Sunday, September 11, 2011

*ஆசிர்வாத மகிமை

டாக்டர். திரு. பெ. சண்முகம்.
முன்னாள் மாணவர் மற்றும் தபோவன பொதுக்குழு உறுப்பினர்


நான் 1955 முதல் 1962 வரை தபோவனத்தில் படித்தேன். தபோவனத்தில் சேர்ந்த நாள் முதல் தபோவனத்திலிருந்து வெளியேறும் வரை நாம் இங்கு வந்து மாட்டிக்கொண்டோமே என்று வருந்திக்கொண்டுதான் இருந்தேன். அதன் விளைவாக தபோவன வாழ்க்கையை முடித்துக்கொண்டு சென்னையில் கல்லூரியில் சேர்ந்தபொழுது கூட்டிலிருந்து விடுபட்ட பறவை போல மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆங்கிலத்தில் “Spring back effect” என்று சொல்வார்கள். ஒரு Spring சாதாரணமாக இருந்தால் ஒரு விளைவும் இல்லை. அதே சாதாரணமாக இருந்தால் ஒரு விளைவும் இல்லை. அதே Springஐ நன்றாக அழுத்திவிட்டுவிட்டால் அது மிகவும் வேகமாகத் துள்ளும். அதே போல் தபோவன பயிற்சி முடிந்த பிறகு ஏதோ கட்டவிழ்த்துவிட்டது போன்று ஓர் உணர்வு வந்தது. அதனால் புகைப்பிடித்தல் போன்ற தீய பழக்கங்கள் எல்லாம் வந்து சேர்ந்தன. சில சமயங்களில் அதற்காக வருந்தினேன். ஆனால் அந்தப் பழக்கங்களை விட முடியவில்லை. பலமுறை முயற்சி செய்தும் தோல்விதான் மிஞ்சியது. நாம் இப்படியே அழிந்து போய்விடுவோம் என்ற பயமும் இருந்துகொண்டே இருந்தது. சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு ஒவ்வொரு பழக்கமாக நான் நிறுத்திவிட்டேன். இது எப்படி நம்மால் முடிந்தது என்று ஆச்சரியப்பட்டேன். ஏதோ நம் சக்திக்கு மீறிய ஒன்றுதான் இதை நிறுத்தியுள்ளது என்று நினைத்தேன்.

நான் சுமார் 35 வருடங்களாக மருத்துவத்துறையில் உள்ளேன். இது போன்ற தீய பழக்கங்கள் உள்ள நோயாளிகள் நிறைய பேர் அந்த பழக்கங்களை விடமுடியாமல் அந்தப் பழக்கத்துடனேயே இறப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் என்னால் மட்டும் அந்தப் பழக்கங்களை எவ்வாறு விட முடிந்தது? இது பற்றி நீண்ட நாள் யோசித்த பிறகு எனக்கு ஒரு உண்மை தெரிந்தது. தபோவனத்தில் படித்த மாணவர்கள் தபோவனத்தைவிட்டு வெளியேறும்போது பெரிய சுவாமிகள் முன்பு மண்டியிட்டு, வாய்பொத்தி வணங்குவோம். அப்போது பெரியசுவாமிகள் நம் தலையின் மீது அவர் கையை வைத்து ஆசிர்வாதம் செய்வார்கள்.  சுவாமிஜியின் இந்த ஆசிர்வாதத்தின் பலன் என்னவாக இருக்கும்? இதனால் பிற்காலத்தில் நம் வாழ்க்கையில் என்ன விளைவுகள் நிகழும்? என நான் எண்ணியது உண்டு. அந்த ஆசிர்வாதத்தின் விளைவுதான் தீய பழக்கங்கள் மறைந்தது என்று இப்போது புரிகிறது.

பெரியசுவாமிஜி சமாதி ஆவதற்கு சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் சேலத்திலுள்ள அத்வைத ஆசிரமத்தில் தங்கியிருந்தார். அது சமயம் சுவாமிஜியின் நண்பர் திரு. அவினாசிலிங்கம் செட்டியார் அவர்கள் பெரியசுவாமிஜியைப் பார்க்க சேலம் வந்திருந்தார். அப்போது அன்பர்கள் சுவாமிஜியின் பாதங்களைத் தொட்டு வணங்கினார்கள். ஒவ்வொருவரிடமும் சுவாமிஜி, “சரி, எப்பொழுது வந்தீர்கள்? வீட்டில் அனைவரும் நலமா?” என்று கேட்டார்கள். இதை கவனித்த திரு. அவினாசிலிங்கம் அவர்கள், “வெளியூரிலிருந்து வந்த அன்பர்கள் தங்களுக்கு பாத நமஸ்காரம் செய்தார்கள். ஆனால் நீங்கள் ஒருவரைக்கூட வாழ்த்தவில்லை. ஏன்?” என்று கேட்டார். அதற்கு சுவாமிஜி, “நான் அப்படி செய்தால் அது அர்த்தமற்றது. அவரவர்கள் செய்த வினைப்பயனை அவரவர்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். கிறிஸ்துவ மதத்தைத் தவிர வேறு எந்த மதமும் பாவம் செய்தவர்களை மன்னிப்பதில்லை” என்று பதிலளித்தார். இப்படிப்பட்ட தீர்மானமான கொள்கையுடைய சுவாமிஜி, மாணவர்கள் தபோவனத்தில் படிப்பை முடித்து ஊருக்குப் புறப்படும்போது அவர்களுடைய தலையில் தன்னுடைய கையை வைத்து ஆசிர்வாதம் செய்தார்கள். அன்பர்களுக்கு ஆசி கூறாத சுவாமிஜி மாணவர்களை ஆசிர்வதித்தார். தபோவன மாணவர்கள் எல்லாரும் எவ்வளவு பாக்கியவான்கள்! அப்படிப்பட்ட பாக்கியவான்களை ஆரம்பத்திலேயே தவறான வழிக்குப் போகாமல் தடுத்திருக்கலாமே?

“களவும் கற்று மற”. களவைக் கற்றால்தான் உலகைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும். இல்லையேல் நாம் உலக அனுபவமில்லாமல் பிழைக்கத் தெரியாதவர்களாக இருந்துவிடுவோம். அதே சமயம் களவைக் கற்று, அதனை மறக்காமல் அதிலேயே மூழ்கி அழிந்துவிடக்கூடாது. அப்படியேதும் நடந்துவிடாமல் நம்மை தடுத்தாட்கொள்வது நம்மைச்சுற்றி அரண்போன்று அமைந்துள்ள நம்முடைய பெரிய சுவாமிஜியின் ஆசிர்வாதம். சரியான சமயத்தில் நமது முடியைப் பிடித்து இழுத்து வந்து சரியான பாதையைக் காட்டுவதுதான் SSLC முடிக்கும்போது நமக்குக் கிடைக்கும் அவருடைய ஆசிர்வாதம்.

No comments:

Post a Comment