-சுவாமி சித்பவானந்தர்.
தோன்றாததும் மறையாததுமாகிய பொருளைத் தோன்றி வந்ததாகக் கருதுவது மாந்தரது
போக்கு. பிறப்பையும் இறப்பையும் அறிகிற நாம் கடவுளையும் பிறக்கும்படி செய்து அதில்
திருப்தியடைகிறோம். கணபதிக்கு அத்தகைய தோற்றம் கற்பிக்கப்பட்டிருக்கிறது.
அதற்கேற்ற காரணத்தையும் புராணம் நமக்கெடுத்துப் புகட்டுகிறது. இயற்கையின்
நடைமுறையில் ஒரு குறைபாடு இருப்பதாகத் தேவர்கள் கண்டறிந்தார்கள். வல்லான் வகுத்ததே
வாய்க்கால் என்னும் கோட்பாடே அக்குறைபாடு ஆகும். அசுரர்களும், ராக்ஷசர்களும் வல்லமை
மிகப்படைத்தவர்கள். அவர்கள் நல்லதையும் தீவிரமாகச் செய்ய முடியும்; கெட்டதையும்
அப்படியே செய்ய முடியும். மற்றவர்கள் செய்கிற நலத்துக்கு இடைஞ்சல் செய்யவும்
அரக்கர்களுக்கு இயலுகிறது. இவ்வண்ணம் இயற்கையின்போக்கு அமைந்துவிட்டால் நல்லவர்
முன்னேற்றம் அடைய முடியாது. “தீய முயற்சிகள் எவ்வளவுதான் ஆற்றல் படைத்திருந்தாலும்
முடிவில் அம்முயற்சிகள் முட்டுக்கட்டைகளில் மாட்டிக்கொள்ள வேண்டும். நலத்தை
மீட்டுவிப்பதும், நல்லது அற்றவைகளை பின்னணியில் தள்ளுவதும் ஒரு தெய்வத்தின்
தனிச்செயல் ஆகுக.” இத்தகைய தெய்வத்தைத் தங்களுக்குத் தோற்றுவித்துத் தர
வேண்டுமென்று தேவ கணங்கள் ஒன்று கூடி பரமேசுவரனிடம் பிரார்த்தித்தார்கள்.
பரமசிவன் பார்வதியின் உதவியை நாடினார். சிவசக்தியின் அருள் பிரசாதமாக ஆனைமுகன்
உருவெடுத்தான். அவன் விக்கினேசுவரனாக விளங்கினான். தடைகள் பல செய்யவும், தடைகளைத்
தவிர்க்கவும் வல்லவன் அவன். இயற்கையின் நடைமுறையில் ஒழுங்குப்பாடு உண்டு. அதற்கு
இழுக்கு ஒன்றும் வந்துவிடாது. தாறுமாறான நிகழ்ச்சிகளுக்கு அதில் இடமில்லை. இங்ஙனம்
கணபதியின் பிறப்பால் வந்துள்ள ஒழுங்குப்பாட்டை அறிந்த தேவர்களும்
பெருமகிழ்வடைந்திருந்தனர். இயற்கையின் முறைமையைக் காப்பவன் கணபதி.
இயற்கையின் நடைமுறையில் ஒழுங்குப்பாடு இருக்கிறது. உயர்ந்த நோக்கமும் ஒன்று
அதன் செயலில் திகழ்கிறது. உயர் நோக்கம் இல்லாவிட்டால் இயற்கை உயிரற்ற யந்திரம்
ஆய்விடும். உண்மையில் அதன்கண் உயர்நோக்கம் இருப்பதால் அது உயிர் ஓவியம் என்றும்
பேரறிவுப் பொருளின் இயக்கம் என்று இயம்பப்படுகிறது. சிற்றுயிர்களைப் பண்படுத்தி
அவைகளைப் பேருயிர்களாக்குவது இயற்கை தெய்வத்தின் பெருநோக்கமாகும். உயிர்களின் நலம்
தரும் வளர்ச்சியைத் தடுப்பது எதுவோ அது விக்கினம். அத்தகைய விக்கினத்தை விக்கின
ராஜாவாகிய கணபதி ஆண்டு வருகிறான். அவனை வழிபடுபவர்கள் அவனுடைய முன்னிலையில்
மண்டையைக் குட்டிக்கொள்ளுதல், தோப்புக்கரணம் போடுதல், வலம் வருதல் ஆகிய செயல்கள்
யாவும் ஓர் உயர்ந்த கோட்பாட்டை உயிர்களின் உள்ளத்தில் நிலைநாட்டுதற்கு
அமைந்தவைகளாம். “இறைவா, என்னுடைய ஜீவபோதமும், ஜீவப்பிரயத்தனமும், உன்னுடைய
வாலறிவிலும் வல்வினையிலும்
அடங்கியிருக்கட்டும். என் முயற்சி உனது பெருந்திட்டத்துக்கு
ஒத்ததாயிருக்குமாகில் நான் வெற்றி பெறுவேன். அப்படியல்லாது நான் உன்னோடு
முரண்படுவேனாகில் என் முயற்சி தோல்வியுறும். ஆக, எனக்குத் தோல்வி நேர்ந்தாலும் அதை
நான் உன்னுடைய ஆணையாக ஏற்றுக்கொள்வேனாக”. இங்ஙனம் ஈசன் செயலுக்கு ஒத்த
மனப்பான்மையை வரவழைத்துக்கொள்ளுதல் விக்கினேசுவர பூஜையாகும். இத்தகைய
மனப்பான்மையில்லாத வெறும் சடங்குகளும், கிரியைகளும் கணபதி பூஜையாகமாட்டா.
பூஜாவிதிகள் என்று பகரப்பெறும் கிரியைகள் இருக்கலாம்; அல்லது இல்லாது போய்விடலாம்.
ஆனால் ஈசனுடைய பெருந்திட்டத்துக்கு ஒத்த முயற்சி எங்கிருக்கிறதோ அங்கு விக்கினம்
நீங்கிவிடுகிறது; வெற்றியுண்டாகிறது. அவனுடைய அமைப்புக்கு மாறான முயற்சிக்கோ
விக்கினம் குறுக்கிடுகிறது; அப்படி முயலுகிற உயிர் விக்கினத்தில் கட்டுண்டு தோல்வியடைகிறது.
இந்த சிறு கட்டுரையானது ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் இயற்றிய “கடவுளின்
வடிவங்கள்” என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. நாளை, 19.09.2012 புதன்கிழமை விநாயக சதுர்த்தியை முன்னிட்டு இங்கு
பதிவேற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment