Saturday, December 22, 2012

*சுவாமி நித்யானந்தரின் பிறந்தநாள் - 2012



இன்று(22.12.2012, சனிக்கிழமை) சுவாமி நித்யானந்தர் பிறந்த தினம் ஆகும். அவருடைய பிறந்த தினத்தன்று அவரது நினைவாக கவிதை ஒன்றை பதிவேற்றியிருக்கிறோம். கவிதையை இயற்றியவர் - ஓய்வுபெற்ற தலைமைஆசிரியர் மு. சொக்கப்பன் அவர்கள்.

நித்யானந்தர் பெரும்புகழ் அளாவிய பேரருள் ஞானி 


தென்னைபலா வாழைஎனத் தேர்ந்திசைக்கும் காவேரி 
தென்கரையில் தபோவனத்தாய், தவமியற்றும் தவச்சாலை 
தவச்சீலர் நாளுமிங்கே தவமிருக்கும் பராய்த் துறையில் 
தண்ணிக ரற்ற பெரும் தவ முனி சித்பவானந்தர் 
அன்னவரின் சீடர்களுள் அருந்தவமாய் வந்துதித்த 
நித்தியானந்தரவர், நிகரில்லாப் பெருந்துறவி 
சித்பவா னந்தரும், சிந்தனைகள் அத்தனையும் 
பட்டிதொட்டி எங்கணுமே பரப்பியவர் சுவாமிகளே  

காவியுடை, தூயமனம், களங்கமிலா அன்புமுகம்,
யாவரையும் சமநோக்கு, கண்களிலே ஒளிவிளக்கு 
கங்கைநதிப் பிரவாகம், கருத்துக்களின் பெருவெள்ளம் 
கறந்தபால் கறந்தாற்போல் கவினுறும் தூயவுள்ளம் 

குருநாதர் வழிநின்று குக்கிராமங்கள்தோறும் 
சத்சங்கம் யோகமெனப் பக்தர்களுக் கருளியவர் 
பந்தபாச மென்னும் பாழுங்கிணற்றில் மூழ்காமல் 
அந்தர்யோக மென்னும் அருமருந்தை வழங்கியவர் 
மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை உள்ளிட்ட 
மூவாசை வென்றெடுத்த முனிவர்க்கும், முனிவரிவர் 
இனிப்பும் கசப்பும் ஒன்றெனவே கண்ட மகான் 
எளிமையும் தூய்மையும் இயல்பாகக் கொண்ட மகான் 

குருவழி ஒன்றையே கொள்கையாய்க் கண்டவர் 
ஒன்றே கொள்கை, ஒருவரே குருவென 
அன்றே தேர்ந்த பேரறி வாளர் 
வேதாந்த தத்துவத்தை வீதிகள் தோறும் 
விதைத்த மகாத்மா நித்தியானந்தர் 
அண்டி வந்தோர்க்கெல்லாம் அடைக்கலம் அருளிய 
அடியவர் நலன்காத்த ஆன்மீக வள்ளலார் 
அவரால் உயர்ந்தோர் ஆயிரமாயிரம் 
அனைவரும் அறிவோம், அதுவே சத்தியம் 
நித்தியானந்தரை நினைவிலே கொள்ளுவோம் 
எத்துயர் வந்தாலும் எதிர்கொண்டு வெல்லுவோம்.

No comments:

Post a Comment