Friday, October 12, 2012

*Sister Niveditha's Birthday Article



நிகரில்லா நிவேதிதாஇரு புத்தகங்கள்

ந்த பெண்மணி வெளிநாட்டு பெண்மணி. ஆனால் இந்த தேசத்துக்காகவே வாழ்ந்தார். இந்த நாட்டுக்காக இந்நாட்டு மக்களுக்காக அவர்களில் ஒருவராக வாழ்ந்து தன்னைத்தானே அணு அணுவாக அவர்களுக்காக சமர்ப்பித்தார். ஏழை எளிய மக்கள் வாழும் குப்பங்களில் சேரிகளில் இறங்கி சென்று வேலை செய்தார். சாதாரண காலங்களில் மட்டுமல்ல பெரிய நோய் அந்த மாநகரம் முழுவதும் பரவிக் கொண்டிருந்த காலத்தில். அவர் யார்?

இந்த கேள்வியை கேளுங்கள். எந்த இந்து குழந்தையும் உடனடியாக இதற்கு பதிலளிக்கும்: அன்னை தெரெசா!

ஆனால் தெரசா செய்தசேவையின் பின்னால் துல்லியமான பொருளாதார கணக்குகள் இருந்தன. மேற்கத்திய நாடுகளின் மத மற்றும் பண்பாட்டு மேலாண்மையை தூக்கிப் பிடிக்கும் பதாகை தாங்கியாக தெரசாவை முன்னாள் காலனிய சக்திகளும் மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளும் முன்வைத்தன. மனிதர்களை குறித்து கவலைப்படாத, மனிதர்களை இழிவு செய்கிற இந்திய பண்பாட்டினால் அவலமடைந்தவர்களுக்கு மேற்கத்திய காருண்யத்தின் சரணாலயமாக தெரசா உலக ஊடகங்களில் காட்டப்பட்டார். தெரசா ஆற்றியது சேவை அல்ல; மேற்கத்திய பண்பாட்டு மத மேலாண்மையை மூன்றாம் உலகநாடுகள் ஏற்பதற்கான பிரச்சார முதலீடு.

ஆனால், மேற்கத்திய நாட்டிலிருந்து எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்திய பண்பாட்டின் மீதும் இந்திய மக்களின் முன்னேற்றத்தின் மீதும் முழு அக்கறையும் அன்பும் மதிப்பும் கொண்டு வாழ்நாள் முழுக்க தன்னைத்தானே தேய்த்து அழித்து சமர்ப்பித்த ஒருவர் உண்டு. அவரது சமாதி தினத்தின் நூற்றாண்டு விழா இவ்வருடம். அவர்தான் மார்கெரட் எலிஸபெத் நோபிள் என்கிற சகோதரி நிவேதிதை. பாரதத்துக்கு சமர்ப்பணமாக மேற்கு அளித்த சகோதரி அவர். உண்மையாக சமுதாயத்துக்கு தொண்டு செய்த அவரை, வழக்கம் போலவே போலி பகட்டுகளை மட்டுமே மதிக்கும் சமுதாயமாக மாறிவிட்ட நாம், மறந்துவிட்டோம்.

சகோதரி நிவேதிதை
 இந்நிலையில்தான் இரு நூல்கள் அவரது சமாதியின் நூற்றாண்டு விழாவின் போது வெளியிடப்பட்டுள்ளன.

யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா திருநெல்வேலி ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி முதல்வராக இருபது ஆண்டுகள் சேவை செய்தவர். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அவரது ஆராய்ச்சிசகோதரி நிவேதிதையின் எழுத்துக்களில் பாரத தரிசனமும் பாரத விரோத போக்கின் மீது எதிர் தாக்குதலும்என்பதாகும். அவருக்கு தீட்சை அளித்த சுவாமி சித்பவானந்தர் அவருக்கு அளித்த கட்டளைசகோதரி நிவேதிதையின் பெருமையை உலகறியச் செய்என்பதாகும். அவ்விதத்தில் வெளியாகி உள்ளவை இந்த இரு நூல்களும்.

‘வினா விடைகளில் ஒரு வியத்தகு வாழ்வுஇந்நூல் கேள்வி பதில்களாக சகோதரி நிவேதிதையின் வாழ்க்கையை விவரிக்கிறது. உதாரணமாக பிளேக் நோய் கல்கத்தாவை பீடித்து வாட்டிய காலகட்டத்தில் சகோதரி நிவேதிதையின் சேவையை இந்நூல் இப்படி விளக்குகிறது:

கேள்வி 129: சகோதரி நிவேதிதை பிளேக் நோய் நிவாரணப் பணியில் என்னென்ன செய்தார்?

நிவாரணக்குழு உறுப்பினர்களான ராமகிருஷ்ண மடத்துத் துறவியருடன் சேர்ந்து நிவாரணப் பணி எப்படி அமைய வேண்டும் என்று திட்டமிட்டார். அதைச் செயல்படுத்துவதில் குழு உறுப்பினர்களுக்கு உறுதுணையாக இருந்தார். நிவாரணப் பணிக்காக அரசு அதிகாரிகளை சந்தித்தார். திட்டமிடுதல் மட்டுமின்றி களத்திலும் இறங்கிப் பணி செய்து கொண்டிருந்தார். தொண்டர்களோடு இணைந்து தானும் வேலைகள் அனைத்தையும் செய்தார். அதிகாலையிலிருந்து நள்ளிரவு வரை ஓய்வின்றி அவர் உழைத்தார். பிளேக் நோயாளிகளை தானே நேரடியாக கவனித்து சிகிச்சை செய்தார். நிவாரணப் பணிக்கு தேவையான நிதி திரட்டினார். அதன் பொருட்டு வேண்டுகோள்கள் எழுதி பத்திரிகைகளில் வெளியிட்டார். மாணவர்களையும் பொதுமக்களையும் சந்தித்தார். பிளேக் நோய் நிவாரணம் குறித்தும் சுகாதரம் குறித்தும் மக்களுக்கு எடுத்துரைத்தார். ஒரு பகுதியில் தெருவை சுத்தம் செய்ய எவரும் வராத போது தாமே துடப்பத்தை எடுத்துக் கொண்டு சென்று சுத்தம் செய்யலானார். அவர் படைத்திருந்த ஆற்றல்களையெல்லாம் பொது நலத்திற்கு பயன்படுத்துவதற்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. மரணத்தோடு போர் புரிவது போலிருந்தது அவர் சலிக்காமல் செய்த சேவை. (பக்.22)

வெறும் காய்கறிகளையும் பாலையும் மட்டும் உண்டு வாழ்ந்தபடி பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேவையாற்றி வந்த சகோதரி ஒரு கட்டத்தில் அந்த பாலையும் மக்களுக்காக தியாகம் செய்தார். அந்த ஆச்சார வாதம் நிறைந்த எதிர்ப்பு சூழலில் பெண் குழந்தைகளுக்கு என கல்விச் சாலை தொடங்கினார். தாய்வழிக் கல்வி புகட்டினார்.

இக்கட்டத்தில் விவேகானந்தரிடம் ஆலோசனை கேட்கிறார் நிவேதிதை. அப்போது விவேகானந்தர் அளித்த அறிவுரை தனி கேள்வி-பதிலாக முன்வைக்கப்படுகிறது: “அதை (ஆலோசனையை) நீ பள்ளிக் குழந்தைகளிடமிருந்தே கற்றுக் கொள்வாய்என்றார் சுவாமி விவேகானந்தர். (பக்.23)

பன்முக மேதமை கொண்டவராக இருந்த நிவேதிதை அறிவியலில் இந்தியர்களின் பங்களிப்பு இனிவரும் நாட்களில் பண்பாட்டு மேன்மையையும் விடுதலையையும் வலியுறுத்தவும் சமூக மேம்பாட்டுக்கும் முக்கியமானது என அறிந்து கொண்டார். எனவே ஜகதீஷ் சந்திர போஸுக்கு அவர் மிகவும் உதவி செய்தார். அதே காலகட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் அவருக்கு செய்த பல இடைஞ்சல்களை சகோதரி எதிர்த்து போராடினார். கொடி பிடிக்கவில்லை. கோஷங்கள் போடவில்லை. அமைதியாக மாற்று வழிகளில் உலக அறிவியலாளர்களையும் இதர இந்திய நேசிப்பாளர்களையும் தொடர்பு கொண்டு அவர் அறிவியல் கண்டுபிடிப்புகள் உலக பிரசித்தி அடைய உதவி செய்தார். (பக்.25) அன்று 1901 ஆம் ஆண்டு சகோதரி நிவேதிதையின் வாழ்க்கையில் முக்கியமானது. ஏன்? அந்த ஆண்டில்தான் சகோதரி நிவேதிதை பாரதம் விடுதலை பெற்றால் ஒழிய முழுமையான மேம்பாடு பாரதத்துக்கு கிடைக்காது என முடிவுக்கு வந்தார். (பக்.31)

237 கேள்வி பதில்கள் மூலம் சகோதரி நிவேதிதையின் வாழ்க்கையை இந்த நூல் விளக்குகிறது.
முக்கியமான சில புகைப்படங்கள் உள்ளன. மாணவ மாணவிகள் சகோதரியின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள் அவரது முக்கியமான கருத்துக்கள் ஆகியவற்றை எளிதாக அறிந்து கொள்ளலாம்.

சகோதரி நிவேதிதையின் சமாதி தின நூற்றாண்டை ஒட்டி அதே ஆசிரியை எழுதியுள்ள மற்றொரு நூல் நிகரில்லா நிவேதிதை. வினாவிடை நூலில் கூறப்பட்டுள்ள விசயங்களின் விரிவான சித்திரத்தை இந்த நூலில் நாம் காண்கிறோம்.

நிகரில்லா நிவேதிதா நூல் ஆறு கட்டுரைகள் கொண்டு விளங்குகிறது. ஒவ்வொன்றும் சகோதரி நிவேதிதையின் ஒவ்வொரு பரிமாணத்தை ஆழமாக விளக்குகிறது. முதல் கட்டுரைஉன்னத குருவின் உத்தம சிஷ்யைஇக்கட்டுரை சுவாமி விவேகானந்தர் எவ்விதமாக சகோதரி நிவேதிதையை மெய்ஞான பயிற்சிகள் மூலம் பாரத தேச சேவைக்கு பக்குவப்படுத்தினார் என்பதை விளக்குகிறது. அதில் சுவாமிஜி கடுமையாக இருந்தார். உதாரணமாக, சகோதரி நிவேதிதைபொதுவாக உலக மக்கள் சுயநலம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் ஆங்கிலேயர் அவ்வாறல்லஎன கூறினார். ‘பொதுவாக உலக மக்கள் குணத்திலிருந்து ஒரு இனத்தை மட்டும் மேம்படுத்தி சொல்லும் தேசபக்தி பாவமே தவிர வேறெதுவுமில்லைஎன கடுமையாக கூறினார் சுவாமி விவேகானந்தர். (பக்.20)

அடுத்த கட்டுரை சகோதரி நிவேதிதையும் பாரத பண்பாடும். பாரத பண்பாட்டின் ஒவ்வொரு கூறுக்கும் சகோதரி நிவேதிதை அளித்த கூர்மையான பார்வையை கண்டு வியக்காமல் இருக்க இயலவில்லை. குடும்ப அமைப்பாகட்டும், தினசரி நடைமுறை வாழ்க்கையாகட்டும், ஹிந்துக்களின் சமயச் சடங்குகள். கோவில் திருவிழாக்கள், தேசிய இதிகாசங்கள் என தொடங்கி வேப்பமர வழிபாடு வரை அனைத்தையும் சகோதரி நிவேதிதை ஆழமாக கவனித்து விரிவாக பதிவு செய்துள்ளது மட்டுமல்ல ஒரு அன்னியராக வெளியிலிருந்து மதிப்பிடாமல் ஒரு ஹிந்துவாக உள்ளே வாழ்ந்து உணர்ந்த தன்மையை இக்கட்டுரை நமக்கு அளிக்கிறது. இது வெறும் பண்பாட்டு மேன்மை மட்டும் சார்ந்த விசயமல்ல. ஒரு ஹிந்து சமூகவியல்உள்ளார்ந்த பார்வை நமக்கு இன்று தேவைப்படுகிறது. அதற்கான தொடக்கப்புள்ளியை சகோதரி நிவேதிதை அளித்துள்ளார். அதை நாம் பயன்படுத்தி வளர்த்தெடுத்தோமா என்கிற சங்கடமான கேள்வியையும் அது நம்முள் எழுப்புகிறது.

அடுத்தது சகோதரி நிவேதிதையும் சேவையும். எப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்த பகுதிகளில் உள்ள சாக்கடைகளை பிளேக் காலங்களில் நிவேதிதாவும் அவருடன் பணியாற்றிய இளைஞர்களும் களமிறங்கி சுத்தப்படுத்தினார்கள், குடிசை குடிசையாக சென்று பணியாற்றினர், எப்படி நிவேதிதா தானே களமிறங்கி பணியாற்றியதன் மூலம் முன்னுதாரணமாக விளங்கினார் என்பதையெல்லாம் இப்பகுதி தெளிவாக விளக்குகிறது. (நிகரில்லா நிவேதிதா பக். 71-2) அத்துடன் இது ஏதோ ஒரு ஆதாய அறுவடைக்காக செய்யப்படும் முதலீடு அல்ல மாறாக சேவைக்காகவே செய்யப்படும் சேவை. சேவையே வழிபாடாக அதுவே இலட்சியமாக நடத்தப்படும் சேவை. இச்சேவையின் தத்துவார்த்த உள்ளீடு ஸ்ரீ ராமகிருஷ்ணவிவேகானந்த சேவை தத்துவம் ஆகியவையும் விளக்கப்படுகின்றன.

சகோதரி நிவேதிதை அடிப்படையில் ஒரு கல்வியாளர். குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதில் ஆர்வம் கொண்டவர். அடித்தட்டு மக்களுக்கு கல்வி அளிப்பதே உண்மையான விடுதலையின் முதல் படியும் முக்கிய படியும் ஆகும் என்பதை உணர்ந்தவர். இங்கிலாந்தில் கல்வியாளராகவே அவர் தம் வாழ்க்கையைத் தொடங்கினார். வசதியான கல்விசாலை ஒன்றில் கிடைத்த வேலையை துறந்து நிலக்கரி தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி சேவை புரிய சென்றவர் அவர். அறிவியல் பூர்வமாகவும் நடைமுறைப்பூர்வமாகவும் கல்வி அமையவேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.

குழந்தை எந்த பிராணியைப் பார்த்தும் அருவருப்பு அடைவதோ அச்சம் கொள்வதோ கூடாது. அதன் பொருட்டு இந்த ஆரம்பக் காலகட்டத்திலிருந்தே சிலந்தி, கொசு, தட்டான், வண்ணத்துப்பூச்சி நத்தை புழுக்கள் மரவட்டை ஆகிய ஜந்துக்களை குழந்தை தெரிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும். உயிரினங்களைப் பார்த்து அவை நமக்கு தோழர்கள் என்ற உணர்வு குழந்தைக்கு ஏற்பட வேண்டும் என்கிறார் நிவேதிதா. (பக்.93)

100 ஆண்டுகளுக்கு முன்னர் நிவேதிதா கூறிய இந்த கல்வியியல் கோட்பாடு இன்னும் நம் உயிரியல் கல்வியில் எட்டப்படாமலே உள்ளது என்பது எத்தனை வேதனையான விசயம்? அதே நேரத்தில் உயிரியலையும் சூழலியலையும் முழுமையாக கற்க இதுவே மிகவும் முதன்மையான வழிமுறை என்பதை இன்று சர்வதேச அளவில் உயிரியல் கல்வியாளர்கள் கூறி வருகிறார்கள். மாணவர்கள் கேள்வி கேட்பதை ஊக்குவிக்கும் கல்விமுறையை சகோதரி வலியுறுத்தினார். குழந்தையின் ஒரு கேள்விக்கு திருப்திகரமான பதிலை அளிக்க ஐம்பது கேள்விகளுக்கு ஆசிரியருக்கு பதில் தெரிந்திருக்க வேண்டும் என்கிறார் அவர். ‘சகோதரி நிவேதிதையின் கல்விக்கொள்கைகள் என ஒரு கட்டுரையும் சகோதரி நிவேதிதை ஆற்றிய கல்விப்பணி என ஒரு கட்டுரையும் உள்ளன. இவை கல்வியில் அதன் தரத்தில் அதன் முக்கியத்துவத்தில் சகோதரி நிவேதிதை காட்டிய ஈடுபாட்டை விளக்குகின்றன. அத்துடன் பெண் கல்விக்காக எத்தனையோ சவால்களையும் எதிர்ப்புகளையும் மீறி சகோதரி நிவேதிதை உழைத்தார் என்பதையும் இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இறுதி கட்டுரை சகோதரி நிவேதிதையின் தேசியம் குறித்ததாகும். பாரதத்தின் தேசிய கொடியை முதலில் உருவாக்கியவர் சகோதரியே. ததீசி முனிவரின் முதுகெலும்பால் உருவான வஜ்ஜிரம் வலிமை மற்றும் தன்னிகரற்ற தியாகத்தின் பண்பாட்டு-தொன்ம சின்னமாகும். அதையே இந்த தேசத்தின் சின்னமாக அவர் பொறித்திருந்தார். மகாபாரதத்தில் தாய் காந்தாரி கூறும் வார்த்தைகளானஎங்கு அறமோ அங்கே வெற்றி’ (யதோ தர்மஸ் ததோ ஜய:) எனும் வார்த்தைகள் தேச இலச்சினை வாக்கியமாக சகோதரி கருதினார். தேசியம் என்பதை குறுகிய இனவாதமாக சகோதரி முன்வைக்கவில்லை.

  •         மகோன்னதமான தொன்மை வாய்ந்த பாரத பண்பாடு
  •       அதன் பன்மையில் ஒருமை காணும் திருஷ்டி
  •      உலககுருவாக விளங்கும் திறம் கொண்டிருப்பினும் உலக அரங்கில் இன்று பாரதம் அடைந்துள்ள வீழ்ச்சி
  •     அதிலிருந்து எப்படி மீண்டெழுவது
இந்த அனைத்துத் தன்மைகளையும் கணக்கில் கொண்டு அறிவார்ந்த தேசிய கருத்தாக்கங்களை அவர் முன்வைத்தார்.
           
உதாரணமாக காந்தார கலை என்பது மேற்கத்திய தாக்கத்தால் ஏற்பட்டது; அது மட்டுமல்ல இந்திய கலை வளர்ச்சியே மேற்கத்திய கலை தாக்கத்தால் ஏற்பட்ட ஒன்றுதான் என ஒரு மேற்கத்தியமேதாவிகூறினார். அதை மறுத்து, காந்தார கலையில் உள்ள மேற்கத்திய தாக்கமே அதன் பலவீனம் என்றும், காந்தார கலைக்கு முந்தைய மகத கலையின் இயல்பான சுதேசிய வளர்ச்சியை அஜந்தா குகைகளில் காண முடிகிறது என்பதையும், அது அந்த காலகட்டத்தின் மேற்கத்திய கலை வளர்ச்சியைக் காட்டிலும் மேன்மையானதாக இருப்பதையும் அசைக்கமுடியாத ஆதாரங்களுடன் நிவேதிதை முன்வைத்தார்.
           
இந்த இரு நூல்களும் சகோதரி நிவேதிதையின் சமாதி நூற்றாண்டுக்கு தமிழ் இந்துக்கள் அவர் நினைவுக்கு அளித்துள்ள அர்ப்பணமாகும். தமிழ்நாட்டில் பெண் விடுதலையை பரப்பிய பொது உணர்வில் பெரிய அளவில் கொண்டு சென்றவர் பாரதி. அதற்கு பாரதிக்கு குருவாக அமைந்தவர் நிவேதிதை. எனவே அந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் துறவி ஒருவர் இந்த இருநூல்களையும் எழுதியிருப்பது சரியான நன்றிக்கடனே. தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திடமும் இந்த இருநூல்களையும் கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் வரலாற்றுக் கடமையாகும்.

நிகரில்லா நிவேதிதா
(
விலை ரூ 45/-)
வினா-விடையில் ஒரு வியத்தகு வாழ்வு
(
விலை ரூ 40/-)
ஆசிரியை: பூஜனீய யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா 

நூல் வெளியிடுவோர்:
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவிகா சமிதிலஷ்மி கிருபா,  
.ஜி.1/1 ஸ்டிரிங்கர்ஸ் அபார்ட்மெண்ட்ஸ் 
ஸ்ட்ரிங்கர்ஸ் சாலை,  
வேப்பேரி,  
சென்னை-3.  
தொலைபேசி: 9444915973


நூல் கிடைக்கும் இடம்:
ஸ்ரீ சாரதா ஆஸ்ரமம்,
34, H I G வடக்கு பிரதான சாலை,
தாமரை நகர்,
திருவண்ணாமலை – 606 001. 

[அரவிந்தன் நீலகண்டன் அவர்களால் எழுதப்பட்டு www.tamilhindu.com இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட கட்டுரை சகோதரி நிவேதிதாவின் நினைவு தினமான இன்று(13.10.2012, சனிக்கிழமை) உங்கள் பார்வைக்கு....]


No comments:

Post a Comment