ஸ்ரீ ரமண பகவானது திருமேனியின் இடது முழங்கைப் புறத்தில் 1949ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே கிளம்பிய ஒரு சிறிய தசை வளர்ச்சி கொடிய புற்றாய் பெரிதாகி, ரேடியம் சிகிச்சையும் இதர வைத்தியங்களும் செய்யப்பெற்றும் எதற்கும் அடங்காது, மேன்மேலும் ஓங்கி அவரது புனிதத் திருமேனியை ஓராண்டுக்கு மேல் வாட்டி முடிவில் வதைத்துவிட்டது.
1950 ஜனவரி 5ஆம் நாள் ஸ்ரீ பகவானது எழுபதாம் ஆண்டு நிறைவின் ஜயந்தி இனிது கொண்டாடப் பெற்றது. அதன் பிறகு, நோய் மிக விரைந்து முற்றினாலும் இடைவிடாது பக்தர்கள் வருகை தந்தபோது முகமலர்ச்சியோடு காட்சியருளி ஆறுதல் கூறினார்.
ஏப்ரல் மாதம் 14ஆம் நாள் வெள்ளிக்கிழமை, மாலை பக்தர் கூட்டம் பகவானைத் தரிசித்து முடிந்த பின்னர், தமது திருமேனியை உட்கார வைக்கும்படி பணி செய்வோரை பகவான் கேட்டுக்கொண்டார். அவர்கள் அவ்வாறே செய்தனர். டாக்டர்கள் பிராண வாயுவை பகவானது நாசிப்பக்கம் காட்டத் தொடங்கவும், திறந்த வலக்கையின் குறிப்பால், பகவான் அதை நிறுத்துமாறு பணித்தார்.
தம்மால் அருளப்பெற்ற அருணாசல சிவ ஸ்துதியை அன்பர்கள் அறைக்கெதிரேயிருந்து பாடத் தொடங்கவும், பகவான் ஒருமுறை கண்ணைத் திறந்து முன்னே நோக்கினார். கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகியது.
சிறிது நேரத்தில் மூச்சின் இயக்கம் அமைதியாய் நிற்க, உடலும் அசைவற, அவர் அண்ணாமலையாரிடம் இரண்டறக் கலந்தார். ஸ்ரீ ரமண பகவான் மஹாநிர்வாணம் எய்திய அக்கணம் இரவு 8:47 மணிக்கு வானத்தினூடே அழகிய பேரொளியொன்று தெற்கேயிருந்து வடக்கு நோக்கி, பகவான் இருப்பிடத்திற்கு மேல் வழியே சென்று அண்ணாமலை எல்லையில் மறைந்தது. இவ்வற்புதம் பல்வேறு இடங்களிலும் காணப்பெற்றதென்று பிறகு தெரியலாயிற்று.
அந்நேரத்தில் பகவானுக்கு அருகிலிருந்தோரை ஒப்பிலாத ஓர் உயரமைதியொன்று சூழ்ந்து செறிந்து விளங்கியது. அணுக்கத் தொண்டரின் உள்ளத்தே நினைப்பின் அலையோ உணர்ச்சியின் அலையோ எதுவும் எழவில்லை. மஹாநிர்வாணத்தின் மோனப் பேரெழிலே சிறந்து விளங்கியது.
மறுநாள் முற்பகல் பக்தர் யாவரும் சூழ்ந்து சேவிக்க, பகவானது திருமேனிக்கு அபிஷேக ஆராதனைகள் முறைப்படி நடைபெற்றன. அன்று மாலை பக்தர்கள் வழிபட, பகவானது தவமேனி மாத்ருபூதேஸ்வரரின் மூலஸ்தானத்திற்கு வடக்கிலுள்ள திறந்த வெளியில் ஆகம முறைப்படி அமைக்கப்பெற்றா குழியில் சமாதி செய்யப்பெற்றது.
அது முதல், பகவானது திருமுன்னர் என்றும் நடந்து வந்த வேத – உபநிஷத் பாராயணங்களுடன் அன்னார் சமாதிக்குக் காலையும் மாலையும் நித்திய பூஜை நடந்து வருகிறது. அன்பர்கள் அப்பொழுது பகவத் சந்நிதியை சேவித்து, தியானித்து வழிபட்டு வருகின்றனர்.
இன்று(18.04.2012) திதிப்படி ஸ்ரீ ரமண பகவான் மஹாநிர்வாணம் எய்திய நாள் ஆகும். ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரும், ஸ்ரீ ரமண பகவானும் உரையாடிய நிகழ்ச்சியை 21.05.2011 தேதியிட்ட சான்றோர் சந்திப்பு பதிவை வாசிக்கவும்.
No comments:
Post a Comment