ஒன்றினிடத்து மனிதன் பற்றுடையவனாக இருக்கும்பொழுது அதைக் கெடுத்துவிடுகின்றான். பற்றில்லாது அன்பு செலுத்தும்போது அதைப் பாதுகாக்கின்றான். சுவாமி சித்பவானந்தர் தமது உடலைப் பற்றின்றிப் பாதுகாத்ததைக் கடைசி கட்டத்தில் நிரூபித்துக் காட்டினார். உடலின் மீது பற்று வைக்காது இருந்ததனால் அதை வாட்டி வருத்தவும் இல்லை; தேவையில்லாததைக் கொடுத்து அதைக் கெடுத்துவிடவும் இல்லை. இயற்கையாக உடலுக்கு வந்த நோயைப் பொறுமையுடன் ஏற்றிருந்து அதிலிருந்து பிரிந்துகொள்ளும் காலம் வந்தபொழுது அமைதியுடனும் ஆனந்தத்துடனும் 1985-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ஆம் தேதியன்று இரவு 8:20 மணிக்குப் பூதவுடலிலிருந்து விலகிப் பொன்றாவுடல் எய்தினார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணர், ஸ்ரீ விவேகானந்தர், ஸ்ரீ சாரதா தேவியார் கொள்கைகளைத் தமிழ்நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு மக்களை ஆயத்தப்படுத்திய செயல் இச்சான்றோரைத் “தென்னாட்டு விவேகானந்தர்” என்று போற்றும்படியாக அமைந்துள்ளது. ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய கொள்கையில் ஆழ்ந்த பக்தி வைத்திருந்த இவ்வுத்தமர் விவேகானந்தர் போன்று உறுதியான உள்ளம் படைத்து சமரச முறையில் சீரிய கருத்துக்களை செயல்படுத்திக் காட்டியுள்ளார். ஒவ்வொரு செயலும் தத்துவத்துக்கு விளக்கமாக இருக்க வேண்டுமேயன்றி வெறும் விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தருவதாக இருக்கக்கூடாது என்பது இவருடைய கொள்கையாகும். ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் காட்டிய வழியில் நாம் அனைவரும் செயல்பட நம்மையெல்லாம் அவர் தூண்டி வருவாராக.
Thank you.
ReplyDeleteVery kind of you.
Our prayers and respects.
Srinivasan.