Wednesday, February 22, 2012

*ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் திதி பூஜை


ஸ்ரீ ராமகிருஷ்ண ஸ்தோத்ரம்

ஸ்ரீ ராமகிருஷ்ண ஸ்தோத்ரம் சுவாமி விவேகானந்தர் இயற்றியது. பரமஹம்ஸர் அவதார வரிஷ்டர், அதாவது அவதாரங்களுள் தலைசிறந்தவர் என்பது சுவாமிஜியின் ஆழமான கருத்தாகவும் முடிந்த முடிவாகவும் இருந்தது. பல காரணங்களுக்காக சுவாமி விவேகானந்தர் இதனை வெளிப்படையாகச் சொற்பொழிவுகளில் சொல்வதைத் தவிர்த்து வந்திருக்கிறார். அடைபட்டுக் கிடந்த அந்த உணர்ச்சிப் பேரூற்றுகள் அனைத்தும் திறந்துகொண்டு வெள்ளமெனப் பொங்கிப் பெருகிப் பிரவுக்கிறதோ என்று தோன்றும் வண்ணம் அமைந்துள்ளது இந்த ஸ்தோத்ரம்.
இந்த பாடலுக்கு ஒரு பெருமை உண்டு. இந்த பாடல் ஒரு பிரார்த்தனையாக, தோத்திரமாக மட்டுமின்றி ஒரு மந்திரமாகவும் செயல்படுகிறது. ஏனெனில், இந்தப் பாடலில் ஸ்ரீ ராமகிருஷ்ண மந்திரத்தை அடக்கியுள்ளார் சுவாமிஜி. ஒவ்வொரு வரிகளுடைய முதல் எழுத்தையும் சேர்த்துப் படித்தால் ‘ஓம் நமோ பகவதே ராமக்ருஷ்ணாய’ என்று வரும். எனவே இந்தப் பாடலைப் பாடுவதன் மூலம் மந்திர ஜபத்தின் பலனையும் நாம் பெற்றவராவோம்.
இந்த பாடலை சுவாமிஜி 1898- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எழுதியதாக அவரது சீடர் சரத்சந்திர சக்கரவர்த்தியின் நாட்குறிப்பு கூறுகிறது.
[ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் திதி பூஜையை முன்னிட்டு இன்று(23.02.2012, வியாழன்) இந்த ஸ்தோத்திரம் இங்கு பதியப்பட்டது]

त्वमेव माता च पिता त्वमिव
त्वमेव बन्धुश्च सखा त्वमेव।
त्वमेव विध्या द्रविणं त्वमेव
त्वमेव सर्वं मम देवदेव॥

த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ பந்துஸ்ச ஸகா த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ
தவமேவ ஸர்வம் மம தேவ தேவ
 

श्रि रामकृष्ण स्तोत्रम्

ॐ ह्रीं ऋतं त्वमचलो गुणजित् गुणेड्यः
नक्तंदिवं सकरुणं तव पादपद्मम्।
मोहंकषं बहुकृतं न भजे यतोऽहम्
तस्मात्त्वमेव शरणं मम दीनबन्धो॥१॥

ஸ்ரீ ராமக்ருஷ்ண ஸ்தோத்ரம்

ஓம் ஹ்ரீம் ருதம் த்வமசலோ குணஜித் குணேட்ய:
நக்தம் திவம் ஸகருணம் தவ பாத பத்மம் |
மோஹம் கஷம் பஹுக்ருதம் ந பஜே யதோஹம்
தஸ்மாத் த்வமேவ சரணம் மம தீன பந்தோ ||1||

          பிரணவ மந்திரமான ‘ஓம்’ ஆகவும் சக்தி பீஜ மந்திரமான ‘ஹ்ரீம்’ ஆகவும் பிரபஞ்சத்தை நடத்திச் செல்லும் நியதியான ‘ருதம்’ ஆகவும் நீயே விளங்குகிறாய்! அசைவிலாப் பரம்பொருளே, சத்வம், ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்களையும் கடந்தவன் நீ, எனினும் தெய்வீக குணங்களின் இருப்பிடமாக உள்ளாய்! மோகத்தை மாய்க்கவல்ல உனது கருணைத்திருப்பாதத் தாமரைகளை இரவும் பகலும் வழிபடாதொழிந்தேன்! இன்னும் எத்தனையெத்தனைத் தவறுகளை எல்லாம் செய்தேன் நான்! எனவே எளியவர்க்கு ஒரே புகலான இறைவனே, நீயே எனது அடைக்கலம்.

भक्तिर्भगश्च भजनं भवभेदकारि
गच्छन्त्यलं सुविपुलं गमनाय तत्त्वम्।
वक्त्रोद्धृतन्तु हृदये न विभाति किञ्चित्
तस्मात्त्वमेव शरणं मम दीनबन्धो॥२॥

பக்திர் பகஸ்ச பஜனம் பவ பேதகாரி
கச்சந்த்யலம் ஸுவிபுலம் கமனாய தத்வம் |
வக்த்ரோத் த்ருதந்து ஹ்ருதயே ந விபாதி கிஞ்சித்
தஸ்மாத் த்வமேவ சரணம் மம தீனபந்தோ ||2||

          பக்தி, மனஏக்கம், வழிபாடு – இவை எல்லாம் ஒருவனது சம்சாரத் தளையை அறுத்து, அவனை இறைவனிடம் சேர்க்கப் போதுமானவை – இப்படிப் பெரிய பேச்சுக்களைப் பேசுகிறேன். ஆனால் என் இதயத்திலோ இவற்றின் சுவடு கூட இல்லை. எனவே, எளியவர்க்கு ஒரே புகலான இறைவனே, நீயே எனது அடைக்கலம்!

तेजस्तरन्ति तरसा त्वयि तृप्ततृष्णाः
रागे कृते ऋतपथे त्वयि रामकृष्णे।
मर्त्यामृतं तव पदं मरणोर्मिनाशम्
तस्मात्वमेव शरणं मम दीनबन्धो॥३॥

தேஜஸ் தரந்தி தரஸா த்வயி த்ருப்த த்ருஷ்ணா
ராகே க்ருதே ருதபதே த்வயி ராமக்ருஷ்ணே |
மர்த்யாம்ருதம் தவபதம் மரணோர்மி நாசம்
தஸ்மாத் த்வமேவ சரணம் மம தீனபந்தோ ||3||

          ஓ ராமகிருஷ்ணா, உண்மையாகவும் உண்மையை அடைவதற்கான நெறியாகவும் விளங்குபவனே! உன்னிடம் பக்தி பூண்டவர்கள், தங்கள் ஆசைகளை எல்லாம் உன்னிடம் நிலைநிறுத்தி விரைவில் தங்கள் இதய தாபத்தின் வேகம் அடங்கப் பெறுகின்றனர். உனது திருப்பாதம் சாதாரண மனிதர்களுக்கும் மரணம் என்னும் எதிரியை அழித்து முக்திப் பேற்றை வழங்கவல்லது. எனவே, எளியவர்க்கு ஒரே புகலான இறைவனே, நீயே எனது அடைக்கலம்!

कृत्यं करोति कलुषं कुहकान्तकारि
ष्णान्तं शिवं सुविमलं तव नाम नाथ।
यस्मादहं त्वशरणो जगदिकगम्य
तस्मात्वमेव शरणि मम दीनबन्धो॥४॥

க்ருத்யம் கரோதி கலுஷம் குஹகாந்தகாரி
ஷ்ணாந்தம் சிவம் ஸுவிமலம் தவநாம நாத |
யஸ்மாதஹம் த்வசரணோ ஜகதேக கம்ய
தஸ்மாத் த்வமேவ சரணம் மம தீனபந்தோ ||4||

          ஓ குருதேவா, ‘ஷ்ணா’ என்று முடியும் உனது திருநாமம் மங்களமானது. புனிதமானது, பாவங்களைப் பரிசுத்தமாக்கவல்லது, அறியமை மயக்கத்தைப் போக்கவல்லது. உலகிற்கு ஒரே புகலிடமான பரம்பொருளே! வேறு எந்த கதியுமற்றவன் நான். எனவே, எளியவர்க்கு ஒரே புகலான இறைவனே, நீயே எனது அடைக்கலம்.

ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे।
अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः॥
ॐ नमः श्रि भगवते रामकृष्णाय नमो नमः

ஓம் ஸ்தாபகாய ச தர்மஸ்ய ஸர்வதர்ம ஸ்வரூபிணே |
அவதார வரிஷ்டாய ராமக்ருஷ்ணாய தே நம: ||
ஓம் நம: ஸ்ரீ பகவதே ராமக்ருஷ்ணாய நமோ நம:

          ஓம். அறத்தை நிலைநாட்டியவனே, அனைத்து அறங்களின் வடிவமானவனே, அவதாரங்களுள் தலைசிறந்தவனே! உனக்கு வணக்கம்!
          ஓம்.  பரம்பொருளான ஸ்ரீராமகிருஷ்ணா உனக்கு மீண்டும் மீண்டும் வணக்கம்!

(குறிப்பு:- மஹாபுருஷ் மஹராஜ் சுவாமி சிவானந்தர், அன்னை ஸ்ரீ சாரதா தேவி ஆகியோரின் வரலாற்றுச் சுருக்கங்களைப் பதிந்தது போல் பரமஹம்ஸரின் வரலாற்றை சுருக்கமாகப் பதிய நேரம் அமையவில்லை. ஆகையால் ஸ்தோத்திரத்தை பொருளுடன் பதிந்துள்ளேன்.)

Sunday, February 19, 2012

*ஸ்ரீ ராமகிருஷ்ண ஜெயந்தி விழா


ஸ்ரீ ராமகிருஷ்ண ஜெயந்தி விழா

ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்,
திருப்பராய்த்துறை – 639 115, திருச்சிராப்பள்ளி மாவட்டம்.

அன்புடையீர்,
          ஸ்ரீ ராமகிருஷ்ண ஜெயந்தி விழா 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணிமுதல் 8:30 மணிவரை பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பெறும். நீங்கள் அனைவரும் அதில் கலந்துகொண்டு திருவருளுக்குப் பாத்திரமாவீர்களாக.
இங்ஙனம்
சுவாமி ஸதானந்த
தலைவர்
நிகழ்ச்சி முறை – 26.02.2012 ஞாயிறு

காலை: 9-00 மணிக்குப் பெற்றோர் கூட்டம்
மாலை: 5-30 மணிமுதல் 7-00 மணிவரை
                   குருகுல மாணாக்கர்கள் ஆடல், பாடல் முதலியன
இரவு: 7-00 மணிமுதல் 8-30 மணிவரை குருகுல மாணாக்கர் நடிக்கும்
                   ஹரிச்சந்திரன் என்னும் நாடகம்.

தாய்மார்களுக்குத் தனி இடவசதி உண்டு.