Thursday, November 17, 2011

*17.11.1985

சுவாமிஜியின் திருமேனி பூமாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஹாலில் வைக்கப்பட்டிருந்தது. அனைவரும் மலரிட்டு வணங்கினார்கள். சுவாமிஜியின் முகம் தேஜஸோடு விளங்கியது. “எப்போது வந்தீர்கள்? உட்காருங்கள்” என்று சொல்வது போலிருந்தது. வேதபாராயணம், பஜனை, நாமாவளி, சுவாமிஜி எழுதிய நூல்களிலிருந்து கருத்துக்களை வாசித்தல் இப்படி நிகழ்ச்சிகள் மாறி மாறி நடந்துகொண்டிருந்தன. மதியம் 1 மணிக்கு மேல் பக்தர்கள் கூட்டமும் மாலைகளும் குவிய ஆரம்பித்தன. புஷ்ப ரதத்தில் சுவாமிஜி துயில்கொள்வது போல் இருந்தது. அனைவருடைய முகங்களும் சோகத்தால் வாடி இருந்தன. கண்கள் கண்ணீரைச் சிந்திக்கொண்டிருந்தன.


மாலை 4 மணி அளவில் நித்தியானந்த சுவாமிகள், “சுவாமிஜியின் திருமேனியைத் துறவிகள் இப்போது தூக்கிச் செல்லப் போகிறோம். அன்பர்களும் தாய்மார்களும் அவரவர் இடங்களிலேயே அமர்ந்திருக்க வேண்டும். தலைமை ஆசிரியர் எப்போது எழுந்து எந்த வழியே போகச் சொல்கிறாரோ அப்படியே செல்ல வேண்டும். நம் சுவாமிஜி ஒழுக்கம் கட்டுப்பாடு இவைகளையே தம் வாழ்வில் வாழ்ந்து காட்டினார். அவைகளை கடைபிடிக்கும்படி நமக்கு வலியுறுத்தி வந்தார். இப்போது நாம் அவைகளைக் கடைபிடிப்பது சுவாமிஜிக்குச் செய்யும் வழிபாடாகும்” என்று குரல் தழதழக்க கண்கள் நீர்மல்கக் கூறியது எல்லாருடைய உள்ளங்களையும் நெகிழ வைத்து கண்களில் நீர்மல்கச் செய்தது.

விவேகானந்த வித்யாவனத்திற்கு அடுத்து காவேரிக் கரைக்கு சுவாமிஜியின் திருமேனியைத் துறவிகளும் அன்பர்களும் கொண்டு சென்றார்கள். 4:50க்கு சுவாமிஜியின் துறவற சிஷ்யர்கள் சிதைக்கு தீ மூட்டினர்.


இன்றைய தினசரி தியானம்

நவம்பர் 17

உடலை அலங்கரித்தல்

உடல் ஞாபகம் மறந்துபோகவும் பரபோதம் மேலோங்கவும் இறைவா, எனக்கு நீ அருள்புரிவாயாக.

உடல்பற்று வைத்திருப்பவனே உடலை அலங்கரிக்கிறான். பாபங்கள் அனைத்தும் உடல்பற்றினின்று உதிக்கின்றன. உள்ளம் பரிபக்குவம் அடையுமளவு உடலைப்பற்றிய எண்ணம் மறைந்துபோய்விடுகிறது. உடல் வாழ்க்கை வாழ்ந்திருக்கும்பொழுது உடலைப்பற்றி எண்ணாதிருப்பவனே நல்ல ஆத்ம சாதகன்.

அநித்தியத்தை நித்தியமென்று ஆதரவா யெண்ணுதே
தனித்திருக்கேன் என்குதே தனைமறக்கேன் என்குதே.
-பட்டினத்தார்.

No comments:

Post a Comment