பராய்த்துறை மேவிய பரனே போற்றி!
ஸ்ரீ தாருகாவனேஸ்வரர்(உற்சவ மூர்த்தி)
பசும்பொன் மயிலாம்பிகை
(உற்சவ மூர்த்தி)
(உற்சவ மூர்த்தி)
திருப்பராய்த்துறை தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு பராய்த்துறைநாதர் என்றும், அம்பாளுக்கு பசும்பொன் மயிலாம்பிகை என்றும் பெயர். மாணிக்கவாசகர், ‘பராய்த்துறை மேவிய பரனே போற்றி’ என்றும், ‘தென்பராய்த்துறை சிவலோகா’ என்றும் பராய்த்துறைநாதனைப் போற்றிப் பாடியுள்ளார்.
‘அரக்கன் ஆற்றில் அழித்த அழகனைப்
பரக்கு நீர்ப்பொன்னி மன்னு பராய்த்துறை
இருக்கை மேவிய ஈசனை ஏத்துமின்
பொருக்க நும்வினை போய்அறும் காண்மினே’
என்று திருநாவுக்கரசர் பராய்த்துறைநாதனைப் பற்றிப் பாடியுள்ளார். நாள்தோறும் சிவபெருமானை வழிபட்டு தமிழ்நாட்டிலுள்ள அறியாமை என்னும் அரக்கன் மீது போர் செய்து வெற்றி அடைவதற்கு ஸ்ரீமத் சித்பவானந்தர் திட்டமிட்டார்.
ஆலய கோபுரம்
1940-ஆம் ஆண்டு திருப்பராய்த்துறைக்கு வந்த ஸ்ரீமத் சித்பவானந்தர் பராய்த்துறை ஆலய கோபுரத்தின் ஓர் அறையில் தங்கி இருந்தார். ஆங்கு இரண்டு ஆண்டுகள் தனித்திருந்து தவம் இயற்றினார். அதிகாலை 3 மணிக்கு எழுந்திருந்து ஜபம், தியானத்தில் ஈடுபட்டார். புனித காவேரியில் நீராடி பராய்த்துறைநாதனை பரவி வந்தார். தத்துவ நூல்களின் ஆராய்ச்சியை ஆத்மசாதனையாகச் செய்துவந்தார். அதிகாலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்குப் போகும் வரையில் ஒரு நிமிடத்தையும் வீணாக்காது மனத்தை பரநாட்டத்தில் செலுத்தி வந்தார். பெரிய சுவாமிஜியின் குருநாதர் ‘மஹாபுருஷ் மஹராஜ்’ ஸ்ரீமத் சுவாமி சிவானந்தர் அவர்கள் “தமிழ்நாட்டுக்குப் பணி செய்” என்று ஆக்ஞாபித்திருந்தார். இரண்டு ஆண்டுகள் சித்பவானந்த சுவாமி இயற்றிய தவத்தின் பயனாக உள்ளம் பண்பட்டது.
ஸ்ரீமத் சித்பவானந்தரிடம் தொடர்பு வைத்திருந்த செட்டிநாட்டைச் சேர்ந்த திரு.இராமநாதன் செட்டியார் அவர்களிடம் காவிரிக் கரையில் ஒரு ஸ்தாபனத்தைத் தோற்றுவிக்க வேண்டுமெனும் குறிப்பைத் தெரிவித்தார். 1940 – ஆம் ஆண்டு மே மாதம் 26 – ஆம் தேதி திருப்பராய்த்துறை ஸ்ரீ தாருகாவனேஸ்வரர் ஆலயத்தில் புனருத்தாரண வேலைகள் பூர்த்தியாகிக் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அச்சமயம்தான் இவரும், திரு.இராமநாதன் செட்டியார் அவர்களும் திருப்பராய்த்துறையில் சந்தித்தார்கள். அக்கோவிலின் முக்கிய பொறுப்பாளராக இருந்த கானாடுகாத்தான் திரு. அருணாச்சலம் செட்டியார் அவர்கள் ஸ்ரீமத் சித்பவானந்தருக்கு அறிமுகமானார்கள். திரு.இராமநாதன் செட்டியார் அவர்களும் திரு. அருணாச்சலம் செட்டியார் அவர்களும் சுவாமி சித்பவானந்தரைத் திருப்பராய்த்துறையிலேயே தங்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். சுவாமிஜியும் அதற்கு ஒப்புதல் தந்தார். சுவாமிஜி தங்குவதற்கு இடவசதியும் செய்து தந்தார்கள்.
நூல்கள் வாசித்தல், கடிதங்கள் எழுதுதல், ஆன்மீக விஷயங்களைப் பற்றி அன்பருடன் பேசுதல், சமுதாய முன்னேற்றத்திற்கான வழிமுறைகளைக் குறித்து அன்பர்களுடன் உரையாடுதல் போன்ற செயல்களை நாள்தோறும் திட்டமிட்டு குறித்த காலத்தில் செய்து வந்தார். ஸ்ரீமத் சித்பவானந்தர் கற்றறிந்த மேதை என்பதை மக்கள் விரைவில் அறிந்து கொண்டார்கள்.
நூற்றுக்கால் மண்டபம்
திருப்பராய்த்துறை ஆலயத்தின் நூற்றுக்கால் மண்டபத்தில் சிறுவர் சிறுமிகளுக்கு ஆரம்பப் பள்ளியை முதன்முதலில் தொடங்கினார். அக்காலத்தில் கிராம மக்கள் கல்வியின் அருமையப்பற்றி அறியாதிருந்தார்கள். எனவே சுற்றுப்புறங்களிலிருந்து மிகச் சிரமப்பட்டுப் பள்ளிக்கு சிறுவர், சிறுமிகளை அழைத்துவர வேண்டியிருந்தது. ஊருக்கு பக்கத்தில் மயான பூமியில் இரண்டு ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் தபோவனம் எழுப்ப வேண்டும் என்று ஸ்ரீமத் சித்பவானந்தர் திட்டமிட்டார். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அருளால் பெரிய சுவாமிஜி கொண்டு வந்த கால் ரூபாய் மூலதனத்தில் காவேரி நதியின் தென்கரையில் தாருகாவனம் என்று அழைக்கப்படுகின்ற ரிஷிகள் வாழ்ந்த இடத்தில் இப்பொழுது அமைந்துள்ள தபோவனம் உருவெடுக்க ஆரம்பித்தது.