Saturday, March 31, 2012

*ஸ்ரீ ராம் ஜெயராம்!


அயோத்தியில் வசிஷ்டர் தலைமையில் யாகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ரிஷ்யசிருங்கர் யாகத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். தசரதர் அனைவருக்கும் நிறைய தான, தர்மங்கள் செய்தார். அனைவரும் மனமகிழ்ந்து தசரதரை வாழ்த்தினர். யாகத்தின் முடிவில் மிக்க ஒளியுடன் ஓர் உருவம் யாககுண்டத்திலிருந்து வெளிப்பட்டது. அது தன் கையில் ஒரு தங்கக்கிண்ணம் வைத்திருந்தது. அதில் தேவலோக பாயாசம் இருப்பதாகவும், அதை தசரதர் தன் மனைவியருக்குக் கொடுத்தால் புத்திரப்பேறு கிட்டும் என்றும் அவ்வுருவம் கூறியது. தசரதர் பாதி பாயசத்தை முதலில் கோசலைக்கும், மீதியில் பாதியை சுமித்திரைக்கும், எஞ்சியதில் பாதியை கைகேயிக்கும் கொடுத்தார். அதன்பின் கிண்ணத்தில் தங்கியிருந்த பாயாசத்தை மீண்டும் சுமித்திரைக்குக் கொடுத்தார்.
சில காலத்திற்குப் பிறகு சித்திரை மாதம் சுக்கில பக்ஷ நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் கடக லக்னத்தில் வையத்தை வாழ்விக்க வந்த ஸ்ரீராமர் கோசலைக்கும், பரதர் கைகேயிக்கும், லட்சுமணரும் சத்துருக்கனரும் சுமித்திரைக்கும் அவதரித்தனர். அயோத்தி நகரமே மகிழ்ச்சிப் பெருங்கடலில் திளைத்தது. இராமர் அவதரித்ததால்(இன்று) நவமி திதி பெருமை பெற்ற ஸ்ரீ ராமநவமி என வழங்கலாயிற்று.


நமது பெரிய சுவாமிஜி(சுவாமி சித்பவானந்தர்) எழுதிய இராமாயணத்தில் ஒரு விளக்கம். அகஸ்தியர் ஆசிரமத்திற்கு இராமர் போனார். அகஸ்தியர், தன்னுடைய சீடர்களுக்கு இராமரை அறிமுகம் பண்ணுகிற அழகே அழகு. வால்மீகி எழுதியிருக்கிறாரா அல்லது கம்பர் எழுதியிருக்கிறாரா என்பது எனக்குத்  தெரியாது. நம்முடைய சுவாமிஜி சொன்னதைப் பாருங்கள். அகஸ்தியர், இராமரைக் காட்டி, “இவருடைய வடிவம் தியானத்திற்குரியது; இவருடைய நாமம் ஜெபத்திற்குரியது; இவருடைய வாழ்க்கைச் சம்பவங்கள் அனைத்தும் தர்மத்திற்கு விளக்கம்.” என்று சொல்வதாக நம் சுவாமிஜி கூறுவார்கள். அவர்கள் சொல்கிறபடி சுலபத்தில் சொல்ல முடிகிறதா பாருங்கள்.
ஸ்ரீ ராமநவமியன்று உபவாசமிருந்து, இராமருக்கு துளசிமாலை அணிவித்து, சுந்தரகாண்டம் அயோத்தியாகாண்டம் போன்றவற்றை பாராயணம் செய்வது சிறப்பு. ஸ்ரீ ராமநவமியன்று இராமர் படம், விக்ரஹம், இராமாயணப் புத்தகம், இராமர் ஜாதகம் முதலியவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்துப் பூஜை செய்யலாம். பக்தர்களுக்கு பானகம், நீர்மோர், பருப்பு வடை, வெள்ளரிப்பிஞ்சு, விசிறி வழங்குவோரும் உண்டு. ஸ்ரீ ராமநவமியன்று ஸ்ரீ ராம நாம ஜெபம் செய்து ஆனந்தம் அடைவோமாக!
ஸ்ரீமத் சுவாமி ஸதானந்தர்
குலபதி, ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்,
திருப்பராய்த்துறை.

No comments:

Post a Comment