Wednesday, February 27, 2013
Sunday, February 24, 2013
Saturday, February 23, 2013
Thursday, February 21, 2013
*இரங்கல்
பழைய மாணவர் பி.ஆர். சரவணன் விடுதி எண் 9 (1982-83) அவர்களின் தந்தையார் 19.02.2013 அன்று சிதம்பரத்தில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவருடைய ஆன்மா சாந்தியடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.
-பழைய மாணவர்கள் சங்கம்,
திருப்பராய்த்துறை.
Sunday, February 17, 2013
Friday, February 15, 2013
Thursday, February 14, 2013
*இரங்கல்
ஈரோடைச் சேர்ந்த மருத்துவர் Ortho Specalist கே.
அத்தியன்னன் அவர்களின் தந்தையார் இன்று(14.02.2013) இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த
வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது ஆன்மா சாந்தியடைய நாம்
பிரார்த்திப்போம்.
-பழைய மாணவர்கள் சங்கம்,
திருப்பராய்த்துறை.
திருப்பராய்த்துறை.
Wednesday, February 13, 2013
Tuesday, February 12, 2013
*விவேகானந்தம் 150
http://vivekanandam150.com என்ற இணையதளத்தைப் பற்றி
அறிந்திருக்கிறீர்களா? அவர்கள் இந்த இணையதளம் துவக்கியதின் நோக்கம் என்ன? விடை
இதோ...
“பாரதத்தின் புத்தெழுச்சிக்கு வித்திட்டவர்களுள் சுவாமி
விவேகானந்தருக்கு பிரதான இடம் உண்டு. நாட்டின் சுதந்திரப் போராட்ட காலத்தில் பல தலைவர்களை
உருவாக்கிய வீர உரைகளுக்கு உரித்தானவர் சுவாமி விவேகானந்தர். ஹிந்து மதத்தின் கசடுகளை
நீக்கி, அதை புனருத்தாரணம் செய்வதைத் துவக்கி வைத்தவரும் அவரே. அவரது 150-வது பிறந்த
தின ஆண்டை (2013-2014) நாடு உற்சாகத்துடன் கொண்டாடுகிறது. இதையொட்டி, சுவாமிஜியின்
போதனைகளை இளைய தலைமுறைக்கு கொண்டுசெல்லவே, தேசிய சிந்தனை கழகம் இந்த இணையதளத்தை துவக்கியுள்ளது.
சுவாமி விவேகானந்தரின் பன்முகப் பரிமாணங்களையும் போதனைகளையும் வெளிப்படுத்துவதாக இந்த
இணையதளம் திகழும்.”
http://vivekanandam150.com இணையதளத்தில் கட்டுரைகள், கவிதைகள்
இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. நம் பெரியசாமி சுவாமி சித்பவானந்தர் அவர்கள் இயற்றிய
“விவேகானந்தர் ஜீவிதம்” நூலின் சுருக்கத்தை நமது இதே இணையதளம் rkthapovanam.blogspot.inல் 2012ஆம் ஆண்டு விவேகானந்தரின்
மகாசமாதி தினத்தையொட்டி பதிந்திருந்தோம். அதன் முதல் பாகத்தை . http://vivekanandam150.com/?p=1360
சென்று பார்க்கவும்.
*இரங்கல்
மதுரையைச் சேர்ந்த நமது பழைய மாணவர்களில் ஒருவராகிய கே. ராமரத்னம், விடுதி எண்
– 183, 1956-1963 வரை தபோவனத்தில் பயின்றவர் 09.02.2013 அன்று இறைவனடி சேர்ந்தார்
என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது ஆன்மா சாந்தியடைய
நாம் பிரார்த்திப்போம்.
Monday, February 4, 2013
*சம்பிரதியாரின் பிழை
சரித்திர வரலாற்றின்படி விஜயரங்க சொக்கநாத நாயக்கர் திருச்சிராப்பள்ளியில்
அரசாண்ட காலம் 1704 முதல் கி.பி. 1731 வரையிலாகும். அரசருக்கு மகப்பேறு ஏதும்
இல்லை. ஆதலால் அரசர் ஆணைப்படி அவருடைய ராணி மீனாக்ஷி அம்மை நாட்டின் ஆட்சி முறையை மேற்கொண்டாள்.
தகுதி வாய்ந்த சம்பிரதியும் ஏனைய மந்திரி பிரதானிகளும் வாய்ந்திருந்ததினால் சிரமம்
ஏதுமின்றி ராணி மீனாக்ஷி கி.பி. 1731 முதல் செங்கோல் செலுத்தி வந்தாள்.
அக்காலத்தில் அரசாங்க சம்பந்தமான அரிய பெரிய குறிப்புக்கள் பனையோலையில் பதிவு
செய்து வைக்கப்பட்டிருந்தன. ஒரு நாள் சம்பிரதியானவர் அத்தகைய அரிய அரசாங்கப்
பத்திரம் ஒன்றை ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்தபொழுது அதைத் தம்முடைய இரண்டு
கரங்களாலும் கசக்கித் துகள்துகள்களாகப் பாழ்படுத்தினார். அருகில் இருந்த ஏனைய
உத்தியோகஸ்தர்கள் இச்செயலைக் குறித்துத் தடுமாற்றமடைந்துத் தங்கள் வியப்பைத்
தெரிவித்தனர்.
சம்பிரதியாருக்கு இப்பொழுது தாம் செய்த பிழையைப் பற்றிய உணர்வு ஒருவாறு
மனத்தில் உதயமாயிற்று. அவர் இயம்பியதாவது: “திருவானைக்கா அம்பிகை
அகிலாண்டேஸ்வரியின் துகிலில் வீழ்ந்து பற்றிய கற்பூரத் தீயைக் கசக்கி அணைக்க
முயன்றேன்; என்னையறியது என் கையிலிருந்த இந்த அரிய அரசாங்கப்பத்திரம்
பாழ்படுத்தப்பட்டது. அதைக் குறித்து நான் மிகவும் வருந்துகிறேன்”.
சிறிது நேரத்திற்குள் திருவானைக்காவிலிருந்து ஆங்கு நிகழ்ந்த சிறிய விபத்தைக்
குறித்த செய்தி அரண்மனைக்கு வந்தது. அர்ச்சகர் கற்பூர தீபாராதனை பண்ணிக்கொண்டிருந்தபொழுது
அந்த நெருப்புத் தவறி அம்பிகையின் ஆடையின்மீது வீழ்ந்தது. ஆடையும் தீப்பற்றிக்
கொண்டது. சிரமப்பட்டு அது அணைக்கப்பட்டது. இதுவே அங்கிருந்து வந்த செய்தியாகும்.
சம்பிரதியின் செயலும், இந்த நிகழ்ச்சியும் ஒன்றை ஒன்று ஒத்து இருந்தன. இதை
முன்னிட்டு அரண்மனையில் உத்தியோகஸ்தர்களிடத்திலும் அரசியாரிடத்திலும் பதைபதைப்பும்
வியப்பும் எழலாயின. இந்த வியப்புக்குரிய செயலைச் செய்த சம்பிரதியாரின் பெயர்
‘தாயுமானவன்’.
ராணி மீனாக்ஷி சம்பிரதியார் தாயுமானபிள்ளையைத் தகுந்த ஆசனத்தில் அமரச்செய்து
அவருடைய பக்தியையும், பரநாட்டத்தையும் பெரிதும் பாராட்டினார். “தங்கள் ஆணைப்படி
நாங்கள் அனைவரும் நடந்துகொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்” என்று ராணியார்
விண்ணப்பித்தார்.
“தாயே! இனி, என் மனம் உலக வியவகாரங்களில் செல்லாது. நான் முற்றிலும் பரத்துக்கு உரியவனாகும் காலம்
வந்துள்ளது. என் போக்கில் போக எனக்கு அனுமதி கொடுப்பதே இவ்வரசாங்கம் எனக்குச்
செய்யும் பேருபகாரமாகும்” என்று சம்பிரதியார் தம் சித்தத்தில் இருந்ததைத்
தெரிவித்தார். அவர் விருப்பப்படி வெளியேற அவருக்கு அரசாங்கத்தில் அனுமதி அரை
மனதோடு வாய்ப்பதாயிற்று. இதுகாறும் நாடாளும் வேந்தன் ஸ்தானத்தில் இருந்த
தாயுமானவர் இப்பொழுது துறவி வேந்தராக வெளியேறினார். இதனோடு அவருடைய உலக வாழ்க்கை
சம்பந்தமான பிராரப்த கர்மமும் பூர்த்தியாயிற்று.
தென் திசையில் இவர் செய்த தீர்த்த யாத்திரையின் முக்கிய நோக்கம்
இராமேஸ்வரத்தைச் சென்று தரிசித்தல் பொருட்டேயாம். பிறகு இராமநாதபுரத்துக்குத்
திரும்பி வந்து தம்முடைய வாழ்க்கையின் இறுதிப் பகுதியைப் பரநிஷ்டையில் கழித்து
வந்தது தாயுமான சுவாமிகளின் வாழ்க்கையில் நிகழ்ந்த இறுதிச் செயலாகும். பரபோதத்தில்
மூழ்கியவராக அவர் இவ்வூரில் யாக்கையை ஒதுக்கித் தள்ளிவிட்டுப் பரத்தினில் இரண்டறக்
கலந்தார். சுபகிருது வருஷம் தை மாதம் விசாக நட்சத்திரத்தன்று ஸ்ரீ தாயுமான
சுவாமிகள் மகாசமாதி அடைந்தார்.
அவருடைய திருமேனி இராமநாதபுரத்துக்கு வெளிப்பட்டணமாக இருக்கும் பகுதியான
லக்ஷ்மிபுரம் என்னும் ஊரில் சமாதி வைத்துத் திருக்கோயில் எழுப்பப்
பெற்றிருக்கிறது.
ஸ்ரீ தாயுமான சுவாமிகள் |
தமிழ்நாடு ஈன்றெடுத்தத் தலைசிறந்த தவப்புதல்வர்களுள் ஸ்ரீ தாயுமான சுவாமிகளும்
ஒருவர். அருள்தாகம் வாய்த்தவர்களுக்கு இவர் அரியதொரு முன்மாதிரி
மூர்த்தியாயிருக்கிறார். அந்த மூர்த்தியின் குருபூஜை தை மாதம் விசாக நட்சத்திரமான இன்று(4.2.2013,
திங்கள்) ஸ்ரீ தாயுமான ஸ்வாமி தபோவனத்தில் நடைபெறுகிறது.
[இந்த கட்டுரை ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் இயற்றிய ‘ஸ்ரீ தாயுமான
சுவாமிகளின் வரலாறு’ புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.]
Saturday, February 2, 2013
*வீரனது பாங்கு!
சென்ற நூற்றாண்டில் நிகழப்பெற்ற ஒரு காட்சி. இந்தியாவின் பெருநகரில் ஒரு
பள்ளிக்கூடம். அங்கு ஒரு வகுப்பில் பாடம் நடந்து கொண்டிருந்தது. ஆசிரியர் தமது
முழுக் கவனத்தையும், போதனையில் செலுத்தி மிகுந்த ஆர்வத்துடன் பாடம் சொல்லிக்
கொடுத்து வந்தார். மாணவர் சிலர் பாடத்தில் சிரத்தை கொள்ளாது தமக்குள் ஏதோ பேசிக்
கொண்டிருந்தனர். இந்த ஒழுங்கீனத்தைக் கண்ட ஆசிரியர் சினமுற்றவராய் அம்மாணவர்களைச்
சுட்டிக்காட்டி, ‘நான் என்ன சொன்னேன் என்பதைக் கூறுவீர்களாக’ என்று ஆக்ஞாபித்தார்.
குற்றம் செய்த மாணவர்கள் பதில் கூறத் தெரியாது திகைத்து நின்றனர். ஏனெனில் அவர்கள்
பாடத்தைக் கவனித்து வரவில்லை. உபாத்தியாயர் கூறியது அவர்கள் காதில் விழவில்லை.
மனதிற்குள் புகவில்லை. இவ்வாறு குற்றம் புரிந்த மாணவருள் ஒருவன் அதிமேதாவி, மகா
புத்திசாலி, வலிவு நிறைந்த உடலும், புத்தியின் கலை மிகுந்த முகமும் கொண்டவன்.
கண்டோர் மனத்தைக் கொள்ளை கொள்ளும் வசீகர சக்தியுடைய சிறுவன். அவனை அக்குற்றக்
குழுவினில் கண்ட ஆசிரியரின் மனம் நொந்தது. ஆனாலும் பிழைக்கேற்ற பிராயச்சித்தத்தை
அவனும் ஏற்றுத்தானே ஆகவேண்டும்! ‘உன்னாலும் பதில் கூற முடியாதோ?’ என்றார்
ஆசிரியர், அவனைப் பார்த்து. அந்த மாணவனோ திகைக்கவில்லை. வாயைத் திறந்து கணீர் என்ற
குரலில் வெகு தெளிவாக ஆசிரியர் சிறிது முன்னர் சொல்லி வந்த விஷயங்கள் யாவையும்
அப்படியே ஒப்பித்துவிட்டான்.
மாணவர்களுக்கு இது பெருவிந்தையாக இருந்தது. ஏனெனில் அந்த கும்பலில் அதிகமாகப்
பேசிக்கொண்டிருந்தவன் அந்த வசீகர சக்தியுடைய சிறுவன்தான். ஆனால் அவன் ஓர் அதிசயப்
பிறவி. அவன் இளைஞன் உடல் போர்த்திய ஒரு மகாபுருஷன். இதை யாரும் அப்பொழுது அறியார்!
அந்தச் சிறுவனே அதைத் தெளிவாக அறியான். ஆனாலும் அவனுடைய மனம் ஒரே சமயத்தில் பல
விஷயங்களில் ஈடுபடக் கூடிய பேராற்றல் பெற்றிருந்தது. சாதாரண மனிதருடைய மனம் ஒரு
சமயத்தில் ஒரு காரியத்தைத்தான் செய்ய வல்லது. ஆனால் அவனுடைய வாய்
பேசிக்கொண்டிருந்தது; காது கேட்டுக்கொண்டும் இருந்தது.
ஆசிரியருக்கு எல்லாம் பெருவியப்பாக இருந்தது. அதிகமாகப் பேசியவன் வசீகரமான
மாணவனே என்று மற்ற மாணவர்கள் சாதித்தனர். அவனோ கேட்ட கேள்விக்கு விடை
கூறிவிட்டான். பதில் கூறாத மாணவர்களைத் தண்டிக்கும் முறையில் ஆசிரியர் அவர்களை
நிற்கும்படிப் பணித்தார். அவர்களுடன் அவனும் எழுந்து நின்றான். ‘நீதான் பதில்
கூறிவிட்டாயே. நீ நிற்க வேண்டாம்’ என்றார் ஆசிரியர். ‘மிகப் பேசியவன் நானே. ஆதலால்
நான் மற்றவர் போல நிற்கக் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்று கூறி அவனும் மற்றவர் போலவே
நின்று பிழையைக் கழித்தான்.
பிழை செய்வது மனித இயல்பு. ஆனால் குற்றத்தை மறைப்பது கோழையின் பாங்கு; அதை
ஏற்றுக்கொள்வது வீரனது பாங்கு.
மேலே குறிப்பிட்ட அந்த சிறுவன் பின்னாளில் உலகம் போற்றும் விவேகானந்த
சுவாமிகள் ஆனான். விவேகானந்தரிடமிருந்து வெளிப்போந்த ஆப்த வாக்கியம் ஒன்று இதோ
உள்ளது:
“யாவற்றிற்கும் மேலாகப் பலம் கொண்டவராக இருங்கள். ஆண்மை மிகுந்தவர்களாக
இருங்கள்! ஒருவன் துஷ்டனாக இருந்தாலும்கூட, அவன் ஆண்மை மிகுந்தவனாய், பலம்
பொருந்தியவனாய் உள்ளவரையில் நான் அவனைக் கௌரவிப்பேன். ஏனெனில் அவனுடைய பலமானது
என்றோ ஒரு நாள் அவனுடைய துஷ்டத்தனத்தை விட்டுவிடுமாறு செய்யும். சுயநல நோக்குடைய
கர்மங்கள் யாவையுமேகூட அவன் தியஜித்து விடுமாறும் கூடச் செய்யும்; இறுதியில்
சத்திய நிலைக்கு அவனை இட்டுச் செல்லவும் செய்யும்”.
சுவாமி விவேகானந்தர் |
இன்று(3.2.2013, ஞாயிறு) சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி தினம் ஆகும். இந்த
கட்டுரையானது ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் இயற்றிய ‘மாணவருக்கு ஒரு சொல்’
என்ற புத்தகத்திலிருந்து எடுத்து, சிறிது மாற்றம் செய்து பதியப்பட்டுள்ளது. சுவாமி விவேகானந்தர் சொன்ன கருத்துக்களை
அவருடைய ஜெயந்தியன்று மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக்கொள்ளலாம்.
Subscribe to:
Posts (Atom)