Tuesday, November 15, 2011

*சுவாமி சித்பவானந்தரின் கடைசி நாட்கள் – 2


நோய்வாய்ப்பட்டிருந்த பொழுது நோயின் துன்பத்தை மனத்தில் வாங்கிக்கொள்ளாது மனத்தை உயர்ந்த நிலையில் வைத்துக்கொண்டிருந்தார். உடல் நோய்வாய்ப்பட்டிருந்ததற்கு இடையில், அவர் உள்ளமானது ஓர் உயர்நிலையில் இருந்தது என்பதை இவருடைய முகபாவனை விளக்கியது. தம்மைப் பார்க்க வந்த அன்பர்கள் “உடம்பு எப்படி இருக்கின்றது?” என்று கேட்டால் “அதைப்பற்றி எனக்குத் தெரியாது. இவ்வுடலைப் பாதுகாத்து வருகிற துறவியரைக் கேட்டுக்கொள்ளுங்கள்!” என்பார். ஆன்மீக விஷயங்களைப் பற்றிக்கேட்டால் அதற்கு ஆனந்தமாக பதில் தருவார். “உலகுக்கு நலம் தரும் நல்ல காரியம் ஒன்று செய்யப்போகிறோம்; அதற்கு ஆசீர்வாதம் வேண்டும்” என்று கேட்டால் “சிறப்பாகச் செய்யுங்கள்; முழு ஆசீர்வாதம் உண்டு”. என்று கூறுவார். அன்பர்கள் விடைபெற்றுப் போகும்போது “ஆனந்தமாக இருங்கள்” என்று ஆசீர்வதிப்பார்.

இறுதியாக எடுத்துக்கொண்ட Group Photo

டாக்டர் நோய்வாய்ப்பட்டிருந்த உடலை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பொழுது சுவாமிஜி டாக்டரிடம் கூறியதாவது: “என் உடல்நிலை பற்றி எனக்குத் தெரியும். சத்துள்ள மருந்துகளை இந்த உடல் ஏற்காது. எனவே மருந்துண்ணும் விஷயத்தில் என் விருப்பப்படி நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். இந்த உடலுக்கு என்ன சிகிச்சை செய்ய வேண்டுமென்றாலும் என் அனுமதியைக் கேட்டுக்கொண்டு அதன்படி சிகிச்சை செய்யுங்கள்”. “அதன்படியே நடந்து கொள்கிறேன்” என்று கூறி டாக்டரும் இறுதிவரை அவ்வாறே நடந்து கொண்டார். இவ்வாறு அவர் உடலுக்கு எப்பொழுது எது தேவையோ அதை மட்டும் எடுத்துக்கொண்டார்.

No comments:

Post a Comment