Monday, November 14, 2011

*சுவாமி சித்பவானந்தரின் கடைசி நாட்கள் – 1


1985-ஆம் வருடம் நவராத்திரி விழா:

ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் நோயுற்றிருந்த காலத்தில் உடல் தளர்ச்சி அடைந்ததே அன்றி உள்ளம் தளர்ச்சியடையவில்லை. ஒரு நிகழ்ச்சி அதனை விளக்குகிறது.

உடல் பலஹீனமடைந்து எழுந்திருக்க முடியாத நிலையில் இருந்தார். மாணவர்கள் பள்ளியில் விஜயதசமி விழா கொண்டாடினார்கள். சாதுக்களும் பக்தர்களும் அவ்விழாவுக்குப்போய் வருகிறோம் என்று சொன்னபோது “என்னையும் அழைத்துக்கொண்டு போக மாட்டீர்களா?” என்று கேட்டது அனைவருடைய உள்ளத்தையும் உருக்கிவிட்டது. பெரிய சுவாமிஜி கேட்டுக்கொண்டபடி அவரை நாற்காலியில் அமரச் செய்து நாலுபேர் சேர்ந்து மாடியிலிருந்து தூக்கிவந்து காரில் அமர்த்தினார்கள். பள்ளிக்குச் சென்ற பிறகும் அவ்வாறே காரிலிருந்து இறக்கி வழிபாட்டு இடத்துக்கொண்டு சென்றார்கள். மாணாக்கர்கள் செய்த விஜயதசமி வழிபாட்டில் ஆனந்தமாகக் கலந்துகொண்டு பக்தர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆசி வழங்கினார். 


இறுதியாக தபோவன மாணவர்களுடன் சரஸ்வதி பூஜையில் கலந்துகொண்டபொழுது...
அப்பொழுது இவருடைய உள்ளம், உடல் உபாதியிலிருந்து விலகி அருள் நிலையிலிருந்து அனைவருக்கும் ஆசி வழங்கியது இவருடைய உள்ளத்தின் உயர்வை விளக்குகிறது.

உடலில் சக்தி உள்ள அளவு தம்மை நாடி வந்தவர்களுக்கு அருளுரை வழங்கிக் கொண்டிருந்தார். கடைசியாக தபோவனத்தில் நிகழ்ந்த சக்தி பூஜை அந்தர்யோகத்தில் பேச சக்தி இல்லாதிருந்த நிலையிலும் தம் உடல் சக்திகளையெல்லாம் ஒன்றுதிரட்டி அந்த அந்தர்யோகத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நாட்டின் நிலையையும் அரசாங்கத்தில் போக்கையும் எடுத்து விளக்கினார்.

No comments:

Post a Comment