உடலமைப்பிலே சிசுக்களாகத் தோன்றும் ஜீவன்கள் உண்மையிலே சிசுக்களல்ல; எண்ணிறந்த பிறவிகளில் தேடிய அறிவு, ஆற்றல், அனுபவங்களால் ஏற்பட்ட சுபாவங்கள் குழந்தை என்கிற உறையிலே அடங்கி ஒடுங்கிக் கிடக்கின்றன. காலாந்தரத்தில் இவ்வுறையைக் கழற்றிக்கொண்டு அந்தந்த சுபாவங்கள் பெருமைகளாகவும், சிறுமைகளாகவும் விரிகின்றன. ஒன்றும் அறியாத பச்சைக் குழந்தைகளாய்ப் பெற்றவர்களின் கரங்களில் கிடக்கும் ஜீவர்கள், பருவம் வரும்போது விண்ணவர்களுடன் ஒப்பிடத்தக்க மேன்மக்களாகவோ அல்லது வையகமே அஞ்சி நடுங்கும்படியான பாதகர்களாகவோ ஆகப்போகிறவர்களன்றோ? ஆனால் இந்த மர்மங்கள் யாவும் காலம் என்கின்ற காரிருளில் மறைந்து கிடக்கின்றன. எனினும், மேன்மக்கள் மண்ணதனில் பிறவியெய்துதலிலே தனிப்பெருமையொன்று உண்டு என்பது பெரியோர்களது துணிபு. அதாவது அவர்கள் அறநெறியில் நிலைநிற்கின்ற செல்வர்கள் வீட்டிலோ அல்லது அறிவாளிகளாகிய உத்தமர் குலத்திலோ உதிக்கின்றார்களாம். புவனேசுவரி மாதாவின் (சுவாமி விவேகானந்தரின் அன்னையார்) மடியில் தோய்ந்திருந்த பிள்ளை இவ்விதியின்படி இகலோகத்தில் பிறந்திருந்ததையும் பூலோகத்தின் கதியையே வருங்காலத்தில் மாற்றவல்ல அறிவும் ஆற்றலும் தபோபலமும் அதனிடத்துப் புதைந்து கிடந்ததையும் யார் அறிந்தார் அக்காலத்தில்!
-ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.
(இன்று சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளாகும்.)
No comments:
Post a Comment