சரித்திர வரலாற்றின்படி விஜயரங்க சொக்கநாத நாயக்கர் திருச்சிராப்பள்ளியில்
அரசாண்ட காலம் 1704 முதல் கி.பி. 1731 வரையிலாகும். அரசருக்கு மகப்பேறு ஏதும்
இல்லை. ஆதலால் அரசர் ஆணைப்படி அவருடைய ராணி மீனாக்ஷி அம்மை நாட்டின் ஆட்சி முறையை மேற்கொண்டாள்.
தகுதி வாய்ந்த சம்பிரதியும் ஏனைய மந்திரி பிரதானிகளும் வாய்ந்திருந்ததினால் சிரமம்
ஏதுமின்றி ராணி மீனாக்ஷி கி.பி. 1731 முதல் செங்கோல் செலுத்தி வந்தாள்.
அக்காலத்தில் அரசாங்க சம்பந்தமான அரிய பெரிய குறிப்புக்கள் பனையோலையில் பதிவு
செய்து வைக்கப்பட்டிருந்தன. ஒரு நாள் சம்பிரதியானவர் அத்தகைய அரிய அரசாங்கப்
பத்திரம் ஒன்றை ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்தபொழுது அதைத் தம்முடைய இரண்டு
கரங்களாலும் கசக்கித் துகள்துகள்களாகப் பாழ்படுத்தினார். அருகில் இருந்த ஏனைய
உத்தியோகஸ்தர்கள் இச்செயலைக் குறித்துத் தடுமாற்றமடைந்துத் தங்கள் வியப்பைத்
தெரிவித்தனர்.
சம்பிரதியாருக்கு இப்பொழுது தாம் செய்த பிழையைப் பற்றிய உணர்வு ஒருவாறு
மனத்தில் உதயமாயிற்று. அவர் இயம்பியதாவது: “திருவானைக்கா அம்பிகை
அகிலாண்டேஸ்வரியின் துகிலில் வீழ்ந்து பற்றிய கற்பூரத் தீயைக் கசக்கி அணைக்க
முயன்றேன்; என்னையறியது என் கையிலிருந்த இந்த அரிய அரசாங்கப்பத்திரம்
பாழ்படுத்தப்பட்டது. அதைக் குறித்து நான் மிகவும் வருந்துகிறேன்”.
சிறிது நேரத்திற்குள் திருவானைக்காவிலிருந்து ஆங்கு நிகழ்ந்த சிறிய விபத்தைக்
குறித்த செய்தி அரண்மனைக்கு வந்தது. அர்ச்சகர் கற்பூர தீபாராதனை பண்ணிக்கொண்டிருந்தபொழுது
அந்த நெருப்புத் தவறி அம்பிகையின் ஆடையின்மீது வீழ்ந்தது. ஆடையும் தீப்பற்றிக்
கொண்டது. சிரமப்பட்டு அது அணைக்கப்பட்டது. இதுவே அங்கிருந்து வந்த செய்தியாகும்.
சம்பிரதியின் செயலும், இந்த நிகழ்ச்சியும் ஒன்றை ஒன்று ஒத்து இருந்தன. இதை
முன்னிட்டு அரண்மனையில் உத்தியோகஸ்தர்களிடத்திலும் அரசியாரிடத்திலும் பதைபதைப்பும்
வியப்பும் எழலாயின. இந்த வியப்புக்குரிய செயலைச் செய்த சம்பிரதியாரின் பெயர்
‘தாயுமானவன்’.
ராணி மீனாக்ஷி சம்பிரதியார் தாயுமானபிள்ளையைத் தகுந்த ஆசனத்தில் அமரச்செய்து
அவருடைய பக்தியையும், பரநாட்டத்தையும் பெரிதும் பாராட்டினார். “தங்கள் ஆணைப்படி
நாங்கள் அனைவரும் நடந்துகொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்” என்று ராணியார்
விண்ணப்பித்தார்.
“தாயே! இனி, என் மனம் உலக வியவகாரங்களில் செல்லாது. நான் முற்றிலும் பரத்துக்கு உரியவனாகும் காலம்
வந்துள்ளது. என் போக்கில் போக எனக்கு அனுமதி கொடுப்பதே இவ்வரசாங்கம் எனக்குச்
செய்யும் பேருபகாரமாகும்” என்று சம்பிரதியார் தம் சித்தத்தில் இருந்ததைத்
தெரிவித்தார். அவர் விருப்பப்படி வெளியேற அவருக்கு அரசாங்கத்தில் அனுமதி அரை
மனதோடு வாய்ப்பதாயிற்று. இதுகாறும் நாடாளும் வேந்தன் ஸ்தானத்தில் இருந்த
தாயுமானவர் இப்பொழுது துறவி வேந்தராக வெளியேறினார். இதனோடு அவருடைய உலக வாழ்க்கை
சம்பந்தமான பிராரப்த கர்மமும் பூர்த்தியாயிற்று.
தென் திசையில் இவர் செய்த தீர்த்த யாத்திரையின் முக்கிய நோக்கம்
இராமேஸ்வரத்தைச் சென்று தரிசித்தல் பொருட்டேயாம். பிறகு இராமநாதபுரத்துக்குத்
திரும்பி வந்து தம்முடைய வாழ்க்கையின் இறுதிப் பகுதியைப் பரநிஷ்டையில் கழித்து
வந்தது தாயுமான சுவாமிகளின் வாழ்க்கையில் நிகழ்ந்த இறுதிச் செயலாகும். பரபோதத்தில்
மூழ்கியவராக அவர் இவ்வூரில் யாக்கையை ஒதுக்கித் தள்ளிவிட்டுப் பரத்தினில் இரண்டறக்
கலந்தார். சுபகிருது வருஷம் தை மாதம் விசாக நட்சத்திரத்தன்று ஸ்ரீ தாயுமான
சுவாமிகள் மகாசமாதி அடைந்தார்.
அவருடைய திருமேனி இராமநாதபுரத்துக்கு வெளிப்பட்டணமாக இருக்கும் பகுதியான
லக்ஷ்மிபுரம் என்னும் ஊரில் சமாதி வைத்துத் திருக்கோயில் எழுப்பப்
பெற்றிருக்கிறது.
ஸ்ரீ தாயுமான சுவாமிகள் |
தமிழ்நாடு ஈன்றெடுத்தத் தலைசிறந்த தவப்புதல்வர்களுள் ஸ்ரீ தாயுமான சுவாமிகளும்
ஒருவர். அருள்தாகம் வாய்த்தவர்களுக்கு இவர் அரியதொரு முன்மாதிரி
மூர்த்தியாயிருக்கிறார். அந்த மூர்த்தியின் குருபூஜை தை மாதம் விசாக நட்சத்திரமான இன்று(4.2.2013,
திங்கள்) ஸ்ரீ தாயுமான ஸ்வாமி தபோவனத்தில் நடைபெறுகிறது.
[இந்த கட்டுரை ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் இயற்றிய ‘ஸ்ரீ தாயுமான
சுவாமிகளின் வரலாறு’ புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.]
No comments:
Post a Comment