திருப்படை ஆட்சி பாடல் எண் – 5.
கண் இலி காலம் அனைத்திலும் வந்த
கலக்கு அறும் ஆகாதே;
-திருவாசகம்.
விளக்கம்
ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.
காலம் ஒரு தேவனாகக் கருதப்படுகிறது. சிவனாருடைய பூதகணங்களுக்குப் பைரவர்கள் என்று பெயர். அவர்களுள் கால பைரவன் என்பான் ஒருவன். அவன் கால வடிவினனாதலால் அந்தப் பெயர் பெற்றான். கன்னங்கறேலென இருக்கிறது அவனுடைய காயம். அன்னை பராசக்தியின் பல சொரூபங்களுள் ஒன்று காளி தேவி. காலீ என்னும் சம்ஸ்கிருதச் சொல் காளி என்று தமிழில் திரிவுபட்டது. கால சொரூபமாக இருப்பவன் காலீ. அமாவாசை இருள்போன்று கறுத்த திருமேனியுடையவள் காலீ. முன் சென்றதும் இனி வருவதும் காட்சிக்கு எட்டாததால் அது கண் இலி காலம் என விளக்கப்படுகிறது. இறந்த காலம் அகண்டாகாரத்தில் விரிந்து ஓடுகிறது. எதிர் காலம் அகண்டாகாரத்தில் விரிந்து ஓடுகிறது. இவ்விரண்டும் யார் கண்ணுக்கும் எட்டாதவை. அக்கோட்பாட்டை முன்னிட்டுக் காளிகாதேவி கரிய நிறம் எய்தியுள்ளாள்.
இரண்டு நிகழ்ச்சிகளுக்கு இடையில் உள்ள இடையீடு காலம் எனப் பெயர் பெறுகிறது. சூரியோதயம் என்பது ஒரு நிகழ்ச்சி. சூரிய அஸ்தமனம் மற்றொரு நிகழ்ச்சி. இவ்விரண்டுக்கும் இடையில் இருப்பது காலம் என விளக்கப்படுகிறது. காலத்தில் நுண்ணியது கணப்பொழுது எனப்படுகிறது. ஒரு பிரம்மா அல்லது நான் முகப் படைப்புக் கடவுளின் ஆயுள், கல்பம் எனப்படுகிறது. அது மானுட அளவையில் 52,00,000X1000X365X100 வருஷங்கள் ஆகின்றன. இத்தகைய அனந்தகோடி கல்பங்கள் காளிதேவியின் சொரூபத்தில் ஒடுங்குகின்றன. ஆதலால் அது கண் இலி காலம் எனப்படுகிறது.
காலத்தைக் குறித்துக் கலக்கு உறுவது ஜீவர்களின் இயல்பு. குடும்பி ஒருவனுக்கு மகப்பேறு எக்காலத்தில் வாய்க்கும் என்ற கலக்கம்; கர்ப்பத்தில் இருப்பது ஆணோ, பெண்ணோ, அலியோ என்று அது பிறக்கும் காலம் வரையில் கலக்கம்; மகப்பேற்றினுக்கு ஆயுள் எத்தகையதோ என்று காலத்தைப் பற்றிய கலக்கம்; மகன் எப்பொழுது படித்து மேல்நிலைக்கு வருவான் என்று காலத்தைப் பற்றிய காலம்; தனக்குச் சுகபோகம் நிறைந்த பெருவாழ்வு எப்பொழுது கிட்டுமோ என்று காலத்தைப் பற்றிய கலக்கம்; மரணம் தன்னை எப்பொழுது எடுத்து விழுங்குமோ என்று காலத்தைப்பற்றிய கலக்கம். இங்ஙனம் வாழ்வு முழுதும் காலத்தைப்பற்றிக் கலக்கம் உறுவதாய் அமைந்திருக்கிறது.
குறுகிய காலம் நீண்ட காலமாகத் தோன்றுவதும், நீண்ட காலம் குறுகிய காலமாக ஒடுங்குவதும் மனநிலையைப் பொறுத்திருக்கின்றன. தன் தாயை விட்டுப் பிரிந்திருக்கும் சிறுவனுக்கு ஒரு நாள் நீண்ட பல நாட்கள் போன்று தோன்றும். தன் தாயோடு இனிது வாழ்ந்து வரும் சிறுவனுக்கு நீண்ட விடுமுறை குறுகிய காலம் போன்று மனதுக்குத் தோன்றும். பாடம் படிக்க இயலாதவனுக்கு ஒருமணி நேரம் வகுப்பில் இருப்பது நீண்ட காலமாகத் தென்படுகிறது. தலைமாணாக்கனுக்கோ ஒரு நாள் ஒரு மணிக்கு நிகராக விரைவில் ஓடுகிறது. நல்வாழ்வு வாழ்கின்றவர்களுக்குக் காலச் சக்கரம் ஓடுவது தெரிகிறதில்லை. காலத்தைப் பற்றி அவர்களுக்குக் கலக்கம் ஏதுமில்லை.
சிவனாருக்கு காலகாலன் என்பது ஒரு பெயர். அதாவது அவர் காலாதீதத்தில் இருக்கிறார். காலத்தை அளப்பது மனம். நிர்விகல்ப சமாதியில் மனாதீதத்துக்குப் போகிறவன் காலாதீதத்துக்குப் போகிறான். சிவ சொரூபத்தில் ஒன்றுபடுகிறான். ஆதலால் அவனுக்குக் காலத்தின் கலக்கம் அறுபடுதல் ஆகிறது.
No comments:
Post a Comment