Sunday, June 26, 2011

*ஸ்ரீ காந்திமதி அம்பாள் - நெல்லை ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி வளாகம்


திருநெல்வேலி கல்லூரி துவக்க வேண்டும் என்று ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபொழுது ஒரு முறை திருமுருகன்பூண்டியைச் சார்ந்த ஸ்தபதியை ஸ்வாமிஜி அவர்கள் அழைத்து "திருநெல்வேலியில் பெண்களுக்காக ஒரு ஸ்தாபனம் துவக்க இருக்கிறோம். அந்த நெல்லையம்பதியில் கோயிலில் உறைகின்ற அன்னையின் வடிவத்தை அங்கு அமைக்க வேண்டும். அதை நீங்கள்தான் செய்யவேண்டும்" என்று கூறினார்கள். "செய்துவிடலாம்; எப்படி சிலை அமைய வேண்டும் என்று தாங்கள் விரும்புகிறீர்கள்?" என்று ஸ்தபதி கேட்டபொழுது "கோயிலிலே இருக்கும் அம்மன் சிலை ஒரு மூன்று அடிதான் இருக்கும். சிறிய சிலை. அதுபோல் அல்லாமல் நல்ல பெரிய உருவமாகவே இருக்க வேண்டும்" என்று சித்பவானந்த சுவாமிஜி கூறினார்களாம். அந்த ஸ்தபதி "என்னுடைய புதல்வர்களில் மூத்தவன் நல்ல சிற்பி; கைத்தேர்ந்தவன்; பார்ப்பதற்கு சற்று குள்ளமாக இருப்பான். அடுத்த இரண்டு மகன்களும் நல்ல ஆஜானுபாகுவாக இருப்பார்கள். அப்போது அவர்களில் ஒருவனை அங்கு என்னுடன் அழைத்துச் சென்றிருந்தார். அவனைக் காண்பித்து "இவன் உயரத்திற்கு அந்த சிலை இருக்கலாமா?" என்று கேட்டார். அந்த புதல்வன் எழுந்து நின்றான். அவனைப் பார்த்தவுடன் ஸ்வாமிஜி "இருக்கலாம்" என்று சம்மதத்தைத் தெரிவித்தார்கள். பிறகு மற்ற குறிப்புகளையெல்லாம்  கேட்டுக்கொண்டு அன்று மாலை ஸ்தபதி தபோவனத்திலிருந்து விடைபெற்றுச் சென்றார். புறப்படுவதற்கு முன் ஸ்வாமிஜி அவர்களிடம் நமஸ்காரம் செய்து ஆசி பெறச் சென்றார். வணங்கிவிட்டு "ஸ்வாமிஜி, சிற்பம் நன்றாக அமைய வேண்டும் என்று ஆசீர்வாதம் செய்யுங்கள்" என்றார். அப்போது ஸ்வாமிஜி "ஆசீர்வாதமா? த்யானமே செய்துகொண்டிருக்கிறேன்." என்றார்களாம்.

கல்லூரி வளாகத்திற்குள் அமைந்துள்ள  அம்மன் சிலையைப் பார்ப்பவர்களுக்கு, அது கற்சிலை என்ற எண்ணம் ஒருபொழுதும் தோன்றாது. கனிவுடன் தாயே அங்கு நின்றுகொண்டிருக்கின்றாள் என்று தோன்றும்.

No comments:

Post a Comment