டாக்டர். R.K. கந்தசுவாமி,
தபோவன பழைய மாணவர்,
மற்றும் தபோவன பொதுக்குழு உறுப்பினர்.
விடுதி எண்: 43(1950 – 51) கண்டிப்பு
ஒரு சமயம் விடுமுறையாதலால் மாணவர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் ஊருக்குச் சென்றுவிட்டார்கள். பல்லடம் செல்லும் மாணவர்களாகிய எங்கள் நால்வரை மட்டும், சுவாமிஜி இரண்டு, மூன்று நாட்களில் பல்லடம் வர இருப்பதால் அவருடன் செல்லலாம் என்று கூறி விடுதியிலேயே இருக்க வைத்துவிட்டார்கள். பிறகு அவர் தஞ்சாவூரில் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு வந்து நாங்கள் பல்லடம் செல்வதாக இருந்தது. இந்தச் சமயத்தில் பல்லடத்தில் இருந்து 19-ம் நம்பர் சாமிநாதனை அழைத்துச் செல்வதற்காக அவருடைய சித்தப்பா வந்திருந்தார். சுவாமிஜி தஞ்சாவூரிலிருந்து வர இரண்டு நாட்கள் ஆகும் என்பதால் Wardenஇடம் உத்தரவு பெற்று எங்களைத் திருச்சியில் சினிமாவுக்கு அழைத்துச் சென்றுவிட்டார். அந்த சமயத்தில் சுவாமிஜி தஞ்சாவூரிலிருந்து திடீரென்று ஒரு நாள் முன்னதாகவே தபோவனத்திற்குத் திரும்பி வந்துவிட்டார்கள். வந்தவுடன் Warden மூலம் நாங்கள் இல்லாதது தெரிந்து சினம் கொண்டார்கள். அடுத்த நாள் காலை பத்து மணிக்கு சிற்றுண்டி முடித்துவிட்ட நிலையில் எங்களை Prayer Hallக்கு அழைத்தார்கள். அங்கு சென்று பார்த்தால் சவுக்குக் குச்சிகள் நான்கு, பச்சை மரத்திலிருந்து ஒடித்துக் கொண்டு வரப்பட்டிருந்தது. பிறகு ஒரு பெஞ்சும் போடப்பட்டிருந்தது.
சிறிது நேரத்தில் சுவாமிஜி வந்தார்கள். “நீங்கள் கட்டுப்பாட்டை மீறி திருச்சி சென்றதற்காக, மிலிட்டரியில் தரப்படும் Benching என்ற தண்டனை தரப்படுகிறது என்று கூறி எங்கள் நால்வரையும் சட்டையைக் கழற்றிவிட்டு வெறும் Drawerஉடன் ஒவ்வொருவராக அந்த Bench மீது குப்புறப்படுக்கச் சொல்லி நால்வரில் மூத்தவரான சிவப்பிரகாசம் என்ற மாணவனுக்கு 12 அடியும், அடுத்து 9ஆம் எண் சாமிநாதனுக்கு 9 அடியும், எனக்கு, மணி என்பவனுக்கு 6 அடியும் சுவாமிஜியிடமிருந்து கிடைத்தன. முதுகும் கோடு போட்டது போல் வீங்கிவிட்டது. இது நடந்தது காலை 10.30 மணிக்கு. சிற்றுண்டி முடிந்த பிறகு நான் மட்டும் அழுதுகொண்டே இருந்தேன். பிறகு நால்வரும் பேசி வைத்து மதிய உணவு அருந்துவதில்லை என்று முடிவு செய்தோம். மதியம் உணவுக்கு சாதுக்கள், பிரம்மச்சாரிகள் எல்லோரும் உட்கார்ந்துவிட்டார்கள். உணவு பரிமாறிய பிறகு, பிரம்மார்ப்பணம் சொல்லும்பொழுதுதான் நாங்கள் சாப்பிட வராததைக் கவனித்தார்கள். உடனே வார்டனை கூப்பிட்டு எங்களை அழைத்து வருமாறு அனுப்பினார்கள். நாங்கள் பசிக்கவில்லை என்று சொல்லி வார்டனைத் திருப்பி அனுப்பிவிட்டோம். அடுத்து சுவாமிஜியே வந்தார்கள். “கந்தசாமி, நான் Dining Hall செல்லும் முன்பு அங்கே வந்திருக்க வேண்டும்”. என்று கோபமாகவும், கண்டிப்பாகவும் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்கள். நாங்கள் பயந்துபோய் ஓட்டம் ஓட்டமாக ஓடிப்போய் அமர்ந்து கொண்டோம். அது வரை யாருமே சாப்பிடவில்லை. பிறகுதான் பிரம்மார்ப்பணம் சொல்லி சாப்பிட ஆரம்பித்தோம். கண்டிப்பு, ஒழுக்கம் இரண்டுக்கும் இந்நிகழ்ச்சி உதாரணமாக அமைந்தது. இது மாணவப் பருவத்தில் நடந்தது.
தாய் அன்பு
அடுத்த நிகழ்ச்சி 1964ல் என் திருமணத்திற்குப் பின் சுவாமிஜியிடம் ஆசி பெற திருப்பராய்த்துறைக்கு சென்றபொழுது ஏற்பட்ட அனுபவம். Busல் காலை 9.30 மணிக்கு திருப்பூரிலிருந்து விடுதியை அடைந்து அன்றைய சிற்றுண்டியாகிய இட்லி, மால்ட் முடித்துவிட்டு, சுவாமிஜி அறைக்குச் சென்றோம். எங்களைப் பார்த்து சுவாமிஜி மிகவும் சந்தோஷப்பட்டார். ஆசி வழங்கிய பின் நலம் விசாரித்தார். பின்பு என்னிடம், “உன் சக தர்மணியைக் கூட்டிச் சென்று நீ விளையாடித் திரிந்த இடத்தையெல்லாம் சுற்றிக் காண்பித்துவிட்டு ஆற்றில் குளித்துவிட்டு மதியம் உணவு அருந்த வந்துவிடு” என்று கூறி அனுப்பிவிட்டார்கள். நாங்களும் பள்ளியைச் சுற்றிப்பார்த்துவிட்டு, ஆற்றிலும் குளித்து, கோவிலுக்கும் சென்று தரிசித்துவிட்டுத் திரும்பினோம். மதியம் உணவு முடித்து 2 மணிக்கு சுவாமிஜியிடம் விடைபெறச் சென்றோம். சுவாமிஜி “அதற்குள் என்ன அவசரம், உனக்குப் பொங்கல் பிடிக்கும் என்று நாளை காலை பொங்கல் செய்யச் சொல்லி இருக்கிறேன். இரவு தங்குவதற்கு ஆசிரியர் குடியிருப்பில் ஒரு வீடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நாளை போகலாம் என்று கண்டிப்பாகவும், பாசத்துடனும் கூற இரவு தங்கி, காலை உணவு முடித்துவிட்டே ஊருக்குத் திரும்பினோம். தாய்வீடு சென்று திரும்பிய உணர்வு ஏற்பட்டது. தாய் அன்பிற்கு இதைவிட வேறு உதாரணம் ஏதும் தேவையில்லை என்றே தோன்றிற்று.
No comments:
Post a Comment