Tuesday, December 6, 2011

*டார்வினின் பரிணாமக் கொள்கை – சுவாமி விவேகானந்தர்


Darwin
 ராம்பாபு:
டார்வினின் பரிணாமக் கொள்கையைப் பற்றியும், அந்தக் கொள்கையை நிலைநாட்ட அவர் கூறும் காரணங்களைப் பற்றியும் உங்கள் கருத்து என்ன?
சுவாமி விவேகானந்தர்:
ஒரு பேச்சுக்காக அவரது கருத்து சரியானதென்று கொண்டாலும், உயிர்களின் பரிணாமத்திற்கு அதுதான் முடிவான காரணம் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
ராம்பாபு:
நமது பழங்கால அறிஞர்கள் இதைப் பற்றிக் கூறுகிறார்களா?
சுவாமி விவேகானந்தர்:
சாங்கியத் தத்துவத்தில் சிறந்த முறையில் கூறப்பட்டிருக்கிறது. பரிணாமம் பற்றிய கருத்தில் பழங்கால இந்திய ஞானியரின் கருத்தே அறுதி முடிவு என்று நான் நினைக்கிறேன்.
ராம்பாபு:
அதுபற்றிச் சுருக்கமாக நீங்கள் சொல்ல முடியுமா?
சுவாமி விவேகானந்தர்:
வாழ்க்கைப் போராட்டம் (Struggle for existence), மிகத் தகுதியுள்ளவை வாழ்தல் (Survival of the fittest), இயற்கையான தேர்வு (Natural selection) முதலிய விதிகலைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். மிகச் சிறிய உயிர் மிகப் பெரிய உயிராக பரிணமித்ததற்கான காரணங்களாக இவற்றையே மேலைநாட்டு அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் பதஞ்ஜலியின் நூலில் இவை எதுவுக் காரணம் என்று கூறப்படவில்லை. ஓர் இன உயிர் மற்றோர் இனமாக மாறுவதன் காரணம் ‘இயற்கையின் உள் நிறைவு’ தான் என்கிறார் பதஞ்ஜலி. தடைகளுக்கு எதிராக இரவுபகலாகப் போராடுவதால் இது ஏற்படுவதில்லை. என்னைப் பொறுத்தவரையில் போராட்டங்களும் போட்டிகளும், பலவேளைகளில், உயிர் முழுமை அடைவதற்குத் தடைகளாகவே இருக்கின்றன. மேலை நாட்டுக் கருத்துபோல், ஆயிரக்கணக்கான உயிர்களின் அழிவால்தான் ஓர் உயிர் பரிணமிக்கிறது என்றால், அத்தகைய பரிணாமத்தால் உலகிற்கு நன்மை எதுவுமில்லை. பௌதீக வளர்ச்சி இருக்கிறது என்று கொண்டாலும் ஆன்மீக வளர்ச்சிக்கு இது ஒரு பெருந்தடை என்பதை ஏற்றேயாக வேண்டும்.
‘நம் நாட்டு தத்துவ அறிஞர்களின்படி, உயிர் என்பது பூரண ஆன்மாவே. மாறுபாடுகள் எல்லாம் ஆன்மாவின் வெளிப்பாட்டிலுள்ள வேற்றுமையே. பரிணாம வளர்ச்சிக்கும் இயற்கையின் வெளிப்பாட்டிற்கும் தடைகளாக இருப்பவை நீக்கப்பட்டதும் ஆன்மா முழுமையாக வெளிப்படுகிறது. இயற்கையின் வெளிப்பாடு சிறு உயிர்களில் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் உயர்ந்த இனங்களில், அவை எப்போதும் தடைகளை எதிர்த்து நடத்தும் போராட்டங்களால்தான் பரிணமிக்க முடியும் என்பது உண்மையல்ல. போராட்டத்தைவிட, கல்வி, பண்பாடு, மன ஒருமைப்பாடு, தியானம், முக்கியமாகத் தியாகம் ஆகியவற்றால் தான் தடைகள் நீக்கப்படுகின்றன. அதற்கேற்ப ஆன்மாவும் வெளிப்படுகிறது. எனவே தடைகளை விளைவுகள் என்று கொள்ளாமல் ஆன்மாவின் வெளிப்பாட்டிற்கான காரணங்கள் என்று கொண்டு, அவை இயற்கையின் ஆச்சரியகரமான வேறுபாடுகளுக்குத் துணை செய்கின்றன என்று கூறுவது பகுத்தறிவிற்கு ஒத்து வராது. தீமை செய்கின்ற ஆயிரம் பேரைக் கொல்வதன் மூலம் தீமையை உலகத்திலிருந்து நீக்க முயல்வதால் உலகத்தில் தீமைதான் அதிகமாகும். ஆனால் அறிவுரைகளின் மூலம் மக்கள் தீமை செய்யாமல் தடுக்கப்பட்டால் உலகத்தில் தீமையே இருக்காது. மேலை நாட்டினரின் இந்தப் போராட்டக் கொள்கை எவ்வளவு பயங்கரமானது என்பதை பாருங்கள்.
ராம்பாபு சுவாமிஜியின் இந்த பேச்சைக் கேட்டு ஆச்சரியத்துடன், ‘இந்தியாவிற்குத் தற்போது உங்களைப் போல் கீழை நாட்டு, மேலை நாட்டுத் தத்துவங்களில் நல்ல புலமை பெற்றவர்களே உடனடியாகத் தேவை. எதிலும் ஒரு பக்கத்தை மட்டுமே ஏற்றுக் கொள்பவர்களான, இன்றைய படித்தவர்களின் தவறுகளை அவர்களாலேயே திருத்த முடியும். பரிணாமக் கொள்கை பற்றிய உங்கள் விளக்கத்தைக் கேட்டு நான் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன்’ என்றார்.
Swami Vivekananda

No comments:

Post a Comment