டது. இனி மதுரைக்கு வாருங்கள்” என்றார்கள். அங்கு வைகைக் கரையில்
முன்பு தபஸ்வி ஒருவர் தவம் செய்த இடம் தெய்வாதீனமாகக் கிடைத்தது. அன்பர் ஒருவர்
நன்கொடையாக அளித்தார். அந்நிலத்தில் ஸ்ரீ சாரதா ஸமிதியின் கிளை ஒன்று
துவக்கப்பட்டது. அப்புதிய கிளைக்கு யதீஸ்வரி சிவப்ரியா அம்பா அவர்களைப்
பொறுப்பேற்கச் சொன்னார்கள் குருநாதர்.
அருள் துணை மாதர் சங்கம் அம்பா மீது கொண்டிருக்கும் அன்பு:
1984ல் மதுரையிலேயே ஸமிதியின் கிளை துவக்கப்பட்டபோது மட்டற்ற மகிழ்ச்சி
அடைந்தார்கள். “சுவாமி, அம்பா எங்கள் சொத்து, எங்களுக்கு வேண்டும்” என்று
குருநாதரிடம் விண்ணப்பித்தது வீண் போகவில்லை. அம்பா அவர்கள் எல்லோருக்கும்
உரியவர்தான். ஆனால் அருகில் இருந்து வழிநடத்த அவர்கள் தமக்கு வேண்டும் என்று
நினைத்தார்கள். மதுரையில் ஸமிதி துவக்கப்பட்டவுடன் அருள்துணை மாதர் சங்கக்
கூட்டங்கள் ஸமிதியிலேயே நடைபெறலாயின.
குருநாதர் மகாசமாதி:
16.11.1985 அன்று குருநாதர் தம் பூதவுடலை நீத்தார்கள். தபோவனத்தில் மாட்சிமை
உண்மையில் குருநாதரின் பெருமையே. அவர்களைச் சார்ந்திருந்து அவர்கள் சங்கல்பத்தை
நிறைவேற்ற முயல வேண்டும். அதுவே வாழ்க்கையின் நோக்கம் என்று எல்லோருக்கும்
எடுத்துக் கூறினார்கள், அம்பா அவர்கள்.
தபோவன பிரம்மச்சாரிகளுக்கு வகுப்பு எடுத்தல்:
தபோவன பிரம்மச்சாரிகளுக்கும் அம்பா அவர்கள் வகுப்பு எடுக்க வேண்டும் என்ற
வேண்டுகோள் விடுக்கப்பட்டபோது அதை குருநாதருக்கு ஆற்றும் அருந்தொண்டாக நினைத்து,
முதுமையையும் பொருட்படுத்தாது, மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு வகுப்பு நடத்தினார்கள்.
இது பிரம்மச்சாரிகளுக்கு மிகுந்த அருளுற்சாகம் ஊட்டுவதாய் இருந்தது. குருநாதர்
காலத்திற்குப் பிறகு தபோவனத்தில் சேர்ந்த சாதகர்களுக்கு ஸ்தாபகர் சுவாமிஜி
அவர்களின் மகிமைகளை எடுத்தோதினார்கள். சுவாமிஜியவர்களின் நூல்களை மட்டுமே ஆழ்ந்து
படிக்க வேண்டும். அவற்றிலிருந்து வேண்டிய அளவு அருளைப் பெறலாம் என்பதை
உணர்த்தினார்கள்.
அன்னையார்:
அருள் துணை சிறுவர் சங்க உறுப்பினர்கள் அம்பா அவர்களிடம் ஒரு தேவதா விசுவாசமே
கொண்டிருந்தனர் என்று சொல்லலாம். அன்னை சாரதா தேவியாரைப் பற்றிப் புத்தகத்தில்தான்
படித்திருக்கிறோம். ஆனால் அம்பா அவர்களின் வடிவில் அன்னையாரைக் காண்கிறோம் என்று
அவர்கள் எண்ணினார்கள். தாய்மை, தூய்மை, தொண்டு ஆகிய தெய்வீக நலன்களின் வடிவமாகத்
திகழ்ந்தார்கள் அம்பா அவர்கள்.
அம்பா அவர்களின் அன்பு அரவணைப்பில் வளர்ந்த சங்க உறுப்பினர்கள், மணமான
பெண்ணொருத்தி தாய் வீட்டுக்கு வருவதில் காணும் பிரியத்தை விட அதிகமாக அம்பா
அவர்களிடம் வருவதில் கண்டார்கள்.
குருவைப் பின்பற்றுதல்:
அம்பா அவர்கள் சாதகர்களை அருட்துறையில் முன்னேற்றவல்ல உபதேசங்கள் பலவற்றைக்
கூறியிருக்கிறார்கள். ஆனால் அவை அனைத்திலும் பெரிதாக உள்ள அருட்கொடை என்னவென்றால்
குருநாதரின் மஹிமையைக் கூறியதுதான். ஆசிரமவாசிகளுக்குத் தாம் யாருடைய பிள்ளைகள்
என்பதை நினைவூட்டியதைப் போலத் தாம் யாருடைய சிஷ்யர்கள் என்பதையும் அடிக்கடி
எடுத்துக் கூறுவார். ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்களை நேரில் காணும் வாய்ப்பு
கிடைக்காதவர்கள் கூட அவர் மீது பெருமதிப்புக் கொள்ளும்படிச் செய்து விடுவார்.
“குருநாதர் எழுதிய அருள் நூல்களையே நாம் படிக்க வேண்டும். குருநாதரின் ஸ்ரீமத்
பகவத்கீதை, தாயுமானவர், திருவாசகம் ஆகிய விளக்க நூல்களில் ஏதேனு ஒன்றை நாள்தோறும்
சிறிது படித்து வரவேண்டும்” என்பார்.
![]() |
ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் |
அம்பாவுடன் இணக்கம் கொண்டோருக்கு கிடைத்த பலன்:
ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர், தவத்திரு அம்பா ஆகிய இருவரிடமும் தொடர்பு
கொள்ளும் வாய்ப்புப் பெற்றவர்கள், சுவாமிஜியவர்களுடன் இணக்கம் கொள்ள வாய்ப்புக்
கிடைக்காமல் அம்பா அவர்களுடன் மட்டும் தொடர்பு கொண்டவர்கள் ஆகிய இருவகை
சாதகர்களுக்கும் அம்பா அவர்களின் இணக்கம் இணையற்ற பலனைத் தந்தது. ஸ்ரீமத் சுவாமி
சித்பவானந்தர் அவர்களின் எண்ண ஓட்டங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முதல்
வகையினருக்கு அம்பா அவர்களின் விளக்கங்கள் உதவின. அதே சமயத்தில் இரண்டாவது
வகையினர் ஸ்ரீமத் சுவாமிஜி அவர்களுடன் இணக்கம்கொள்ளும் பேற்றை இழந்துவிட்டோமே என்று
ஆதங்கம் கொள்ளாமல் இருக்க அம்பா அவர்களின் அருளுரைகள் அவர்களுக்கும் உதவின.
எல்லோருக்கும் குருவைக் காட்டிக் கொடுத்த குருவாக அம்பா அவர்கள் விளங்கினார்கள்.
நூற்றாண்டு விழாவில் வழங்கிய உரை:
ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் நூற்றாண்டு விழா 1997-1998ஆம் ஆண்டில் தமிழகமெங்கும்
கொண்டாடப்பட்டபோது அம்பா அவர்கள் குருநாதரின் அருட்செய்தி எவ்வாறெல்லாம் வேலை
செய்கிறது என்பதைக் கண்டு களித்தார். தமது சரீர சிரமத்தைப் பொருட்படுத்தாது
திருநெல்வேலி நூற்றாண்டு விழாவில் மதுரையிலிருந்து வந்து கலந்துகொண்டார்கள்.
விழாவில் ஆற்றிய உரையில் சுவாமிஜி அவர்கள் பூத உடலில் வாழ்ந்திருந்தபோது எப்படி
அருளை வாரி வாரி வழங்கினார்கள் என்பதை அருள் ததும்பும் உள்ளத்துடன் பரவசமாயிருந்து
பகர்ந்தார்கள்.
![]() |
யதீஸ்வரி ஸ்ரீ சிவப்ரியா அம்பா |
ஒருமுறை அம்பா அவர்களிடம் அவர்களுக்கு சேவை செய்துகொண்டிருந்த ஒரு
பிரம்மச்சாரிணி, “இவ்வளவு துன்பத்தையும் உங்களால் எப்படித் தாங்கிக்கொள்ள
முடிகிறது அம்பா?” என்று கேட்டார். அம்பா அவர்கள் கூறிய பதில் சாதகர்கள்
எல்லோருக்கும் உறுதியும் வலிவும் அளிக்கும் தெய்வ வாக்காய் இருந்தது. “இதையெல்லாம்
தபசு என்று தெரிந்துகொள். நம் பெரியசுவாமி அவர்கள் தவம் செய்து
காட்டியிருக்கிறார்கள். நானும் இதைத் தவமாகவே ஏற்றுக்கொள்கிறேன். நீங்களும்
உங்களுக்கு ஏதேனும் துன்பம் வந்தால் அதைத் தவமெனக் கருதிப் பொறுமையுடன் ஏற்றுக்
கொள்ள வேண்டும்”.
மற்றொருமுறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் தலைவர் சுவாமியவர்கள் அம்பாவைக் காண
வந்திருந்தபோது, “சுவாமி, சாதனத்திற்கு இதுவும் ஒரு நிலையாகப் பயன்படுகிறது”
என்றார்கள். தாம் வரும்போதெல்லாம் அம்பாவின் முகத்திலே புன்னகை தவழ்வதைக் கண்ட
சுவாமிகள், “அம்பா அவர்களின் முகத்தில் பொலிந்த புன்னகை அவர்கள் அடைந்திருந்த
பெருநிலையைக் காட்டுகிறது” என்றார்கள்.
ஒருமுறை சரீரம் சற்றுத் தெம்பாய் இருக்கும்போது உள்ளே நிகழ்வது என்ன என்பதை
உரைத்தார்கள். “மனது ஆழ்ந்து செல்கிறது. நீங்கள் சாப்பிடச் சொல்லியும், எப்போதும்
கையைக் காலைப் பிடித்துவிட்டுக் கொண்டும் இருப்பதால் அதை சரீர போதத்திற்கு இழுத்து
வருகிறீர்கள்” என்றார்கள். “மனது பிராணனில் ஒடுங்குகிறது; பிராணன் பிரகிருதியில்
ஒடுங்குகிறது” என்று சொல்லிவிட்டு அமைதியாக இருப்பார்கள்.
மீனாட்சியைக் கண்டு வந்தது:
ஒருமுறை அம்பா அவர்களை பழச்சாறு அருந்துமாறு கேட்டுக்கொண்டபோது, “கொஞ்சம்
பொறு. இப்போதுதான் போய்விட்டு வந்திருக்கிறேன். அதற்குள் என்னைச் சாப்பிடச்
சொல்லாதே” என்றார்கள். படுத்தபடுக்கையாகக் கிடக்கும் அவர்கள் எங்கே சென்றதாகச்
சொல்கிறார்கள் என்று அருகிலிருந்தவர்கள் வியந்தார்கள். “எங்கே அம்பா போய்விட்டு
வந்தீர்கள்?” என்று கேட்டபோது, “மீனாட்சி அம்மன் கோயிலுக்குத்தான்” என்றார்கள்.
சூட்சும சரீரத்தில் சென்று வந்தார்களா? யாரறிவார்! இப்படிப்பட்ட அசாதாரணமான,
எதிர்பார்த்திராத பதில்களும், உரைகளும் அடிக்கடி அம்பாவிடமிருந்து வரும்.
அம்பா பாடிய பாடல்:
இந்த இறுதி நாட்களில் அம்பா அவர்கள் அடிக்கடி பாடிய, பிறரைப் பாடச் செய்த
பாடல்களில் ஒன்று மகாகவி பாரதியாரின் வேதாந்தப் பாடலான பரசிவ வெள்ளம் என்ற
பாடலாகும்.
நித்த சிவ வெள்ள மென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுன்
சித்தமிசைக் கொள்ளும் சிரத்தை யொன்றே போதுமடா
“சிரத்தை யொன்றே போதுமடா” என்ற வாக்கியத்தை அடிக்கடி நினைவூட்டுவார்கள். பாடல்
முழுவதையும் உள்ளம் உருகி உணர்ந்து பாடக் கற்பித்துக் கொடுத்தார்கள்.
இரண்டு விஷயங்கள்:
சரீரம் சக்தி குன்றி ஓய்ந்து கிடந்தது. இறுதி நாளுக்கு இரண்டு நாட்களுக்கு
முன் 21.03.2000 அன்று அதிகாலை 1:30 மணிக்கு அம்பா அவர்கள் விழித்திருந்தார்கள். தெள்ளத் தெளிவாக
இருந்தார்கள். அருகிலிருந்த சந்நியாஸினியை அழைத்தார்கள். “இதோ பார்! முக்கியமான
விஷயம் இரண்டு இப்போது சொல்லப் போகிறேன். நன்கு கவனித்துக்கொள். இதை எல்லோருக்கும்
எடுத்துச் சொல்” என்று உரத்த குரலில் மிகத் தெளிவாகக் கூறினார்கள்.
சந்நியாசினிகளும் அங்கிருந்த ஓரிரு பிரம்மச்சாரிணிகளும் அம்பா அவர்களின்
படுக்கை அருகே வந்தார்கள். “நீங்கள் எல்லோரும் நம் பெரிய சுவாமிஜி போல் வர
வேண்டும். சாதனத்திலும் சேவையிலும் சுறுசுறுப்பாக அதே சமயம் நிதானமாக, பொறுமையாக,
அவசரப்படாமல் செய்ய வேண்டும். எல்லோரும் ஆன்மீகத்தில் நல்ல நிலைக்கு வரவேண்டும்.
நம் பெரிய சுவாமிஜி போன்று உருவாக வேண்டும். புரிந்ததா?
“இரண்டு: நீங்கள் எல்லோரும் மனதில் வஞ்சகமில்லாமல் மீரா போன்று ஆக வேண்டும்.
மீராவா? இல்லை. அதற்கு மேல் ஆண்டாள் போன்று ஆக வேண்டும். பெரியவர்கள் சொல்வதைக்
கேட்டு நடக்க வேண்டும். அப்போதுதான் ஸ்தாபனம் நன்கு நடக்கும். மனதில் இறைவன்
இருக்கிறார் என்பதைக் காட்ட வேண்டும். கடவுள் மகிமையை, குரு மஹராஜ் வலிமையை, நம்
சுவாமிஜி வலிமையைக் காட்ட வேண்டும். நம் வலிமையை அல்ல.”
மகாசமாதி:
23.03.200 வியாழக்கிழமை இறுதிநாளும் வந்தது. அன்று காலை 08:45 மணிக்கு
மருத்துவர் வந்து பரிசோதித்துவிட்டுச் சென்றார். செல்லும்முன், “இரண்டு நாட்களாக
வாயும் கண்ணும் மூடாமலே இருக்கிறார்கள். ஆகையால் ஜாக்கிரதையாக இருந்து கடைசி
நேரத்தில் உடனே நீங்கள்தான் மூட வேண்டும்” என்று சொல்லிவிட்டுப் போனார். ஆனால் எச்சரிக்கைக்கு
அவசியமே இல்லாது போனது. ஆசிரமத்து அம்பாக்கள் சகோதரிகள் அனைவரும் “ஓம் நம: சிவாய”
என ஓதியவாறு அம்பா அவர்களையே கவனித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஓம் என்ற
ஓசை மெதுவாகக் கேட்டது. உடனே எல்லோரும் ஓங்காரத்தை மட்டும் ஜபித்தார்கள்.
அப்பொழுது நேரம் காலை 09:55. எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தானாகவே கை,
கால்களையெல்லாம் சேர்த்து வைத்து, வாயையும் கண்களையும் தானாகவே மூடிக்கொண்டு,
தியானத்திலிருந்தவாறே உடலை உகுத்துவிட்டார்கள் பரமஹம்சர் வழி நின்ற பரமயோகியான
யதீஸ்வரி ஸ்ரீ சிவப்ரியா அம்பா அவர்கள்.
![]() |
யதீஸ்வரி ஸ்ரீ சிவப்ரியா அம்பா |
சித்பவானந்தருக்கு அமைந்த நிவேதிதை:
குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு நேர் சிஷ்யர்கள் அமைந்தது போலவும், சுவாமி
விவேகானந்தருக்கு சகோதரி நிவேதிதை போலவும், ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்
அவர்களுக்கு யதீஸ்வரி ஸ்ரீ சிவப்ரியா அம்பா அவர்கள் அமைந்திருந்தார்கள்.
இன்று யதீஸ்வரி ஸ்ரீ சிவப்ரியா அம்பா அவர்கள் மகாசமாதி அடைந்த தினம்(23.03.2013) ஆகும். பராய்த்துறை மேவிய பரமபுருஷருக்கு
சிஷ்யையாக அமைந்த பரமயோகினியைப் பற்றி நாம் அறிந்து கொண்டது சொற்பமே! ஐந்து
பாகங்களாகப் பதியப்பட்ட 5 கட்டுரைகளும் அம்பா அவர்களைப் பற்றி வெளியிடப்பட்ட “ஆத்ம
சாதனையின் அற்புதம்” என்ற புத்தகத்திலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டது.
நன்றி
புத்தகத்தை வெளியிட்டோர்:
அருள் துணை மாதர் சங்கம்,
மதுரை – 1.
“ஆத்ம சாதனையின் அற்புதம்” புத்தகத்தை எழுதியவர்:
யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா அவர்கள்,
திருவண்ணாமலை.
யதீஸ்வரி சிவப்ரியா அம்பா அவர்களின் புகைப்படங்கள்
யாவும் நமது பழைய மாணவர் பிரேம் குமார் அவர்களின் இணையதளத்திலிருந்து
எடுத்துள்ளோம். அவருக்கு நன்றி. இன்னும் அம்பா மற்றும் பெரியசாமி சம்பந்தமான
புகைப்படங்கள் நிறைய உள்ளன. சேகரித்தவைகளை விட சேகரிக்காததே அதிகமாக இருக்கும்.
தேடுகிறோம்... எங்கள் தேடுதலில் யார் வேண்டுமானாலும் பங்கெடுத்துக்கொண்டு உதவலாம்.
No comments:
Post a Comment