Thursday, June 30, 2011

*கருப்புப்பணமா? வேண்டாம்!

ஸ்ரீமத் சித்பவானந்த சுவாமிகளிடம் ஒரு பெரிய செல்வந்தர் வந்தார். ஒரு பெரும் தொகையை சுவாமியின் நற்காரியங்களுக்கு நன்கொடையாக அளிக்க விரும்புவதாகத் தெரிவித்தார். சுவாமிஜியிடமிருந்து பளிச்சென்று பதில் வந்தது. "ரசீது தருவதைப் பெற்றுக்கொண்டு செக்(Cheque) மூலமாக எவ்வளவு பணம் தந்தாலும் பெற்றுக்கொள்கிறோம்" என்றார். வந்தவர் திரும்பிவிட்டார். அவர் கொடுக்க நினைத்தது அவ்வளவும் கருப்புப்பணம். பின்பு அந்த செல்வந்தரே ஒரு டிரஸ்ட் ஒன்றை நிறுவி அதன் முலம் பல லட்சம் ரூபாய்களை சுவாமிஜியின் நற்காரியங்களுக்கு செலவிட்டாராம்.

Wednesday, June 29, 2011

*உண்மைக்குக் கிடைத்த தண்டனை

டாக்டர் R.K. கந்தசாமி
விடுதி எண்-43 (1950-51)
தபோவன பொதுக்குழு உறுப்பினர்.

1948இல் நான் IV  Form படித்துக்கொண்டிருந்தேன். விடுமுறை முடிந்து நானும் 108 E.R. குமாரசாமியும் ஹாஸ்டலுக்கு வராமல் திருச்சி சென்று சினிமா பார்த்துவிட்டு இரவு தாமதமாக விடுதிக்கு வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் காலை சுவாமியிடம் ஆஜர் கொடுக்க சென்ற போது எப்போது வந்தீர்கள்? என்று மகிழ்ச்சியுடன் கேட்டார். நாங்களும் நேற்று இரவு வந்தோம் என்று கூறினோம். நான் பார்க்கவில்லையே என்றார்கள். நாங்கள் திருச்சியில் சினிமா பார்த்துவிட்டு காலதாமதமாக வந்தோம் என்று உண்மையைக் கூறினோம். சுவாமிக்கு கோபம் வந்து இருவருக்கும் 5 ரூபாய் அபராதம் என்று சொன்னார்கள். உடனே 108 E.R. குமாரசாமி சற்றுத் துடுக்காக, "உண்மையைச் சொன்னதற்கு தண்டனையா சாமி?" என்று கேட்டார். அதற்கு சுவாமி உண்மையைச் சொன்னால் தப்பித்துக்கொள்ளலாம் என்றால் நாட்டில் கொலையும், திருட்டும் பெருகிவிடும். நீ உண்மையைச் சொல்கின்றாய் என்றால் நீ செய்த தவறுக்கு வருந்துகிறாய் என்பது முதல் பொருள். இரண்டாவதாக இனி அந்தத் தவற்றை செய்யமாட்டாய் என்று பொருள். மூன்றாவதாக இம்முறை செய்த தவறுக்கு தண்டனை ஏற்கத் தயாராய் இருப்பதாகவும் பொருள். உண்மையைச் சொல்வதில் இவ்வளவு அர்த்தங்கள் உள்ளன என்று கூறி எங்கள் இருவர் சிந்தனையையும் தெளிவடையச் செய்தார்கள். இது இன்று நடந்தது போல் உள்ளது. ஆனால் இது நடந்து 62 ஆண்டுகள் ஆகிவிட்டன.

Tuesday, June 28, 2011

*திருப்பராய்த்துறை கோயில்

அமைவிடம்:
திருச்சிராப்பள்ளி, கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பராய்த்துறை எனும் திருத்தலம் அமைந்துள்ளது.

சிறப்புமிகு ஸ்தலம்:
காவிரியின் தென்கரையிலுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்களில், திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோயில் மிகவும் தொன்மையானது. இங்கு காவிரி மிகவும் அகலமாக ஓடுவதால் அகண்ட காவிரி எனப்படுகிறது. பராய் மரங்கள் அதிகளவில் இருந்ததால், இந்த ஊர் திருப்பராய்த்துறை என்றானது.

மனிதனின் அடிப்படைத்தேவைகளான நல்ல காற்று, தூய்மையான நீர், சூரிய ஒளி, நல்ல உணவு, மன அமைதி ஆகிய அனைத்தையும் வாரி வழங்கும் இத்திருத்தலம் பொங்கொழிக்கும் பொன்னி நதியின் தென்கரையில் உள்ள ஸ்தலங்களுள் சிறப்புமிகு ஸ்தலம். இத்தலத்திற்கு இரண்டாம் இராஜராஜன் காலத்தில் இராஜகம்பீரநல்லூர் என்ற பெயரும் வழங்கி வந்தது.

ஆலயம்:


பராய்த்துறைநாதர் கோவில்  கோபுரம் ஏழுநிலைகளைக் கொண்டு காட்சியளிக்கிறது. செப்புக் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி கொண்ட ஒரே மண்டபம்;

 மூலவர் சந்நிதி கிழக்கு; பசும்பொன் மயிலாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன. உள் பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், சுப்பிரமணியர், சப்த கன்னியர், அறுபத்து மூவர், சோமாஸ்கந்தர், பஞ்சபூதலிங்கம், பிட்சாடணர், பிரம்மா, துர்க்கை, பன்னிருகைகளுடன் சண்முகர்; பிரகாரத்தின் வலது மேடையில் தட்சிணாமூர்த்தி சந்நிதி தனி விமானமாக சிங்கங்கள் தாங்கி நிற்கின்ற சிறந்த வேலைப்பாடமைந்த தூண்களைக் கொண்டுள்ளது.
 


விசாகப்பெருவிழா:

வைகாசி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். 9ஆம் நாள் திருத்தேர் திருவிழா; 10ஆம் நால் விசாக தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறும்.

துலா ஸ்நானம்:

புண்ணியங்களில் மிக உயர்ந்தது காவிரி ஸ்நானமே. புத்திர பாக்கியம், தாரித்ரிய நீக்கம், விவாகம் ஆகாதோர்க்கு விவாக நிவர்த்தி முதலியன அருளுவது துலாக்காவேரி ஸ்நானமாகும்.

ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் தம் குருகுலப் பிள்ளைகளை அழைத்துச் சென்று துலா ஸ்நானம் செய்ய வைத்து மகிழ்ச்சி அடைந்து வந்தார். அன்று குருகுலப்பிள்ளைகள் தாங்களே தனித்துச் சென்று, தாருகாவனேஸ்வரப் பெருமானைக் கண் குளிர வணங்கி மகிழ்ச்சி அடைவர்.

துலா ஸ்நான தினத்தன்று பராய்த்துறை நாதரும் ஹேமவர்ணாம்பிகையும் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காவிரியில் தீர்த்தமாடுவர். அவ்வமயம் பக்கத்து ஊர் மக்கள் மற்றும் பக்த பெருமக்கள் பலர் கலந்து கொள்வர். அக்காட்சி கண்கொள்ளாக்காட்சியாகும்.

தாருகாவனம்:

பராய் மரங்கள் நிறைந்த இத்தலம் திருப்பராய்த்துறை என அழைக்கப்படுகிறது. நமது இந்திய கலாச்சாரப்படி நாம் மரம் செடிகளை இறைவனாகவே நினைத்து பூஜித்து வருகிறோம்.

சரும நோய் நீக்கும் பராய்:
சுமார் 1300 ஆண்டுகளாக பெருமையுடன் நிற்கும் ஆலயத்தின் பின்புறம் உள்ள ஸ்தல் விருட்சமாகிய பராய் மரத்தின் பட்டையுடன், மஞ்சளும் சேர்த்து அரைத்து தேகத்தில் பூசினால் சரும நோய்கள் நீங்கும்.

ஸ்தல வரலாறு:
முன்னொரு காலத்தில் இத்தலத்தில் தவம் செய்துகொண்டிருந்த தாருகாவன முனிவர்கள், தாங்களே அனைத்திலும் உயர்ந்தவர்கள் என்ற மமதையும், தாங்கள் செய்யும், வேள்விகளே முதன்மையானது என்ற ஆணவமும், தங்கள் பத்தினிகளே கற்புக்கரசிகள் என்கிற அகங்காரமும் கொண்டிருந்தனர். மேலும், இதனால் தாங்கள் இறைவனை துதிக்க வேண்டியதில்லை என்றும் ஆணவம்.

அவர்களுக்கு பாடம் புகட்ட சிவனும், மகாவிஷ்ணுவும் எண்ணினர். சிவபெருமான் காண்பவர்களைக் கவரும் பேரழகுடன், கையில் திருவோடு ஏந்தி பிட்சாடனர் வேடம் தரிக்க, மகாவிஷ்ணு அழகிய மோகினி உருவம் கொண்டார். இருவரும் தாருகாவனம் செல்ல, பெண் வடிவில் வந்த மகாவிஷ்ணுவின் அழகில் மயங்கிய முனிவர்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அதேபோல் சிவனின் பேரழகைக் கண்ட முனிவர்களின் மனைவியர், கற்புநெறி மறந்து அவர் பின்னால் செல்லத் தொடங்கினர்.

தங்களது மனைவிகள் பிட்சாடனர் பின்னால் செல்வதைக் கண்ட முனிவர்கள், அவரை அங்கிருந்து விரட்டினர். ஆனால் அவர் செல்ல மறுத்துவிட்டார். முனிவர்கள் அவரை அழிக்க யாகம் செய்து, யாக குண்டத்திலிருந்து தோன்றிய புலிகளை ஏவினர். சிவபெருமான் அவற்றைக் கொன்று தோலை ஆடையாக்கிக்கொண்டார். பின்னர் பாம்பையும், பூதகணங்களையும் ஏவினர். எதை செய்தும் அவர்களால் வெற்றிகொள்ள முடியவில்லை. அவரை அழிக்க முடியாமல் முனிவர்கள் குழம்பி நின்றபோது, சிவபெருமான் அவர்கள் முன் காட்சியளித்தார். வந்தவர் இறைவன் என்பதை அறிந்த முனிவர்கள் அவரிடம் தஞ்சமடைந்து, தங்களை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டனர். சிவபெருமன் அவர்களுக்கு குருவாக இருந்து மன்னித்து, தாருகாவனேஸ்வரராக, சுயம்புலிங்கமாக மாறி காட்சியளித்தார்.

ஐவர் பாடிய அற்புதஸ்தலம்:
வேதநெறி தழைத்தோங்க, மிக சைவத்துறை விளங்க, பூத பரம்பரை பொலிய, புனிதவாய் மலர்ந்தருளிய திருஞானசம்பந்த பெருமானும், அலகில் கலைத்துறை தழைப்ப அருந்தவத்தோர் நெறிவாழ, உலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு கதிர்போல் மலரும் அப்பர் எனப் போற்றப்பட்ட திருநாவுக்கரசு சுவாமிகளும் தேன் கலந்து, பால் கலந்து, ஊன் கலந்து, உயிர் கலந்து, உவட்டாமல் இனிக்கும் ஒரு வாசகமாம் திருவாசகம் அருளிய மணிவாசகப் பெருமானும், கருணைக்கொரு அருணகிரியும்,  பாரனைத்தும் பொய்யெனவே கொண்டு மெய்ப்பொருளாய் இறைவனை நாடிய பட்டினத்தடிகளும் "பராய்த்துறைநாதரின்" பெருமையினைப் பாடிச் சிறப்பித்துள்ளனர்.

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச் செய்த தேவாரம்

ஸ்தலம்: திருப்பராய்த்துறை
பண்: மேகராகக்குறிஞ்சி
ராகம்: நீலாம்பரி

நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை
கூறுசேர்வதொர் கோலமாய்ப்
பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை
ஆறுசேர்சடை அண்ணலே. 1
   

கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை
வந்தபூம்புனல் வைத்தவர்
பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை
அந்தமில்ல அடிகளே. 2
   
வேதர்வேதமெல் லாமுறையால்விரித்
தோதநின்ற ஒருவனார்
பாதிபெண்ணுரு ஆவர்பராய்த்துறை
ஆதியாய அடிகளே. 3
   
தோலுந்தம்மரை யாடைசுடர்விடு
நூலுந்தாமணி மார்பினர்
பாலும்நெய்பயின் றாடுபராய்த்துறை
ஆலநீழல் அடிகளே. 4
   
விரவிநீறுமெய் பூசுவர்மேனிமேல்
இரவில்நின்றெரி யாடுவர்
பரவினாரவர் வேதம்பராய்த்துறை
அரவமார்த்த அடிகளே. 5

மறையுமோதுவர் மான்மறிக்கையினர்
கறைகொள்கண்ட முடையவர்
பறையுஞ்சங்கும் ஒலிசெய்பராய்த்துறை
அறையநின்ற அடிகளே. 6
   
விடையுமேறுவர் வெண்பொடிப்பூசுவர்
சடையிற்கங்கை தரித்தவர்
படைகொள்வெண்மழு வாளர்பராய்த்துறை
அடையநின்ற அடிகளே. 7
   
தருக்கின்மிக்க தசக்கிரிவன்றனை
நெருக்கினார்விர லொன்றினால்
பருக்கினாரவர் போலும்பராய்த்துறை
அருக்கன்றன்னை அடிகளே. 8
   
நாற்றமாமல ரானொடுமாலுமாய்த்
தோற்றமும் மறியாதவர்
பாற்றினார்வினை யானபராய்த்துறை
ஆற்றல்மிக்க அடிகளே. 9
   
திருவிலிச்சில தேரமண்ஆதர்கள்
உருவிலாவுரை கொள்ளேலும்
பருவிலாலெயில் எய்துபராய்த்துறை
மருவினான்றனை வாழ்த்துமே. 10

செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச்
செல்வர்மேற் சிதையாதன
செல்வன்ஞான சம்பந்தனசெந்தமிழ்
செல்வமாமிவை செப்பவே. 11

திருப்பராய்த்துறை - திருக்குறுந்தொகை-திருநாவுக்கரசர்

கரப்பர் கால மடைந்தவர் தம்வினை
சுருக்கு மாறுவல் லார்கங்கை செஞ்சடைப்
பரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத்
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வரே. 1

மூடி னார்களி யானையின் ஈருரி
பாடி னார்மறை நான்கினோ டாறங்கஞ்
சேட னார்தென் பராய்த்துறைச் செல்வரைத்
தேடிக் கொண்டடி யேன்சென்று காண்பனே. 2

பட்ட நெற்றியர் பால்மதிக் கீற்றினர்
நட்ட மாடுவர் நள்ளிருள் ஏமமுஞ்
சிட்ட னார்தென் பராய்த்துறைச் செல்வனார்
இட்ட மாயிருப் பாரை அறிவரே. 3

முன்பெ லாஞ்சில மோழைமை பேசுவர்
என்பெ லாம்பல பூண்டங் குழிதர்வர்
தென்ப ராய்த்துறை மேவிய செல்வனார்
அன்ப ராயிருப் பாரை அறிவரே. 4

போது தாதொடு கொண்டு புனைந்துடன்
தாத விழ்சடைச் சங்கரன் பாதத்துள்
வாதை தீர்க்கவென் றேத்திப் பராய்த்துறைச்
சோதி யானைத் தொழுதெழுந் துய்ம்மினே. 5

நல்ல நான்மறை யோதிய நம்பனைப்
பல்லில் வெண்டலை யிற்பலி கொள்வனைத்
தில்லை யான்றென் பராய்த்துறைச் செல்வனை
வல்லை யாய்வணங் கித்தொழு வாய்மையே. 6

நெருப்பி னாற்குவித் தாலொக்கு நீள்சடைப்
பருப்ப தம்மத யானை யுரித்தவன்
திருப்ப ராய்த்துறை யார்திரு மார்பின்நூல்
பொருப்ப ராவி இழிபுனல் போன்றதே. 7

எட்ட விட்ட இடுமண லெக்கர்மேற்
பட்ட நுண்டுளி பாயும் பராய்த்துறைச்
சிட்டன் சேவடி சென்றடை கிற்றிரேல்
விட்டு நம்வினை யுள்ளன வீடுமே. 8

நெருப்ப ராய்நிமிர்ந் தாலொக்கு நீள்சடை
மருப்ப ராவளைத் தாலொக்கும் வாண்மதி
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வனார்
விருப்ப ராயிருப் பாரை அறிவரே. 9

தொண்டு பாடியுந் தூமலர் தூவியும்
இண்டை கட்டி இணையடி யேத்தியும்
பண்ட ரங்கர் பராய்த்துறைப் பாங்கரைக்
கண்டு கொண்டடி யேனுய்ந்து போவனே. 10

அரக்கன் ஆற்றல் அழித்த அழகனைப்
பரக்கு நீர்ப்பொன்னி மன்னு பராய்த்துறை
இருக்கை மேவிய ஈசனை யேத்துமின்
பொருக்க நும்வினை போயறுங் காண்மினே. 11

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
பதிகம்: செத்திலாப் பத்து
பாடல்: 4வது

அன்பர் ஆகி மற்று அரும் தவம் முயல்வார்
     அயனும் மாலும் மற்று அழல் உறு மெழுகு ஆம்
என்பர் ஆய் நினைவார் எனைப்பலர்
     நிற்க இங்கு எனை எற்றினுக்கு ஆண்டாய்
வன் பராய் முருடு ஒக்கும் என் சிந்தை
     மரம் கண் என் செவி இரும்பினும் வலிது
தென் பராய்த்துறையாய் சிவலோகா
      திருப்பெருந்துறை மேவிய சிவனே.

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்

தானன தந்தன தாத்த தத்தன
     தானன தந்தன தாத்த தத்தன
          தானன தந்தன தாத்த தத்தன ...... தனதான

......... பாடல் .........

வாசனை மங்கையர் போற்று சிற்றடி
     பூஷண கிண்கிணி யார்ப்ப ரித்திட
          மாமலை ரண்டென நாட்டு மத்தக ...... முலையானை

வாடைம யங்கிட நூற்ற சிற்றிழை
     நூலிடை நன்கலை தேக்க இக்குவில்
          மாரன்வி டுங்கணை போற்சி வத்திடு ...... விழியார்கள்

நேசிகள் வம்பிக ளாட்ட மிட்டவர்
     தீயர்வி ரும்புவர் போற்சு ழற்றியெ
          நீசனெ னும்படி யாக்கி விட்டொரு ...... பிணியான

நீரின்மி குந்துழ லாக்கை யிற்றிட
     யோகமி குந்திட நீக்கி யிப்படி
          நீயக லந்தனில் வீற்றி ருப்பது ...... மொருநாளே

தேசம டங்கலு மேத்து மைப்புய
     லாயநெ டுந்தகை வாழ்த்த வச்சிர
          தேகமி லங்கிய தீர்க்க புத்திர ...... முதல்வோனே

தீரனெ னும்படி சாற்று விக்ரம
     சூரன டுங்கிட வாய்த்த வெற்புடல்
          தேயந டந்திடு கீர்த்தி பெற்றிடு ...... கதிர்வேலா

மூசளி பம்பிய நூற்றி தழ்க்கம
     லாசனன் வந்துல காக்கி வைத்திடு
          வேதன கந்தையை மாற்றி முக்கண ...... ரறிவாக

மூதறி வுந்திய தீக்ஷை செப்பிய
     ஞானம்வி ளங்கிய மூர்த்தி யற்புத
          மூவரி லங்குப ராய்த்து றைப்பதி ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வாசனை மங்கையர் போற்று (ம்) சிற்றடி பூஷண கிண்கிணி ஆர்ப்பரித்திட ... நறு மணம் கொண்ட விலைமாதர்களின் விரும்பத் தக்க சிற்றடியில் ஆபரணமாய் விளங்கும் பாத சதங்கை ஒலி செய்ய,

மா மலை (இ) ரண்டு என நாட்டு மத்தக முலை யானை வாடை மயங்கிட நூற்ற சிற்று இழை நூல் இடை நன் கலை தேக்க ... அழகிய மலைகள் இரண்டு என்று சொல்லும்படியாக நிறுத்தப்பட்டு, மத்தகத்தைக் கொண்ட யானை போன்ற மார்பின் வாசனை கலந்து சேர, நூற்கப்பட்ட மெல்லிய இழை நூலை ஒத்த இடையில் அழகிய ஆடை நிறைந்து விளங்க,

இக்கு வில் மாரன் விடும் கணை போல் சிவத்திடு விழியார்கள் நேசிகள் வம்பிகள் ஆட்டம் இட்டவர் தீயர் ... கரும்பு வில்லை ஏந்திய மன்மதன் ஏவும் தாமரைப் பூவைப் போல் சிவந்து விளங்கும் கண்களை உடையவர்கள். யாருடனும் நேசம் பாராட்டுபவர்கள். பயனிலிகள். (வந்தவரை) பலவிதமான கூத்தாட்டங்கள் ஆடும்படி ஆட்டுவிப்பவர்கள். பொல்லாதவர்கள்.

விரும்புவர் போல் சுழற்றியே நீசன் எனும்படி ஆக்கி விட்டு ஒரு பிணியான நீரின் மிகுந்து உழல் ஆக்கையில் ... விரும்பி நேசிப்பவர் போல் அலைய வைத்து இழிந்தோன் என்னும்படி என்னை ஆக்கிவிட்டு ஒரு நோயாளன் என்னும்படியான நிலைமையில் விடப்பட்டு நிரம்பவும் சுழன்று வேதனைப்படும் இந்த உடலில்,

திட யோகம் மிகுந்திட நீக்கி இப்படி நீ அகலந்தனில் வீற்றிருப்பதும் ஒரு நாளே ... கலங்காத சிவ யோக நிலை மேம்பட்டு எழ, என்னை கெட்ட நெறியின்று விலக்கி, இந்தக் கணமே நீ என்னுடைய மார்பகத்தில் வீற்றிருக்கும் ஒப்பற்ற நாள் எனக்கு விடியுமா?

தேசம் அடங்கலும் ஏத்து (ம்) மைப் புயல் ஆய நெடும் தகை வாழ்த்த வச்சிர தேகம் இலங்கிய தீர்க்க புத்திர முதல்வோனே ... தேசம் எல்லாம் போற்றும் கரிய மேக நிறத்தினனான பெருந்தகையாகிய திருமால் வாழ்த்த, அழியாத திருமேனி விளங்கும் பூரணனாகிய சிவபெருமானின் மகனே, முதல்வனே,

தீரன் எனும்படி சாற்று விக்ரம சூரன் நடுங்கிட வாய்த்த வெற்பு உடல் தேய நடந்திடு கீர்த்தி பெற்றிடு கதிர் வேலா ... வீரன் என்னும்படி பேர் பெற்றிருந்த வலிமையாளனே, சூரன் நடுங்கும்படி, வரத்தினால் கிடைத்த அவனது மலை போன்ற உடல் தேய்ந்து ஒழியும்படி, (போரை) நடத்தி புகழை அடைந்த ஒளி வீசும் வேலனே,

மூசு அளி பம்பிய நூற்று இதழ்க் கமல ஆசனன் வந்து உலகு ஆக்கி வைத்திடு வேதன் அகந்தையை மாற்றி ... மொய்க்கின்ற வண்டுகள் நிறைந்த நூறு இதழ்களைக் கொண்ட தாமரை மலரில் வீற்றிருப்பவனும், தோன்றி உலகங்களைப் படைத்து வைத்துள்ளவனுமாகிய, வேதம் ஓதும் பிரமனுடைய ஆணவத்தை நீக்கி,

முக்க (ண்) ணர் அறிவாக மூது அறிவு உந்திய தீக்ஷை செப்பிய ஞானம் விளங்கிய மூர்த்தி ... முக்கண்ணராகிய சிவ பெருமான் தெரிந்து கொள்ளும்படி பேரறிவு விளங்கிய உபதேச மொழியைச் சொன்ன ஞான ஒளி வீசும் மூர்த்தியே,

அற்புத மூவர் இலங்கு பராய்த்துறை பதி பெருமாளே. ... அற்புதக் கடவுளராகிய (பிரமன், திருமால், சிவன் ஆகிய) திரிமூர்த்திகளும் விளங்குகின்ற திருப்பராய்த்துறை* என்னும் பதியில் வீற்றிருக்கும் பெருமாளே.

ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் 1940ஆம் ஆண்டில் தவம் செய்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் அவரது நூற்றாண்டு விழாவில் நிகழ்த்தப் பெற்றது. அவர் தங்கி தவமிருந்த ஆலயத்தில் இன்று அன்னாருடைய சீடர்களாகிய பழைய மாணவர்கள், பக்தர் பெருமக்கள் உபயத்தினால் நித்திய நைவேத்தியங்கள் செவ்வனே நடைபெற்று வருகின்றன.

Sunday, June 26, 2011

*ஸ்ரீ காந்திமதி அம்பாள் - நெல்லை ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி வளாகம்


திருநெல்வேலி கல்லூரி துவக்க வேண்டும் என்று ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபொழுது ஒரு முறை திருமுருகன்பூண்டியைச் சார்ந்த ஸ்தபதியை ஸ்வாமிஜி அவர்கள் அழைத்து "திருநெல்வேலியில் பெண்களுக்காக ஒரு ஸ்தாபனம் துவக்க இருக்கிறோம். அந்த நெல்லையம்பதியில் கோயிலில் உறைகின்ற அன்னையின் வடிவத்தை அங்கு அமைக்க வேண்டும். அதை நீங்கள்தான் செய்யவேண்டும்" என்று கூறினார்கள். "செய்துவிடலாம்; எப்படி சிலை அமைய வேண்டும் என்று தாங்கள் விரும்புகிறீர்கள்?" என்று ஸ்தபதி கேட்டபொழுது "கோயிலிலே இருக்கும் அம்மன் சிலை ஒரு மூன்று அடிதான் இருக்கும். சிறிய சிலை. அதுபோல் அல்லாமல் நல்ல பெரிய உருவமாகவே இருக்க வேண்டும்" என்று சித்பவானந்த சுவாமிஜி கூறினார்களாம். அந்த ஸ்தபதி "என்னுடைய புதல்வர்களில் மூத்தவன் நல்ல சிற்பி; கைத்தேர்ந்தவன்; பார்ப்பதற்கு சற்று குள்ளமாக இருப்பான். அடுத்த இரண்டு மகன்களும் நல்ல ஆஜானுபாகுவாக இருப்பார்கள். அப்போது அவர்களில் ஒருவனை அங்கு என்னுடன் அழைத்துச் சென்றிருந்தார். அவனைக் காண்பித்து "இவன் உயரத்திற்கு அந்த சிலை இருக்கலாமா?" என்று கேட்டார். அந்த புதல்வன் எழுந்து நின்றான். அவனைப் பார்த்தவுடன் ஸ்வாமிஜி "இருக்கலாம்" என்று சம்மதத்தைத் தெரிவித்தார்கள். பிறகு மற்ற குறிப்புகளையெல்லாம்  கேட்டுக்கொண்டு அன்று மாலை ஸ்தபதி தபோவனத்திலிருந்து விடைபெற்றுச் சென்றார். புறப்படுவதற்கு முன் ஸ்வாமிஜி அவர்களிடம் நமஸ்காரம் செய்து ஆசி பெறச் சென்றார். வணங்கிவிட்டு "ஸ்வாமிஜி, சிற்பம் நன்றாக அமைய வேண்டும் என்று ஆசீர்வாதம் செய்யுங்கள்" என்றார். அப்போது ஸ்வாமிஜி "ஆசீர்வாதமா? த்யானமே செய்துகொண்டிருக்கிறேன்." என்றார்களாம்.

கல்லூரி வளாகத்திற்குள் அமைந்துள்ள  அம்மன் சிலையைப் பார்ப்பவர்களுக்கு, அது கற்சிலை என்ற எண்ணம் ஒருபொழுதும் தோன்றாது. கனிவுடன் தாயே அங்கு நின்றுகொண்டிருக்கின்றாள் என்று தோன்றும்.

Friday, June 24, 2011

*செய்தி

25.06.2011 சனிக்கிழமை இரவு 10.30 முதல் 11.30 வரை சன் நியூஸ் தொலைக்காட்சியில், Dr.R.குமாரசாமி கலந்துகொள்ளும் Doctor-X நிகழ்ச்சியை கண்டுகளிக்கத் தவறாதீர்கள்

*மதுரை சித்பவானந்தர் சேவா சங்கம் - ஆண்டு விழா அழைப்பிதழ்


Tuesday, June 21, 2011

*கடமை உணர்வு

அறுபதாண்டுகளுக்கு முன்பு ஸ்ரீமத் சித்பவானந்த சுவாமிகள் திருவண்ணாமலை ஈசான்ய முனிவர் மடத்தில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தி முடித்துவிட்டுத் திருப்பராய்த்துறை மடத்திற்கு திரும்பி வர விழுப்புரம் இரயில் நிலையத்தில் வண்டியேறி வரும்போது புயல், மழையால் லால்குடிக்கு மேல் இரயில் செல்லவில்லை. சாலைப் போக்குவரத்தில் பல மரங்கள் விழுந்து பஸ் போகவில்லை.

கடமை உணர்வுமிக்க சுவாமிகள் 40 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திருப்பராய்த்துறைக்கு நடந்தே சென்று தன் வழக்கமான பணிகளில் ஈடுபட்டார். அப்படிப்பட்ட கடமை வீரர், கர்மயோகியின் வாழ்வு நமக்கு ஓர் எடுத்துக்காட்டு.

Sunday, June 19, 2011

*குருமகராஜின் கட்டளை!

பெரிய சுவாமிஜி கல்கத்தா ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில்  இருந்தபோது குரு மகராஜ் சிவானந்த சுவாமி அவர்களுக்கு தாயுமானவ சுவாமிகளின் பாடல்களையும் கருத்துக்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சொல்வது வழக்கமாம்.

அப்போது குரு மகராஜ் அவர்கள் உபநிஷத்துக்களின் கருத்துக்கள் அடங்கியுள்ள தாயுமானவ சுவாமி பாடல்களை பரப்புவதற்கு ஏதேனும் செய் என்று கட்டளையிட்டாராம்.

சுவாமிஜி தமிழகம் வந்ததும் ராமநாதபுரத்திலுள்ள 'தாயுமானவ சுவாமி சமாதியை புதுப்பித்து பணிகளைத் தொடர முயற்சித்தார். ஆனால் காலம் கைகூடி வரவில்லை. பின்பு அச்சமாதியை நிர்வகித்து வந்தவர்கள் தாங்களாகவே சமாதியின் முழு நிர்வாகப் பொறுப்பையும் சுவாமிகளிடம் ஒப்படைத்தனர்.

*Sri Ramakrishna Knitting Works R.P.Balakrishnan's Tapovanam Visit









Friday, June 17, 2011

*இரு மூர்த்திகள் - ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்

"1921ல் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துடன் தொடர்பு ஏற்பட்டது. அப்போது ஸ்ரீமத் பிரம்மானந்த சுவாமிஜியும், ஸ்ரீமத் சிவானந்த சுவாமிஜியும் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்கு வந்திருந்தார்கள். தினமும் காலையும், மாலையும் அவர்களைக் காணச் செல்லுவோம். இருவரும் பெரிய மூர்த்திகள். குருமஹராஜ், அன்னையார், சுவாமிஜியைப் பார்க்காத குறை, இம்மூர்த்திகளை பார்த்ததால் தீர்ந்தது".

சென்னை ராமகிருஷ்ண மடத்திற்கு சுவாமிஜீகள் வந்திருந்தபோது தினமும் காலை 5-00 மணிக்கு பார்க்கப்போவேன். போகும்போது பழங்களைக் கொண்டு போவேன். பார்க்கவே மாட்டார் பிரம்மானந்த சுவாமிஜி. பார்க்கவில்லையே என்று ஒரு நாள் கொண்டு போகவில்லை. 'ஏன் பழம் கொண்டு வரவில்லை என்று கேட்டார்?'

"ஸ்ரீ ராமகிருஷ்ணர் சிலர் கொண்டு வரும் பட்சணங்களை தூயது அல்ல என்று உணர்ந்தால் சாப்பிடமாட்டார். சில பக்தர்கள் கொண்டு வராவிட்டால் ஏன் கொண்டு வரவில்லை என்று கேட்பார் அதுபோலத்தானே பிரம்மானந்த சுவாமிஜியும் கேட்டது?" என்று நாங்கள்(ஓர் அன்பர்) கேட்டார்.

"ஆமாம் அதுபோலத்தான்" என்றார் நம் பெரிய சுவாமிஜி.

"ஸ்ரீ பிரம்மானந்த சுவாமிஜி பெரும்பாலும் சமாதி நிலையிலேயே இருப்பார். செகரட்டரியாக இருந்த சாரதானந்த சுவாமிஜி, மடத்து விஷயமாகக் கையெழுத்து வாங்குவதற்கு இரண்டு நாட்கள் கூடக் காத்திருக்க வேண்டியிருக்கும்".

"பரமஹம்சருடைய சிஷ்யர்களே ஒரு அலாதியான கூட்டம். எல்லாருடைய வாழ்க்கையும் சேர்ந்து பரமஹம்சருடைய வாழ்க்கைக்கு நிகர்".

Thursday, June 16, 2011

*ஜூலை 4 - அழைப்பிதழ். அனைவரும் வருக!


*கோவை சித்பவானந்த சேவா சங்கம் - ஓர் அறிவிப்பு

நமது சங்கத்தின் நிர்வாகக்குழுக் கூட்டம் 26.06.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று தலைவர் திரு C.A.A. அர்ஜுன்ராஜ் அவர்களின் வீட்டில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ளது. அனைவரும் அவசியம் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வழி: கோவை சத்தி ரோட்டில் G.P. தியேட்டரை ஒட்டி கிழக்கே செல்லும் பாதையில் வலதுபுறம் 2வது பாதையில் முதல் வீடு.
தொடர்புக்கு:
C.A.A. அர்ஜுன்ராஜ்,
பழம்நீ,
44 A, C.K. காலணி
நியூ சித்தாபுதூர்,
கோவை - 641 044.
செல்: 94433 39259
போன்: 0422 - 2522233.

Friday, June 10, 2011

*வருந்துகிறோம்

கோவை சித்பவானந்தர் சங்கத்தின் துணைத்தலைவர் டாக்டர். ஆர்.கே. கந்தசாமி, விடுதி எண்-43, 1950-51ஆம் வருடம் பெரியசுவாமிஜியிடம் பயின்று வெளியே வந்த முதல் மருத்துவர். அன்னாருடைய துணைவியார் நேற்று (09.06.2011, வியாழக்கிழமை) இரவு இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.

Thursday, June 9, 2011

*சக்திகளின் சங்கமம் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்

கடுமையான சாதனைகள் மூலம் மகாசக்திகள்  கைவரப் பெற்றும் அவை குறித்து எள்ளளவும்  பெருமைப்படாமல் ''விட்டேன் என்ற எண்ணத்தை விட்ட" மகாபுருஷர் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.
   
எல்லாம் வல்ல அன்னை பராசக்தியின் மூன்று திருக்கோலங்களை பக்தர்கள் ஆனந்தக்களிப்போடு வழிபடுவார்கள்.  ஸ்ரீ மகாசரஸ்வதி, ஸ்ரீ மகாலக்ஷ்மி, ஸ்ரீ மகாகாளி ஆகியோர் அந்தத் திருவடிவங்கள். ஸ்ரீமத் சுவாமிகளிடம் இந்த மூன்று சக்திகளும் நிறைந்து இணைந்து வாழ்ந்திருந்தனர்.

தமிழ்நாட்டில் நாத்திகம் தலைவிரித்தாடிய காலம், தெய்வ நம்பிக்கை மட்டுமல்ல நமது புராணங்கள், தெய்வ வடிவங்கள், உபநிடதங்கள், தேவார திருவாசங்கள், ஸ்ரீமத் பகவத் கீதை ஆகிய அனைத்தின் மீதும் அவநம்பிக்கையும் வெறுப்பையும் வளர்க்க கேலியும், கிண்டலும் நிறைந்த புயல் வேக பிரசாரம் நடந்துவந்த காலம்;சம்ஸ்க்ருத மொழியின் மீது குரோதம் நிறைந்த அருவெறுப்பை வளர்த்துவிட்டிருந்த காலம், ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அந்தர்யோகம் என்ற ஒரு புதிய முறையை உருவாக்கினார். சத்சம்பாஷணை, சந்தேகம் தெளிதல் போன்ற முறைகளின் மூலம் தெய்வ வடிவங்களின் தத்துவங்கள், ஹிந்து சமயத்தின் அருமை பெருமைகள், யோகம், தியானம் முதலியவற்றின் நுட்பங்கள், ஸ்ரீ ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் மாண்புகள் முதலிய பல்வேறு விஷயங்களை குழந்தைகளுக்கும் புரிகிற விதத்தில் விளக்கி வந்தார். அவரது தவம் அவர்களது சொற்களின் மூலம் வெளிப்பட்டது. அலங்காரமும், ஆரவாரமும் இல்லாத இந்த சொற்கள் உள்ளத்தின் அடிவாரத்திலிருந்து புறப்பட்டு கேட்போருடைய நெஞ்சத்தில் நேராகச் சென்று பதியும். ஸ்ரீமத் பகவத்கீதைக்கு அவர் எழுதியுள்ள விளக்கவுரை அற்புதமானது. திருவாசகம், தாயுமானவர் பாடல்கள் முதலியவற்றிற்கு அவர் எழுதியுள்ள விளக்க நூல்கள் லட்சக்கணக்கான மக்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் இடம்பெறுகின்றன.
     
ஸ்ரீமகா சரஸ்வதி அவர் மூலம் அரிய ஞானத்தை வாரி வழங்கி வந்தார். அவர் நிறுவியுள்ள கல்லூரிகளும் கல்விக்கூடங்களும் இன்றும்கூட கலைமகளின் உறைவிடங்களாகத் திகழ்கின்றன. நல்ல தொண்டுகளுக்காக அவர் நிதிகோரியபோதெல்லாம் செல்வம் வந்து குவிந்தது. அவரது பணிகளைக் கூர்ந்து கவனித்து வந்த மக்கள் அள்ளி வழங்கினர். செழிப்பான வயல்கள், அழகிய பசுக்கள், பூஞ்சோலைகள் பூத்துக்குலுங்கும் இடத்தில் அவர் நிறுவியுள்ள குருகுலக் கல்விக்கூடங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. அவரது கல்விநிலையங்களில் வழங்கப்படும் ஆரோக்கியமான உணவு அங்கு கல்விபெறும் குழந்தைகளையும், இளைஞர்களையும் சத்துவகுணம் வாய்த்தவர்களாக ஆக்குகிறது. கட்டுபாட்டிற்கு அங்கே முதலிடம். சுவாமிகள் கடுமையான கட்டுப்பாட்டை வலியுறுத்துவார்கள். அதே நேரத்தில் சிறுவர்களுடன் அன்பாக விளையாடுவார்கள்.
   
அரிய புத்தகங்களை மலிவு விலையில் பக்தர்களுக்கு வழங்க அவர் செய்துள்ள ஏற்பாடு அற்புதமானது. நிதி அவரைத் தேடி வந்தது. திருமகள் அவருடன் அனந்தமாக நிலைத்து நின்றாள்.
      
ஸ்ரீ சுவாமிகள் அச்சம் என்பதையே அறியாதவர். அவரை எங்கும் மிரட்டி பணியவைக்க முடியாது. பல ஆண்டுக்காலம் அவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஊன்றி கவனித்து வந்தார். நாட்டு முன்னேற்றத்துக்கு சங்கம் கொடுக்கின்ற பயிற்சி ஒன்றுதான் அருமருந்து என்பதை உணர்ந்தவுடன் அதற்கு உறுதுணையாக நின்றார்.  

நல்லது என்று தோன்றுகின்ற காரியங்களை செய்யும்போது அவரது உறுதி அசாதாரணமானது. அவரது அஞ்சாநெஞ்சம், துணிவு ஆகியவை நமக்கு இன்றும் வழிகாட்டும்.

தாயினும் கனிந்த உள்ளம்
தளர்விலா தீரவீரம்
தீயினைபோன்ற தூய்மை
தென்றலைப்போன்ற தன்மை
மாயையும் அஞ்சும் ஞானம்

என்றெல்லாம் சுவாமி விவேகானந்தரை வர்ணிப்பார்கள். அவரை தரிசிக்க பாக்கியமற்ற நாம் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரில் அந்த பிரதிபலிப்பை முழுமையாகக் கண்டோம். அவர் மறையவில்லை, நமது நெஞ்சங்களில் குடிகொண்டு விளங்குகிறார். இனி தோன்றாத் துணையாக, ஒளிவிளக்காக அவர் நமக்கு வழிகாட்ட நமது தகுதியை வளர்த்துக்கொள்வோமாக.