Thursday, November 15, 2012

*ஆட்கொண்ட வள்ளல் (மஹாசமாதி கட்டுரை - 1)



ஆட்கொண்ட வள்ளல்

(நமது வித்யாவன ஆசிரியர் வ. சோமு அவர்கள் பெரிய சுவாமிஜி சித்பவானந்தரிடம் ஏற்பட்ட அனுபவங்களை கட்டுரையாக விஜயபாரதம் தீபாவளி மலரில் வெளியிட்டிருந்தார். நாளை ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் மஹாசமாதி தினத்தை முன்னிட்டு அந்த கட்டுரை இங்கு பதிவாகிறது.)

1962ஆம் ஆண்டு, அப்போது எனக்கு வயது 12. நான் தர்மபுரியில் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். என் தந்தையாரின் நண்பர் ரெங்கநாத செட்டியார் என் தந்தையிடம் வந்து “பையனை கொஞ்சம் என் கூட அனுப்பி வை. சாமியார் வரார்! மேடையில் நாற்காலி டேபிள் போடணும். சுத்தமாய் வைக்கணும்” என்றார். அப்பாவும் என்னை அனுப்பி வைத்தார். நான் எங்கள் ஸ்கூலுக்கு (ஜில்லா போர்டு உயர்நிலைப்பள்ளி, தர்மபுரி) சென்று மேடையில் நாற்காலி, மேசை போட்டு டேபிள் கிளாத் மேலே போட்டு,  நாற்காலி மேலே வெல்வெட் விரித்துக்கொண்டிருந்தேன். “இவ்வளவு அலங்காரம் தேவையோ?” என்று எனக்கு பின்னால் ஒரு குரல். பின்னால் பார்த்தேன். ஒரு சாமியார் எனது கன்னத்தில் தட்டினார். அது தான் முதல் ஸ்பரிசம். வெல்வெட் துணி அப்புறப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. கிரிதாரிபிரசாத் ஒரு மணி நேரம் முழங்கினார். பிறகு சாமியார் ஒரு நேரம் பேசினார்.
சுவாமி சித்பவானந்தர்
ஆரவாரமான, உணர்ச்சி பிழம்பு போன்ற கிரிதாரிபிரசாத்தின் பேச்சுக்குப் பிறகு சுவாமி பேசினார். “மழை பெய்து ஓய்ந்தது. சற்றே ஈரம் வற்றியபின் உங்கள் மனவயலை உழுது விதை விதைக்கலாம் என்று இருக்கிறேன்” என்று தன் பேச்சை துவக்கினார். இந்த இரண்டு வரிகள் ஐம்பது ஆண்டுகள் கடந்தும்கூட இன்னும் நினைவில் உள்ளது.

சமரச சன்மார்க்க சங்கம் சார்பாக நடந்த கூட்டம் அது. இதுதான் முதல் சந்திப்பு. ஒவ்வொரு ஆண்டும் அந்தர்யோகமும், சன்மார்க்க சங்க கூட்டமும் நடக்கும். அதற்கு வருவார். அப்போது எனக்கு அழைப்பு வரும் (வேலை செய்ய). அவர் பெயர் சித்பவானந்த சுவாமிகள் என்று சொன்னார்கள். என்னுடன் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார். ஓரளவு பழகினார். ரொம்ப ரிசர்வ்டாக இருந்தார். மேடையில் கூட கடிவாளம் போட்ட குதிரைதான். வாரியார் பேச்சுப்போல் அங்கிங்கு திரும்பாமல், ஸ்பின்னிங் மில் ஓடுவது போல ஒரே சீராக இருக்கும். எடுத்துக்கொண்ட தலைப்பைப் பற்றி மட்டுமே பேச்சு இருக்கும்.

நான் டிகிரி படித்து முடித்தவுடன் அவரிடம் சொன்னேன். அடுத்த ஆண்டு ஆசிரியர் பயிற்சிக்கு சென்று சேர் என்றார். அவர் பேச்செல்லாம் ஒரே ஆர்டர் மயம்தான். நான் இந்த வருஷமே போய் சேருகிறேன் என்று சொன்னேன். அவர் இரண்டு வேலைகள் பாக்கியிருக்கு. அது முடியட்டும் என்றார். அந்த ஓராண்டில் என் தகப்பனாரும், அதன்பின் தொடர்ந்து என் தாயாரும் வைகுண்ட பதவியை அடைந்தனர். அதனால் சுவாமி சொன்ன இரண்டு வேலைகள் இதுதான் என உணர்ந்துகொள்ள முடிந்தது. இது எனக்கு மிராக்கிள் போல இருந்தது.

என்னுடைய டிகிரியை எடுத்துக்கொண்டு கோவை பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷனுக்கு சென்று சுவாமி சோமானந்தா முன்னால் ஆஜர் ஆனேன். அவர் கேட்டார். “உன்னை யார் அனுப்பியது?” நான் “சுவாமி சித்பவானந்தர்”. அவர், “ஓ அப்படியா. சரி அப்பிளிகேஷன் போடு கிடைக்கும்” இந்த சுவாமி ஊட்டி ஆசிரமத்தில் சித்பவானந்தரிடம் பிரதராக இருந்தார் என பின்னால் தெரிந்தது. அங்கு சேர்ந்துவிட்டேன். அதன்பிறகு அவினாசிலிங்கம் ஐயா பழக்கமானார். ஆனால் அவரும் சித்பவானந்தரும் தோழர்களாக இருந்து மனஸ்தாபத்தில் முப்பது ஆண்டுகளுக்குமுன் பிரிந்தவர்கள் என தெரியாது.

ஒரு நாள் பி.கே. நடராஜன், அவர்கள் இருவரும் இணைவதற்கான ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அப்போது சுவாமி அங்கு வந்திருந்தார். நான் சுவாமியைப் பார்க்கச் சென்றேன். சுவாமி “படிப்பு நடக்குதோ?” நான் “ஆம் சுவாமி”. சுவாமி “படிச்சுட்டு அங்கு (திருப்பராய்த்துறை) வந்துட வேண்டியது”. நான் “அங்க இடம் இருக்கா?” சுவாமி “தானாக வரும்”. இந்த உரையாடலின்போது சுவாமி குகானந்தா உடனிருந்தார்.
அமரர் அவினாசிலிங்கம்
அதன்பின் வித்யாலய ஆடிட்டோரியத்தில் இணைப்பு விழா நடந்தது. 4000பேர் – அனைத்து ஆசிரியர்கள் – பேராசிரியர்கள் – மாணவர்கள் – ஊழியர்கள் வந்திருந்தனர். அமரர் அவினாசிலிங்கம் – அந்த மேடையில் சுவாமியை விட்டு அவர் பிரிந்தது குறித்து தேம்பி தேம்பி அழுதார். உடனே சுவாமி, “இங்கு அழுகை, கூக்குரல், ஒப்பாரி வைக்க அனுமதியில்லை. பேச வேண்டிய விஷயத்தை பேசிவிட்டு வந்து அமரலாம்” என்றார். அவினாசிலிங்கம் ஐயா அடங்கிப்போனார். அந்த கேம்பஸில் ஐயா அடங்கிப்போனது அதுவே முதல் முறை. படிப்பு முடிந்தது. ரிசல்ட் வருவதற்கு முன்பே சுவாமி நித்யானந்தரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. ஆசிரியர் ஒருவர் இறந்துவிட்டதால் காலியான வேலைக்கு நேர்காணலுக்கு வருமாறு அழைப்பு. தானாக வரும் என பெரிய சுவாமி சொன்னது நினைவுக்கு வந்தது. மீண்டும் சுவாமியை பார்த்தேன். சுவாமி, “என் மூலமாக வருகிறீர்கள் என்று தலைமை ஆசிரியரிடம் கூறக்கூடாது. தகுதியிருந்தால் செலக்ட் ஆகலாம்.” பள்ளிக்குச் சென்று குளோரின் என்ற பாடம் சொல்லிக்கொடுத்தேன். 14பேர் வந்திருந்தார்கள். எனக்கு போட்ட மதிப்பெண்கள் அதிகமாயிருந்ததால் பணிக்குச் சேர்ந்தேன். சுவாமியிடம் போய் ஆசி வாங்கினேன். அப்போது கேட்டார், “தலைமையாசிரியரிடம் ஏதாவது சொன்னீர்களா?” நான் “இல்லை” என்றேன்.

தினந்தோறும் காலையில் சென்று பாதநமஸ்காரம் செலுத்துவேன். “ஊம்” என்று ஒரு சிங்க கர்ஜனை மட்டும் கேட்கும். நம் மேல் பார்வை விழும். அவ்வளவுதான். அதற்கு மேல் நேரெம் ஒதுக்கமாட்டார். என் பிறந்தநாள் அன்று மட்டும் “மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ்” என்று சொல்லுவார். ஒவ்வொரு நிமிஷமும் உபயோகமாக செலவிடுவார். காலையில் எழுந்திருந்து தன் துணிகளை தானே துவைத்து குளித்து முடித்து கோயிலை திறந்து திருப்பள்ளியெழுச்சி, கீதை, நாமாவளி, தியானம் முடித்து, சிறுவர்கள் உடற்பயிற்சியை பார்வையிட்டு அதன் பின் நடைப்பயிற்சி முடிப்பார். ஆஜர் எடுத்து, மாணவர்களோடு சாப்பிட்டு, ஹிந்து, எக்ஸ்பிரஸ் இரண்டும் படித்து முடித்து, பின் கடிதங்களுக்கு பதிலெழுதி, ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி, உச்சிகால வழிபாட்டில் வழிபாடு, தியானம், உணவு ஓய்வு முடித்து மீண்டும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி முடித்து, மாலை பள்ளிக்கு கான்வாஸ் ஷூ அணிந்து  செல்வார். மாலைப் பிரார்த்தனை, தியானம், சிறு வகுப்புப் பிள்ளைகளுடன் உணவு, சத்சங்கம் முடித்து, இரவு 10.30 மணிக்கு உறங்கச்செல்வார். இந்த நடைமுறைகள் இறுதிவரை மாறவில்லை. சுகவீனம் அடைந்தபோதும் தொடர்ந்தன. கிழக்கு நோக்கியுள்ள ராமகிருஷ்ணர் கோயிலில் வடக்கு நோக்கி அமர்ந்து தியானம் செய்வார். வடக்கு நோக்கி ஸ்நானம் செய்வார். தெற்கு நோக்கி உணவு உட்கொள்வார். மேற்கு நோக்கி அலுவல் புரிவார். இறுதிவரை இந்த திசைகள் மாறியதில்லை.

1984-85 GROUP PHOTO  
சுவாமி சித்பவானந்தர் இறுதியாக எடுத்துக்கொண்டது

(இந்த கட்டுரையை எழுதியவர் மேலே உள்ள புகைப்படத்தில் முதல் வரிசையில் இடமிருந்து வலமாக 7ஆவது இடத்தில் அமர்ந்திருக்கிறார்.)
டைனிங் ஹாலிலும் சரி, அட்டெண்டன்ஸ் எடுக்கும்போதும் சரி மாணவர்களை உச்சிமுதல் உள்ளங்கால் வரை கூர்ந்து நோக்குவார். பொறுமையிழந்த நான் ஒரு நாள் அவரிடம் சென்று, “அப்படியென்ன தேடுகிறீர்கள்? யாரைத் தேடுகிறீர்கள்?” எனக் கேட்டேன். அவர் பதில் “விவேகானந்தரைத் தேடுகிறேன்” நான், “கிடைத்தாரா?” அவர் உதட்டைப் பிதுக்கினார். (இல்லையென்று சொல்லவில்லை). ஒரு  நாள் ஆசிரியர் கூட்டத்தில் “இவ்வளவு காலமாக குருகுலம் நடத்துகிறோம். ஒரு மாணவன் கூட துறவியாக வரவில்லையே? இவர்களை துறவி ஆக்கும் அளவுக்கு நமக்கு தகுதியில்லையோ?” என அங்கலாய்த்துக்கொண்டார்.

அவருடைய மூச்சு – பிராணன் முழுவதும் வித்யாவனத்திலிருந்தது. நான் திண்டுக்கல்லில் ஒரு பெரியவரை சந்தித்தேன். அவர் பெயர் மௌனகுருசாமி. வயது 80 இருக்கும். 1947-47ல் அங்கு படித்தவர். திண்டுக்கல் சௌந்தரராஜா மில்லின் மேலாளராக இருந்தார். அவர் சொன்னார், “சுவாமி காலையில் எங்களை காவிரி ஆற்றுக்கு அழைத்துச் சென்று நன்றாக தேய்த்து குளிப்பாட்டுவார் (ஸ்பரிச தீக்ஷை). எங்க அம்மா கூட என்னை அப்படி குளிப்பாட்டியதில்லை” எனக் கண் கலங்கினார். லட்சுமண சுவாமி என்ற மாணவர் சொன்னார், “கோவை ஆசிரமத்திற்கு காரில் செல்லும்போது சுவாமி இரண்டு மாணவர்களை உடன் அழைத்துச் செல்வார். ஒருமுறை நான் சென்றிருந்தேன். போகும்போது ராமாயணம், வரும்போது பாரதம் சொல்லி முடித்துவிடுவார். கதை கேட்டுக்கொண்டே அவர் மடியில் தூங்கிவிடுவேன். என் தாயாரின் மடியில் கூட நான் அவ்வளவு பரமானந்தம் அடைந்ததில்லை. அவர் மடியில் எனக்குக் கிடைத்த நிம்மதியை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்” என்றார்.

ஸ்ரீ விவேகானந்த வித்யாவன உயர்நிலைப்பள்ளி

பள்ளிக்கூடத்தை வித்யாவனத்தாய் என்று நான் நினைத்தது தவறு. 䮚ுவாமிதான் வித்யாவனத்தாய் என்பது புரிந்தது. வித்யாவனத்தாயாக தாயின் கடமையையும், குலபதியாக தந்தையின் கடமையையும் ஒருங்கே ஆற்றியது நம்ம சுவாமிதான். “தந்தை தாயும் நீ என்னுயிர் துணையும் நீ” என்ற பாட்டுக்குப் பொருத்தம் சுவாமிதான்.

ஊட்டியிலிருந்து நடந்தே திருப்பராய்த்துறை வந்தபோது கையில் வெறும் நான்கணாதான் வைத்திருந்தார். ஆனால் இப்போது ஒரு பெரிய சாம்ராஜ்யமே உருவாகிவிட்டது. அதன்கீழ் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் 18 மடங்களும், 60 பள்ளிகளும் 7 கல்லூரிகளும் உள்ளன.
பள்ளியில் 75-76ஆம் கல்வியாண்டில் ஓர் அறிவியல் பொருட்காட்சி வைத்திருந்தேன். சுவாமி உள்பட பெரியவர்கள் அனைவரும் பாராட்டினர். சுவாமி தனிப்பட்ட முறையில் என்னை பாராட்டினார். அதைத் தொடர்ந்து பரமஹம்சரின் விஞ்ஞான விளக்கங்களை தர்மசக்கரம் பத்திரிக்கையில்  எழுதச் சொன்னார். நான் விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் என்ற தலைப்பில் 15 மாதங்கள் எழுதினேன். செய்து கற்றல் என்ற தத்துவ அடிப்படையில் 8ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி வகுப்புகளை சுவாமியை வைத்து துவக்கினேன். பி.எச்.இ.எல் தலைவர் தீனதயாளன் இதை துவக்கி வைத்தார். தமிழகத்தில் எந்த பள்ளியிலும் இந்த வசதி அந்த காலகட்டத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் திரு.ஜி. விஸ்வநாதம் அவர்களுடைய மகன் டாக்டர் வி. ஜெயபால் அவர்கள் பள்ளியில் அறிவியல் கழகத்தை 1974ல் துவக்கி வைத்தார். ஒவ்வொரு சனிக்கிழமையும் மெடிக்கல் காலேஜ் டீன், கல்லூரி துறைத்தலைவர்கள், கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், பொறியியல் வித்தகர்கள் இப்படி  ஒருவரை அழைத்து வருவேன். எஸ்.எஸ்.எல்.சி மாணவர்களுக்கு விஞ்ஞான தொடர்சொற்பொழிவுகள் நிகழ்ந்துகொண்டே இருந்தன. தபோவன அன்பர், அமரர் திருச்சி டி.பி. சண்முகசுந்தரம் வழிகாட்டுதலின்படி பள்ளியில் போட்டோகிராபிக் கிளப் செயல்பட்டது. டிரான்சிஸ்டர் ரேடியோ செய்ய மாணவர்கள் பழக்கப்படுத்தப்பட்டனர். அந்த காலகட்டத்தில் எந்த உயர்நிலைப்பள்ளியிலும் இவ்வளவு வசதிகள் இருந்ததில்லை. இவ்வளவுக்கும் சுவாமிதான் எனக்கு ஊக்கம் கொடுத்தார். சுவாமி நித்யானந்தரும் நல்ல ஊக்கம் கொடுத்தார். எனது ஆன்மீக வளர்ச்சிக்கு இவரும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார்.

சுவாமிஜியும், முதலமைச்சரும்.

எம்.ஜி.ஆர் முதலமைச்சராயிருந்த போது சேலம் சாரதா கல்லூரி விழாவுக்கு காலதாமதமாக வந்தார். மன்னிப்பு கேட்டார். பின்பு எம்.ஜி.ஆர் அவருக்கு பாத நமஸ்காரம் செய்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
தாயுமானவர்
இராமநாதபுரத்தில் தாயுமானவருக்கு சமாதி கோயில் கட்ட ஏற்பாடு ஆனது. அதில் வைக்க தாயுமானவர் சிலைக்காக வடிவமைப்பு பற்றி சுவாமி யோசித்தார். வித்யாவன மாணவர்கள் அனைவரையும் வரிசையாக பரிசோதனை செய்து சிலரை தேர்ந்தெடுத்தார். கண்ணுக்கு ஒரு மாணவனையும் காதுக்கு ஒருவனையும் உடல்வாகுக்கு ஒருவனையும் தேர்ந்தெடுத்து சிற்பியை அழைத்து இந்த சாமுத்ரிகா லக்ஷணப்படி சிலை அமைக்கச் சொன்னார். அதன்படி சிலையும் நன்கு அமைந்தது.

சுவாமிக்கு உடல்நலம் குன்றியபோது மருத்துவர்கள் கொடுத்த குழாய் மாத்திரைகளை பிரதர் நாகசுந்தரம் கொடுத்தார். ஒருநாள் கருப்பு சிகப்பு வண்ணத்தில் இருந்த குழாய் மாத்திரைகள் இரண்டு கொடுக்கப்பட்டது. அதை சுவாமி வாயில் போட்டு தண்ணீரை குடித்தார். “ராமசாமி பெரியாரை விழுங்கியாச்சு” என்று சொல்லி சிரித்தார். உடன் இருந்தவர்களும் சிரித்தனர். அதாவது நாத்திக வாதத்தை சுவாமி விழுங்கிவிட்டதாக பொருள்.

செப்டிக் டேங்க் சுத்தப்படுத்த ஆட்கள் வரவில்லை. பள்ளி திறந்துவிட்டால் குழந்தைகள் வந்தபின்பு இந்த வேலைகளை வைத்துக்கொண்டால் அவர்களுக்கு சிரமம். “ஆட்கள் வரவில்லையே எப்படி சுவாமி சுத்தப்படுத்துவது?” என்றனர். “இதோ இப்படித்தான்” என்று கூறி சுவாமி மலக்குழிக்குள் குதித்துவிட்டார். பக்கெட்டில் மனிதக் கழிவுகளை தானே எடுத்து அப்புறப்படுத்தினார். அதன்பின் மற்றவர்களும் வேலையில் இறங்கினர்.
பழனி முருகன்
ஒருமுறை பழனி முருகனை தரிசிக்க சுவாமி மலையேறிக்கொண்டிருந்தார். பாதிதூரம் கடந்துவிட்டார். ஸ்ரீ சாது சுவாமிகள் மேலேயிருந்து கீழே வந்து கொண்டிருந்தார். சுவாமியை பார்த்து “தரிசினத்துக்கோ?” என்றார் சுவாமி. “ஆமாம் சுவாமி” சாது, “சரி வாருங்கள். உங்களுக்காக நானும் திரும்ப மலையேறுகிறேன்” என அழைத்துச் சென்றார். “உமக்கு எந்த கோலத்தில் தரிசனம் வேண்டும்?” என்று கேட்டார், சுவாமி. “நமக்கேற்ற கோலத்தில்தான்” என்றார் (அதாவது ஆண்டிக்கோலம்). பொதுஜன தரிசனம் ஒருமணி நேரம் நிறுத்தப்பட்டு மூலஸ்தானத்தில் சுவாமியை அமர வைத்து தியானம் செய்ய வசதி செய்து தரப்பட்டது.

1980-ல் மாணவர்கள் வரிசையாக நின்று சாமியிடம் ஆஜர் கொடுத்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பையன் துடுக்காக, “சுவாமி நீங்க இன்னும் எவ்வளவு நாள் இருப்பீங்க?” என்று கேட்டான். அதற்கு சுவாமி சிறிதும் அதிர்ச்சியடையாமல், “இன்னும் 5 வருஷம்” என்றார். அதே போல் 5 வருஷம்தான் இருந்தார்.

ஒருமுறை ஓர் அழகான கலைநயமிக்க பூந்தோட்டத்தை உருவாக்கியிருந்தேன். குருதேவர் ஜெயந்தி விழாவுக்காக அதை செய்திருந்தேன். அதனருகில் தோட்டத்தை ரசிக்கும் மக்கள் தோட்டக்காரனை நினைத்துப் பார்ப்பதில்லை. உலகை அனுபவிக்கும் மக்கள் அதை படைத்த இறைவனை நினைப்பதில்லை என்ற வாசகத்தோடு போர்டு வைத்திருந்தேன். சுவாமி அந்தப் பக்கமாக வந்தார். தோட்டத்தை ரசித்துப் பார்த்தார். பலகையில் எழுதியிருந்ததையும் படித்தார். என் அருகில் வந்து “நான் உங்களை நினைத்துப் பார்க்கிறேன்” என்று கூறிவிட்டு சிரித்தார்.

சுவாமி உடல்நலமில்லாதபோது பாலகிருஷ்ணன் என்ற மாணவர், சுவாமியிடம் “நீங்க பெரிய ஞானிதானே?” என்றார்.
சுவாமி: அப்படி சொல்லிக்கிறாங்க.
பாலு: அப்படின்னா உங்களுக்கு வந்துள்ள நோயை உங்க தவவலிமையால் குணப்படுத்துங்க சாமி.
சுவாமி: அது நமக்கு அப்பாற்பட்ட விஷயம். சரீர விஷயங்களில் நாம் தலையிடுவதில்லை என்று கூறி தாம் ஆத்ம சொரூபம் என்பதை நிரூபித்தார்.
வித்யாவனத் தாய்

1 comment:

  1. அன்பின் சுவாமிஜி - இப்பதிவு இன்றைய தினம் வலைச்சரத்தில் அறிமுகப் படூத்தப் பட்டு இருக்கிறது.
    http://blogintamil.blogspot.co.uk/2013/09/7.html.

    அருமையான சிந்த்னையில் உருவான அழகான பதிவு. சுவாமி சித்பவானந்தா பற்றிய அரிய தகவல்கள் அடங்கிய பதிவு. வித்யாவன ஆசிரியர் வ.சோமு அவர்கள் எழுதிய பதிவு.

    வித்யாவன ஆசிரியர் திரு.வ.சோமு விஜயபாரதம் தீபாவளி மலரில் எழுதிய ஒஅதிவு இங்கு மீள் பதிவாக இடப்பட்டிருக்கிறது.

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete