Monday, April 23, 2012

*குருகுலத்தில் மாணவர்களைச் சேர்ப்பது சம்பந்தமான அறிக்கை.


ஸ்ரீ விவேகானந்த வித்யாவனக் குருகுல உயர்நிலைப்பள்ளி
திருப்பராய்த்துறை – 639 115,
திருச்சி மாவட்டம்.

          இப்பள்ளியானது காவிரிக்கரையில் பாதுகாப்பான, இனிய இயற்கை சூழலில் அமைந்துள்ளது. இக்குருகுலப் பள்ளியில் 4ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலும் உள்ளன. 8-ஆம் வகுப்பிலும் அதற்கு மேல் வகுப்புக்களிலும் மாணவர்களைச் சேர்ப்பதில்லை. 4,5,6,7-ஆம் வகுப்புக்களில் மட்டும் புதிய மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.  புதிய மாணவர்களைச் சேர்க்க விரும்புவோர் மே மாதம் 3ஆம் தேதி காலை 7-00 மணிக்குள் மாணவர்களுடன் குருகுலத்துக்கு வரவேண்டும். வரும்பொழுது மாணவரின் புகைப்படங்கள்(Passport Size) இரண்டு மற்றும் பிறந்தநாள் சான்றிதழுடன் வர வேண்டும். மற்ற நாட்களில் மாணவர்களைச் சேர்ப்பதில்லை. இதற்கு விண்ணப்பங்கள் எதுவும் அனுப்ப வேண்டியதில்லை.
          மாணவர்களை எடுத்துக்கொள்வதாக அறிவித்தவுடன் பொறுப்புத் தொகை ரூ3000/-, சாமான்கள் பொருட்டு ரூ4000/-, நிர்வாகம் மற்றும் இதர செலவுகளுக்காக 3500/- ஆக ரூ10,500/- உடனடியாகச் செலுத்தி குருகுலத்தில் மாணவனைச் சேர்த்துவிட வேண்டும். இங்கு இடம் கிடைத்த பிறகு முன்பு படித்த பள்ளிக்கூடத்திலிருந்து மாற்றுச் சான்றிதழ் வாங்கித் தந்தாக வேண்டும்.
          குருகுலத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட புதிய மாணவர்களை மாற்றுச்சான்றிதழ்களுடன்(Transfer Certificate) மே மாதம் 31ஆம் தேதி காலை 10-00 மணிக்குள் குருகுலத்திற்குக் கொண்டுவந்து ஒப்படைக்க வேண்டும். உணவு, நிர்வாகச் செலவு, மராமத்து, அபிவிருத்தி மற்றச் செலவுகளுக்கு மாதம் குறைந்தது ரூ1800/- ஆகும். இலவசமாகவோ, குறைந்த செலவிலோ மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதில்லை. போதனா மொழி தமிழ்.
         
குருகுல பள்ளியின் சிறப்பு அம்பசங்கள் வருமாறு:
1.   திட்டமிடப்பட்ட அன்றாட வாழ்க்கை நடைமுறை.
2.   பிரார்த்தனை, தியானம் முதலியவற்றில் பயிற்சி.
3.   பத்தாம் வகுப்புக்கான அரசுப் பொதுத் தேர்வில் தொடர்ந்து 100% தேர்ச்சி.
4.   சமய விழாக்களும், பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீ சாரதா தேவியார், சுவாமி விவேகானந்தர் ஆகியோரது விழாக்களையும் கொண்டாடுதல்.
5.   கட்டாய ஸம்ஸ்கிருதக் கல்வி, ஹிந்தி மற்றும் பகவத்கீதை பாராயணம்.
6.   கட்டாய உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக்கள். 5 ஏக்கரில் மைதானம் மற்றும் ஜிம்னேசியம்.
7.   இயற்கைச் சூழலில் அமைந்த வகுப்பறைகள்.
8.   இசை, நாடகம், ஓவியம் மற்றும் நுண்கலைகள் ஆகியவற்றில் சிறப்பான பயிற்சி.
9.அனைத்து மாணவர்களும் கட்டாயம் நீந்தல் பயிற்சி பெறுவதற்கான 25மீ.x12.5மீ. நீச்சல் குளம்.
10. ஒவ்வொரு வகுப்பிலும் 30 மாணவர்கள் மட்டும் இடம்பெறுவார்கள். பின் தங்கிய மாணவர்களுக்கென தனி வகுப்புக்கள்.
11.தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றிற்கான சிறப்புப் பயிற்சி வகுப்புக்கள்.
12.அனைத்து வசதியோடு கூடிய அறிவியல் ஆய்வுக்கூடம்.
13.உயர்ந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி வகுப்புக்கள்.
14. 4முதல் 9ஆம் வகுப்பு வரையுள்ள அனைத்து மாணவர்களுக்கும் பிரத்தியேகமான கம்ப்யூட்டர் ஆய்வுக்கூடத்தில் ஒருவருக்கு ஒரு கம்ப்யூட்டர் என்ற விகிதத்தில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
15.சமையல் பயிற்சியும் மாணாக்கர்களுக்குத் தரப்படுகிறது.
16.மாதந்தோறும் பௌர்ணமி அன்று ஐக்கிய வழிபாடும் விருந்தும் நடைபெறுகின்றன. அதன் பிறகு மாணவர்கள் பங்குபெறும் ஆன்மிகம், தேசபக்தி உணர்வூட்டும் நாடகங்கள் நடைபெறுகின்றன.
17.இலக்கிய மன்றங்கள் மற்றும் இலக்கிய மலர் வாயிலாக மாணவர்கள் தனித்திறன் மற்றும் படைப்பாற்றல் வெளிக்கொணர்தல்.
18.தடையில்லா மின்சாரம் வழங்க அதிக குதிரைத்திறன் கொண்ட ஜெனரேட்டர்.
19. ஜூடோ, சிலம்பம், கராத்தே போன்ற தற்காப்புக் கலைகளுக்கு சிறப்பான பயிற்சி.
20.அரியவகை மூலிகைகள் அடங்கிய மூலிகைத் தோட்டம்.

மேலும் விவரங்கள் பெற விரும்புவோர் ரூ20/- தபால் வில்லையுடன் அல்லது மணியார்டர் அனுப்பிவைத்து வித்யாவன குருகுல சட்டதிட்டங்கள் அடங்கிய புத்தகம் பெற்றுக்கொள்ளவும்.

முக்கியக் குறிப்பு: பிற மாநில, பிற நாட்டு மாணவர்களுக்கு அனுமதியில்லை.

குருகுலச் சட்டதிட்டப் புத்தகம் பெற அணுக வேண்டிய முகவரி:

செயலர்,
ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்,
திருப்பராய்த்துறை – 639115.
திருச்சி மாவட்டம்
போன்: 0431-2614351.

*சுவாமி நித்யானந்தர் புஷ்பாஞ்சலி - திருக்குற்றாலம்.

Tuesday, April 17, 2012

* Sri Ramana Maharshi Aradhana Article


  ஸ்ரீ ரமண பகவானது திருமேனியின் இடது முழங்கைப் புறத்தில் 1949ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே கிளம்பிய ஒரு சிறிய தசை வளர்ச்சி கொடிய புற்றாய் பெரிதாகி, ரேடியம் சிகிச்சையும் இதர வைத்தியங்களும் செய்யப்பெற்றும் எதற்கும் அடங்காது, மேன்மேலும் ஓங்கி அவரது புனிதத் திருமேனியை ஓராண்டுக்கு மேல் வாட்டி முடிவில் வதைத்துவிட்டது.
  1950 ஜனவரி 5ஆம் நாள் ஸ்ரீ பகவானது எழுபதாம் ஆண்டு நிறைவின் ஜயந்தி இனிது கொண்டாடப் பெற்றது. அதன் பிறகு, நோய் மிக விரைந்து முற்றினாலும் இடைவிடாது பக்தர்கள் வருகை தந்தபோது முகமலர்ச்சியோடு காட்சியருளி ஆறுதல் கூறினார்.
  ஏப்ரல் மாதம் 14ஆம் நாள் வெள்ளிக்கிழமை, மாலை பக்தர் கூட்டம் பகவானைத் தரிசித்து முடிந்த பின்னர், தமது திருமேனியை உட்கார வைக்கும்படி பணி செய்வோரை பகவான் கேட்டுக்கொண்டார். அவர்கள் அவ்வாறே செய்தனர். டாக்டர்கள் பிராண வாயுவை பகவானது நாசிப்பக்கம் காட்டத் தொடங்கவும், திறந்த வலக்கையின் குறிப்பால், பகவான் அதை நிறுத்துமாறு பணித்தார்.
  தம்மால் அருளப்பெற்ற அருணாசல சிவ ஸ்துதியை அன்பர்கள் அறைக்கெதிரேயிருந்து பாடத் தொடங்கவும், பகவான் ஒருமுறை கண்ணைத் திறந்து முன்னே நோக்கினார். கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகியது.
  சிறிது நேரத்தில் மூச்சின் இயக்கம் அமைதியாய் நிற்க, உடலும் அசைவற, அவர் அண்ணாமலையாரிடம் இரண்டறக் கலந்தார். ஸ்ரீ ரமண பகவான் மஹாநிர்வாணம் எய்திய அக்கணம் இரவு 8:47 மணிக்கு வானத்தினூடே அழகிய பேரொளியொன்று தெற்கேயிருந்து வடக்கு நோக்கி, பகவான் இருப்பிடத்திற்கு மேல் வழியே சென்று அண்ணாமலை எல்லையில் மறைந்தது. இவ்வற்புதம் பல்வேறு இடங்களிலும் காணப்பெற்றதென்று பிறகு தெரியலாயிற்று. 
 
  அந்நேரத்தில் பகவானுக்கு அருகிலிருந்தோரை ஒப்பிலாத ஓர் உயரமைதியொன்று சூழ்ந்து செறிந்து விளங்கியது. அணுக்கத் தொண்டரின் உள்ளத்தே நினைப்பின் அலையோ உணர்ச்சியின் அலையோ எதுவும் எழவில்லை. மஹாநிர்வாணத்தின் மோனப் பேரெழிலே சிறந்து விளங்கியது.
  மறுநாள் முற்பகல் பக்தர் யாவரும் சூழ்ந்து சேவிக்க, பகவானது திருமேனிக்கு அபிஷேக ஆராதனைகள் முறைப்படி நடைபெற்றன. அன்று மாலை பக்தர்கள் வழிபட, பகவானது தவமேனி மாத்ருபூதேஸ்வரரின் மூலஸ்தானத்திற்கு வடக்கிலுள்ள திறந்த வெளியில் ஆகம முறைப்படி அமைக்கப்பெற்றா குழியில் சமாதி செய்யப்பெற்றது.
  அது முதல், பகவானது திருமுன்னர் என்றும் நடந்து வந்த வேத – உபநிஷத் பாராயணங்களுடன் அன்னார் சமாதிக்குக் காலையும் மாலையும் நித்திய பூஜை நடந்து வருகிறது. அன்பர்கள் அப்பொழுது பகவத் சந்நிதியை சேவித்து, தியானித்து வழிபட்டு வருகின்றனர்.
  இன்று(18.04.2012) திதிப்படி ஸ்ரீ ரமண பகவான் மஹாநிர்வாணம் எய்திய நாள் ஆகும். ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரும், ஸ்ரீ ரமண பகவானும் உரையாடிய நிகழ்ச்சியை 21.05.2011 தேதியிட்ட சான்றோர் சந்திப்பு பதிவை வாசிக்கவும்.

Monday, April 16, 2012

*சுவாமி போதானந்தா மகா சமாதி நிகழ்வுகள்







*Obituary


சுவாமி போதானந்தா மகாசமாதி(15.04.2012).


சுவாமிஜியின் தேக தகனம் இன்று(16.04.2012) பிற்பகல் 3 மணிக்குப் பிறகு காவிரிக் கரையில் நடைபெறும்

ஹரி ஓம் தத் சத்

Friday, April 13, 2012

*சுவாமி நித்யானந்தர் மகாசமாதி சிறப்புக்கட்டுரை

ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்
திருப்பராய்த்துறை
அறிவிப்பு

          அன்பர்களுக்கும், பழைய மாணவர்களுக்கும் ஓர் அறிவிப்பு.
          ஸ்ரீமத் சுவாமி நித்யானந்தர் மகாசமாதி 48 – ஆம் நாள் வழிபாடு 27.05.2012 ஞாயிறு அன்று காலை திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தில் நடைபெறும். அன்பர்களும், பழைய மாணவர்களும் கலந்துகொண்டு சுவாமி நித்யானந்தரின் திருவருள் பெறுக.
செயலர் சுவாமிஜி.

சுவாமி நித்யானந்தர் மகாசமாதி சிறப்புக்கட்டுரை


          ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் அருட்பரம்பரையில் வந்துதித்த வள்ளல் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் ஆவார். 1942-ல் திருப்பராய்த்துறையில் ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் அமைத்து ஆன்மிக, கல்விப்பணிகளை இனிதே நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது ஒரு நாள் தபோவனத்திற்குள் 13 வயது நிரம்பிய ஒரு சிறுவன் நுழைகிறான். நேரே பெரிய சுவாமி சித்பவானந்தரின் அறையை அடைகிறான். அவர் இச்சிறுவனை மேலும் கீழும் பார்க்கிறார்.(நயன தீட்சை கொடுத்தாயிற்று)
          “நீ எங்கிருந்து வருகிறாய்? உன் பெயர் என்ன?” இது சுவாமி.
          சிறுவன்: என் பெயர் நடராஜன். கோவை மாவட்டம் கொடுமுடி வட்டத்திலுள்ள “காகம்” எங்கள் கிராமம்.
          சுவாமி: இங்கு எதற்கு வந்தாய்?
          சிறுவன்: நான் துறவியாக விரும்புகிறேன்.
          சுவாமி: அப்படியா! நீ சிறு பிள்ளையாக இருக்கிறாய். ஊருக்குச் சென்று SSLC படித்து முடித்துவிட்டு certificate எடுத்துக்கொண்டு வா.. சேர்த்துக்கொள்கிறேன்.
          சிறுவன் நடராஜன்: கட்டாயம் சேர்த்துக்கொள்வீர்களா?
          சுவாமி: ஒரு முடிவு எடுத்துவிட்டால் நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். சாப்பிட்டுவிட்டு போய் வா!
          இதற்கிடையில் நடராஜன் SSLC முடிக்கிறான். SSLC mark sheet எடுத்துக்கொண்டு திரும்பவும் தபோவனப் பிரவேசம் ஆகிறான்.
சுவாமி: என்னை விடமாட்டாய் போலிருக்கே! சரி நான் சொல்கிறபடி செய்கிறாயா?
          நடராஜன்: அதற்குத்தானே வந்திருக்கிறேன்.
    பெரியசுவாமியுடன் Presidency Collegeல் படித்த சகமாணவர் ஒருவர் கத்தோலிக்க பாதிரியாராக மாறி திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வராக அப்போது பதவி வகித்து வந்தார். அவருடைய பெயர் பிரிட்டோ. பெரிய சுவாமி அவருடன் தொடர்புகொண்டு நடராஜனை Intermediate வகுப்பில் சேர்க்கிறார். வேட்டி, முழுக்கை சட்டை போட்டுக்கொண்டு மதிய உணவு எடுத்துக்கொண்டு தினமும் எலமனூர் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி கோட்டை ரயில் நிலையத்திற்கு பயணமாகி கல்லூரி சென்று வந்து கொண்டிருந்தார் நடராஜன். கல்லூரியை ஒட்டி லூர்துமாதா பேராலயம் இருந்தது.(இப்போதும் இருக்கிறது) அக்கோயிலின் வாசலில் ஒரு வயதான மூதாட்டி பசியால் வாடிக்கொண்டிருந்ததை நடராஜன் கவனிக்கிறார். தான் கொண்டு வந்த மதிய உணவை அவருக்குக் கொடுத்துவிடுகிறார். அந்தப் பாட்டி தினந்தோறும் இவர் வருகைக்காக காத்திருக்கிறார். நடராஜனும் தினந்தோறும் தன் அன்னதான திட்டத்தை எவருக்கும் தெரியாமல் நிறைவேற்றி வருகிறார். Intermediate course முடிந்தது. முதல் வகுப்பில் தேர்ச்சியடைகிறார்.
          பெரியசுவாமி நடராஜனை B.A. Maths(with logic Ancillary) சேர்க்கிறார். அப்போது அவருடைய Bench mates மற்றும் Class mates இருவர். ஒருவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற ஆங்கிலத்துறைத் தலைவர் டாக்டர் நாகராஜன். இவர் லால்குடியிலிருந்து ரயிலில் வருவார். மற்றொருவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். இவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். நடராஜனின் கணிதத் திறமையைப் பார்த்து அப்துல் கலாம் புகழாத நாளே இல்லை என்று டாக்டர் நாகராஜன் சென்ற ஆண்டு சென்னையில் அவரை நான் சந்தித்தபோது கூறினார்.
          பாட்டிக்கு கிடைக்க வேண்டிய சாப்பாடு தினமும் நடராஜன் மூலமாக கிடைத்து வந்தது. ஒரு நாள் தன் தோழர்களிடம் நடராஜன், “எனக்கு லௌகீகப் படிப்பில் விருப்பமில்லை. ஆன்மிகக் கல்வியில் மட்டுமே விருப்பமுள்ளது. நான் கல்லூரியிருந்து நின்றுகொள்ளலாம் என்றிருக்கிறேன். உங்கள் அபிப்பிராயம் என்ன?” என்று கேட்கிறார். நண்பர்களும், நடராஜனின் கருத்தை ஆமோதித்தனர். அன்று மாலை பெரியசுவாமியிடம் சென்று தனக்கு லௌகீகப் படிப்பில் பிரியமில்லை என்றும் ஆத்ம சாதனத்தில் தீவிரமாக ஈடுபட விரும்புவதாகவும் கூறுகிறார். உடனே குருநாதர் சித்பவானந்தர், “சபாஷ்! நீ எடுத்த முடிவு சரியானது. நானாவது தேர்வு வரைக்கும் சென்றேன். நீ 3ஆம் வருஷம் பட்டப்படிப்பு தேர்வுக்கு முன்பே முடிவெடுத்துவிட்டாய். அப்படியே ஆகட்டும். இன்று முதல் நீ குருகுல மாணவர்களுக்கு  வார்டனாக இரு!” என்று உத்தரவிடுகிறார்.
          ஒரு நாள் மட்டும் கல்லூரிக்குச் சென்று வருவதாக குருநாதரிடம் கூறிவிட்டு அங்கு சென்று பாட்டியைப் பார்த்து அன்றைய மதிய உணவை வழங்கிவிட்டு, “நாளை முதல் நான் வரமாட்டேன். நீங்கள் உணவிற்கு என்ன செய்வீர்கள்?” என்று கேட்டுவிட்டுத் தன்னிடம் இருந்த 5 ரூபாயை பாட்டியிடம் கொடுத்து தெரு ஓரமாக ஒரு சிறிய கடை வைத்து பிழைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி விடைபெறுகிறார்.
சுவாமி நித்யானந்தரின் கல்லூரித் தோழர் டாக்டர் நாகராஜன்
சுவாமி நித்யானந்தரின் கல்லூரித் தோழர் அப்துல்கலாம்
          சில ஆண்டுகளில் பெரியசுவாமி இவருக்கு சந்நியாச தீட்சை வழங்கி நித்தியானந்தர் என்ற பெயரைச் சூட்டுகிறார். மாணவர்களுக்கு வார்டனாக இருந்ததால் அனைவரும் WARDEN SWAMIJI என்றே அழைத்து வந்தனர். குருநாதர் ஏற்பாட்டின்படி வட இந்திய யாத்திரைக்கு சென்று வருகிறார். குறிப்பாக கமார்புகூர்(பரமஹம்ஸர் பிறந்த ஊர்), ஜெயராம்பாடி(அன்னை சாரதா தேவியார் பிறந்த ஊர்), விவேகானந்தர் அவதரித்த தலங்களுக்கு சென்றும், பேலூர் மடத்துக்கு சென்றும் பண்பட்ட துறவியாகத் திரும்புகிறார். அவரிடம் வித்யாவன உயர்நிலைப்பள்ளியின் செயலர் பொறுப்பும், குலபதி பொறுப்பும், தர்மச்சக்கரம் இதழின் ஆசிரியர் பொறுப்பும் ஒப்படைக்கப்படுகிறது. பல பள்ளிகளை கவனிக்கும் பொறுப்பை பெரியசுவாமி நித்தியானந்தரிடம் ஒப்படைக்கிறார். குருவின் ஆணையை சிரமேற்கொண்டு அனைத்து பள்ளிகளையும் சீரிய முறையில் நிர்வகித்து வந்தார்.


குருவும் சீடரும்
          தமக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது சித்பவானந்தர் ஆசிர்வாத நிகழ்ச்சிக்கு நித்யானந்தரை தம்முடன் அழைத்துச் செல்கிறார். அந்த வருடம் பெரியசுவாமியும், நித்தியானந்தரும் அருகருகே அமர்ந்து இருக்கிறார்கள். ஒரே ஒரு மாணவனுக்கு மட்டும் பெரியசுவாமிஜி ஆசிர்வாதம் செய்கிறார். மற்றவர்களுக்கு நீ ஆசிர்வாதம் செய் என்று நித்தியானந்தரைப் பார்த்து ஆணையிடுகிறார். அப்போது நித்தியானந்தர், “ஆசிர்வாதம் செய்யும்போது என்ன மந்திரம் சொல்ல வேண்டும்?” என்று வினவுகிறார். பெரியசுவாமி, “ சூரிய காயத்ரி மந்திரத்தை சொல்ல வேண்டும். முழுமையாக சொன்ன பிறகுதான் பிள்ளைகளின் தலையிலிருந்து கையை எடுக்க வேண்டும்” என்று விளக்குகிறார். அது முதல் எல்லோருக்கும் நித்தியானந்தர்தான் ஆசிர்வாதம் செய்ய ஆரம்பித்தார். சுவாமி குஹானந்தர் தலைவராக இருந்த ஒரு குறுகிய காலகட்டத்தில் குஹானந்தரும், நித்தியானந்தர் இருவருமே பிள்ளைகளுக்கு ஆசிர்வாதம் செய்தார்கள்.
          குருநாதர் மறைவிற்குப் பின் தலைமைப் பொறுப்பைக்கூட அவர் விரும்பி ஏற்கவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தலைவர் பொறுப்பை ஏற்றார்.
                   யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
                   அதனின் அதனின் இலன்
என்ற கருத்துடையவர் அவர்.
          தமிழ்நாடு முழுவதும் தம் குருநாதர் நிகழ்த்தி வந்த அந்தர்யோகங்களை இவரும் சிறப்பாக நடத்தி அன்பர்களின் அன்புக்கு ஆளானார். குருநாதர் உத்தரவுப்படி ஆண்டுக்கு ஒரு மாவட்டத்தை தேர்ந்தெடுத்து அன்பர்களுடன் பாதயாத்திரை சென்று வந்தார். இதனால் நூற்றுக்கணக்கான கிராமங்களில் இந்துமத தத்துவங்கள் உயிரூட்டப்பட்டன. அதுமட்டுமல்ல தம் குருவின் வாழ்க்கை வரலாற்றை தம் கைப்பட எழுதி பிரசுரித்தார். சித்பவானந்த குருவின் நூற்றாண்டு விழாவை குருநாதர் பிறந்த ஊரான கோவை மாவட்டம் செங்குட்டைப்பாளையத்தில் துவங்கி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடச் செய்து மகிழ்ந்தார். 1998-ஆம் ஆண்டு தபோவனத்தில் நடைபெற்ற சித்பவானந்தரின் நூற்றாண்டு விழா குறிப்பிடத்தக்கது.
          விடுதியில் மாணவர்களுக்கு தயாரிக்கப்படும் உணவை மட்டுமே சாப்பிடுவார். தனக்கென்று Specialஆக எதையும் தயாரித்து சாப்பிடமாட்டார். எங்கு சென்றாலும் அவரது நினைவு மட்டும் ஸ்ரீ விவேகானந்த வித்யாவன குருகுல மாணவர்கள் மீதே இருக்கும். தாய் தந்தையர்கள் கூட இவரைப் போல பிள்ளைகளை வளர்க்கமாட்டார்கள். அதனால் தான் அத்தனை மாணவர்களும் அவர் மீது அவ்வளவு அன்பு வைத்திருக்கின்றனர்.
          தலைமை ஸ்தானத்தை அவர் தேடிச் செல்லவில்லை. அது தானே தேடி வந்தது. ராமன் இருக்க பரதன் நாடாள்வதா? என்று மறுத்து பெரியசுவாமிக்குப் பின் சுவாமி குஹானந்தரை தலைவராக்கி அழகு பார்த்தார். குஹானந்தருக்குப் பின்புதான்  தான் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இத்தகைய சுயநலமற்ற கருணாமூர்த்தி 09.04.2012 இரவு 12 மணிக்கு தம் 82ஆம் வயதில் இறைநிலை எய்தினார். அவரது தேக தகனம் பெரியசுவாமியின் சமாதிக்கு அருகிலேயே 10.04.2012 அன்று மாலை 4:30 மணி அளவில் நடைபெற்றது.


(குறிப்பு: Warden Swamijiயை பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் யாவும் ஸ்ரீமத் சுவாமி நித்தியானந்தர் அவர்களிடமிருந்து சொல்லக் கேட்டவர் ஓய்வு ஆசிரியர் வ. சோமு அவர்கள். ஆசிரியர் சோமு அவர்களுக்கு பழைய மாணவர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.)

Thursday, April 12, 2012

*மகாசமாதி வழிபாடு


ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்
திருப்பராய்த்துறை
அறிவிப்பு
          அன்பர்களுக்கும், பழைய மாணவர்களுக்கும் ஓர் அறிவிப்பு.
        ஸ்ரீமத் சுவாமி நித்யானந்தர் மகாசமாதி 48 – ஆம் நாள் வழிபாடு 27.05.2012 ஞாயிறு அன்று காலை திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தில் நடைபெறும். அன்பர்களும், பழைய மாணவர்களும் கலந்துகொண்டு சுவாமி நித்யானந்தரின் திருவருள் பெறுக.
செயலர் சுவாமிஜி.

Wednesday, April 11, 2012

*இரங்கல்


கம்பீர குரலால் "அருணாச்சலசிவ அருணாச்சலசிவ..." என்று மார்கழி பஜனை பாடி ஊக்கத்தை கொடுத்தீர் நீர்.......

சித்பவானந்தரின் உழைப்பை சிந்தாமல் சிதறாமல் சிரத்தையோடு எங்களுக்கு சேர்த்தீர் நீர்...... 

English poem mistakes கண்டு தந்தையை போல கோவம் கொள்வீர் நீர்... 

English Gramm
ar சொல்லிகொடுக்கும்போது சிறந்த ஆசிரியர் நீர்... 

எங்களோட பேச்சை கேட்டு, கிச்சன் மாஸ்டரை கூப்பிட்டு "நாளை தேங்காய் சாதம் , இரண்டு நாள் பிறகு எள்ளு சாதம்" என்று சொல்லி தாய் ஆனீர் நீர்... 

தாயாய், தந்தையை, ஆசிரியராய் , ஒழுக்கத்திற்கு வழிகாட்டியாய் இருந்தீர் நீர்... 

தெய்வமாவதை மட்டும் தள்ளிவைத்திருந்தீர் நீர்.... இன்று தெய்வமும் ஆனீர் நீர்...

-இவண்
குடும்பத்தில் ஒருவரை இழந்ததை போல தவிக்கும் குருகுல மாணவர்கள்.... 

இரங்கல் செய்தியை எழுதியவர்: 
சுப்ரமண்யகுமார் (வி.எண்:151)
பழைய மாணவர் - 2000

*மகாசமாதி இறுதி நிகழ்வுகள்































































நன்றி: சஞ்சயன் ஷர்மா (புகைப்படங்கள்)
      பழைய மாணவர் – 2006