Friday, November 18, 2011

*18.11.1985


காலை 6 மணிக்குத் தபோவனத்திலிருந்து நாம ஜபம் சொல்லிக்கொண்டு, காவேரிக்கரைக்கு சுவாமிஜிக்கள் செல்ல, அன்பர்களும் தாய்மார்களும் உடன் சென்றார்கள். சுவாமிஜியின் திருமேனி தகனம் செய்யப்பட்ட இடத்தில் சுற்றிலும் அமர்ந்து ஐந்து நிமிஷம் தியானம் செய்தார்கள்.

அதன்பின் நித்தியானந்த சுவாமிஜி பேசினார்:
“விநாயகர் பூஜையின்போது, விநாயகர் திருவுருவம் செய்து வழிபடுகிறோம். பூஜை முடிந்தபின் விநாயகர் வடிவத்தை விஸர்ஜனம் செய்துவிடுகிறோம். நம் பெரிய சுவாமிஜி இவ்வவு காலமும் ஆத்மஞானம், ஒழுக்கம், கட்டுப்பாடு இவைகளைப் புகட்டி வந்தார்கள். புகட்டியதை தன் வாழ்வில்  வாழ்ந்து காட்டிய மூர்த்தி இப்போது வடிவத்தைக் கலைத்துவிட்டார்கள். வடிவத்தைக் கலைத்துவிட்டாலும் அம்மூர்த்தி வேறு எங்கும் செல்லவில்லை. நம் எல்லோருடைய உள்ளத்திலும் நிறைந்து இருக்கிறார்கள்.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் மஹாசமாதி அடைந்தபின், அன்னையார் நகைகளைக் கழற்ற முற்பட்டார். அப்போது ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவர்க்குக் காட்சியளித்து, ‘நான் மறைந்துவிட வில்லையே’ என்று கூறி, அன்னையார் நகைகளைக் கழற்றாது இருக்குமாறு செய்தார். நம் சுவாமிஜியும் எப்போதும் நம்முடனேயே இருப்பார்கள். அவர் புகட்டியே நெறிகளைக் கடைப்பிடிப்பதே சுவாமிஜிக்கு நாம் செய்யும் கடமையாகும்”.

இவ்வாறு நித்தியானந்த சுவாமிஜி, கூறியது அங்கிருந்த அனைவரின் உள்ளங்களையும் உருக்கி, கண்களில் நீர் வரச் செய்தது. அவரவர் இருந்த இடத்திலேயே வீழ்ந்து நமஸ்காரம் செய்தார்கள்.

சுவாமிஜியின் அஸ்தியை எடுத்து குடங்களில் நிரப்பினார்கள் துறவியர். பின் மீதி இருந்ததை எடுத்து எல்லாரும் காவேரியில் கரைத்தார்கள்.






சுவாமிஜி புகட்டிய நெறியில் உறுதியாக வாழ்ந்து வாழ்வின் லக்ஷியத்தை அடைய, சுவாமிஜியின் அருளை வேண்டிப் பிரார்த்திப்போமாக.

1 comment: