(November 16 இன்று சுவாமி சித்பவானந்தர்
மஹாசமாதி தினம் ஆகும்.)
கங்கையும் காவிரியும் கொண்டாடிய ‘சித்’பவானந்தர்
சத், சித், ஆனந்தம் என்பது ஆன்மிக சூத்திரம். ‘ஆனந்தநிலை நமது சொரூபம். நாம்
பாபிகள் அல்ல’ என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்தை உள்வாங்கிக்கொண்டு, ‘ஆனந்தமாக
இருங்கள்’ என்று தன்னைத் தேடிவந்த அன்பர்களை ஆசிர்வதித்தவர் சுவாமி சித்பவானந்தர்.
‘ஆனந்தமாக இருங்கள்’ என்ற இந்த இரண்டு வார்த்தகளை திருடி வைத்துக்கொண்டு உலகம்
முழுதும் ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக்கொண்ட ஆன்மிக வியாபாரிகளும் இங்கு
உண்டு.
“செல்வம் இருக்கின்ற இடத்தில் ஊழல் வந்து உட்கார்ந்து கொள்ளும்” என்பது சுவாமி
சித்பவானந்தரின் கருத்து. சென்ற நூற்றாண்டில் ஆன்மிக மறுமலர்ச்சியாக ‘அந்தர்யோகம்’
என்ற போலி சடங்குகளற்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் சுவாமி சித்பவானந்தர்.
பாதபூஜைக்கு லட்சங்களைக் கேட்காதவர்; எந்த சொத்துக்களையும் எழுதிக்கொடு என்று
கட்டளையிட்டு அறியாதவர்; கயிலாயம் போக காசு பணம் வேண்டியதில்லை என்பதை உணர்ந்த
யோகி சுவாமி சித்பவானந்தர். பணத்திற்காக கொள்கையில் சலுகை காட்டாதவர் நம் சுவாமி.
பணம் கொழிக்கும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியை ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில்
வளையுமா?’ என்று பூட்டுப்போட்டவர் நம் சுவாமி. அரசாங்கம் கேட்டுக்கொண்டாலும் அதில்
நியாயம் இல்லையென்றால் அதை ஏற்காத ஞானி நம் சுவாமி. பள்ளிகளுக்குத் துணைப்பாடமாக
தாம் எழுதிய நூலில் விரவிக்கிடந்த ஸம்ஸ்கிருத சொற்களை நீக்கி, தமிழ் ஆக்கிக்
கொடுத்தால் ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறியபொழுது அதை ஏற்க மறுத்த மும்மொழிக்
கொள்கைச் சிங்கம் நம் சுவாமி.
மரம், செடி, கொடி போன்ற மனத்தை உடையவர் அல்ல நம் சுவாமி. எதற்கும் அசையாத
மேரு! அன்பிற்கு மட்டுமே உருகும் கயிலாய மலை நம் சுவாமி. ஆங்கிலம் படித்தவர், ஐ.சி.எஸ்
ஆக வேண்டியர்; சந்நியாசி ஆகிவிட்டார் என்று சுவாமிகளை மதிப்பீடு செய்தால்
தோற்றுப்போவார்கள்.
‘அவனவன் நிலையில் அவனவன் பெரியவனே’
என்பதை உணர்ந்தவர் நம் சுவாமி. சுவாமி விவேகானந்தரை படிக்கவில்லை; அவராகவே
மாறியவர் நம் சுவாமி. துறவை காதலித்து ஏற்றுகொண்டு தாயுமானவரைக் கொண்டாடியவர்.
படிக்காதவர்களை அவர் வெறுத்ததில்லை; பண்பாடில்லாதவர்களின் முகத்தில் அவர்
விழித்ததில்லை. எந்தச் சூழ்நிலையிலும் அவர் தன்னை இழந்ததில்லை என்பதுதான் அவர்
வரலாறு.
சுவாமிகளின் நூல்களை அரசுடைமை ஆக்க வேண்டும். அடுத்த அரை நூற்றாண்டுக்குத்
தேவையான சிந்தனைகளை அரை நூற்றாண்டுக்கு முன்பே விதைத்தவர் நம் சுவாமி.
ஒருங்கிணைந்து நாம் செயல்படாவிட்டால் காலக் கரையானின் கோர வாய்க்குள் விலையில்லா
மாணிக்கங்கள், முத்துக்கள், வைரங்களெல்லாம் போய்விடும். தலைமுறைகள் தழைக்க
கங்கையும் காவிரியும் கொண்டாடிய நம் சுவாமிகளின் நூல்களை மட்டுமல்ல,
பத்திரிக்கையையும் பாதுகாக்க வேண்டும். இதுவே அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும்
தொண்டாகும். நம் சுவாமிக்கு நாம் செய்யும் மரியாதையாகும். இதுவே, அவர் தோள் மீது
தோரணமாய்த் தொங்கி விளையாடியவர்களின் பணியாகும்.
வலிவு படைத்தவனே வாழ்வுக்குரியவன்
-ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.
(இந்த கட்டுரையை எழுதிய அன்பரின் பெயர் R. ராமகிருஷ்ணன். தபோவன அச்சுப்பள்ளியில் பணியாற்றி வந்தவர். இப்போது சேலம் ‘தினமலர்’
பத்திரிக்கையில் பணியாற்றி வருகிறார்.)
No comments:
Post a Comment