Tuesday, March 26, 2013
Friday, March 22, 2013
*யதீஸ்வரி ஸ்ரீ சிவப்ரியா அம்பா அவர்களின் ஞான வாழ்வு – பாகம் 5
மதுரை சாரதா ஸமிதி:
11 ஆண்டுகள் இப்படி சேலத்தில் பயிற்சி கொடுத்து பிரம்மச்சாரிணிகளில் எழுவர்
சந்நியாஸமும், புதிய சகோதரிகள் எழுவர் பிரம்மச்சரிய தீட்சையும் பெறுவதைப் பார்த்து
அக மகிழ்ந்தார்கள், சுவாமிஜி. குருநாதர் சங்கல்பம் நிறைவேறுகிறது அல்லவா! அதன்
பிறகு 1984ல் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் “சேலத்தில் அடிப்படை
போட்டாகிவிட்டது. இனி மதுரைக்கு வாருங்கள்” என்றார்கள். அங்கு வைகைக் கரையில்
முன்பு தபஸ்வி ஒருவர் தவம் செய்த இடம் தெய்வாதீனமாகக் கிடைத்தது. அன்பர் ஒருவர்
நன்கொடையாக அளித்தார். அந்நிலத்தில் ஸ்ரீ சாரதா ஸமிதியின் கிளை ஒன்று
துவக்கப்பட்டது. அப்புதிய கிளைக்கு யதீஸ்வரி சிவப்ரியா அம்பா அவர்களைப்
பொறுப்பேற்கச் சொன்னார்கள் குருநாதர்.
அருள் துணை மாதர் சங்கம் அம்பா மீது கொண்டிருக்கும் அன்பு:
1984ல் மதுரையிலேயே ஸமிதியின் கிளை துவக்கப்பட்டபோது மட்டற்ற மகிழ்ச்சி
அடைந்தார்கள். “சுவாமி, அம்பா எங்கள் சொத்து, எங்களுக்கு வேண்டும்” என்று
குருநாதரிடம் விண்ணப்பித்தது வீண் போகவில்லை. அம்பா அவர்கள் எல்லோருக்கும்
உரியவர்தான். ஆனால் அருகில் இருந்து வழிநடத்த அவர்கள் தமக்கு வேண்டும் என்று
நினைத்தார்கள். மதுரையில் ஸமிதி துவக்கப்பட்டவுடன் அருள்துணை மாதர் சங்கக்
கூட்டங்கள் ஸமிதியிலேயே நடைபெறலாயின.
குருநாதர் மகாசமாதி:
16.11.1985 அன்று குருநாதர் தம் பூதவுடலை நீத்தார்கள். தபோவனத்தில் மாட்சிமை
உண்மையில் குருநாதரின் பெருமையே. அவர்களைச் சார்ந்திருந்து அவர்கள் சங்கல்பத்தை
நிறைவேற்ற முயல வேண்டும். அதுவே வாழ்க்கையின் நோக்கம் என்று எல்லோருக்கும்
எடுத்துக் கூறினார்கள், அம்பா அவர்கள்.
தபோவன பிரம்மச்சாரிகளுக்கு வகுப்பு எடுத்தல்:
தபோவன பிரம்மச்சாரிகளுக்கும் அம்பா அவர்கள் வகுப்பு எடுக்க வேண்டும் என்ற
வேண்டுகோள் விடுக்கப்பட்டபோது அதை குருநாதருக்கு ஆற்றும் அருந்தொண்டாக நினைத்து,
முதுமையையும் பொருட்படுத்தாது, மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு வகுப்பு நடத்தினார்கள்.
இது பிரம்மச்சாரிகளுக்கு மிகுந்த அருளுற்சாகம் ஊட்டுவதாய் இருந்தது. குருநாதர்
காலத்திற்குப் பிறகு தபோவனத்தில் சேர்ந்த சாதகர்களுக்கு ஸ்தாபகர் சுவாமிஜி
அவர்களின் மகிமைகளை எடுத்தோதினார்கள். சுவாமிஜியவர்களின் நூல்களை மட்டுமே ஆழ்ந்து
படிக்க வேண்டும். அவற்றிலிருந்து வேண்டிய அளவு அருளைப் பெறலாம் என்பதை
உணர்த்தினார்கள்.
அன்னையார்:
அருள் துணை சிறுவர் சங்க உறுப்பினர்கள் அம்பா அவர்களிடம் ஒரு தேவதா விசுவாசமே
கொண்டிருந்தனர் என்று சொல்லலாம். அன்னை சாரதா தேவியாரைப் பற்றிப் புத்தகத்தில்தான்
படித்திருக்கிறோம். ஆனால் அம்பா அவர்களின் வடிவில் அன்னையாரைக் காண்கிறோம் என்று
அவர்கள் எண்ணினார்கள். தாய்மை, தூய்மை, தொண்டு ஆகிய தெய்வீக நலன்களின் வடிவமாகத்
திகழ்ந்தார்கள் அம்பா அவர்கள்.
அம்பா அவர்களின் அன்பு அரவணைப்பில் வளர்ந்த சங்க உறுப்பினர்கள், மணமான
பெண்ணொருத்தி தாய் வீட்டுக்கு வருவதில் காணும் பிரியத்தை விட அதிகமாக அம்பா
அவர்களிடம் வருவதில் கண்டார்கள்.
குருவைப் பின்பற்றுதல்:
அம்பா அவர்கள் சாதகர்களை அருட்துறையில் முன்னேற்றவல்ல உபதேசங்கள் பலவற்றைக்
கூறியிருக்கிறார்கள். ஆனால் அவை அனைத்திலும் பெரிதாக உள்ள அருட்கொடை என்னவென்றால்
குருநாதரின் மஹிமையைக் கூறியதுதான். ஆசிரமவாசிகளுக்குத் தாம் யாருடைய பிள்ளைகள்
என்பதை நினைவூட்டியதைப் போலத் தாம் யாருடைய சிஷ்யர்கள் என்பதையும் அடிக்கடி
எடுத்துக் கூறுவார். ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்களை நேரில் காணும் வாய்ப்பு
கிடைக்காதவர்கள் கூட அவர் மீது பெருமதிப்புக் கொள்ளும்படிச் செய்து விடுவார்.
“குருநாதர் எழுதிய அருள் நூல்களையே நாம் படிக்க வேண்டும். குருநாதரின் ஸ்ரீமத்
பகவத்கீதை, தாயுமானவர், திருவாசகம் ஆகிய விளக்க நூல்களில் ஏதேனு ஒன்றை நாள்தோறும்
சிறிது படித்து வரவேண்டும்” என்பார்.
ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் |
அம்பாவுடன் இணக்கம் கொண்டோருக்கு கிடைத்த பலன்:
ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர், தவத்திரு அம்பா ஆகிய இருவரிடமும் தொடர்பு
கொள்ளும் வாய்ப்புப் பெற்றவர்கள், சுவாமிஜியவர்களுடன் இணக்கம் கொள்ள வாய்ப்புக்
கிடைக்காமல் அம்பா அவர்களுடன் மட்டும் தொடர்பு கொண்டவர்கள் ஆகிய இருவகை
சாதகர்களுக்கும் அம்பா அவர்களின் இணக்கம் இணையற்ற பலனைத் தந்தது. ஸ்ரீமத் சுவாமி
சித்பவானந்தர் அவர்களின் எண்ண ஓட்டங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முதல்
வகையினருக்கு அம்பா அவர்களின் விளக்கங்கள் உதவின. அதே சமயத்தில் இரண்டாவது
வகையினர் ஸ்ரீமத் சுவாமிஜி அவர்களுடன் இணக்கம்கொள்ளும் பேற்றை இழந்துவிட்டோமே என்று
ஆதங்கம் கொள்ளாமல் இருக்க அம்பா அவர்களின் அருளுரைகள் அவர்களுக்கும் உதவின.
எல்லோருக்கும் குருவைக் காட்டிக் கொடுத்த குருவாக அம்பா அவர்கள் விளங்கினார்கள்.
நூற்றாண்டு விழாவில் வழங்கிய உரை:
ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் நூற்றாண்டு விழா 1997-1998ஆம் ஆண்டில் தமிழகமெங்கும்
கொண்டாடப்பட்டபோது அம்பா அவர்கள் குருநாதரின் அருட்செய்தி எவ்வாறெல்லாம் வேலை
செய்கிறது என்பதைக் கண்டு களித்தார். தமது சரீர சிரமத்தைப் பொருட்படுத்தாது
திருநெல்வேலி நூற்றாண்டு விழாவில் மதுரையிலிருந்து வந்து கலந்துகொண்டார்கள்.
விழாவில் ஆற்றிய உரையில் சுவாமிஜி அவர்கள் பூத உடலில் வாழ்ந்திருந்தபோது எப்படி
அருளை வாரி வாரி வழங்கினார்கள் என்பதை அருள் ததும்பும் உள்ளத்துடன் பரவசமாயிருந்து
பகர்ந்தார்கள்.
யதீஸ்வரி ஸ்ரீ சிவப்ரியா அம்பா |
ஒருமுறை அம்பா அவர்களிடம் அவர்களுக்கு சேவை செய்துகொண்டிருந்த ஒரு
பிரம்மச்சாரிணி, “இவ்வளவு துன்பத்தையும் உங்களால் எப்படித் தாங்கிக்கொள்ள
முடிகிறது அம்பா?” என்று கேட்டார். அம்பா அவர்கள் கூறிய பதில் சாதகர்கள்
எல்லோருக்கும் உறுதியும் வலிவும் அளிக்கும் தெய்வ வாக்காய் இருந்தது. “இதையெல்லாம்
தபசு என்று தெரிந்துகொள். நம் பெரியசுவாமி அவர்கள் தவம் செய்து
காட்டியிருக்கிறார்கள். நானும் இதைத் தவமாகவே ஏற்றுக்கொள்கிறேன். நீங்களும்
உங்களுக்கு ஏதேனும் துன்பம் வந்தால் அதைத் தவமெனக் கருதிப் பொறுமையுடன் ஏற்றுக்
கொள்ள வேண்டும்”.
மற்றொருமுறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் தலைவர் சுவாமியவர்கள் அம்பாவைக் காண
வந்திருந்தபோது, “சுவாமி, சாதனத்திற்கு இதுவும் ஒரு நிலையாகப் பயன்படுகிறது”
என்றார்கள். தாம் வரும்போதெல்லாம் அம்பாவின் முகத்திலே புன்னகை தவழ்வதைக் கண்ட
சுவாமிகள், “அம்பா அவர்களின் முகத்தில் பொலிந்த புன்னகை அவர்கள் அடைந்திருந்த
பெருநிலையைக் காட்டுகிறது” என்றார்கள்.
ஒருமுறை சரீரம் சற்றுத் தெம்பாய் இருக்கும்போது உள்ளே நிகழ்வது என்ன என்பதை
உரைத்தார்கள். “மனது ஆழ்ந்து செல்கிறது. நீங்கள் சாப்பிடச் சொல்லியும், எப்போதும்
கையைக் காலைப் பிடித்துவிட்டுக் கொண்டும் இருப்பதால் அதை சரீர போதத்திற்கு இழுத்து
வருகிறீர்கள்” என்றார்கள். “மனது பிராணனில் ஒடுங்குகிறது; பிராணன் பிரகிருதியில்
ஒடுங்குகிறது” என்று சொல்லிவிட்டு அமைதியாக இருப்பார்கள்.
மீனாட்சியைக் கண்டு வந்தது:
ஒருமுறை அம்பா அவர்களை பழச்சாறு அருந்துமாறு கேட்டுக்கொண்டபோது, “கொஞ்சம்
பொறு. இப்போதுதான் போய்விட்டு வந்திருக்கிறேன். அதற்குள் என்னைச் சாப்பிடச்
சொல்லாதே” என்றார்கள். படுத்தபடுக்கையாகக் கிடக்கும் அவர்கள் எங்கே சென்றதாகச்
சொல்கிறார்கள் என்று அருகிலிருந்தவர்கள் வியந்தார்கள். “எங்கே அம்பா போய்விட்டு
வந்தீர்கள்?” என்று கேட்டபோது, “மீனாட்சி அம்மன் கோயிலுக்குத்தான்” என்றார்கள்.
சூட்சும சரீரத்தில் சென்று வந்தார்களா? யாரறிவார்! இப்படிப்பட்ட அசாதாரணமான,
எதிர்பார்த்திராத பதில்களும், உரைகளும் அடிக்கடி அம்பாவிடமிருந்து வரும்.
அம்பா பாடிய பாடல்:
இந்த இறுதி நாட்களில் அம்பா அவர்கள் அடிக்கடி பாடிய, பிறரைப் பாடச் செய்த
பாடல்களில் ஒன்று மகாகவி பாரதியாரின் வேதாந்தப் பாடலான பரசிவ வெள்ளம் என்ற
பாடலாகும்.
நித்த சிவ வெள்ள மென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுன்
சித்தமிசைக் கொள்ளும் சிரத்தை யொன்றே போதுமடா
“சிரத்தை யொன்றே போதுமடா” என்ற வாக்கியத்தை அடிக்கடி நினைவூட்டுவார்கள். பாடல்
முழுவதையும் உள்ளம் உருகி உணர்ந்து பாடக் கற்பித்துக் கொடுத்தார்கள்.
இரண்டு விஷயங்கள்:
சரீரம் சக்தி குன்றி ஓய்ந்து கிடந்தது. இறுதி நாளுக்கு இரண்டு நாட்களுக்கு
முன் 21.03.2000 அன்று அதிகாலை 1:30 மணிக்கு அம்பா அவர்கள் விழித்திருந்தார்கள். தெள்ளத் தெளிவாக
இருந்தார்கள். அருகிலிருந்த சந்நியாஸினியை அழைத்தார்கள். “இதோ பார்! முக்கியமான
விஷயம் இரண்டு இப்போது சொல்லப் போகிறேன். நன்கு கவனித்துக்கொள். இதை எல்லோருக்கும்
எடுத்துச் சொல்” என்று உரத்த குரலில் மிகத் தெளிவாகக் கூறினார்கள்.
சந்நியாசினிகளும் அங்கிருந்த ஓரிரு பிரம்மச்சாரிணிகளும் அம்பா அவர்களின்
படுக்கை அருகே வந்தார்கள். “நீங்கள் எல்லோரும் நம் பெரிய சுவாமிஜி போல் வர
வேண்டும். சாதனத்திலும் சேவையிலும் சுறுசுறுப்பாக அதே சமயம் நிதானமாக, பொறுமையாக,
அவசரப்படாமல் செய்ய வேண்டும். எல்லோரும் ஆன்மீகத்தில் நல்ல நிலைக்கு வரவேண்டும்.
நம் பெரிய சுவாமிஜி போன்று உருவாக வேண்டும். புரிந்ததா?
“இரண்டு: நீங்கள் எல்லோரும் மனதில் வஞ்சகமில்லாமல் மீரா போன்று ஆக வேண்டும்.
மீராவா? இல்லை. அதற்கு மேல் ஆண்டாள் போன்று ஆக வேண்டும். பெரியவர்கள் சொல்வதைக்
கேட்டு நடக்க வேண்டும். அப்போதுதான் ஸ்தாபனம் நன்கு நடக்கும். மனதில் இறைவன்
இருக்கிறார் என்பதைக் காட்ட வேண்டும். கடவுள் மகிமையை, குரு மஹராஜ் வலிமையை, நம்
சுவாமிஜி வலிமையைக் காட்ட வேண்டும். நம் வலிமையை அல்ல.”
மகாசமாதி:
23.03.200 வியாழக்கிழமை இறுதிநாளும் வந்தது. அன்று காலை 08:45 மணிக்கு
மருத்துவர் வந்து பரிசோதித்துவிட்டுச் சென்றார். செல்லும்முன், “இரண்டு நாட்களாக
வாயும் கண்ணும் மூடாமலே இருக்கிறார்கள். ஆகையால் ஜாக்கிரதையாக இருந்து கடைசி
நேரத்தில் உடனே நீங்கள்தான் மூட வேண்டும்” என்று சொல்லிவிட்டுப் போனார். ஆனால் எச்சரிக்கைக்கு
அவசியமே இல்லாது போனது. ஆசிரமத்து அம்பாக்கள் சகோதரிகள் அனைவரும் “ஓம் நம: சிவாய”
என ஓதியவாறு அம்பா அவர்களையே கவனித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஓம் என்ற
ஓசை மெதுவாகக் கேட்டது. உடனே எல்லோரும் ஓங்காரத்தை மட்டும் ஜபித்தார்கள்.
அப்பொழுது நேரம் காலை 09:55. எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தானாகவே கை,
கால்களையெல்லாம் சேர்த்து வைத்து, வாயையும் கண்களையும் தானாகவே மூடிக்கொண்டு,
தியானத்திலிருந்தவாறே உடலை உகுத்துவிட்டார்கள் பரமஹம்சர் வழி நின்ற பரமயோகியான
யதீஸ்வரி ஸ்ரீ சிவப்ரியா அம்பா அவர்கள்.
யதீஸ்வரி ஸ்ரீ சிவப்ரியா அம்பா |
சித்பவானந்தருக்கு அமைந்த நிவேதிதை:
குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு நேர் சிஷ்யர்கள் அமைந்தது போலவும், சுவாமி
விவேகானந்தருக்கு சகோதரி நிவேதிதை போலவும், ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்
அவர்களுக்கு யதீஸ்வரி ஸ்ரீ சிவப்ரியா அம்பா அவர்கள் அமைந்திருந்தார்கள்.
இன்று யதீஸ்வரி ஸ்ரீ சிவப்ரியா அம்பா அவர்கள் மகாசமாதி அடைந்த தினம்(23.03.2013) ஆகும். பராய்த்துறை மேவிய பரமபுருஷருக்கு
சிஷ்யையாக அமைந்த பரமயோகினியைப் பற்றி நாம் அறிந்து கொண்டது சொற்பமே! ஐந்து
பாகங்களாகப் பதியப்பட்ட 5 கட்டுரைகளும் அம்பா அவர்களைப் பற்றி வெளியிடப்பட்ட “ஆத்ம
சாதனையின் அற்புதம்” என்ற புத்தகத்திலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டது.
நன்றி
புத்தகத்தை வெளியிட்டோர்:
அருள் துணை மாதர் சங்கம்,
மதுரை – 1.
“ஆத்ம சாதனையின் அற்புதம்” புத்தகத்தை எழுதியவர்:
யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா அவர்கள்,
திருவண்ணாமலை.
யதீஸ்வரி சிவப்ரியா அம்பா அவர்களின் புகைப்படங்கள்
யாவும் நமது பழைய மாணவர் பிரேம் குமார் அவர்களின் இணையதளத்திலிருந்து
எடுத்துள்ளோம். அவருக்கு நன்றி. இன்னும் அம்பா மற்றும் பெரியசாமி சம்பந்தமான
புகைப்படங்கள் நிறைய உள்ளன. சேகரித்தவைகளை விட சேகரிக்காததே அதிகமாக இருக்கும்.
தேடுகிறோம்... எங்கள் தேடுதலில் யார் வேண்டுமானாலும் பங்கெடுத்துக்கொண்டு உதவலாம்.
Thursday, March 21, 2013
*யதீஸ்வரி ஸ்ரீ சிவப்ரியா அம்பா அவர்களின் ஞான வாழ்வு – பாகம் 4
புலனடக்கம் பழகிய விதம்:
புலனடக்கம் பழகுவதற்கும் கடும் முயற்சிகள் எடுத்துக் கொள்வார். உதாரணத்திற்கு
ஒன்று: தாம் விரும்பிச் சாப்பிடும் உணவுப் பதார்த்தத்தில் ஆசையை நீக்க அதைத்
தயாரித்து வைத்துவிட்டு உண்ணாது இருப்பார். பிறர்க்கு எடுத்துப் பரிமாறுவார்.
ஆனால் தான் சிறிது கூட எடுத்துக் கொள்ளமாட்டார். இத்தனை காலத்திற்கு அதைச்
சாப்பிடுவதில்லை என்று வைத்துக்கொள்வார். அப்பதார்த்ததில் ஆசை போன பின் அளவுடன்
அருந்தப் பழகிக் கொள்வார்.
பெரியசாமி சித்பவானந்தரின் அருளாற்றல்:
குருநாதர் சித்பவானந்த சுவாமிஜி ஆட்கொண்ட பிறகு ஒரு நாள் தாம் ஜபம் செய்து
வந்த ருத்திராட்ச மாலையை எடுத்துக்கொண்டு குருநாதரை அணுகி பயபக்தியுடன் வணங்கி,
“சுவாமி, இந்த மாலையில் ஜபம் செய்து தர வேண்டும்” என்று விண்ணப்பித்துக்
கொண்டார்கள். சுவாமிஜியும் சம்மதித்து மாலையைப் பெற்றுக் கொண்டார்கள். மறுநாள்
ஜபமாலையைத் திரும்பப் பெறுவதற்குச் சென்றபோது சுவாமிஜி அம்மா அவர்களிடம்,
“ஓங்காரம் சொல்லாமல் ஜபத்திருக்கிறீர்களே?” என்றார்கள். என்ன மந்திரம் எப்படி
ஜபிக்கப்படுகிறது என்பதை அம்மா அவர்கள் கூறாதபோதே ஜபமாலையில் ஜபித்தவுடன் உண்மை
நிலையை உணர்ந்துகொண்டது குருநாதரின் அருளாற்றல் என்றால், திட விசுவாசத்துடன் உரு
ஏற்றியது சிஷ்யையின் சிறப்பு ஆகும். அதன்பின் குருநாதர் கூறியபடி முறையாக
மந்திரத்தை ஜபித்து வந்தார்கள். ஒரு நாளில் பல்லாயிரக்கணக்கான முறை ஜபித்தார்கள்.
நாளடைவில் எண்ணிக்கையில் கருத்துச் செலுத்தாமல் உணர்ந்து ஓதுவதை முக்கியமாகக்
கொண்டு செய்து வந்தார்கள். வாழ்நாளின் இறுதி மூச்சு அடங்கும் வரை ஜபம் செய்வதை
நிறுத்தவில்லை.
ஆன்மீக அனுபவங்கள்:
அம்மா அவர்களின் ஆன்மீக அனுபவங்கள் காட்சிப்புலனுக்கு அதிக இடம் இருந்தது
என்று சொல்லலாம். ஒருமுறை மீனாட்சி அம்மன் கோயிலில் தட்சிணாமூர்த்தி சன்னிதியில்
அமர்ந்து தாய்மார்களுடன் அருட்பாடல்கள் பாடி விளக்கம் சொல்லிக்கொண்டிருந்த போது,
அம்பிகையே பச்சைப் பட்டு உடுத்திய சிறுமியாய் வந்து படியில் அமர்ந்து சிறிது நேரம்
கேட்டுக் கொண்டிருந்துவிட்டு மறைந்தாள்.
குருநாதர் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் முதல் தரிசனம் கிடைத்த
ஓராண்டிற்குப் பிறகே அடுத்த சந்திப்பு நிகழ்ந்தது. குடும்பச் சூழலில் குருவைச்
சென்று தரிசிக்க வாய்ப்பு இல்லாததால் ஏங்கிக் கிடந்தது உள்ளம். ஒரு நாள் கனத்த
இதயத்துடன் இல்லத்தைச் சுற்றியிருந்த தோட்டத்திற்கு வந்தார்கள். அங்கே நின்று
கொண்டிருந்தது யார்? ஸத்குருநாதரல்லவா? விரைந்து சென்று வணங்கினார். “எனக்கு பூ
வேண்டுமே” என்றார் புனிதர். அம்மா அருகில் இருந்த செடிகளிலிருந்து சில மலர்களைப்
பறித்துப் பரவசத்துடன் சமர்ப்பித்தார்கள். புன்னகைத்து அருள் புரிந்த குருநாதர்
மறைந்துவிட்டார். இந்த அருட்காட்சிக்குப் பிறகுதான் ஸ்வாமியவர்கள் இலக்குமி
இல்லத்திற்கு வர ஆரம்பித்தார்கள்.
சொப்பனத்தில் ஐயம் தெளிவித்தல்:
மற்றொரு முறை சுவாமிஜியவர்களுடன் தொடர்பு ஏற்பட்ட புதிதில், “மஹாத்மா காந்திஜி
பெரிய மகான் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவர் அவதார புருஷர் அல்லர்” என்றார்கள்.
மஹாத்மாவின் மீது தேவதா விசுவாசம் வைத்திருந்த அம்மா அவர்களுடைய உள்ளத்தில்
சுவாமிஜியவர்களின் வார்த்தைகள் பெரும் கலக்கத்தை உண்டு பண்ணின. மனம்
அமைதியிழந்துவிட்டது. அன்றிரவு கனவிலே குருநாதர் தோன்றி உங்களுக்கு, “மஹாத்மாவின்
வார்த்தைகள் மீது நம்பிக்கை உண்டல்லவா?” என்றார். “ஆம். ஐயனே”. “அவரே தாம் அவதார
புருஷர் இல்லை என்று கூறியிருக்கிறாரே”. குருநாதர் இப்படிச் சொன்னவுடன் அம்மா
அவர்களின் குழப்பம் நீங்கி மனம் அமைதி அடைந்தது. விழித்துப் பார்த்தபோது சொப்பனதீட்சை
என்பது போல் சொப்பனத்தில் வந்து ஐயம் தெளிவித்துள்ளார் ஐயன் என்று அறிந்து
கொண்டார்.
கடைபிடித்த நெறிகள்:
அம்மா அவர்கள் புரிந்த ஆத்ம சாதனத்தின் சிறப்பைச் சுருங்கச் சொல்வதென்றால்
சுவாமி விவேகானந்தர் கூறிய நான்கு யோகங்களையும் முறையாகக் கடைபிடித்து அனைத்திற்கும்
ஆதாரமாக குருவருளைத் துணையாகக் கொண்டு நெறியைச் சரியாகப் பிடித்தால் குறியைத்
தவறாது அடையலாம் என்ற விசுவாசத்தோடு முயன்று வெற்றி கண்டவர் என்று சொல்லலாம்.
நான்கு யோகங்களுக்கும் சம அந்தஸ்து கொடுப்பது ஸ்ரீ ராமகிருஷ்ண இயக்கத்தின்
கோட்பாடு. அவ்விதமே அம்மா அவர்களும் கருதினார்கள்; கடைப்பிடித்தார்கள்.
ஐயா திரு. நடராஜன் அவர்களின் மறைவு:
1967ஆம் ஆண்டு ஒரு நாள் தம் குருநாதரைத் தம் பிறந்த ஊரான அருப்புக்கோட்டைக்கு
அழைத்துச் சென்றார்கள் ஐயா அவர்கள். ஆங்கு அவர்களுடைய தாயாரைக் காணச் சென்றபோது
ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் தாயாரிடம், “அம்மா, உங்கள் மகனை எனக்குத்
தந்துவிடுங்கள்” என்று கேட்டார்கள். பெரியவர் எதற்காக இப்படிக் கேட்கிறார் என்று
புரியாவிட்டாலும் தாயார் “எடுத்துக்கொள்ளுங்கள் சுவாமி” என்று தயங்காது
விடையளித்தார். உடனே சுவாமிஜியும், “சரி, இனி உங்கள் மகன் நம் பிள்ளை ஆகிவிட்டான்”
என்று ஏற்றருளினார்கள். இந்தச் சிறிய உரையாடலின் உட்கருத்து யாருக்கும்
விளங்கவில்லை. ஐயா அவர்கள் ‘சுவாமிஜி’ என்னைத் தன் அருட்செல்வனாக
ஏற்றுக்கொண்டுவிட்டார்’ என்று எண்ணிப் பூரிப்பு அடைந்தார்.
இந்த நிகழ்ச்சி நடந்து சில நாட்களுக்குப் பின் கொல்லத்திற்கு திருமதி.
ஞானசுந்தரி அம்மா அவர்களின் இல்லத்திற்குக் குடும்பக் காரியம் நிமித்தமாகச்
சென்றிருந்தார். ஐயா அவர்கள் குளிக்கச் சென்றபோது திடீரென்று கடுமையான மாரடைப்பு
ஏற்பட்டது. அந்தக் கணமே அங்கேயே உயிர் பிரிந்தது.
இப்படி நடக்கப்போவதை முன்னமே அறிந்துதான் தம் அன்புச் சீடரின் அன்னையுடைய
வருத்தத்தைப் போக்கும் வகையிலும், அவருக்கு முக்தியை நல்குமாறும், “அவன் நம்ம
பிள்ளை ஆகிவிட்டான்” என்றார்கள் போலும்!
ஐயா அவர்கள் காலமான செய்தி ஸ்ரீமத் சுவாமிஜி அவர்களுக்குத்
தெரிவிக்கப்பட்டபோது, சுவாமிஜியவர்கள் தபோவனத்தின் மேலாளரான சுவாமி சாந்தானந்தர்
அவர்களை அழைத்து, “அந்த அம்மாள் நம்மையே சார்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு
எந்தக் குறையும் வரக்கூடாது. நீங்கள் திருவேடகத்திலிருந்து தினமும் போய்ப்
பார்த்துக்கொள்ளுங்கள்” என்று அருளினார்கள்.
உள்ளத்தில் வந்த வைராக்கியம்:
தியானம் செய்யும்போது அருகில் ஒரு துணியை விரித்து நகைகளைக் கழற்றி அதன்மீது
வைத்துவிட்டு, நகைகளின் மீது பற்றில்லாது இருக்க வேண்டும் என்று சங்கல்பித்துக்
கொண்டு தியானம் செய்வார்கள். துறவியாவதற்கு முன்னேயே ஒவ்வொன்றாகத் துறந்தார்கள்.
அணிகலனைத் துறந்ததோடு முடியையும் களைந்தார்கள். சொத்து விவகாரங்களைக் கூட ஸ்ரீமத்
சுவாமி சித்பவானந்தர் அவர்களின் கட்டளைப்படி ஸ்ரீமத் சாந்தானந்தர் அவர்களே
சிக்கலில்லாது முடித்து வைத்தார்.
இதற்கிடையில் ஸ்ரீமதி சீதாலக்ஷ்மி ராமசுவாமி அம்மையார் சுவாமிகளை அணுகி
சேலத்தில் பெண்களுக்கென ஒரு ஸ்தாபனம் துவக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
அதன்பேரில் 1956ல் ஸ்ரீ சாரதா வித்யாலயம் என்னும் கல்விச்சாலை முதலில்
துவக்கப்பட்டது. அதில் சில தாய்மார்கள் தங்கி அன்னையாருக்குப் பூஜை செய்துகொண்டு
பள்ளி நிர்வாகத்திலும் பங்கேற்று வந்தனர். இந்தப் பணியில் ஸ்ரீமதி ராஜம்மாள் என்ற
பக்திமதியையும் சுவாமிஜி ஈடுபடுத்தியிருந்தார்கள். அன்னையாரின் அருட்காட்சி பெற்று
அவருக்குத் தம் உடல் பொருள் ஆவியை உவந்தளித்தவர் ஸ்ரீமதி சீதாலக்ஷ்மி அம்மையார்
அவர்கள்.
ஸ்ரீமதி ராஜம்மாள் அவர்கள் திண்டுக்கல்லில் பள்ளித் தலைமை ஆசிரியையாகப்
பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் இருவரையும், மூன்றாவதாக அம்மா அவர்களையும்
சேலத்தில் பணியாற்றி வந்த இன்னும் நான்கு பெண்மணிகளையும் வைத்து “ஸ்ரீ சாரதா
ஸமிதி” 1967ல் உருவாக்கினார்கள் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர். சீதாலட்சுமி
அம்மாளைத் தலைவராகவும், அம்மா அவர்களை உபதலைவராகவும், மற்ற ஐவரையும்
உறுப்பினர்களாகவும் கொண்டு ஸமிதி துவக்கப்பட்டது. சீதாலட்சுமி அம்மாள் அவர்கள்
நிர்வாகத் திறமை மிக்கவர்.
ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி |
அவருடைய பேரார்வத்தினால் சுவாமிஜியவர்களின் தலைமையில் 1961ல் ஸ்ரீ சாரதா
மகளிர் கல்லூரி துவக்கப்பட்டது. இக்கல்வி நிலையங்களின் நிர்வாகத்திற்குப் பொது
மேலாண்மையாகவும் ஆன்மீகப் பணியை இன்னும் விரிவுபட ஆற்றுவதாயும் பெண் துறவியர்
ஸ்தாபனம் இருக்கவேண்டும் என்று கருதித்தான் சுவாமிஜியவர்கள் ஸ்ரீ சாரதா ஸமிதியின்
நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எழுவருக்கும் சந்நியாச தீட்சை செய்து வைக்கத்
தீர்மானித்தார்கள்.
ஆன்மீகத்தில் பயிற்சியளிக்க அம்மா அவர்களே பொருத்தமானவர் என்று சுவாமிஜி
கருதினார்கள். அம்மா அவர்களிடம், “உலகப் பொருட்களையும் உறவினரையும் துச்சமென
ஒதுக்கிவிட்டு நம்மோடு வந்து சேர்ந்துவிடுங்கள்” என்று அழைத்தார்கள்.
எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திக் கொண்டு 06.03.1973 அன்று திருவேடம் சென்று
குருநாதரைப் பணிந்து நின்றார்கள் அம்மா.
சுவாமி சித்பவானந்தரின் நோக்கம்:
“உங்களுக்கு சந்நியாசம் கொடுத்தால் எனது சங்கல்பம் ஒன்று நிறைவேறுகிறது. நாம்
ஸ்ரீ சாரதா ஸமிதியைத் துவக்கிப் பெண்களுக்கு சந்நியாசம் செய்து வைக்கும் இந்த
சம்பவம் நூறு வருடங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டின் சரித்திர மயமாகும். ஏனென்றால்
உங்களுக்கு தீட்சை செய்து வைத்த பிறகு பிரம்மச்சாரிணிகள் வருவார்கள்.
அவர்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்காக நீங்கள் இன்னும் கொஞ்ச நாள் சேவை செய்ய
வேண்டியது” என்று அம்மாவிடம் சுவாமிஜி சொன்னார்கள்.
“நாம் அன்னை சாரதா தேவியாருடைய பிள்ளைகள் என்பதை தினமும் 10 முறை அவர்களுக்கு
ஞாபகப்படுத்துங்கள். உணர்ந்து சாதனத்தில் ஈடுபடச் செய்யுங்கள். கீழோர் ஆயினும் தாழ
உரை என்பதையும் தினமும் சொல்லுங்கள். அவர்கள் தம்மை அன்னையாரின் குழந்தைகள் என
எண்ணினால் மாறியமைவார்கள். இதுதான் நீங்கள் அன்னையாருக்குச் செய்யும்
திருத்தொண்டு. இவ்விதம் பலருடைய மனதை மாற்றியமைத்து சந்நியாசினிகளை
உருவாக்குவதற்காகத்தான் உங்களுக்கு சந்நியாஸம் தரப்போகிறோம்” என்று சுவாமிஜி
கூறினார்கள்.
சந்நியாசம் பெறுதல்:
முதல் நாள் விரதமிருந்து ஆத்மபிண்டம் போடுதல் போன்ற கிரியைகளை முடித்தபின்
ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்களிடமிருந்து காவி வஸ்திரத்தைப்
பெற்றிருந்தார்கள் சந்நியாசம் பெறப்போகும் எழுவரும். 17.04.1973 சித்திரா
பௌர்ணமியன்று அதிகாலை ஸ்ரீ ராமகிருஷ்ண ஹோமமும் அதையடுத்து சந்நியாஸிகள் மட்டுமே
செய்யும் விரஜா ஹோமமும் நிகழ்த்தப்பட்டன. ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்கள்
சொல்லச் சொல்ல சம்ஸ்க்ருத மந்திரங்களைப் புதிய சந்நியாசினிகள் எழுவரும் திருப்பிச்
சொன்னார்கள். பழைய சம்ஸ்காரங்கள் ஒவ்வொன்றாக “ஓடிப்போ” என்று தம் ஞானசக்தியினால்
குருநாதர் விரட்டியோட்ட, அம்மா அவர்களின் மனம் எங்கோ போனது. ஹோமத்தின் முடிவில்
ஸ்ரீமத் சுவாமிஜி ஹோமப் பிரசாதமாக விபூதி அணிவித்து ஒவ்வொருவரையும் அவர்களுடைய
புதிய சந்நியாச நாமத்தைச் சொல்லி அழைத்தார். அவரவர் புதுப் பெயர்களை 3 முறை சொல்லி
அவர்களைத் திரும்பச் சொல்ல வைத்தார். பெற்றோருக்கு கமலாம்பாளாகவும், அனைவருக்கும்
அம்மாவாகவும் இருந்த மூர்த்தியை குருநாதர் “யதீஸ்வரி சிவப்ரியா அம்பா” ஆக்கினார்.
நாமும் இனி அந்த அருட்தாயை அம்பா என்றே அழைப்போம்.
ஸ்ரீ சாரதா ஸமிதியின் முதல் சந்நியாசினிகள் எனும் பேறு பெற்ற பெரியவர்கள்
எழுவரின் பெயர்களையும் தெரிந்துகொள்வது இங்கு பொருத்தமாய் இருக்கும்.
யதீஸ்வரி சாரதாப்ரியா அம்பா அவர்கள் – தலைவர்
யதீஸ்வரி அம்பிகாப்ரியா அம்பா அவர்கள்
யதீஸ்வரி விஷ்ணுப்ரியா அம்பா அவர்கள்
யதீஸ்வரி விநாயகப்ரியா அம்பா அவர்கள்
யதீஸ்வரி நாராயணப்ரியா அம்பா அவர்கள்
யதீஸ்வரி சங்கரப்ரியா அம்பா அவர்கள்.
நாற்காலியில் அமர்ந்திருப்பவர்கள்(இடமிருந்து வலம்) - 1. யதீஸ்வரி சிவப்ரியா
அம்பா அவர்கள், 2. யதீஸ்வரி சாரதாப்ரியா
அம்பா அவர்கள்.
நிற்பவர்கள் - நடுவரிசை (இடமிருந்து
வலம்) - 3. யதீஸ்வரி விஷ்ணுப்ரியா அம்பா அவர்கள், 4.யதீஸ்வரி அம்பிகாப்ரியா அம்பா அவர்கள், 5. யதீஸ்வரி விநாயகப்ரியா அம்பா அவர்கள், 6. யதீஸ்வரி சங்கரப்ரியா அம்பா அவர்கள், 7. யதீஸ்வரி நாராயணப்ரியா அம்பா அவர்கள்.
பயிற்சி அளித்தல்:
தபோவன பூஜா விதிப்படி அன்னை சாரதா தேவியாருக்குப் பூஜை செய்வதற்கும் பிரம்மச்சாரிணிகளைப் பழக்கினார், அம்பா அவர்கள். ஏகாதசி நாட்களில் விரதம் இருப்பதை உற்சாகப்படுத்தினார். உடல் நலத்தைப் பாதிக்குமளவு உண்ணா நோன்பு இருப்பதைக் கண்டிப்பார். புனித நாட்களை பக்தி சிரத்தையோடு அனுஷ்டிக்கப் பழக்கினார். அருட்திரு மூவரின் ஜெயந்தி விழாக்களை பக்தி சிரத்தையோடு கொண்டாடப் பயிற்சி கொடுத்தார். ஆசிரமத்தில் பலரோடு சேர்ந்து வாழும் கூட்டு வாழ்க்கை (Community life) எப்படி அமைய வேண்டும் என்பதையும் பிரம்மச்சாரிணிகளுக்குக் காட்டிக் கொடுத்தார்.
பிரம்மச்சாரிணிகள் ஏதாவது குற்றாமிழைத்துவிட்டால் கடுஞ்சொல் கூறித்
திட்டமாட்டார். மாறாக அன்பாகப் பேசி, தன் குற்றத்தை உணரவைத்து திருந்தியமைய
உதவுவார். “உன் தவறை நீ உணர்ந்துவிட்டாயல்லவா? இனிமேல் திருந்திவிடுவாய். அதையே
நினைக்காமல் வேறு காரியத்தைச் செய். மீண்டும் இந்த தவறு நேராமல் ஜாக்கிரதையாக இரு”
என்று கூறி விஷயத்தை முடித்துவிடுவார்கள்.
எல்லோரையும் ஒன்றாகச் சேர்த்து வகுப்பு நடத்தியதைப் போல ஒவ்வொருவரையும்
தனித்தனியாக அழைத்து அவர்கள் எவ்வாறு சாதனம் புரிந்து வருகிறார்கள் என்பதைக்
கேட்டறிந்து தேவைக்கு ஏற்றாற்போல் வழிகாட்டுவார்கள் அம்பா அவர்கள்.
குறைகளை நிறையாக்குதல்:
சாதன வாழ்க்கையில் இடையூறுகள் பல. அவை காம காஞ்சனமாகவும், சோம்பல்,
உறக்கத்திலும், பேருண்டியிலும் விருப்பம், பெரியோரை எதிர்த்துப் பேசுதல் போன்ற
வடிவெடுத்து வரும். இவ்வாறு சிரமப்படும் சாதகர்களை பொறுமையுடனும் அன்புடனும் வழி
நடத்துவார். வெவ்வேறு சூழ்நிலைகளில் பிறந்து வளர்ந்த ஜீவர்கள் ஒன்று கூடி
இருக்கும் போது அடிக்கடி ஒற்றுமைக் குறைவும், பிணக்குகளும் பிறரைத்
துன்புறுத்துதலும் ஏற்படும். இது போன்ற சமயங்களில் “சிறிய கஷ்டத்தைப் பெரிது
பண்ணக் கூடாது” என்பார்கள்.
(இதன் தொடர்ச்சி 5வது பாகத்துடன் 23.03.2013, சனிக்கிழமை அன்று நிறைவு
பெறும்.)
Subscribe to:
Posts (Atom)