Wednesday, November 30, 2011

*மகாபுருஷ் மகராஜ் சுவாமி சிவானந்தர் (இன்று பிறந்தநாள்)


மகாபுருஷ் மகராஜ் சுவாமி சிவானந்தர்

தந்தை ராம் கனாயி கோஷாலும், தாயார் வாமசுந்தரியும் ஒரு நல்ல மகனுக்காக ஏங்கி, தாரகேசுவர மகாதேவனை வேண்டி ஒரு வருட காலத்திற்கும் மேலாகத் தவம் கிடந்தனர். ஒரு நாள் இரவு வாமசுந்தரியின் கனவில் தாரகேசுவரர் தோன்றி, ‘உன் பக்தியைக் கண்டு மகிழ்ச்சி. விரைவில் நல்லதொரு மகனை நீ பெறுவாய்’ என்று திருவாய் மலர்ந்தருளினார்.

ராம் கனாயி கோஷால் மேற்கு வங்க மாநிலத்திலுள்ள பாராசத் நகரில் பிரபல வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். தொழிலில் பேரும் புகழும் பெற்று ராணி ராசமணியின் சட்ட ஆலோசகராக நியமனம் பெற்றார். கல்கத்தாவிலிருந்து யசோஹருக்குச் செல்லும் பெருவழியில் ராணிக்குச் சொந்தமான வழக்காடு மன்றம் ஒன்று இருந்தது. நீதிமன்றத்துடன் இணைந்தபடி வீடு ஒன்றும் இருந்தது. கோஷால் தம் குடும்பத்தாருடன் அவ்வீட்டிற்குக் குடி புகுந்தார். அந்த வீட்டில்தான், சுவாமி சிவானந்தர் 1854, நவம்பர் 30 அன்று பிறந்தார்.
தாரகேசுவரரின் திருவருளால் பிறந்த குழந்தைக்குப் பெற்றோர் தாரக்நாத் என்ற இறைவனின் திருநாமத்தையே சூட்டினர். வீட்டில் ‘புனு’என்ற செல்லப்பெயரால் குழந்தையை அழைத்தனர். குழந்தையின் ஜாதகத்தைக் கணித்த ஜோதிடர்கள், ‘இந்த ஜாதகனுக்கு, இருபத்தியைந்து அல்லது இருபத்தியாறாவது வயதில் சந்நியாச யோகம் ஏற்படும். துறவு பூணவில்லை என்றால் பெரும் சன்மானமும், பேரும், புகழும் தேடிவர ராஜயோகத்துடன் திகழ்வான்’ என்று கூறினர்.

தாரக்கின் தந்தை தேவிபக்தர். பணி நிமித்திமாக ராம் கனாய் தட்சிணேசுவரம் செல்வதுண்டு. அடிக்கடி தட்சிணேசுவரம் சென்று கொண்டிருந்ததால் அவருக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய தொடர்பு ஏற்பட்டது.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும், தட்சிணேசுவரமும்.
 தாரக்கிற்கு ஜிலேபி என்றால் உயிர். மகனின் விருப்பத்தை அறிந்த தந்தை பெரிய ஜிலேபிகளைச் செய்யச் சொல்லி, மகனுக்கு அளித்து மகிழ்வார். தாரக்கிற்கு உயிரினங்களில், குறிப்பாக நாயின் மீது தனிப் பிரியம். இரவில் நாயும் அவன் பக்கத்தில் படுத்து உறங்கும்.

தாரக்கின் ஒன்பதாவது வயதில் அவரதுஅன்னையார் காலமானார். அதோடு மூன்று மாதத் தங்கையை விட்டுத் தாயார் இறந்தது சிறுவனின் உள்ளத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது.

தாரக் ரயில்வே காரியாலயத்தில் பணிக்கு சேர்ந்த பின் அவருடன் பணிபுரிந்த அதிகாரி ஒருவர் திடீரென மரணமடைந்தார். அச்சமயம் தாரக்கின் மனம் இறை சிந்தனையில் தோய்ந்திருந்தது.

தாரக்கின் மனம் இவ்வாறு உயர்நிலையில் இருக்கையில், சிக்கலான பிரச்சனை வடிவில் திருமண கோரிக்கை வந்தது. அதாவது, தங்கை நீரதாவிற்கு பார்த்த உயர்குலத்து மாப்பிள்ளை வீட்டார் தங்களுடைய ஒரே மகளை தாரக் மணம்புரிந்துகொண்டால், ராம் கனாய் வீட்டில் பெண் எடுப்பதாகக் கூறினார்கள். பல்வேறு சிந்தனைகளுக்குப் பின் வேறு வழியின்றி திருமணத்திற்கு சம்மதித்தார்.

ஒரு வணிக நிறுவனத்தில் தாரக் குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்கு இணங்கி வேலைக்குச் சேர்ந்தார். கல்கத்தாவில் பிரம்மசமாஜத்திற்கு அருகாமையில் வாடகைக்கு வீடு எடுத்துக்கொண்டார். அதனால் தாரக் பிரம்மசமாஜ நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்ள ஆரம்பித்தார். அது அவர் உள்ளத்திற்கு மனநிறைவைத் தரவில்லை.

குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸருடன்:

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
1880-ஆம் ஆண்டு இறுதியில் ஒரு நாள் குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரை, ராம்பாபுவின் வீட்டிற்கு சென்றபோது தாரக் அவரை சந்தித்தார். தெய்வீக மனிதரான குருதேவரை முதன் முறையாகக் கண்டதும், தாரக்கின் மனம், பிராணன் குருதேவரின் வசப்பட்டன. அதற்குப்பின் மீண்டும் குருதேவரைக் காண வேண்டும் என்ற ஆவல் மேலோங்கியது. சக ஊழியர் ஒருவருடன் ஒவ்வொரு சனிக்கிழமையும் தட்சிணேசுவரம் செல்வதென்று தீர்மானித்து நண்பருடன் தட்சிணேசுவரம் காளிகோயிலுக்குச் சென்றார். அந்த மாலை வேளையில் குருதேவர் மேற்கு வாசலில் உள்ள அரைவட்டத் தாழ்வாரத்தில் யாரையோ எதிர்பார்ப்பது போல, கங்கையை நோக்கிய வண்ணம் அமர்ந்திருந்தார். தாரக் அவர் முன் சென்று வணங்கி எழுந்தார்.

பரமஹம்ஸர் அன்பார்ந்த குரலில், “நீ என்னை முன்பே பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டார். ராம்பாபு வீட்டில் பார்த்ததாகக் கூறினார். பின்னர் தாரக்கை அழைத்துக்கொண்டு அறைக்குள் சென்று கட்டிலில் பரமஹம்ஸர் அமர்ந்தார்.

குருதேவரைக் கண்டதும் தாரக்கின் உள்ளத்தில் எழுந்த முதல் குரல் ‘அம்மா’ என்பதே. ‘என் தாயை நான் கண்டேன்’ என்ற உணர்வு அவர் உள்ளத்தை நிரப்பியது. குருதேவரின் திருப்பாதங்களில் தலை வைத்து வணங்கியதும், அவர் தாரக்கின் தலையை வருடிக்கொடுத்தார். இவன் எனக்குரியவன் என்ற மனோபாவம் அந்த செய்கையில் வெளிப்பட்டது. சிறிது நேரம் சென்றதும் தாரக்கைப் பார்த்து குருதேவர், “இறைவன் உருவம் உள்ளவனா, உருவம் அற்றவனா? நீ என்ன நினைக்கிறய்?” என்று வினவினார். தாரக், “நிராகார சொரூபமே எனக்குப் பிடிக்கிறது” என்று பதிலளித்தார். “நல்லது, சக்தி என்று ஒன்று இருக்கிறது. அதையும் நீ அறிய வேண்டும்” என்றார் அவர். பரமஹம்ஸர் கோயிலுக்குச் சென்று ஜகன்மாதாவை விழுந்து வணங்கினார். பிரம்மசமாஜத்தின் தொடர்பினால் தாரக்கின் உள்ளம் உருவக்கடவுளை ஏற்க மறுத்தது. என்றாலும், பிரம்மம் தன்னுள் அனைத்தையும் கொண்டு விளங்கும்போது, இந்த உருவத்திலும் ஏன் இருக்க இயலாது என்று அவரது உள்ளம் வாதிட்டது. அதனால் அன்னை பராசக்தியைச் சிரத்தையுடன் விழுந்து வணங்கினார். மறுநாள் இரவு தாரக் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். இரவில் பரமஹம்ஸர் தாரக்கை எழுப்பி “சிறிது ராம நாமம் பாடேன், கேட்கலாம்” என்றார். தெய்வீகமான சூழ்நிலையில் இரவைக் கழித்துவிட்டு, காலையில் விடைபெற்றபோது ஸ்ரீ ராமகிருஷ்ணர் “மறுபடியும் வா, தனியாக” என்றார். குருதேவர் யாரையாவது ‘தனியாக வா’ என்று கூறினால், அவர் அந்த நபரை உளம் திரித்துப் பணி கொள்ளப் போகிறார் என்று அர்த்தம்.

தாரக் அடுத்த முறை ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரை சந்தித்தபோது, அவர் திடீரென்று தம் திருவடிகளைத் தாரக்கின் நெஞ்சின் மீது வைத்தார். அந்த தொடுதலால், புலன்களுக்கு அப்பாற்பட்ட ஓர் அற்புத உலகிற்கு தாரக்கை இட்டுச் சென்றார். தட்சிணேசுவர கோவிலில் தம்முடன் இரவு தங்குகிறவர்கள் அனைவரையும் தியானம் புரிவதற்காக விடியற்காலை 3 மணிக்கே எழுப்பிவிடுவார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர். அங்குக் கூடியிருக்கும் பக்தர்களில் பலருக்கு சமாதி நிலை சாத்தியமாயிற்று என்பதை தாரக் கவனித்திருந்தார். எனவே குருதேவரிடம் தமக்கும் அந்த நிலை அருள வேண்டும் என்று வேண்டினார். பரமஹம்ஸர், “ஆகட்டும், ஆகட்டும். எதற்கு இப்படி அவசரப்படுகிறாய்? தக்க நேரம் வந்ததும் அன்னை பராசக்தி கடைக்கண் பாலித்து, அனைத்தும் அருள்வாள். தற்சமயம் உனக்கு சொரூப தரிசனம் கிட்டாது. பின்னாளில் ஏற்படும். உன் மனவமைப்பு வேறானது” என்றார். இந்த அருளுரை அப்படியே பிற்காலத்தில் மெய்யானது. தாரக், சுவாமி சிவானந்தராக ஆனபோது, குறிப்பாக அவருடைய கடைசிக் காலங்களில் ஆன்ம அனுபவம் அவருக்கு இயல்பாகவே மாறிவிட்டது.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பேரானந்த நிலையில்...
 தாரக்கின் உள்ளத்தில் பெரும் கலக்கம் ஒன்று அலைகழித்தபடி இருந்தது. ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் தாம் திருமணமானவர் என்று, அதன் காரணமாகத் தம் உள்ளத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களையும் விளக்கி உரைத்தார். உடனே குருதேவர், ”ஏன் இந்த அச்சம்? நான் இருக்கிறேனே! மனைவி என்று ஒருத்தி இருக்கும் வரை அவளைக் கவனித்துத்தான் ஆக வேண்டும். தைரியமாக இரு. அன்னை பராசக்தி அனைத்தையும் சீர் செய்வாள். இடையிடையே வீட்டிற்குச் சென்றுகொண்டிரு. நான் சொல்கிறபடி கேள். நீ மனைவியுடன் வாழ்ந்தாலும் ஒரு கெடுதியும் நேர்ந்துவிடாது” என்று உறுதியளித்தார். இப்படிக் கூறிவிட்டு தாரக்கின் மார்பிலும் தலையிலும் கை வைத்து ஆசிகள் வழங்கினார். “உறங்குவதற்கு முன் மனதை ஒருமைப்படுத்தி, மார்பின் மீது காளியன்னை நிற்பது போல் கற்பனை செய்து கொள். அந்த பாவனையின் மூலம் பக்தி பெருகும். காமத்தை வெற்றி கொள்ள முடியும்”. என்று அறிவுரை பகர்ந்தார்.

சுவாமி விவேகானந்தருடன்:

சுவாமி விவேகானந்தருக்கு  பின்னால் வலதுபுறம் "மகாபுருஷ் மகாராஜ்" அமர்ந்திருக்கிறார்.
நரேந்திரரிடம் தாரக்கிற்குத் தனிப்பட்ட மரியாதை கலந்த பக்தி இருந்தது. அதனை விளக்கும் நிகழ்ச்சி இதோ: காசிப்பூரில் எல்லாச் சீடர்களூம் ஒரு பெரிய கொசு வலைக்குள் ஒன்றாகப் படுப்பது வழக்கம். ஒரு நாள் இரவு தூக்கம் கலைந்து எழுந்த தாரக் அற்புதக் காட்சி ஒன்றைக் கண்டார். ஒளிமயமான சிறுசிறு சிவமூர்த்திகள் நரேந்திரருடைய உடலை நாலாபக்கங்களிலும் சுற்றி வருவதைக் கண்டு அதிசயித்தார். உடனே நரேந்திரரை எழுப்பி தாம் கண்டதைப் பற்றித் தெரிவித்தார். ஆனால் அவரோ அது ஒன்றும் அதிசயமில்லை, தாம் இதனைச் சிறுபிராயத்திலிருந்தே கண்டு வருவதாகக் கூறிவிட்டுப் படுத்தார். நரேந்திரருடைய மற்றொரு பெயர் வீரேசுவரர். காசியில் உள்ள சிவமூர்த்தி சிவ கணங்களுடன் இவ்வாறுதான் உள்ளார். அம்மூர்த்தியை வழிபட்டதன் பயனாகப் பிறந்தவர்தாம் நரேந்திரர் என்பதெல்லாம் தாரக்கிற்கு நினைவிற்கு வந்தன. இதற்குப் பின்னர் தாரக் நரேந்திரரை நடமாடும் சிவனாகவே எண்ணி வந்தார்.
"மகாபுருஷ் மகராஜ்


நமது பெரிய சுவாமிஜி சித்பவானந்தரின் குருநாதராகிய சுவாமி சிவானந்தருக்கு மகாபுருஷ் மகராஜ் என்ற பெயர் அமையக் காரணமான ஒரு நிகழ்ச்சியைப் பற்றி...
நிகழ்ச்சி-I
 
       சுவாமி சிவானந்தரின் பூர்வாசிரமப் பெயர் தாரக்நாத் என்பதாகும். திருமணம் புரிந்து சிறிது காலத்திற்குள்ளாகவே எதிர்பாராதவிதமாக நோய்வாய்ப்பட்டு தாரக்நாத்தின் மனைவி நித்யகாளிதேவியும் இறந்தார். மனைவியின் மறைவால், இல்வாழ்க்கைப் பிணைப்பு அறவே அற்று வீழ்ந்தது.

சுவாமி விவேகானந்தர் அவரை தாரக்தா(தாரக் அண்ணா) என்று மிகவும் மரியாதையுடன் அழைப்பார். சுவாமி விவேகானந்தர் அன்பாக சுவாமிகளுக்கு சூட்டிய ஓர் அழகான பெயர்தான் 'மகாபுருஷர்' என்பது. அது ஓர் உன்னதமான நிகழ்ச்சி. ஒரு நாள் சுவாமி சிவானந்தர் பலராம் பாபுவின் இல்லத்திற்குச் சென்றார்அங்கு குருதேவரைப்பற்றி உரையாடல் எழுந்தது. சுவாமி விவேகானந்தர் உரையாடலின் நடுவே, 'ஸ்ரீ ராமகிருஷ்ணர் மட்டுமே காமத்தை வென்றவர். திருமணத்திற்குப் பின்னரும் காமனை வெற்றி கொள்வது முடியாத ஒன்று' என்றார். அதைக் கேட்ட சிவானந்தர் அடக்கமாக, 'ஸ்ரீ ராமகிருஷ்ணர் என்னுள் ஏற்படுத்திய சக்தியின் ஆற்றலால் எனக்கு காம ஜெயம் சாத்தியமாயிற்று' என்று கூறினார். சுவாமிகளின் வார்த்தைகளில் இருந்த சத்தியத்தை உணர்ந்த சுவாமி விவேகானந்தர் வியப்பின் எல்லைக்குச் சென்றார்உடனே அவர் சுவாமிகளிடம், 'அப்படியா? அப்படியானால் நீங்கள் ஒரு மகாபுருஷர்தாம், சந்தேகமில்லை' என்று போற்றினார். அன்றிலிருந்து அடியார் கூட்டம் சுவாமி சிவானந்தரை "மகாபுருஷ் மகராஜ்" என்ற பெயராலேயே அழைக்கத் தொடங்கியது.

நிகழ்ச்சி - II
சுவாமிகளை "மகாபுருஷர்" என்று சுவாமி விவேகானந்தர் அழைத்ததற்கு இன்னுமொரு காரணமும் இருப்பதாகக் கூறப்படுகிறது. சுவாமி விவேகானந்தர், சுவாமி அபேதானந்தர், சுவாமி சிவானந்தர் ஆகிய மூவரும் புத்தகயா சென்று ஆன்ம சாதனை புரிந்தனர். புத்தரின் துறவற உணர்வில் தம்மை இழந்திருந்த சுவாமி விவேகானந்தர், புத்தரின் காட்சி கிடைக்க இரவுபகலாகத் துடித்தார். அந்தச் சமயத்தில் சுவாமி விவேகானந்தருக்கு புத்தரின் திருக்காட்சி கிட்டியது. அக்காட்சி கொடுத்த ஆனந்தத்தில் திளைத்தார் விவேகானந்தர். சற்று நேரத்திற்கெல்லாம் புத்தரின் திருவுருவம் மெல்ல மெல்ல மறைந்து சுவாமி சிவானந்தரின் தேகத்துடன் கலந்தது. இந்த அற்புதக் காட்சியைக் கண்ட பின்னரே சுவாமி விவேகாந்தர், சுவாமி சிவானந்தரை, "மகாபுருஷர்" என்று அழைக்கத் தொடங்கினார்.

சந்நியாசம்:
வட்டமிடப்பட்டுள்ள நபர்தான் சுவாமி சிவானந்த மகராஜ்!
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் எல்லாச் சீடர்களும் ஒன்றாகச் சேர்ந்து ஆன்ட்பூர் சென்று ஒரு வாரத்திற்கும் மேலாக தங்கி, ஆனந்தமாக ஜபம், தியானம் முதலியவற்றைப் புரிந்தனர். பின்னர் கிறிஸ்துமஸ் தினத்தன்று இரவு ‘துனி’ வளர்த்து தியானம், வைராக்கியம் என்பது பற்றி நரேந்திரர் மிகவும் அற்புதமாக பேசிய பின்னர் எல்லோரும் துறவறம் மேற்கொள்வது என்று தீர்மானித்தனர். அதன்படி, ஸ்ரீ ராமகிருஷ்ணரின் திருப்பாதுகைகளின் முன்னர் விரஜா ஹோமம் நடத்தி முறைப்படி சந்நியாசம் மேற்கொண்டனர். சிவக்கொழுந்து போலிருந்த தாரக்கிற்கு சுவாமி சிவானந்தர் என்ற சந்நியாச பெயர் அமைந்தது. சிவாம்சம் மிகுந்திருந்த தாரக் சந்நியாசம் மேற்கொண்டதும் சிவப்பழமாகவே மாறிவிட்டார்.

சுவாமிஜியின் ‘சுப்ரீம் கோர்ட்’:

சுவாமிகள் பேலூர் மடத்து மேலாளராக இருந்தபோதிலும், மடம் சம்பந்தமான முக்கிய விஷயங்களில் அன்னை சாரதாதேவியாரைக் கலந்தாலோசித்தே முடிவெடுப்பார். சுவாமிகள் அன்னையை மிக உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துப் போற்றி வந்தார்.
அன்னை ஸ்ரீ சாரதா தேவியார்.
ஒருமுறை பேலூர் மடத்து பிரம்மச்சாரி ஒருவர் ஏதோ தவறு செய்துவிட்டார். மடத்திலிருந்த எல்லோரும் சுவாமி சிவானந்தர் யார் தவறு செய்தாலும் அவர்களை மடத்தை விட்டுத் துரத்தி விடுவார் என்று அந்த பிரம்மச்சாரியை பயமுறுத்திவிட்டனர். பயந்துபோன பிரம்மச்சாரி யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் ஜெயராம்பாடி சென்று அன்னை சாரதா தேவியிடம் தஞ்சம் புகுந்தார். அன்னையார், அந்த பிரம்மச்சாரியை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சுவாமி சிவானந்தருக்கு கடிதம் எழுதினார். அதன்படி அந்த பிரம்மச்சாரி மடத்தில் அனுமதிக்கப்பட்டார். அவர் சுவாமியை சந்தித்தபோது, சுவாமிகள் சிரித்தபடி அவரைத் தழுவிக்கொண்டு, “கடைசியில் நீ ‘சுப்ரீம் கோட்’டில் புகார் கொடுக்கச் சென்றுவிட்டாயே தம்பி!” என்று கூறினார். சுவாமிகளுக்கு எல்லா விஷயங்களிலும் ‘சுப்ரீம் கோர்ட்’ அன்னையே!

சுவாமிகள் அன்னையைப் பற்றிக் கூறும்போது கண்களில் பக்திக் கண்ணீர் பெருகிவிடும். அவர் கூறுகிறார்: “உலகில், பெண்மையை விழிப்புறச் செய்யவே அன்னையார் அவதரித்தார். அன்னையாரின் மகிமையை ஆரம்ப காலத்தில் நாங்கள் (சகோதர சீடர்கள்) கூட அறிந்திருக்கவில்லை. குருதேவர் மட்டுமே அன்னையாரை, அவரது மகிமையை நன்கு அறிந்திருந்தார். சுவாமி ஜி (விவேகானந்தர்) ஓரளவிற்கு அறிந்திருந்தார். அன்னையின் ஆசிகளைப் பெற்ற பின்னர்தான் சுவாமிஜி உலகை வெல்ல முடிந்தது!”

தலைவர் பொறுப்பு:

சுவாமி பிரம்மானந்தர் மகாசமாதி அடைந்த பின்னர், தலைமைப் பொறுப்பை யாரால் வகிக்க இயலும் என்று மடத்தில் பொறுப்புள்ள பலரும் சிந்தனையுள் ஆழ்ந்தனர். மிகுந்த ஆலோசனைக்குப் பிறகு மகாபுருஷ் மகராஜைத் தேர்ந்தெடுத்தனர். 1901-ஆம் ஆண்டு, சுவாமி விவேகானந்தர், சுவாமிகளை மடத்து அறங்காவலர்களில் ஒருவராக நியமித்திருந்தார். சுவாமிகள் 1910, ஆகஸ்ட் 25-ஆம் தேதி ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனின் உபதலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1922, மே 2-ஆம் தேதியன்று மடம் மற்றும் மிஷனின் தலைவரானார்.

ஹரிஜனங்களின் ஆலயப் பிரவேசம்:

சுவாமி சிவானந்தர் பெங்களூரில் தங்கியிருந்தபோது எடுக்கப்பட்ட படம்
சுவாமிகள் பெங்களூர் சென்றிருந்தபோது, ஆசிரமத்திற்கு அருகாமையில் ஹரிஜன குடியிருப்பு ஒன்று இருந்தது. தாழ்த்தப்பட்ட குழந்தைகள் தினமும் சுவாமிகளிடம் ஆசி பெற்றுச் செல்வார்கள். அதோடு சாக்லேட், பிஸ்கெட்களை தந்து மகிழ்விப்பார்.

பெங்களூரில் ஒரு ஹரிஜன கிராமத்திற்குச் சென்றார். அங்கு ஒரு சிறிய கோயில் இருந்தது. ஊர்க்குப்பை முழுதும் அதனுள்ளே என்பது போன்ற ஒரு நிலைமை. மகாபுருஷ் மகராஜ் அங்கு சென்ற போது யாரோ ஒரு மகான் வந்திருக்கிறார் என்பதை ஊர் மக்கள் அறிந்துகொண்டனர். சுகாதாரத்தை வலியுறுத்திய பேசிய பின், பிறகு கோவிலுக்குச் சென்றார். குங்குமப்பொட்டு தரித்திருந்த சிலைகள் முன்பு கண் மூடி ஆழ்ந்து பிரார்த்தித்தார். பால் பாயாசம் செய்து தெய்வத்திற்கு படைக்க வேண்டும் என்று அவர் கூற கிராமத்தினரும் ஒத்துக்கொண்டு வீழ்ந்து வணங்கி ஆசி பெற்றனர். அதுநாள் வரை எந்த உயர்குலத்தினரும் அந்த ஹரிஜன கிராமத்திற்கு சென்றதில்லை. இது நடந்தது 1924-ஆம் ஆண்டில். இந்த நிகழ்ச்சி நடந்த பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் நம் நாட்டுத் தலைவர்கள்  ஹரிஜனங்களுடன் ஆலயப் பிரவேசம் செய்தனர். 1937-ஆம் ஆண்டுதான் சென்னை மாகாணம் ஹரிஜனங்கள் ஆலயப் பிரவேசம் செய்வதற்கான சட்டத்தை இயற்றியது. இதற்கெல்லாம் முன்னோடியாக விளங்குகிறது சுவாமிகள் செய்த ஆலயப் பிரவேசம்.

தமிழகத்திற்கு சுவாமி சிவானந்தரின் கொடை:
‘மகாபுருஷ் மகராஜ்’ சுவாமி சிவானந்தரின் கீழ்கண்ட சீடர்கள் சென்னை மடத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்கள்:

சுவாமி கைலாசானந்தர், சுவாமி சுத்தசத்வானந்தர், சுவாமி தபஸ்யானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயத்தின் ஆசிரியர் பொறுப்பும், தமிழகமெங்கும் ஸ்ரீ ராமகிருஷ்ண-விவேகானந்த கருத்துக்களைப் பரப்பும் பொறுப்பையும் ஏற்று நடத்தியவர்கள்: சுவாமி விபுலானந்தர், சுவாமி சர்வக்ஞானந்தர், சுவாமி சித்பவானந்தர், சுவாமி ருத்ரானந்தர், சுவாமி ரங்கநாதானந்தர், கல்வித் தொண்டாற்றிய திரு. ‘அண்ணா’ சுப்ரமண்யம், திரு. டி.எஸ். அவினாசிலிங்கம் போன்ற பலரும் சுவாமிகளின் அருளைப் பெற்றவர்கள். இந்தச் சீடர் குழாத்தைப்பற்றி அறியும்போது, இவர்கள் செய்த சேவைகளை ஆராயும்போது, இவர்கள் மூலம் வெளிப்பட்ட மகாபுருஷ் மகராஜின் அருள் தமிழகத்திற்குச் சற்று கூடுதலாக இருப்பது தெரிகிறது.
First Meet of My Guru
-Srimath Swami Chidbhavananda.
பெரிய சுவாமிஜி (இடம்: பெரிய சுவாமிஜியின் அறை)
          As a novice fresh from college, I had joined the Ramakrishna Order in March 1923. Swami Akhilananda of Sri Ramakrishna Math at Madras was then my guide. He escorted me from Madras to the Belur Math. On the way, at Bhuvaneswar, we had broken our journey with the object of participating in the opening ceremony of the newly started Sri Ramakrishna Math in that place. There, I was introduced to Sri Mahapurushji Maharaj, the second President of the Order. He accepted me as disciple and initiated me. From Bhuvaneswar we then proceeded to the Belur Math, the headquarters of the Order. Swami Akhilananda was sparing no pains in getting me fixed in the new surrounding. Every day he was taking me to the places and centres all connected with Guru Maharaj’s earthly career.
உதகை(கோடப்பமந்து) ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்

ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் பூர்வாசிரமப் பெயர் சின்னு என்பது நாம் அறிந்ததே. இளைஞனாக இருந்த சின்னு துறவு மார்க்கத்தில் நாட்டம் கொண்டிருப்பதைப் பார்த்து ‘மகாபுருஷ் மகராஜ்’ ஸ்ரீமத் சுவாமி சிவானந்தர் பெருமகிழ்வு அடைந்தார். அப்பொழுது, பேலூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துக்கு ஸ்ரீ சிவானந்த சுவாமிகள் தலைவராக இருந்தார். சின்னுவைத் தம் சீடராக ஏற்றுக்கொண்டு பேலூர் மடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு சின்னுவுக்கு திரையம்பக சைதன்யர் என்று நாமம் சூட்டி பிரம்மச்சரிய தீக்ஷை கொடுத்தார்.

1924 ஆம் ஆண்டு தம் குருநாதரின் அனுமதியையும், ஆசியையும் பெற்று திரையம்பக் சைதன்யர் தென்னாட்டில் யாத்திரை மேற்கொண்டார். ஸ்தல யாத்திரை முடித்தபின் திரையம்பக சைதன்யர் பேலூர் மடம் சென்று தம் குருநாதரைச் சந்தித்தார். தம் குருநாதரிடம் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை எல்லாம் எடுத்துக்கூறினார். அப்பொழுது ஸ்ரீமத் சிவானந்த சுவாமிகள் உடல் நலம் குன்றி இருந்தார். தென்னாட்டிலுள்ள நீலகிரி சிறந்த மலை வாசஸ்தலம் என்றும் அங்கு சில நாட்கள் அவர் தங்கியிருப்பது உடலுக்கு நலம் தரும் என்றும் திரையம்பக சைதன்யர் தம் கருத்தை குருநாதரிடம் தெரிவித்தார். குருநாதரும் அதற்கு ஒத்துக்கொண்டார். திரையம்பக சைதன்யர் செங்குட்டைப்பாளையத்திலுள்ள தம் குடும்பத்தினருக்கு “என் குருநாதர் மலைவாசம் செய்யும் பொருட்டு நீலகிரியில் தங்கியிருக்க விரும்புகிறார். அவர் தங்கியிருக்க இடவசதி செய்து தர வேண்டும்.” என்று ஒரு கடிதம் எழுதினார். அப்பொழுது குடும்பத்தை நடத்தி வந்த திரு. ரத்தினசபாபதி குன்னூரில் தங்களுக்குச் சொந்தமாயிருந்த எஸ்டேட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார். திரையம்பக சைதன்யர் தம் குருநாதருடன் அங்கு வந்து சில நாள் தங்கியிருந்தார்.

திரையம்பக சைதன்யரும் அவருடைய குருநாதரும் இப்பொழுது உதகமண்டலத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துக்கு எதிரில் அமைந்திருந்த ஓய்வு இல்லம் ஒன்றில் தங்குவதற்கு ஏற்பாடாயிற்று. குன்னூரிலிருந்து புறப்பட்டுச் சென்று அங்கு சில நாட்கள் இருவரும் தங்கியிருந்தார்கள்.

நீலகிரியின் இயற்கை அழகு ‘மகாபுருஷ் மகராஜ்’ சிவானந்த சுவாமிகளுடைய உள்ளத்துக்கு மிகவும் ரமணியமாக இருந்தது. நீலகிரியில் ஓர் ஆசிரமம் உருவாகுமானால் ஆத்ம சாதகர்களுக்கு அது மிகவும் உதவியாக இருக்கும் என்று அவர் சங்கல்பம் செய்தார்.

ஒரு நாள் காலை அவர் நீலகிரியின் இயற்கை அழகைக் கண்டு ரசித்த வண்ணம் அங்குள்ள சோலைகளின் வழியாகப் போய்க்கொண்டிருந்தார். அவருடன் சென்ற அன்பர்களோடு உதகையில் ஆஸ்ரமம் அமைப்பதைப் பற்றி ஆலோசனை செய்துகொண்டே போனார். அப்பொழுது அவர்களுக்கு எதிரே ஒருவர் தென்பட்டார். அவர் தம் பெயர் திருவேங்கடம் என்றும் உதகைக்குப் பக்கத்தில் உள்ள கீழ்கோடப்பமந்து என்னும் இடத்தில் தாம் வாழ்ந்து வருவதாகவும், தாம் சலவைத் தொழில் செய்து வருவதாகவும் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார். அன்பர்கள், “காளிதேவியின் காட்சி பெற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அத்யந்த சீடர்களில் இந்த சுவாமி ஒருவர்” என்று சுவாமியைத் திருவேங்கடத்துக்கு அறிமுகப் படுத்தினார்கள். திருவேங்கடம், “எங்கள் குலதெய்வம் காளிகா தேவியாவாள். ஓர் ஆண்டுக்கு முன்பு எங்கள் குல தெய்வம் என் கனவில் தோன்றிக் கோவிலுக்குப் பக்கத்திலுள்ள எனக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தைத் தன் பக்தர்களுக்குக் கொடுக்க வேண்டுமென்று ஆணையிட்டிருக்கிறாள். அவ்வாணைப்படி அந்நிலத்தை இந்த சுவாமிகளிடம் ஒப்படைக்க நான் முடிவு செய்துவிட்டேன்” என்று கூறினார். இதைக் கேட்டதும் ஸ்ரீமத் சிவானந்த சுவாமிகள் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் திட்டத்தை அறிந்து ஆனந்தக்கண்ணீர் வடித்தார். இறைவனுடைய திட்டம்தான் பெரியோர்களுடைய சங்கல்பமாக வருகிறது என்பதற்கு இந்நிகழ்ச்சி சிறந்த சான்றாகும்.
ஊட்டியில் மகாபுருஷ் மகராஜ், சுவாமி சித்பவானந்தர் மற்றும் பக்தர்கள் சிலர்.
1924 – ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருவேங்கடம் அளித்த இடத்தில் புதிய ஆஸ்ரமம் கட்டுவதற்கு ‘மகாபுருஷ் மகராஜ்’ அவர்கள் கால்கோள் நாட்டினார்கள். இரண்டு ஆண்டுகளில் ஆஸ்ரமக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த ஆஸ்ரமம் கட்டுவதற்குத் திரையம்பக சைதன்யரின் குடும்பத்தினர் பலவகையிலும் உதவியாக இருந்தார்கள். 1926 – ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் ‘மகாபுருஷ் மகராஜ்’ ஸ்ரீமத் சிவானந்த சுவாமிகள், அவர் தம் திருக்கரங்களால் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீ சாரதா தேவியார், ஸ்ரீ விவேகானந்தர் ஆகிய மூவர் படங்களையும் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்தார். அன்று, அவ்விழாவுக்கு மக்கள் திரளாக வந்திருந்தனர்.

ஸ்ரீ தாயுமான சுவாமி பாடல்களின் மேல் இருந்த ஈடுபாடு:
தமிழகத்திற்கும் சுவாமிகளுக்கும் இருந்த இன்னுமொரு தொடர்பு நம்மை மேலும் பெருமைப்படச் செய்கிறது. மகாபுருஷ் மகராஜ் சுவாமிகள் இலங்கையில் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது தாயுமானவரின் பாடல்களைக் கேட்கும் வாய்ப்பினைப் பெற்றாராம். தாயுமானவரின் பராபரக்கண்ணி பாடல்கள் சிவானந்தரைக் கவர்ந்தன. மகராஜ்க்கு தமிழ் தெரியாது. என்றாலும், மொழியைக் கடந்துள்ள தாயுமானவரின் உணர்வுகளை உணரும் நிலையில் இருந்தார். தாயுமானவரின் பாடல்கள் உயர் ஆன்மீக நிலைகளிலிருந்து எழுதப்பட்டவை என்று மகாபுருஷ் மகராஜ் கூறுவாராம். பிற்காலத்தில், தமிழகத்திலிருந்து பேலூர் மடம் செல்லும் சாதுக்களிடம் தாயுமானவரின் பாடல்களைப் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்வாராம். சுவாமி சித்பவானந்தர் தாயுமானவரின் பாடல்களுக்கு விளக்கமும் உரையும் எழுதியதற்கு சுவாமிகளே தூண்டுகோலாக விளங்கினார்.

மகாசமாதி:
1933, ஏப்ரல் 25-ஆம் தேதி மந்திர தீட்சை வழங்கிவிட்டு, உணவு உட்கொண்டார். அப்பொழுது ஏற்பட்ட கடுமையான பக்கவாத நோயினால், பேசும் சக்தியை இழந்தார். வலது பக்க உறுப்புக்கள் வலுவிழந்தன.  இப்படியே ஒரு வருடம் சிரமத்துடன் காலம் கழிந்தார்.

1934, பிப்ரவரி 18-ஆம் தேதி, ஸ்ரீ ராமகிருஷ்ணரின் ஜயந்தி விழா நன்கு நிறைவேறியது. 20-ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, மகராஜின் உடல்நலம் படிப்படியாகக் குன்றிக்கொண்டே வந்தது. மாலைப்பொழுது 5:30 மணியளவில் அவர் முகமண்டலத்தில் ஓர் அபூர்வமான ஒளி வீசிற்று. ஓர் ஆனந்த புளங்காகிதத்திற்கிடையில் அவருடைய் இறுதி மூச்சும் வெளிவந்தது. தம் குரு நாதர் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பாத கமலங்களில் மகாபுருஷர் நிரந்தரமாகக் கலந்துவிட்டார்.

2 comments: