Wednesday, March 13, 2013

*குருதேவரைப் பற்றி சுவாமி விவேகானந்தர் கூறியது



குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றி முழுமையான வரலாற்றை ‘Gospel of Sri Ramakrishna’ என்ற நூலாக எழுதியவர் ‘ம’ என்று அழைக்கப்படும் மஹேந்திரநாத் குப்தா அவர்கள். அவரைத் தவிர பலரும் குருதேவருடன் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்லியிருக்கிறார்கள். அவைகளில் பல அச்சேறி உள்ளன. சுவாமி விவேகானந்தரும் தன் அனுபவங்களை சொல்லியிருக்கிறார். பரமஹம்சரைப் பற்றி சுவாமி விவேகானந்தர் எந்த ஒரு சொற்பொழிவிலும் சுட்டிக்காட்டி ‘இன்னாருடைய மாணவன் நான்’ என்று சொல்லி பெருமை தேடிக்கொள்ளவில்லை. பலருக்கு வகுப்புகள் நடத்தியபோதும், கவிதைகளிலும், உரையாடல்களுக்கிடையிலும் குருதேவரைப் பற்றி பேசியிருக்கிறார். அவை யாவும் சுருக்கெழுத்தில் பதிவு செய்யப்பட்டு நூல்களாக உள்ளன.

1895ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் அமெரிக்காவில் செயின்ட் லாரன்ஸ் நதியில் உள்ள ஆயிரம் தீவுச் சோலையில் சுவாமி விவேகானந்தர் அமெரிக்க சிஷ்யர்களுக்கு வேதாந்தப் பாடம் நடத்தினார். அவை யாவும் குறிப்பெடுக்கப்பட்டு ‘Inspired Talks’ என்ற பெயரில் புத்தக வடிவம் பெற்றது. சற்றே கடினமான ஆங்கில நூலை தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார், நமது பெரியசாமி சித்பவானந்தர். தமிழில் அந்நூலுக்கு ‘விவேகானந்த உபநிஷதம்’ என்று பொருத்தமான பெயரைச் சூட்டினார். அழகான தமிழ் நடையில் ‘விவேகானந்த உபநிஷதம்’ நூலானது 1962ஆம் ஆண்டு சுவாமி சித்பவானந்தர் வெளியிட்டுள்ளார்.


சுவாமி விவேகானந்தர் வேதாந்த பாடம் நடத்தியபோது  தம்மை ஆட்கொண்ட குருநாதர் பரமஹம்சரைப் பற்றி பேசியிருப்பது அந்த நூலில் இடம்பெற்றுள்ளன. குருதேவர் பரமஹம்சரின் ஜெயந்தி தினமான இன்று 13.03.2013 அவருடைய பிரதான சிஷ்யரான சுவாமி விவேகானந்தர், குருதேவரைப் பற்றி சுருக்கமாக என்ன சொல்லியிருக்கிறார் என்று தெரிந்துகொள்வோம்.

ஜூலை மாதம் 1ஆம் தேதி, திங்கட்கிழமை – 1895.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு வைதீகப் பிராமணருக்குப் பிள்ளையாகப் பிறந்தவர். அந்தப் பிராமணர் அந்தனரைத் தவிர வேறு யாரிடத்திலிருந்தும் எதையும் தானமாக ஏற்றுக்கொள்ளமாட்டார். கைம்மாறு கருதிப் பணியாற்றாதிருப்பவனும், ஆலயத்தின்கண் அர்ச்சகனாக அமராது இருப்பவனும், தனது ஞானத்தை விலைக்கு விற்காதிருப்பவனும், யாருக்கும் பணியாளாகாதிருப்பவனுமே அந்தணனாகிறான். தெய்வாதீனமாக்க் கிடைக்கும் தானத்தையே அவ்வந்தணன் ஏற்றுக்கொள்கிறான். அப்படி வருகிற தானமும் நெறி வழுவிய வேதியனிடத்திருந்து வரலாகாது. ஹிந்து மதத்துக்கு தேவாலயங்கள் ஒருபொழுதும் இன்றியமையாதவைகள் ஆகமாட்டா. கோயில்கள் யாவும் அழிக்கப்படுமிடத்தும் ஹிந்து மதத்துக்கு இம்மியளவும் இடுக்கண் இல்லை. இறைவணக்கத்தின் பொருட்டும் விருந்தோம்பல் பொருட்டுமே ஒருவன் வீடு கட்ட வேண்டும். தனக்கென வீடு கட்டுவது சுயநலமாகும். எனவே, கடவுளை எழுந்தருளப் பண்ணுதற் பொருட்டே ஹிந்து ஒருவன் ஆலயம் கட்டுகிறான்.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
தமது குடும்பத்தின் ஏழ்மையை முன்னிட்டு சின்ன்ன்சிறு வயதிலேயே ஸ்ரீ ராமகிருஷ்ணர் தேவியின் ஆலயம் ஒன்றில் அர்ச்சகராக அமர வேண்டியதாயிற்று. அம்பிகையைப் பிரகிருதி என்றும் காளி என்றும் அழைப்பதுண்டு. சிவத்தின்மீது அம்பிகை தாண்டவமாடுவதாக அம்மூர்த்தி அமைக்கப் பெற்றிருக்கிறது. மாயை விலகும் வரையில் நாம் ஒன்றையும் அறிந்துகொள்ள முடியாது என்பதே அதன் கோட்பாடு. பிரம்மம் ஆணுமல்ல; பெண்ணுமல்ல. அது அறிவுக்கெட்டாதது. ஆனால் தம்மை விளக்குதற் பொருட்டு அந்தப் பிரம்மம் தனது மாயா சக்தியோடு கூடி இயங்குகிறது. அந்நிலையில் அப்பொருளுக்கு ஜகதம்பிகை என்று பெயர். சிருஷ்டி அவ் அம்பிகையினிடத்திருந்து வருகிறது. மாயையின் ஆதிக்கத்திலிருக்கும்பொழுது சிவம் சவம் போன்று வீழ்ந்து கிடக்கிறது. பிரம்மத்தை மூடியிருக்கும் ஆவரண சக்தியை விவேகத்தைக்கொண்டு அகற்றிவிடுவேன் என்கிறான் அத்வைத ஞானி. ஆனால் துவைதவாதியோ அம்பிகையிடத்து விண்ணப்பித்து ஆவரண சக்தியை அகற்றுவோம் என்கிறான். பிரம்மபுரத்தின் வாயிலுக்குரிய சாவி அம்பிகையிடத்திலிருப்பதால் அவளிடம் அனுக்கிரகத்தை வேண்டிக்கொள்வது ஒன்றே நமது கடமையாகும்.

காளிகா தேவிக்கு ஸ்ரீராமகிருஷ்ணர் செய்த நித்திய பூஜையின் விளைவாகப் பிரேமை பக்தி அந்த இளம் அர்ச்சகர் உள்ளத்தில் உதித்தது. பிறகு நித்திய பூஜையை முறையாகக் கொண்டு செலுத்த அவருக்கு இயலவில்லை. எனவே அவர்க்கேற்பட்டிருந்த கடமையை ஒதுக்கி வைத்துவிட்டார். ஆழ்ந்து தியானம் செய்தல் பொருட்டு அருகிலிருந்த ஒரு சிறிய மரத்தோப்புக்குள் அவர் ஒதுங்கியிருக்கலாயினர். அம்மரத்தோப்பு கங்கைக் கரையோரம் இருந்தது. குடிசில் ஒன்று கட்டுதற்குத் தேவையாயிருந்த பொருள்களையெல்லாம் வேகமாகப் புரண்டு ஓடும் நதியானது ஒரு நாள் அவர் இருந்த இடத்தில் கொண்டுவந்து சேர்த்தது. அக்குடிசையில் அமர்ந்துகொண்டு கண்ணீரும் கம்பலையுமாக அவர் பிரார்த்தித்தார். உடலைப் பேணுதலைப் பற்றிய எண்ணமே அவர் மனத்தினின்று அகன்று போய்விட்டது. அம்பிகையைத் தவிர வேறு எதையும் அவர் கருத்தில் வாங்கவில்லை. உற்றார் ஒருவர் நாள் ஒரு தடவை அவருக்கு உணவு ஊட்டிப் பராமரித்து வந்தார். நாளடைவில் தபஸ்வினியாகிய பைரவியொருத்தி அவருக்கு அம்பிகையைக் காட்டியருள வந்து சேர்ந்தாள். அவருக்குத் தேவையாயிருந்த குருமார்களெல்லாம் தாமாகவே அவரிடம் வந்து சேர்ந்தார்கள். ஒவ்வொரு சமயத்தையும் சார்ந்திருந்த சான்றோர் ஒருவர் அவருக்குப் புகட்ட முன் வந்தார். அப்படி வந்த ஒவ்வொருவருக்கும் அவர் ஊக்கத்தோடு செவி மடுத்தார். ஆனால் அவர் வழிபட்ட்து அம்பிகையையே. அனைத்தும் அவருக்கு அம்பிகையின் சொரூபமே.

யாரையும் எதிர்த்து ஸ்ரீராமகிருஷ்ணர் கடுஞ்சொல் ஒன்று செப்பியது கிடையாது. அவருடைய பரந்த நோக்கத்தின் பண்பை முன்னிட்டு ஒவ்வொரு சமயத்தவரும் ஸ்ரீ ராமகிருஷ்ணர் தம் சமயத்தைச் சேர்ந்தவர் என்று கருதினர். எல்லாரையும் ஒருங்கே அவர் நேசித்தார். சமயங்கள் யாவும் சன்மார்க்கங்கள் என்பது அவர் துண்பு. ஒவ்வொரு சமயமும் தன்னளவில் பொருத்தமானது என்பதை அவர் அறியலானார். அவருடைய அன்புக்கு வரையறை கிடையாது. ஆனால் அவருடைய போதனையோ ஐதீகத்தினின்று சிறிதும் பிறழக்கிடையாது. சாந்தமூர்த்தி ஒருவர் அருள்சக்தியை உருவாக்குகிறார். [1]கர்ஜனைமூர்த்தி அவ்வருளை எங்கும் எடுத்து வழங்குகிறார். ஏசுநாதர் கொணர்ந்த அருள் ஒளியை பால் என்னும் மகாபுருஷர் கர்ஜனை மூர்த்தியாயிருந்து எங்கும் எடுத்து வழங்கினார்.

பால் மகாபுருஷருடைய காலமோ கடந்துபோய்விட்டது. இக்காலத்துக்கேற்றபடி புதிய ஞான தீபங்களாக நாம் இருந்தாக வேண்டும். தேவைக்கேற்றபடி தன்னைத்தானே திருத்தியமைத்துக் கொள்கிற அருள் இயக்கம் ஒன்றுக்கு இக்காலத்தில் தேவை மிக உண்டு. அத்தகைய இயக்கம் ஒன்றை நாம் அடையப்பெறுவோமானால் அது என்றென்றும் உலகின்கண் நிலைபெற்றிருக்கும். தர்மசக்கரம் சுழல வேண்டும். அதன் இயக்கத்துக்கு நாம் உடந்தையாயிருக்க வேண்டும். இடைஞ்சலாக இருக்கலாகாது. தர்மமானது காலத்துக்கேற்ற யுகதர்மமாகத் தோன்றவும் ஒடுங்கவும் செய்கிறது. யுகாவதாரம் ஒருவர் அந்த யுகத்துக்குரிய தர்மத்தின் வடிவினராய் மிளிர்கிறார். இக்காலத்துக்குரிய தர்மத்தை அழிவு முறையில் அல்ல. ஆக்க முறையில் விளக்கிக் காட்டுதற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் தோன்றினார். இயற்கைத் தாயினிடத்து அவர் புத்தம்புதிய இணக்கம் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தர்மத்தின் உண்மைகளையெல்லாம் நேரே தமக்குப் புகட்டியருளும்படி அன்னை பராசக்தியிடம் அவர் வேண்டினார். அவர் பிரார்த்தனைக்கிணங்க பிரகிருதித்தாயும் தர்மத்தின் நுட்பத்தையெல்லாம் அவருக்குப் புகட்டியருளினாள். அப்படி அவர் பெற்றது தத்துவத்துக்கு முற்றிலும் ஒத்ததாம். “வெறும் நம்பிக்கை வைக்க வேண்டாம், உண்மையை உள்ளபடி காண்” என்று அது இயம்புகிறது. நான் சாக்ஷாத்கரிக்கிறேன். நீயும் சாக்ஷாத்கரிக்க முடியும் என்று அவதார புருஷர் சொல்லுகிறார். நான் கையாண்ட முறையை நீ கையாண்டால் அதே அனுபூதியை அடைவாய். கடவுளை அடைவது எல்லாருக்கும் சாத்தியம். சமரசத்தை அடைவது எல்லாருக்கும் இயலும். ராமகிருஷ்ணர் புகட்டியது இந்து மதத்தின் சாரம். அவர் புகட்டியவை அலாதியாக அவருடையவைகள் ஆகா. தம்முடையவைகள் என்று அவரும் உரிமை பாராட்டிச் சொல்லவில்லை. பெயரையும், புகழையும் அவர் பொருள்படுத்தவில்லை.

அவருக்கு வயது நாற்பது ஆனபொழுது அவர் உபதேசிக்க ஆரம்பித்தார். ஆனால் அதன் பொருட்டு அவர் வெளியில் எங்கும் போகவில்லை. அவருடைய போதனையை வேண்டினவர்கள் அவரிடம் வந்து சேரும் வரையில் அவர் காத்திருந்தார். இந்துக்களுடைய வழக்கத்துக்கு ஒப்ப அவர் வாலிபராயிருந்தபொழுது ஐந்து வயதுச் சிறுமி ஒருத்தியை அவருடைய பெற்றோர்கள் அவருக்கு விவாகம் செய்து வைத்தனர். விவாகமான பிறகு அச்சிறுமி தன் பெற்றோருடனேயே தொலைவில் இருந்த கிராமத்தில் வசித்திருந்தாள். தன் கணவன் உள்ளத்தில் ஏற்பட்டிருந்த அருள் போராட்டத்தைப் பற்றி அச்சிறுமிக்கு ஒன்றும் தெரியாது. அப்பெண்ணுக்கு வயது வந்தபொழுது கணவன் ஆழ்ந்து அருள் உணர்வில் மூழ்கியிருந்தார். ராமகிருஷ்ணர் வசித்திருந்த தக்ஷிணேசுவரத்துக்கு அவள் கால்நடையாய்ப் போய்ச் சேர்ந்தாள். கணவனைப் பார்த்ததும் அவருடைய அருள் நிலையை அவள் கண்டுகொண்டாள். ஏனென்றால் அப்பெருமகள் தானே தூய்மைக்கு இலக்காக இருந்தாள். அருள் துறையில் கணவனுக்கு உதவிபுரிய அவள் விரும்பினாளேயொழிய அவரைக் குடும்ப பந்தத்துக்கு இழுக்க விரும்பவில்லை.

இந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் பெரிய அவதார மூர்த்திகளில் ஒருவராகப் போற்றுகின்றனர். அவருடைய பிறந்த தினத்தைத் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர்.


[1] பரமஹம்ஸ தேவருக்கு விவேகானந்த சுவாமிகள் கர்ஜனை மூர்த்தியாக அமையலாயினர் எனப் பலர் கருதி வருகின்றனர்.

No comments:

Post a Comment