Friday, September 28, 2012

*இரங்கல்


NRR என்று அனைவராலும் அழைக்கப்பட்ட வித்யாவனத்தின் ஓய்வு பெற்ற இடைநிலை ஆசிரியர் திரு. N. ராமரத்னம் 26.09.2012, புதன்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார். அன்னாரது ஆன்மா சாந்தியடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.

Tuesday, September 18, 2012

*விக்கின ராஜா


-சுவாமி சித்பவானந்தர்.
தோன்றாததும் மறையாததுமாகிய பொருளைத் தோன்றி வந்ததாகக் கருதுவது மாந்தரது போக்கு. பிறப்பையும் இறப்பையும் அறிகிற நாம் கடவுளையும் பிறக்கும்படி செய்து அதில் திருப்தியடைகிறோம். கணபதிக்கு அத்தகைய தோற்றம் கற்பிக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்ற காரணத்தையும் புராணம் நமக்கெடுத்துப் புகட்டுகிறது. இயற்கையின் நடைமுறையில் ஒரு குறைபாடு இருப்பதாகத் தேவர்கள் கண்டறிந்தார்கள். வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்னும் கோட்பாடே அக்குறைபாடு ஆகும். அசுரர்களும், ராக்ஷசர்களும் வல்லமை மிகப்படைத்தவர்கள். அவர்கள் நல்லதையும் தீவிரமாகச் செய்ய முடியும்; கெட்டதையும் அப்படியே செய்ய முடியும். மற்றவர்கள் செய்கிற நலத்துக்கு இடைஞ்சல் செய்யவும் அரக்கர்களுக்கு இயலுகிறது. இவ்வண்ணம் இயற்கையின்போக்கு அமைந்துவிட்டால் நல்லவர் முன்னேற்றம் அடைய முடியாது. “தீய முயற்சிகள் எவ்வளவுதான் ஆற்றல் படைத்திருந்தாலும் முடிவில் அம்முயற்சிகள் முட்டுக்கட்டைகளில் மாட்டிக்கொள்ள வேண்டும். நலத்தை மீட்டுவிப்பதும், நல்லது அற்றவைகளை பின்னணியில் தள்ளுவதும் ஒரு தெய்வத்தின் தனிச்செயல் ஆகுக.” இத்தகைய தெய்வத்தைத் தங்களுக்குத் தோற்றுவித்துத் தர வேண்டுமென்று தேவ கணங்கள் ஒன்று கூடி பரமேசுவரனிடம் பிரார்த்தித்தார்கள்.
பரமசிவன் பார்வதியின் உதவியை நாடினார். சிவசக்தியின் அருள் பிரசாதமாக ஆனைமுகன் உருவெடுத்தான். அவன் விக்கினேசுவரனாக விளங்கினான். தடைகள் பல செய்யவும், தடைகளைத் தவிர்க்கவும் வல்லவன் அவன். இயற்கையின் நடைமுறையில் ஒழுங்குப்பாடு உண்டு. அதற்கு இழுக்கு ஒன்றும் வந்துவிடாது. தாறுமாறான நிகழ்ச்சிகளுக்கு அதில் இடமில்லை. இங்ஙனம் கணபதியின் பிறப்பால் வந்துள்ள ஒழுங்குப்பாட்டை அறிந்த தேவர்களும் பெருமகிழ்வடைந்திருந்தனர். இயற்கையின் முறைமையைக் காப்பவன் கணபதி.

இயற்கையின் நடைமுறையில் ஒழுங்குப்பாடு இருக்கிறது. உயர்ந்த நோக்கமும் ஒன்று அதன் செயலில் திகழ்கிறது. உயர் நோக்கம் இல்லாவிட்டால் இயற்கை உயிரற்ற யந்திரம் ஆய்விடும். உண்மையில் அதன்கண் உயர்நோக்கம் இருப்பதால் அது உயிர் ஓவியம் என்றும் பேரறிவுப் பொருளின் இயக்கம் என்று இயம்பப்படுகிறது. சிற்றுயிர்களைப் பண்படுத்தி அவைகளைப் பேருயிர்களாக்குவது இயற்கை தெய்வத்தின் பெருநோக்கமாகும். உயிர்களின் நலம் தரும் வளர்ச்சியைத் தடுப்பது எதுவோ அது விக்கினம். அத்தகைய விக்கினத்தை விக்கின ராஜாவாகிய கணபதி ஆண்டு வருகிறான். அவனை வழிபடுபவர்கள் அவனுடைய முன்னிலையில் மண்டையைக் குட்டிக்கொள்ளுதல், தோப்புக்கரணம் போடுதல், வலம் வருதல் ஆகிய செயல்கள் யாவும் ஓர் உயர்ந்த கோட்பாட்டை உயிர்களின் உள்ளத்தில் நிலைநாட்டுதற்கு அமைந்தவைகளாம். “இறைவா, என்னுடைய ஜீவபோதமும், ஜீவப்பிரயத்தனமும், உன்னுடைய வாலறிவிலும் வல்வினையிலும்  அடங்கியிருக்கட்டும். என் முயற்சி உனது பெருந்திட்டத்துக்கு ஒத்ததாயிருக்குமாகில் நான் வெற்றி பெறுவேன். அப்படியல்லாது நான் உன்னோடு முரண்படுவேனாகில் என் முயற்சி தோல்வியுறும். ஆக, எனக்குத் தோல்வி நேர்ந்தாலும் அதை நான் உன்னுடைய ஆணையாக ஏற்றுக்கொள்வேனாக”. இங்ஙனம் ஈசன் செயலுக்கு ஒத்த மனப்பான்மையை வரவழைத்துக்கொள்ளுதல் விக்கினேசுவர பூஜையாகும். இத்தகைய மனப்பான்மையில்லாத வெறும் சடங்குகளும், கிரியைகளும் கணபதி பூஜையாகமாட்டா. பூஜாவிதிகள் என்று பகரப்பெறும் கிரியைகள் இருக்கலாம்; அல்லது இல்லாது போய்விடலாம். ஆனால் ஈசனுடைய பெருந்திட்டத்துக்கு ஒத்த முயற்சி எங்கிருக்கிறதோ அங்கு விக்கினம் நீங்கிவிடுகிறது; வெற்றியுண்டாகிறது. அவனுடைய அமைப்புக்கு மாறான முயற்சிக்கோ விக்கினம் குறுக்கிடுகிறது; அப்படி முயலுகிற உயிர் விக்கினத்தில் கட்டுண்டு தோல்வியடைகிறது.

இந்த சிறு கட்டுரையானது ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் இயற்றிய “கடவுளின் வடிவங்கள்” என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. நாளை, 19.09.2012 புதன்கிழமை விநாயக சதுர்த்தியை முன்னிட்டு இங்கு பதிவேற்றப்பட்டுள்ளது.

Tuesday, September 11, 2012

*CHICAGO ADDRESSESS BY SWAMI VIVEKANANDA


இறைவனது அருட்செயல்:
பேரறிஞராகிய ஆசிரியர் ஜே.எச். ரைட் சர்வமத மகாசபையை நிர்வகிக்கும் பெரியார்களுள் செல்வாக்கு மிகப்படைத்தவர். அவர் அச்சபைத் தலைவருக்கு எழுதின சிபாரிசுக் கடிதத்தில்  பல அடைமொழிகளுக்கிடையே, சுவாமி விவேகானந்தரைப் பற்றி “நமது ஆசிரியர்கள் எல்லோரும் ஒன்று திரண்டு நின்றாலும் கல்வியில் இப்பெரியாருக்கு ஒப்பாகமாட்டார்கள்” என்று வரைந்திருந்தார். சுவாமி விவேகானந்தர் கையில் போதிய அளவு பணமில்லாதிருப்பதை தெரிந்து ரயில் பயணச் சீட்டும் வாங்கிக்கொடுத்து அவரை சிகாகோவுக்கு அனுப்பி வைத்தார்.
சோதனைக் காலம் நிறைவுறுதல்:
சிகாகோ நகருக்கு சுவாமி விவேகானந்தர் வந்து சேர்ந்தது இரவு நேரம். விதி வசத்தால் சேர வேண்டிய இடத்தின் விலாசத்தை இழந்துவிட்டார். பிரயாண களைப்பால் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்றெண்ணி ஸ்டேஷனில் தங்கிவிட்டார். சொற்ப நாட்களில் அமெரிக்காவையே ஆட்டி வைக்கப்போகிறவர் நீண்ட பெட்டியின்மீது படுத்துக்கிடந்தார்.

மறுநாள் காலையில் தாம் சேரவேண்டிய இடத்தை நாடி மாளிகைகள் நிறைந்த வீதிகளில் கால்நடையாக விசாரித்துக்கொண்டே போனார். வீடுதோறும் சந்திக்க வேண்டியவரை பெயரைச் சொல்லி விசாரித்தார். சிலர் சிரித்தனர்; வேடிக்கை செய்தனர்; சீறி விழுந்தனர்; சினந்து கர்ஜித்தனர்; சிலர் இன்சொல் கூறினர். யதேச்சையாக இவர் மீது அனுதாபம் காட்டிய சீமாட்டி ஒருத்தியால் சேரவேண்டிய இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மகாசபை நிர்வாகிகளும் சிபார்சுக் கடிதத்தைப் பார்த்துவிட்டு சுவாமிகளையும் ஓர் உபந்நியாசகராக ஏற்றுக்கொண்டு இடவசதி, போஜன வசதி செய்து வைத்தனர்.
சிகாகோ சர்வமத மகாசபை:


கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த 400ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் சிகாகோ நகரில் மாபெரும் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விஞ்ஞானம், பொருளாதாரம் என்று ஏறத்தாழ இருபது பேரவைகள் கூடிய அந்த மாபெரும் கண்காட்சியின் ஓர் அங்கம் சர்வமத மகாசபை. உலகின்கண் உள்ள எல்லா மதங்களையும் சீர்தூக்கிப் பார்த்து, அவைகளின் மேன்மைகளை ஆராயவேண்டுமென்ற பரந்த நோக்கத்துடன் சர்வமத மகாசபையானது நடாத்தப்பட்டது. 1893ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் காலை பத்து மணிக்கு இம்மகாசபை துவக்கப்பட்டது. எல்லா மதங்களின் மாண்புகளையும் கேட்டறிய விரும்பிய பேரறிஞர்கள் சுமார் பத்தாயிரம் பேர் ‘கொலம்பியன் ஹால்’ என்ற மண்டபத்தினுள் கூடியிருந்தனர்.

சர்வமத மகாசபையில் சுவாமி விவேகானந்தர்
அவைத் தலைவர் அந்த மகாசபையின்  உயர்நோக்கத்தைப் பற்றி அழகிய முன்னுரையொன்று பகர்ந்தான பின்பு, உபந்நியாசகர்களை ஒருவர் பின் ஒருவராகச் சபைக்கு அறிமுகம் செய்து வைத்தார். பிற்பகல் நேரம். தமது முறையும் வருவதை அறிந்து ஸ்ரீமத் விவேகானந்த சுவாமிகள் உடல் துடித்தது; நாவுலர்ந்தது. இந்தத் திருக்கூட்டம் தேர்ச்சி பெற்ற பிரசங்கிகளையும் திகைத்திடச் செய்யவல்லது. சுவாமிகள் அம்பாள் சரஸ்வதியையும், தமது குருநாதரையும் நினைந்து பரவசமடைந்துவிட்டார். ரிஷியின் தவவலிமை ஈண்டு திகழலாயிற்று. ஆசனத்திருந்து எழுந்திருந்து மேடையின் முன் வந்து நின்ற மகிமையே சபையோரது உள்ளத்தை ஒருவாறு கவர்ந்துவிட்டது. கம்பீரத்தொனியில்,
Sisters and Brothers of America
(“அமெரிக்க நாட்டுச் சகோதரி, சகோதரர்களே”)
          என்றார். மேலும் அவரைப் பேசவிடாது தடுத்து, இடியிடித்தாற்போல் கரகோஷம் முழங்கிற்று. காரணம் வேறொன்றுமல்ல; பேசியவர்கள் எல்லாம் “சீமான்களே! சீமாட்டிகளே!” என்று துவங்கினர். ஆனால் உலகனைத்தையும் ஒரு குடும்பமாக பாராட்டியவர் நம் சுவாமி ஒருவரே! சர்வமத மகாசபையின் நோக்கத்தையும் அக்கணத்திலேயே அவர் பூர்த்திபண்ணி வைத்தவரானார். அமெரிக்க தேசத்தை தமது இரண்டே வார்த்தைகளால் தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டார்.

It fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world; I thank you in the name of the mother of religions; and I thank you in the name of the millions and millions of Hindu people of all classes and sects……

சுவாமிகள் நிகழ்த்திய “சிகாகோ பிரசங்கங்கள்” அல்லது “CHICAGO ADDRESSESS” என்ற நூலை வாசியுங்கள். அதில் ஹிந்து மதத்தின் அடிப்படைத் தத்துவங்கள் நன்கு விளங்கும்.


சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் முழங்கி நூறாண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. அவர் காட்டிய வழியில் மனத்தை செலுத்தி அவரது பணிக்கான கருவிகளாக நம்மை நாம் தயார் செய்துகொள்ள வேண்டிய வேளை இது.