Saturday, June 30, 2012

*வீரத் துறவி விவேகானந்தர் – பாகம் 4


(மூன்றாம் பாகத்தின் தொடர்ச்சி)
போக பூமிக்கு புறப்படுதல்:
பிறநாடு போதற்கு நிதி சேகரிக்கவேண்டுமென்று சிஷ்யர்கள் விரைந்து வெளியே கிளம்பிப் போனார்கள். ஒரு சிலர் மைசூர், ராமநாதபுரம், ஐதராபாத் முதலிய சமஸ்தானங்களுக்குப் போய் பொருள் திரட்டியெடுத்து வந்தனர். சென்னையில் சேகரித்த தொகை உட்பட பிரயாணத்துக்கு வேண்டிய ரூபாய் முழுதும் 2, 3 வாரங்களில் சேர்ந்துவிட்டது. பம்பாயிலிருந்து கப்பல் ஏறிப் போகவேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. இத்தனை நாள் மூட்டை முடிச்சு ஒன்றும் இல்லாது யதேச்சையாய்த் திரிந்தவருக்கு பட்டாடைகள், பெட்டிகள், படுக்கை முதலியன தயாரிக்கப்பட்டன. போகபூமியில் இருப்பவர்களுக்கு யோகத்தைப் பற்றிய செய்தி சொல்ல வேண்டியிருந்தமையால் சுவாமிகள் இத்தகைய வெளியாடம்பரங்களுக்கு உட்பட வேண்டியிருந்தது. 1893ஆம் ஆண்டு மே மாதம், 31ஆம் தேதி “பெனின்சுலார்” என்ற பெயர் படைத்த கப்பலேறி அமெரிக்கா நோக்கி பயணமானார்.
ஹாங்காங்:
கொழும்பு, பினாங்கு, சிங்கப்பூர் துறைமுகங்களில் கப்பல் நின்றபோது அவ்வூர்களை விரைந்து சென்று பார்த்து வந்தார். சீனத்தில் ஹாங்காங்கில் கப்பல் 3 நாட்கள் நிற்கவேண்டியிருந்தது. உள்நாட்டில் இருந்த ஒரு பௌத்த மடாலயம் ஒன்றை சுவாமிகள் பார்வையிட்டு வரலாமென்று சகபிரயாணிகளான ஜெர்மானியர்களுடன் புறப்பட்டார். ஆலயத்தில் சீன சந்நியாசிகள் அனுமதிக்கமாட்டார்கள் என்று வழி காட்டினவன் தடை சொன்னான். இருப்பினும் கோயிலை நோக்கிச் சென்றனர். எதிர்பார்த்தது போல சீனர்கள் கோபாவேசத்துடன் தடிகளைத் தூக்கிக்கொண்டு ஓடிவந்ததைக் கண்ட சகபிரயாணிகள் ஓட்டம் பிடித்தனர். சுவாமிகள் மட்டும் ஆசிர்வதிப்பவர் போல் வலது கையை மட்டும் தூக்கி நின்றுகொண்டு “ஹிந்துயோகி” என்றார். யோகி என்ற வார்த்தை அக்கணமே அவர்களது முகக்குறியை மாற்றிவிட்டது. சீனர்கள் கோயிலினுள் சுவாமிகளை அழைத்துச் சென்று அனைத்தையும் காட்டினார்கள். சம்ஸ்க்ருத நூல்கள் பல பழைய ஏடுகளில் எழுதி வைக்கப்பட்டிருந்ததைப்  பார்த்த சுவாமிகள் ஆச்சரியப்பட்டார். இந்தியாவிலிருந்து பரவின புத்த மதம் தான் இதற்குக் காரணமென்று சுவாமிகள் கருதினார்.
அமெரிக்கா அடைதல்:
பெனின்சுலார் கப்பலானது ஜப்பான் தேசத்துக்குப் போயிற்று. அழகு, ஆக்கம், ஊக்கம் வாய்க்கப்பெற்று, அதிவேகமாய் முன்னேற்றமடைந்து வருகின்ற ஜப்பானைப் பார்த்துவிட்டு, சுவாமிகள் பசிபிக் மகாசமுத்திரத்தியக் கடந்து அமெரிக்கா போய்ச் சேர்ந்தார்.
மேற்குக் கரையில் வான்கூவர் என்ற துறைமுகத்தில் கப்பலினின்று இறங்கி சுவாமிகள் மூன்று நாள் பயணம் செய்து சிகாகோ நகர் போய் சேர்ந்தார்.
சிகாகோ நகரம்:
அமெரிக்க நாட்டுப் பழக்க வழக்கங்கள் ஒன்றும் தெரிந்திராத சுவாமிகள் கும்பலும் குழப்பமும் நிறைந்திருந்த அந்த பிரமாண்டமான சிகாகோ ரயில்வே ஸ்டேஷனிலிருந்து எவ்வாறு எங்கே செல்வது என்று ஒன்றும் தெரியாது திகைத்திருந்தார். இராஜமாளிகை போன்று காணப்பட்ட ஒரு ஹோட்டலில் போய் இறங்கினார். தமக்கான அறையினுள் சென்றதும் அவர் நெடுநேரம் நிஷ்டைபுரிந்து மனோசாந்தி பெற்றார். சுமார் 10, 12  நாட்கள் அந்நகரில் நிகழ்ந்த உலகக் கண்காட்சி சாலைக்குப் போய் வந்தார்.
இடர்பாடுகள்:
தாம் நாடி வந்த முக்கிய காரியம் பலிதமாகுமா என்னும் ஐயம் எழுந்தது. இந்தியாவில் கூடுகின்ற சத்சங்கங்கள் போன்றதல்ல இது. ஒரு மதத்தின் பிரதிநிதியாக இன்னவரை அனுப்புகிறோம் என்று அந்நாட்டு மக்கள் முன்னதாகவே விண்ணப்பித்து மகாசபையின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் சுவாமி விவேகானந்தரோ அல்லது அவரை அனுப்பி வைத்த சென்னை மாணவர்களுக்கோ இத்தகைய உலக நடைமுறை பற்றி ஒன்றும் அறியாதவர்கள்.
மகாசபை கூடுவதற்கு இன்னும் ஏழு வாரங்கள் இருந்தன. சிறிது முன்னதாகவே இவர் அமெரிக்காவுக்கு வந்துவிட்டார். கையிலிருந்த பணமோ அதிவேகமாய் செலவாகி வந்தது. அந்த நாட்டு வழக்கத்துக்கு விபரீதமான உடை தரிந்திருந்த இவரை வீதியில் கண்டவர்களெல்லாம் எள்ளி நகையாடினார்கள்.
இறைவனது அருட்செயல்:
கையிலிருந்த பணத்தில் பெரும்பகுதி சிகாகோ நகரில் செலவாகிவிடவே, சிக்கனமான வாழ்வுக்குப் பொருந்திய இடமாகிய பாஸ்டனுக்குப் புறப்பட்டார். பிரயாணம் செய்து கொண்டிருக்கையில் ரயில் வண்டியில் இவரோடு பேசிக்கொண்டு வந்த மாது ஒருத்தி இவரைத் தன் வீட்டில் விருந்தினராய் கொஞ்சநாளைக்கு அமரும்படி அழைத்தாள். விபரீதமான இந்த மானிடரைத் தன் நண்பர்களுக்கு வேடிக்கை காட்ட வேண்டுமென்பது அக்கிழவியின் நோக்கம்! எப்படியாவது பணம் செலவில்லாது காலம் போக்க வேண்டுமென்பது சுவாமிகளது கருத்து! இருவர் நோக்கமும் பலிதமாயிற்று.
இவரை வேடிக்கை பார்க்க வந்தவர்களுள் அமெரிக்காவெங்கும் பெயர் பெற்றிருந்த ஆசிரியர் ஜே.எச்.ரைட் என்பாரும் ஒருவர். சுவாமிகளுடன் சிறிது நேரம் உடையாடினதும் அவரது மகிமையை ஆசிரியர் அறிந்துகொண்டார். “பெரியோய்! சர்வமத  மகாசபையில் ஹிந்து மதத்தைப்பற்றி நீவிர் அவசியம் உபந்நியாசம் செய்ய வேண்டும்” என்றார் அவர். “நீவிர் இன்றைக்கே சிகாகோ நகருக்கு புறப்படும்! வேண்டிய ஏற்பாடுகளை நான் செய்து வைக்கிறேன்” என்று ஆர்வத்துடன் பேசினார் ஆசிரியர் ஜே.எச். ரைட்.
பேரறிஞராகிய ஆசிரியர் ஜே.எச். ரைட் சர்வமத மகாசபையை நிர்வகிக்கும் பெரியார்களுள் செல்வாக்கு மிகப்படைத்தவர். அவர் அச்சபைத் தலைவருக்கு எழுதின சிபாரிசுக் கடிதத்தில்  பல அடைமொழிகளுக்கிடையே, “நமது ஆசிரியர்கள் எல்லோரும் ஒன்று திரண்டு நின்றாலும் கல்வியில் இப்பெரியாருக்கு ஒப்பாகமாட்டார்கள்” என்று வரைந்திருந்தார். சுவாமிகள் கையில் போதிய அளவு பனமில்லாதிருப்பதை தெரிந்து ரயில் பயணச் சீட்டும் வாங்கிக்கொடுத்து அவரை சிகாகோவுக்கு அனுப்பி வைத்தார்.
சோதனைக் காலம் நிறைவுறுதல்:
சிகாகோ நகருக்கு சுவாமி விவேகானந்தர் வந்து சேர்ந்தது இரவு நேரம். விதி வசத்தால் சேர வேண்டிய இடத்தின் விலாசத்தை இழந்துவிட்டார். பிரயாண களைப்பால் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்றெண்ணி ஸ்டேஷனில் தங்கிவிட்டார். சொற்ப நாட்களில் அமெரிக்காவையே ஆட்டி வைக்கப்போகிறவர் நீண்ட பெட்டியின்மீது படுத்துக்கிடந்தார்.
மறுநாள் காலையில் தாம் சேரவேண்டிய இடத்தை நாடி மாளிகைகள் நிறைந்த வீதிகளில் கால்நடையாக விசாரித்துக்கொண்டே போனார். வீடுதோறும் சந்திக்க வேண்டியவரை பெயரைச் சொல்லி விசாரித்தார். சிலர் சிரித்தனர்; வேடிக்கை செய்தனர்; சீறி விழுந்தனர்; சினந்து கர்ஜித்தனர்; சிலர் இன்சொல் கூறினர். யதேச்சையாக இவர் மீது அனுதாபம் காட்டிய சீமாட்டி ஒருத்தியால் சேரவேண்டிய இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மகாசபை நிர்வாகிகளும் சிபார்சுக் கடிதத்தைப் பார்த்துவிட்டு சுவாமிகளையும் ஓர் உபந்நியாசகராக ஏற்றுக்கொண்டு இடவசதி, போஜன வசதி செய்து வைத்தனர்.
சிகாகோ சர்வமத மகாசபை:
சிகாகோ சர்வமத மகாசபை
சிகாகோ நகரில் நிகழ்ந்த கண்காட்சியை ஒட்டியே உலகின்கண் உள்ள எல்லா மதங்களையும் சீர்தூக்கிப் பார்த்து, அவைகளின் மேன்மைகளை ஆராயவேண்டுமென்ற பரந்த நோக்கத்துடன் சர்வமத மகாசபையானது நடாத்தப்பட்டது. அதற்காக எல்லா தேசங்களிலிருந்தும் அனைத்து சமயங்களுக்கும், கொள்கைகளுக்கும் உரிய பிரதிநிதிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
கொலம்பியன் ஹால்
1893ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் காலை பத்து மணிக்கு இம்மகாசபை துவக்கப்பட்டது. எல்லா மதங்களின் மாண்புகளையும் கேட்டறிய விரும்பிய பேரறிஞர்கள் சுமார் பத்தாயிரம் பேர் ‘கொலம்பியன் ஹால்’ என்ற மண்டபத்தினுள் கூடியிருந்தனர்.
கொலம்பியன் ஹாலில் சுவாமி விவேகானந்தர்
அவைத் தலைவர் அந்த மகாசபையின்  உயர்நோக்கத்தைப் பற்றி அழகிய முன்னுரையொன்று பகர்ந்தான பின்பு, உபந்நியாசகர்களை ஒருவர் பின் ஒருவராகச் சபைக்கு அறிமுகம் செய்து வைத்தார். தமது முறையும் வருவதிய அறிந்து ஸ்ரீமத் விவேகானந்த சுவாமிகள் உடல் துடித்தது; நாவுலர்ந்தது. இந்தத் திருக்கூட்டம் தேர்ச்சி பெற்ற பிரசங்கிகளையும் திகைத்திடச் செய்யவல்லது. சுவாமிகள் அம்பாள் சரஸ்வதியையும், தமது குருநாதரையும் நினைந்து பரவசமடைந்துவிட்டார். ரிஷியின் தவவலிமை ஈண்டு திகழலாயிற்று. ஆசனத்திருந்து எழுந்திருந்து மேடையின் முன் வந்து நின்ற மகிமையே சபையோரது உள்ளத்தை ஒருவாறு கவர்ந்துவிட்டது. கம்பீரத்தொனியில், “அமெரிக்க நாட்டுச் சகோதரி, சகோதரர்களே” என்றார். மேலும் அவரைப் பேசவிடாது தடுத்து, இடியிடித்தாற்போல் கரகோஷம் முழங்கிற்று. காரணம் வேறொன்றுமல்ல; பேசியவர்கள் எல்லாம் “சீமான்களே! சீமாட்டிகளே!” என்று துவங்கினர். ஆனால் உலகனைத்தையும் ஒரு குடும்பமாக பாராட்டியவர் நம் சுவாமி ஒருவரே! சர்வமத மகாசபையின் நோக்கத்தையும் அக்கணத்திலேயே அவர் பூர்த்திபண்ணி வைத்தவரானார். அமெரிக்க தேசத்தை தமது இரண்டே வார்த்தைகளால் தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டார்.
(சுவாமிகள் நிகழ்த்திய “சிகாகோ பிரசங்கங்கள்” என்ற சுவாமி சித்பவானந்தரின் நூலை வாசித்துப் பாருங்கள். அதில் ஹிந்து மதத்தின் அடிப்படைத் தத்துவங்கள் நன்கு விளங்கும்.)
சுவாமிகளின் புகழ்:
ஒரே நாளில் சுவாமிகளின் புகழ் நாடெங்கும் பரவுவதாயிற்று. பத்திரிக்கைகள் இவரைப் புகழ்ந்து போற்றியதற்கு ஓரளவில்லை. மகாசபை நடந்து வந்த நாட்களில் உபந்நியாசங்கள் எல்லாரும் பேசியான பின்பு விவேகானந்த சுவாமிகள் முடிவுரையாக ஏதாவது பேசுவார் என்றால் மட்டும் ஜனங்கள் மண்டபத்தில் நெடுநேரம் காத்திருப்பார்கள்.

சிகாகோ நகரில் வீதிகளில் காட்சிக்கு வைக்கப்பட்ட புகழ்பெற்ற புகைப்படங்கள்: (September 11- 27, 1893).

 

 புகைப்படத்தில் சுவாமிகளின் கையெழுத்தில் எழுதப்பட்ட வாசகம்:
'one infinite pure and holy - beyond thought beyond qualities I bow down to thee'.புகைப்படத்தில் சுவாமிகளால் எழுதப்பட்ட வாசகம்:
 'Thou art the father the lord the mother the husband and love '.


வீதிகளின் முக்கிய இடங்களில் சுவாமிகளின் திருவுருவப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன. எண்ணிறந்த ஜனங்கள் இவரைக் காண சூழ்ந்தனர். தமது வீடுகளுக்கு அதிதியாக சுவாமிகளை அழைத்துச் செல்ல கோடீசுவரர்கள் முன் வந்தனர். செல்வம் படையாதவர்கள் தங்களால் இயன்ற உபசாரம் செய்ய விரும்பினர். நாவிதர்கள் 2, 3 பேர் இவருக்கு க்ஷவரம் செய்துவைப்பதைத் தங்கள் கைங்கரியமாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினர். சாமானிய மனிதன் ஒருவனாயின் இவ்வளவு பெருமிதமாக வந்த பேரும் புகழும் அவனைத் தலைகீழாக புரளச் செய்திருக்குமன்றோ?
புல்லிய செயல்கள்:
சுவாமிகள் அமெரிக்காவிலே எய்தியிருந்த ஒப்பற்ற மேன்மையைக் காணச் சகியாதவர்களும் சிலர் இருந்தனர். சில கிறிஸ்தவ பாதிரிமார்கள், அன்னிபெசன்ட் அம்மையாரின் பிரம்ம ஞான சபையினர், பிரம்ம சமாஜத்தினர் ஆகிய மூன்று கூட்டத்தாருக்கும் இவர் ஓர் இடைஞ்சலாகவே காணப்பட்டார். தமது மதமே மேலானது என்று நிரூபிக்க இயலாதது ஒருபுறமிருக்க, ஆன்மசக்தியும் தபோவலிமையும் பெற்ற இந்த பரமாசாரியரின் முன்னிலையில் வெறும் வாசாஞானம் மக்களது மனதில் புகுந்து திருப்தியூட்டுவது எங்ஙனம்? ஆதலால் இவர்கள் கொண்ட பொறாமைக்கு ஓரளவில்லை.
சுவாமிகளின் யோக சக்தி:
பல பட்டணங்களிலிருந்தும், நகரங்களிலிருந்தும் பரமபுருஷருக்கு அழைப்புக் கடிதங்கள் வந்து குவிந்தன. உபந்நியாசங்கள் வாயிலாக மாந்தருக்கு நல்லறிவு புகட்ட அழைப்புகளுக்கு இணங்கி சுற்றுப் பிரயாணம் பண்ணினார். அரும்பெரும் விஷயங்களை எடுத்துக்கூறி முடித்த பின்பு, நாளை எதைப்பற்றி போதிப்பது என்ற தீர்மானம் ஏதும் இல்லாதவராய் சயனிக்கச் செல்வார். யோக நித்திரையில் துய்த்திருக்கும் தருணத்தில் தாம் முன்னர் எப்பொழுதும் கேட்டிராத விஷயங்கள் பல அவர் காதில் விழும்; இரவில் கேட்டறிந்த விஷயங்களை மறுநாள் ஜனங்களுக்குக் கூறுவார். இத்தகைய யோக சக்தியானது ஆன்மபரிபாகம் அடைந்துள்ள ஆன்றோர்களுக்குத் தானாக வந்து வாய்க்கிறது.
தாய் நாட்டினரின் மகிழ்ச்சிப் பெருக்கு:
விவேகானந்தர் வெளிநாட்டில் எய்தி வந்த வெற்றியின் செய்தி தாய் நாட்டிற்கும் எட்டிற்று. இந்தியாவில் பத்திரிக்கைகள் பல இவரை புகழ்ந்து எழுதலாயின. சர்வமத மகாசபையில் ஜயபேரிகை கொட்டிய தங்களுடைய இளம் வீரரைப்பற்றி பெருமை பாராட்டினார்கள். சுவாமிகளை வாழ்த்துவதற்கும், அவரை வரவேற்ற அமெரிக்காவுக்கும் ஆசிமொழி கூறியனுப்ப சென்னை, கல்கத்தா நகரங்களில் மாநாடுகள் பல கூடின.
ஆயிரம் தீவுச்சோலை:
ஆயிரக்கணக்கானபேர் கூடித் தமது பிரசங்கத்தைக் கேட்டபின் அவர்கள் கைக்கொட்டிவிட்டுத் தம் போக்கில் போவது தர்ம ஸ்தாபனமாகாது என்று சுவாமிகள் எண்ணினார். வாழ்வின் நோக்கத்தை அறிந்து, நெறிவழுவாது வாழவல்ல உத்தமர்களாலேயே தமது இலட்சியம் நிறைவேறுமென அறிந்திருந்த சுவாமிகள், தமக்கு உகந்த சிஷ்யர்களைத் தேடியெடுப்பதில் கருத்துடையவராய் இருந்தார்.
ஆங்காங்கு அறிஞர்கள் சிலர் இவரை வந்து அணுகலாயினர். அத்தகையோரை ஒன்று திரட்டி மரத்தடியிலோ, ஓர் இடத்திலோ தரையின்மீது அமர்ந்திருந்து வேதாந்த பாடம் புகட்டினார். தியானம், யோகப்பயிற்சி அனுஷ்டானங்களை சிஷ்யர்கள் கற்று வரலானார்கள்.

ஆயிரம் தீவுச்சோலையில் எடுக்கப்பட்டதாக இருக்கலாம்.
அமெரிக்காவில் சிஷ்யர்களுக்கு ஆத்மசாதனம் கற்பித்து வந்த இடங்களில் முக்கியமான இடம் “ஆயிரம் தீவுச்சோலை” என்பதாம். செயின்ட் லாரன்ஸ் நதியினுள் இருக்கும் எண்ணிறந்த தீவுகளில் இதுவும் ஒன்று. இந்த தீவில் இருந்த அழகான வீடு சிஷ்யர் ஒருவருக்கு சொந்தம். 1895ஆம் ஆண்டின் கோடையில் ஏழு வார கால பாரமார்த்திக பாடம் புகட்ட அந்த வீடு உதவுவதாயிற்று. அது அருள் நிறைந்த ஆசிரமமாக மாறிவிட்டது. சுமார் 300 மைல்களுக்கு அப்பால் இருந்தும் சிஷ்யர்கள் வந்து சேர்ந்தார்கள். கிறிஸ்துநாதரை 12 சிஷ்யர்கள் பின் தொடர்ந்தது போன்று சுவாமிகள்பால் 12 பேர் வந்தடைந்ததும் குறிப்பிடத்தக்கது. 12 பேருக்கும் மந்திரதீட்சை கொடுத்தார். அதில் பிரம்மச்சரியம் அனுஷ்டிப்பதாக 5 பேர் விரதம் பூண்டனர். 2 பேர் சந்நியாச ஆஸ்ரமம் ஏற்றனர். பைபிள், வேதாந்த சூத்திரம், யோக சூத்திரம், பகவத்கீதை, உபநிஷதம் போன்ற நூல்களையெல்லாம் கற்பித்து வந்தார். (ஆயிரம் தீவுச்சோலையில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய பாரமார்த்திகப் போதனைகளெல்லாம் “விவேகானந்த உபநிஷதம்” என்னும் தலைப்பில் சுவாமி சித்பவானந்தர் வெளியிட்டுள்ளார்.)
இங்கிலாந்து விஜயம்:
லண்டன் 1895
வேதாந்தத்தின் உட்பொருளை அமெரிக்கர்களுக்கு மட்டும் புகட்டினால் போதாது; இங்கிலாந்தில் வழங்கப்பெற்று ஆங்கிலேயர்கள் மனம் திரும்பவேண்டுமென்று சுவாமிகள் பலமுறை சிந்தித்தார். லண்டன் மாநகருக்கு விஜயம் செய்யவேண்டுமென்று கடிதங்கள் வரலாயின. அவர்களது வேண்டுகோளுக்கிணங்கி ஆயிரந்தீவுச் சோலையிலிருந்து நியுயார்க் நகரம் வந்து கப்பலேறி ஐரோப்பா புறப்பட்டார்.
லண்டன் 1895
 சுவாமிகள் முதன்முதலாக பாரிஸ் நகரை அடைந்தார். அறிஞர்கள் பலருக்கு அறிமுகம் ஆன பின்பு லண்டன் நகருக்குப் போய்ச் சேர்ந்தார். குரு சிஷ்ய முறையில் போதித்தும், பெருஞ் ஜனத்திரளுக்கெதிரே பிரசங்கம் செய்து வேதாந்தத்தின் கருத்துக்களை ஆங்கிலேயர்களது மனதில் பதியும்படி செய்து வந்தர். சுவாமிகளின் ஆங்கில சிஷ்யர்கள், சகோதரி நிவேதிதை இதுபோழ்துதான் வந்து அணுகினர்.
நியூயார்க் வேதாந்த சங்கம்:
 நியூயார்க்கில் எடுக்கப்பட்ட புகைப்படம்
இங்கிலாந்திலிருந்து திரும்பவும் அமெரிக்கா நகரங்களுக்கு சென்று உபந்நியாசங்கள் பல செய்தார். இந்த முறை மேல்நாட்டில் சுவாமிகள் திரட்டியெடுத்த சந்நியாசிகள் கிருபானந்தர், அபயானந்தர், யோகானந்தர் என்னும் மூவர். நியூயார்க் நகரத்திலே வேதாந்த சங்கமொன்று ஸ்தாபித்து அதற்கு ஆசாரியராக கிருபானந்தரை சுவாமிகள் அமர்ந்திருக்கப் பண்ணினார்.

Vedanthan Society, Newyork (தற்போது)
சுவாமி அபயானந்தர்

சுவாமி கிருபானந்தர்
முக்கியமான பிரசங்கங்கள்:
1896வது ஆண்டு ஏப்ரல் மாதம் லண்டன் நகரில் இரண்டாம் முறை விஜயம் செய்தார். சிஷ்யர்களும், நண்பர்களும் ஆர்வத்துடன் அவரை வரவேற்றனர். சாதாரணமாக எங்கும் நடைபெறும் சத்-காலக்ஷேபம் போன்றது அல்ல அவரது பிரசங்கம். உபந்நியாசம் பண்ணும்போது உடலை மறந்து பரவசநிலையை எய்திவிடுவார். லண்டன் நகரில் நிகழ்த்திய உபந்நியாசங்களிற் பெரும்பகுதி பக்தியோகம், ஞானயோகம் என்னும் இரண்டு நூல்களில் அடங்கப் பெற்றிருக்கின்றன.
ஸ்விட்சர்லாந்து:
ஐரோப்பாவில் திகழும் ஸ்விட்சர்லாந்து நாட்டுக்கு சிஷ்யர்களுடன் ஒரு சிறு கூட்டமாக சுவாமிகள் ஓய்வுக்காக புறப்பட்டார். பனிக்கட்டி உறைந்துள்ள ஆல்ப்ஸ் மலையில் ஆனந்தமாய் உலவினார். இந்த இடம் இமாலய பரவதத்தை திரும்பவும் ஞாபகமூட்டியது.
ஜெர்மன்:
ஜெர்மனியின் தலைநகரமாகிய பெர்லின் நகரில் பால்தாசன் என்ற மேதாவி வாழ்ந்து வந்தார். சம்ஸ்க்ருதத்தில் பாண்டித்தியம் பெற்றவர். இந்தியா முழுதும் சுற்றிப் பார்த்து பின்பு நாகரிகத்தைப் போற்றியவர் அவர். விவேகானந்தரது வரலாற்றை கேள்வியால் அறிந்திருந்தார். பால்தாசன் சுவாமிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அன்புக்கு இணங்கி சிஷ்யர்களுடன் பால்தாசனுடன் சில நாட்கள் சுவாமிகள் இருந்தார்.
மாக்ஸ்முல்லரைச் சந்தித்தல்:
சுவாமிகள் ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்து வந்தார். இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மாக்ஸ்முல்லர் என்ற சம்ஸ்கிருத மகாபண்டிதர் இருந்தார். இக்காலத்தில் வேத்த்துக்கு அழிவு வாராது காப்பாற்றியவர் மகரிஷி மாக்ஸ்முல்லர் என்பது உலகறிந்த விஷயம். நாற்பது ஆண்டு காலம் ஆராய்ச்சி செய்து, பனையோலை ஏட்டுப் பிரதிகளில் கிடந்த வேதங்களை ஒழுங்குபடுத்தி, பிழை திருத்தி, ஆங்கில மொழிபெயர்ப்புடன் புத்தகங்களை வெளியிட மாக்ஸ் முல்லர் போன்ற வெளிநாட்டவருக்கு எவ்வளவு பிரயத்தனம் ஆகுமென்பது சொல்லாமலே விளங்கும்.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரது வரலாற்றை ஒரு சிறு நூலாக மாக்ஸ்முல்லர் இயற்றியிருக்கிறார். அவரை காண வேண்டுமென்று ஆக்ஸ்போர்ட் சென்றார், சுவாமிகள்.
மாக்ஸ் முல்லர்
வேதம், அதன் பிறப்பிடமாகிய பரத கண்டம் பற்றிய நீண்ட பேச்சுக்கிடையில் பரமஹம்சரைப் பற்றிய பேச்சு வந்தபோது இந்தியாவில் பரமஹம்சரை அநேகர் ஓர் அவதார புருஷராக வணங்குகின்றார்கள் என்று சுவாமிகள் சொன்னார். “அவரை அல்லாது வேறு யாரைத்தான் அங்ஙனம் வணங்குவது?” என்றார் மாக்ஸ்முல்லர்.
இங்கிலாந்து சிஷ்யர்கள்:
Charlotte Sevier
Captain Sevier
1.சுவாமிகளிடம் சரணாகதி அடைந்தவர்களுள் சேவியர் தம்பதிகள் குறிப்பிடத்தக்கவர்கள். தமது வீடு, சொத்து யாவையும் விற்று நிதி திரட்டி குருவாகிய விவேகான்ந்தரிடம் கொடுத்து இந்தியாவுக்கு வர தயாரானார்கள். இவர்கள் கொடுத்த நிதியைக்கொண்டு இமாலய பர்வத்தில் மாயாவதி ஆசிரமம் நிறுவப்பெற்றது.
J.J. Goodwin
2. ஜே.ஜே. குட்வின் மற்றொரு முக்கியமான சிஷ்யர். சுவாமிகளது நிழல் போன்றிருந்து பணிவிடைகள் புரிந்து வந்தார். சுவாமிகளின் உபந்நியாசங்களையெல்லாம் சுருக்கெழுத்தில்(Shorthand) குறித்து வைத்து புத்தகமாக வெளியாகும்படி செய்தவர் இவரேயாம்.
சகோதரி நிவேதிதை
 3.  அடுத்து, பாரதத்தாயின் திருப்பணிக்காகவே நிவேதனம் செய்யப்பட்டவள் சகோதரி நிவேதிதை. மார்க்ரெட் நோபில் என்பது இவரது இயற்பெயர். இவர் எழுதிய இரண்டு புத்தகங்களை இங்கு ஈண்டு குறிப்பிடலாம். ஒன்று இந்திய சமுதாய அமைப்பு(The Web of Indian Life). மற்றொன்று எனது குருநாதரை நான் அறிந்துகொண்டவிதம்(The Master as I saw him) என்பது மற்றொன்று. இரண்டாவது நூல் விவேகானந்தரை நன்கு விளக்கும். சுவாமி விவேகானந்தரின் சிஷ்யர்களுள் சகோதரி நிவேதிதைக்கு முதல் ஸ்தானம் கொடுப்பது பொருந்தும்.
1896ஆம் ஆண்டின் இறுதியில் தாய் நாட்டுக்குத் திரும்பி வரவேண்டியது அவசியமாயிற்று. சிஷ்யர்கள் மூவரை அழைத்துக்கொண்டு ரயிலில் ரோமாபுரிக்கு சென்று நேபிள்ஸ் துறைமுகம் சென்று கப்பலேறி இலங்கைத் தீவை நோக்கிப் பிரயாணமானார். 

புகைப்படங்கள்: 

சிகாகோவில் எடுக்கப்பட்டவை September 1893
புகைப்படத்தில் சுவாமிகளால் எழுதப்பட்ட வாசகம்:
'Thou art the only treasure in this world'.
புகைப்படத்தில் சுவாமிகளால் எழுதப்பட்ட வாசகம்:
'equality in all beings this is the sign of the free'

புகைப்படத்தில் சுவாமிகளால் எழுதப்பட்ட வாசகம்:
'When in search of knowledge or prosperity think that you would never have death or disease and when worshipping God think that death's hand is in your hair.'
புகைப்படத்தில் சுவாமிகளால் எழுதப்பட்ட வாசகம்:
'Virtue is the only friend that follows us beyond the grave. Everything else ends with death.'

லண்டனில் எடுக்கப்பட்டவை 1896

 
(இதன் தொடர்ச்சி 02.07.2012, திங்கட்கிழமை அன்று காணலாம்)

Thursday, June 28, 2012

*வீரத் துறவி விவேகானந்தர் – பாகம் 3

(2ஆம் பாகத்தின் தொடர்ச்சி)

பரிவ்ராஜக பரமஹம்சர்:

1891ஆம் ஆண்டின் துவக்கத்தில் கையில் கமண்டலமும், தண்டமும் தாங்கி பரம்பொருள் ஒன்றையே துணையாகக்கொண்டு பரிவ்ராஜக பரமஹம்சராய் அவர் புறப்பட்டுவிட்டார். பணம் எதையும் கையாளுவதில்லை, வலிய வருகிற உணவை புசிப்பது, நாளைக்கென்று எதையும் தேடி வைப்பதில்லை, பிரயாணம் செய்யவேண்டியவிடத்து யாராவது புகைவண்டிக்குச் சீட்டு வாங்கிக்கொடுத்தால் ஏற்றுக்கொள்வது, ஏனைய நேரங்களில் கால்நடையாகவே போவது என்ற ஒரு வைராக்கியத்தை கருத்தினில் வைத்துக்கொண்டார்.
காசி:
சுவாமி விவேகானந்தர் கால்நடையாக காசி வந்து சேர்ந்தார். இப்புண்ணிய க்ஷேத்திரத்துக்குள் பிரவேசிக்கும்போதே அவரது உள்ளத்தில் அளவிளா ஆனந்தம் ததும்பியது. புனிதம் பொலியும் புனல் கங்கை, பக்தகோடிகளின் பெருந்திரள், அல்லும் பகலும் செய்யும் வந்தனை வழிபாடுகள் இவற்றை காணலுற்ற சுவாமிகள் பரவசமடைந்திருந்தார். தினமும் கங்கையில் நீராடி, விசுவநாதர் தரிசனம் கண்டு நிஷ்டைபுரிந்து வந்தார். அக்காலத்தில் காசியில் எழுந்தருளியிருந்த மஹான் த்ரைலிங்க சுவாமிகள், பாஸ்கரானந்த சுவாமிகள் முதலாயினோரை நமது ஞானசிங்கம் தாமே சென்று சேவித்து வந்தார்.
ஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமி
ஸ்ரீ பாஸ்கரானந்த ஸ்வாமி
அயோத்தி:

அயோத்தி நகரம்
 தாம் தரிசிக்க வேண்டிய ஸ்தலங்கள் வேறு பல இருப்பதை எண்ணி காசியினின்று புறப்பட்டு அயோத்தி போய் சேர்ந்தார். அப்புண்ணிய க்ஷேத்திரத்திலும் இவரது மனத்தகத்தே அடங்காத ஆன்ந்த பரவசமுண்டாயிற்று. இவர் வழிபடும் கடவுளாகிய இராமபிரானின் அற்புதச் செயல்களையெல்லாம் கருதி களிப்புறுவாராயினர். பின்பு மொகலாய சக்கரவர்த்திகள் ஆண்ட காலத்திலே சீரும் சிறப்புமுற்று விளங்கிய நகரங்களாகிய ஆக்ரா, லக்ஷ்மணபுரி முதலிய இடங்களுக்குப் போனார். தாஜ்மஹாலில் சலவைக் கல்லில் செய்திருந்த சித்திர வேலையானது சுவாமிகளைத் திகைப்புறச் செய்தது. அக்கட்டடத்தின் எப்பகுதியைத் துருவி ஆராய்ந்தாலும் பேரரசன் ஒருவனது அன்பு அதனூடே மிளிர்வதைக் காணலாம் என்பது சுவாமிகளின் கருத்தாகும்.
பிருந்தாவனம்:
இப்புண்ணிய க்ஷேத்திரத்திற்கு வந்திருக்கையிலே சுவாமிகள் ஒருநாள் கோவர்த்தன கிரியைப் பிரதட்சிணம் பண்ணி வந்தார். கார்வண்ணனை கருத்தினில் வைத்தவராய் மலையை வலம் வந்துகொண்டிருக்கையில் பசியும் களைப்பும் அதிகரித்துவிட்டன. மழையும் வந்து சுவாமிகளை முற்றிலும் நனைத்துவிட்டது. அதுபோழ்ந்து இவரை அழைக்கின்ற குரல் ஒன்று காதில் விழுந்தது. கூவி அழைத்த அன்பன் இவருக்கு ஆகாரம் கொண்டுவந்திருப்பதாகச் சொல்லிக்கொண்டே நெடுந்தூரம் ஓடி வந்து அணுகினான். இது தெய்வாதீனமோ என்று வியந்து ஆராய்ந்தறிதல் பொருட்டு சுவாமிகள் விரைந்து ஓட ஆரம்பித்தார். அம்மனிதனும் ஒரு மைல் தூரம் பின்பற்றி ஓடி வந்து ஆகாரத்தை ஏற்குமாறு பணிந்து விண்ணப்பித்தான். சுவாமிகளும் போஜனம் பண்ணினார். அவரது உதரக்கனல் ஒடுங்கவே அம்மனிதனும் வனத்தினுட் சென்று மறைந்துபோய்விட்டான். வனாந்திரத்தில் நிகழ்ந்த இந்த அற்புத நிகழ்ச்சியை எண்ணி எண்ணிக் கண்ணீர் மல்கியவாறே சுவாமிகள் கண்ணனது கருணையைப் புகழ்ந்து வாழ்த்தினார்.
பவ ஆஹாரி பாபா:
அக்காலத்தில் காஜிப்பூர் என்னுமோர் ஊரிலே யோகி ஒருவர் வாழ்ந்திருந்தார். அவர் சில நாட்களுக்கு ஒரு முறைதான் உணவு ஏற்பது வழக்கம். அதலால் அவரை “பவ ஆஹாரி பாபா” என்று அழைத்து வந்தார்கள். “காற்றைப் புசித்து வாழும் பெரியார்” என்பது அப்பெயரின் கருத்து. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் மாண்பனைத்தும் பவ ஆஹாரி பாபாவுக்கு முன்னமே தெரிந்திருந்தது. ஆகையால் அவருக்குகந்த சிஷ்யரை அன்புடன் வரவேற்றது இயல்பே. பாபாஜியின் அரும்பெரும் விஷயங்களைப் பற்றிய பேச்சின் வாயிலாக அவரின் ஞானமுதிர்ச்சியும், மேன்மையும் அறிந்துகொண்ட சுவாமிகள் உலக நன்மையின்பொருட்டு ஜன சமூகத்துடன் ஏன் தொடர்பு வைத்துக்கொள்ளலாகாது என்று கேட்டார். பாபாஜியும், “ஏன்? தேகத்தின் உதவியின்றி ஒரு மனம் மற்றொரு மனத்தைக் கவராதோ?” என்று திருப்பிக் கேட்டார். இதைக் கேட்டப் பின்பு விவேகானந்தர் ஓர் அரிய முடிவுக்கு வந்தார். உலக மக்களுக்கிடையிலே உபன்யாசங்கள் வாயிலாக அருள்விருந்தை வழங்கியவர்களைவிட அதிகமாக மௌனநிலையில் இருந்தவர்களே வழங்கியிருக்கிறார்கள். இது எல்லாருக்கும் விளங்குவதில்லையென்றாலும் இதுதான் உண்மை.
பாபாஜி பயின்று பூர்த்திபண்ணியிருந்த சாதனங்களையெல்லாம் தாமும் ஏன் பயிலலாகாது என்று சுவாமிகள் சிந்தித்தார். தாம் யோக தீட்சை பெற விரும்புவதாக பாபாஜியிடம் தெரிவிக்கலாமென்று அவரது குகைக்குப் போனார். ஏனோ நடக்க கால் வரவில்லை. “நம் இறைவன் யார்? பரமஹம்ஸரா? பாபாஜியா?” என்று ஏக்கமுறுவாராயினர். மருட்சிக்கிடையே ஜோதியொன்று தென்பட்டது. பரிந்த முகத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணர் தம்மைப் பார்த்துக்கொண்டு நிற்பதைக் கண்டார்! அதன் பிறகு சுவாமிகள் பவ ஆஹாரி பாபாவிடம் ஒரு தோழன் போல நடந்துகொண்டாரேயொழிய அவரைக் குருவாக ஏற்றுக்கொள்ளத் திரும்பக் கனவிலும் கருதவில்லை.
ஹிமாலய பர்வதம்:
ஹிமாலய பர்வதத்துக்கு யாத்திரை பண்ண விரும்பிய சுவாமிகள் உத்தர திசையை நோக்கி புறப்பட்டார். மலையின் அடிவாரத்தில் ஆங்காங்கு தவம் புரிந்துகொண்டிருந்த சகோதர சிஷ்யர்கள் அகண்டானந்தர், சாரதானந்தர் ஆகியவர்களைத் தற்செயலாகக் கண்டு மகிழ்ந்தார். சுமார் இருநூறு மைல் கடந்து பத்ரிகாஸ்ரமத்தை அணுகும்போது அகண்டானந்தருக்கு கடுஞ்ஜுரம் வந்துவிட்டது. அனைவரும் கீழ்நோக்கி வந்தனர். ஹிரிஷீகேசம் வந்தானதும் அகண்டானந்தருக்கு நோய் சொஸ்தமாயிற்று. ஆனால் விவேகானந்தருக்கு கடும் ஜுரம் வந்துவிட்டது.
சுவாமி அகண்டானந்தர்

சுவாமி சாரதானந்தர்
என்ன செய்வதென்று அறியாமல் சகோதர சிஷ்யர்கள் ஏங்கியிருக்கையில் சன்னியாசி ஒருவர் திடீரென்று வந்தார். தேனில் ஏதோ மாத்திரையைக் குழைத்து சுவாமிகளது வாயினுள் செலுத்தினார். சிறிது நேரத்தில் அவர் தெளிவு பெற்றெழுந்து, “நான் மெய்ம்மறந்து கிடந்தபோது உயர்ந்த அனுபவம் ஒன்று காணலானேன். நான் இவ்வுலகில் சாதிக்க வேண்டியது பல உள. ஏகாந்த குகை வாசம் நாடுவதெல்லாம் வீணே. நான் செய்து முடிக்க வேண்டிய காரியத்தின் பொருட்டு உலகில் உலவும்படி ஏதோ ஒரு சக்தி என்னை ஏவுகிறது” என்று சகோதர சிஷ்யர்களிடம் கூறினார். நல்ல தேகவலிவு பெற்றபின், அவர்களை விட்டுப் பிரிந்து மற்ற நாடுகளை காணத் தம் போக்கில் போனார்.
டெல்லி:
தென் திசையாகப் பிரயாணம் பண்ணி சொற்ப நாளில் டெல்லி போய் சேர்ந்தார். பார்த்தவிடமெல்லாம் பழைய கோட்டைகளும், மாளிகைகளுமே காணப்பட்டன. எத்தனையோ அரசர்களுக்குத் தலைமைப் பட்டணமாய்த் திகழ்ந்த இடம் இது. முடி சார்ந்த மன்னர்களும் முடிவிலே ஒரு பிடி சாம்பலாய்ப் போய்விட்டார்கள் என்பதையே ஆங்காங்கு காணப்பட்ட குட்டிச் சுவர்களும் பாழுங்கட்டிடங்களும் ஞாபகமூட்டின.
ராஜபுதன சமஸ்தானம்:
டெல்லியினின்று ராஜபுதன சமஸ்தானங்களில் ஒன்றாகிய ஆள்வார் ராஜ்யத்தில் பிரசன்னமானார். அங்கே கடைத்தெருவிலேயிருந்த தர்மசாலை ஒன்றின் மேல் மாடியிலே அவர் தங்கினார். முகம்மதியப் பண்டிதர் ஒருவரும், டாக்டர் ஒருவரும் இவருக்கு முதன்முதலாக பழக்கம் ஆனார்கள். முகம்மதியர்கள் பலர் இவர் மீது பேரபிமானங்கொண்டு, தங்களுடைய இல்லங்களுக்கு இவரை அழைத்துச் சென்று இந்துக்களது ஆசாரத்துக்கு ஒப்ப உணவு சமைத்தளித்து உபசரித்தார்கள்.
ஜெய்ப்பூரில் எடுக்கப்பட்டதாக இருக்கலாம்
 ஆள்வார் சமஸ்தானத்தில் திவானாயிருந்த சேனாதிபதி இராமசந்தர்ஜீ சுவாமிகளைத் தம் வீட்டுக்கு அடிக்கடி வரவேற்று நெருங்கி பழகி வந்தார். ஒரு நாள் திவான், ஆள்வார் மகாராஜாவுக்குத் தெரிவித்தார். அக்கோமகனும் ஒரு தினம் பிரதானிகள் புடைசூழ, சுவாமிகளது இருப்பிடம் சென்று பணிவுடன் அவரை வணங்கினார்.
கேத்திரி மகாராஜா:
பிறகு நெடுகப் பிரயாணம் பண்ணிக்கொண்டு ஜெய்ப்பூர், ஆஜ்மீர் போன்ற ஊர்களை பார்த்துவிட்டு கடைசியாக ஆபுமலைக்குச் சுவாமிகள் போய்ச்சேர்ந்தார். 13வது நூற்றாண்டிலே அளவிலாத தனம் செலவிட்டு அம்மலையின்மீது கட்டப்பட்டிருந்த ஜைன கோயிலின் அழகையும், சிற்ப அமைப்பையும் கண்டுகளித்தார். கேத்திரி மகாராஜா அம்மலைக்கு யாத்திரை வந்திருந்தார். சுவாமிகள் சிரமபரிகாரம் செய்துகொள்ள ஓரிடத்தில் உறங்கிக்கொண்டிருந்தார். அரசரின் காரியதரிசி இவரை சோம்பேறி என்றெண்ணி பரிகாசம் செய்தற்பொருட்டு சுவாமிகளோடு உரையாட ஆரம்பித்தார். ‘இவர் சாமானியமானவர் அல்லர்’ என்பதை அறிந்து மகாராஜாவிடம் அறிமுகம் செய்துவைத்தார். கேத்திரி மகாராஜா படித்தவர்; ஈசுவர பக்தியுடையவர்.
Maharaja Ajith Singh of Kethri
ஆங்காங்கு பரிபக்குவம் அடைந்தவர்களைக் காணுந்தோறும் அவர்களுக்கு தீட்சை முதலியன தந்து சிஷ்யர்களாக அவர்களைச் சுவாமிகள் ஏற்று வந்தனர். ஆயுள் பரியந்தம் கேத்திரிக் கோமானானவர் சுவாமிகளின் முக்கிய சீடர்களில் ஒருவராகத் திகழ்ந்திருந்தார். அமெரிக்காவினின்று சுவாமிகள் விடுத்த மேலான கருத்துக்களடங்கிய கடிதங்களில் சில இம்மன்னருக்கு எழுதப்பட்டனவாம்.
இலிம்படி, ஜுனாகாட் மற்றும் சுதாமபுரி சமஸ்தானம்:
அதன் பிறகு அருள் வேந்தர் கூர்ஜர மாகாணத்தில் பல இடங்களில் பிரசன்னமானார். இலிம்படி மகாராஜா அரண்மனையைச் சார்ந்த பண்டிதர்களுடன் சிலருடன் சுவாமிகள் சொற்பநாள் அமர்ந்திருந்தார்.

பிறகு ஜுனாகாட் சமஸ்தானத்துக்கு அவர் செல்வாராயினர். அங்கே அரசருடனும், பிரமுகர்களுடனும் நெருங்கிப் பழகினது பேருக்கும், புகழுக்கும் அன்று. சமுதாயத்தில் பொறுப்பு மிக்கவர்களை சீர்த்திருத்திவிட்டால் அவர்களின் மூலம் ஆயிரக்கணக்கான பிரஜைகள் நன்மையடைவார்கள் என்பதே அவரது நோக்கம்.
ஜெய்ப்பூரில் எடுக்கப்பட்டதாக இருக்கலாம்.
கூர்ஜர மாகாணத்தில் சுதாமபுரி ராஜ்யம் குறிப்பிடத்தக்கது. அந்நாட்டு மகாராஜாவுடன் ஒன்பது மாதகாலம் தங்கியிருந்து பண்டிதர்களுடன் கூடி வேதங்களையும், பல சாஸ்திரங்களையும் ஆராயந்தார். இந்த ஆராய்ச்சி பிற்காலத்தில் சுவாமிகளுக்கு மிகவும் பயன்பட்டது.
பம்பாய், பூனா:  
சுவாமிகள் பிரவேசித்த பட்டணங்களில் பிரதானமானது பம்பாய் நகரம். அவர் இருந்தது சில நாட்களே எனினும் பிரபலமானவர்கள் பலரைச் சந்தித்து பேச அவருக்குத் தருணம் விரைவில் வாய்த்தது.
சுவாமிகள் பின்னர் பூனாவிற்கு விஜயம் செய்தார். மகாபண்டிதரும், தேசாபிமானியெனவும் நாடெங்கும் பிரசித்தி பெற்றிருந்த பாலகங்காதர திலகருடன்  சுமார் பத்து நாட்கள் தங்கியிருந்தார். நான்கு வேதங்களையும் கசடறக் கற்றவர் திலகர் பெருமான். பெல்காமினின்று தென்முகமாகப் புறப்பட்டு பெங்களூர் வந்து சேர்ந்தார்.
பாலகங்காதர திலகர்
 மைசூர் சமஸ்தானம்:
மைசூர் சமஸ்தான திவான் சேஷாத்ரி ஐயர் சுவாமிகளை தமதில்லத்திலேயே அதிதியாக அமர்ந்திருக்கச் செய்தார். சில நாட்களில் மகாராஜா ஸ்ரீ சாமராஜேந்திரா உடையார் முன்னிலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சுவாமிகளின் பேரறிவையும், தேசாபிமானத்தையும் காணலுற்ற மகாராஜாவுக்கு அவர் மீது அன்பும், மரியாதையும் அதிகரித்தன. அமெரிக்காவில் நடைபெறுதற்கிருந்த சர்வமத மகாசபைக்கு சுவாமிகள் விஜயம் செய்ய வேண்டுமென்றும், அதற்கான பொருளுதவி புரிய தாம் ஆயத்தமாயிருப்பதாகவும் உடையார் தெரிவித்தார். ‘ஈசுவர சங்கற்பப்படி ஆகுக’ என்று சுவாமிகள் பகர்ந்துவிட்டு ரயில் மார்க்கமாக கேரளம் சென்றார்.
இந்த புகைப்படத்தை எடுத்தவர் திருவனந்தபுரம் மகாராஜா மார்த்தாண்ட வர்மா December 1892
ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம்:
ராமநாதபுரம் மகாராஜா பாஸ்கர சேதுபதி
கொச்சி, திருவனந்தபுரம் வழியாக மதுரை மார்க்கமாய் இராமநாதபுரம் போய், ராஜா பாஸ்கர சேதுபதிக்கு அறிமுகம் ஆனார். பக்திமானாகிய பாஸ்கர சேதுபதி சுவாமிகளின் மகிமைகளை அதிவிரைவில் அறிந்துகொண்டார். அவசியம் அமெரிக்கா போக வேண்டுமென்றும், அதற்காக தம்மால் இயன்ற பணிவிடைகளை செய்யத் தயாராக இருப்பதாக ராஜா பகர்ந்தார். சுவாமி உறுதிமொழி எதுவும் கூறாது, ‘இறைவனது திருவுளப்படி ஆகுக’ என்று நவின்றுவிட்டு ராமேஸ்வரம் ஏகினார். கொஞ்ச நாட்கள் விவேகானந்தர் வசித்திருந்தாலும் இவ்வூரை தக்ஷிணகாசி என்றே சொல்லத்தகும் என்று போற்றினார்.
கன்னியாகுமரி:
கடைசியாக பாரதத் தாயின் திருவடியான கன்னியாகுமரிக்கு எழுந்தருளினார். இங்கே அவர் மனத்தகத்தே எழுந்த உயர்ந்த எண்ணங்களைக் கூறி முடியா. வடக்கே 2000 மைல்களுக்கு அப்பாலுள்ள பத்ரிகாஸ்ரமத்தினின்று தென்கோடியிலிருக்கும் குமரிமுனை பரியந்தம் உள்ள பிரதேசம் அனைத்து சேர்ந்து ஒரே திருப்பதியென அவருக்குத் தென்பட்டது. குமரியில் எழுந்தருளியிருக்கும் அன்னை ஜகன்மாதாவை வாழ்த்தி வணங்கிவிட்டு சுவாமிகள் சென்னை நோக்கிப் புறப்பட்டார்.
 விவேகானந்தர் பாறை(தற்போது), கன்னியாகுமரி
புதுச்சேரி:
சுவாமிகள் புதுச்சேரி போய் சேரும் வரை குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி ஒன்றும் நேரவில்லை. ஆனால் வழியெங்கும் தமிழ்நாட்டின் மாண்புகளை நேரே கண்டறிந்தார். சுவாமிகள் புதுச்சேரியில் வசித்திருந்தபோது புராதான வைதிக பண்டிதர் ஒருவருடன் நெடிய சம்வாதம் ஒன்று நடைபெற்றது.
வைதிக தர்மத்தில் எந்தவிதமான சீர்திருத்தமும் செய்யலாகாதென்றும், ஜாதி வேற்றுமைகள் இருக்கத்தான் வேண்டுமென்றும், இந்துக்கள் வெளிநாடுகளுக்குக் கப்பல் பிரயாணம் பண்ணலாகாதென்றும், ஆங்கிலேயர்களுடன் பழகலாகாதென்றும் அப்பண்டிதர் வாதாடினார். அவருடைய கொள்கைகளெல்லாம் பண்டைக்காலத்துக்கே உரியன என்பதும், வைதிகமானது உள்வலிவை இழக்காமலே காலநிலைமைக்கு ஏற்றவாறு மாறவல்லது என்று சுவாமிகள் வாதாடினார். மேலும், அப்போதைக்கப்போது அவதரித்துள்ள ஆசாரிய புருஷர்கள் அங்ஙனமே செய்து சாதித்திருக்கிறார்கள் என்பதும், கால வேறுபாட்டிற்கு ஏற்றவாறு இந்துக்கள் வாழ்வு முறையை மாற்றிக்கொள்ள வேண்டுமென்பதும், அவ்வாறு செய்யாவிடில் உலக முன்னேற்றத்தில் இவர்களுக்கு இடமில்லாது போய்விடுமென்பதும் சுவாமிகளின் கடைந்தெடுத்த கொள்கையாகும். பண்டிதரின் பழங்கொள்கைக்கு அனுதாபம் காட்டினார்; ஆனால் ஆதரவு கொடுக்க சம்மதிக்கவில்லை.
சென்னை:
சென்னையில் சுவாமிகள் எழுந்தருளுதற்கு சில நாட்களுக்கு முன்னரே பேராற்றலுடைய பெரியார் ஒருவர் வருகிறார் என்ற செய்தி ஆங்கு எட்டியது. கல்லூரிகளினின்று மாணவர்களும், ஆசிரியர்களும் பெருங்கூட்டமாக அவரைக் காணச் சென்றார்கள்.
அமெரிக்காவில் கூடுதற்கிருந்த சர்வமத மகாசபைக்கு இந்து மதத்தின் பிரதிநிதியாகப் போகத் தகுந்தவர் நம் சுவாமிகள்தான் என்று சென்னை வாசிகளுள் பலர் தீர்மானித்தார்கள். ஊக்கம் ததும்பிய மாணவர்கள் உடனே வீடுவீடாய்ச் சென்று இரண்டு மூன்று நாட்களில் பிரயாணச் செலவுக்காக ரூபாய் ஐந்நூறு வசூலித்துக்கொண்டு வந்துவிட்டார்கள். “பணத்தைக் கையாளவேண்டி வந்துவிட்டதே” என்று சுவாமிகள் சிறிது தயங்கினார்.
ஐதராபாத்:
ஐதராபாத்தை ஆளும் நைஜாம் உட்பட அறிஞர்கள் பலர் சுவாமிகளை ஐதராபாத்திற்கு விஜயம் செய்யவேண்டுமென்று வற்புறுத்தி அழைத்தனர். சுவாமிகளும் அதற்கிசைந்து ஆங்கு சென்றபோது அமெரிக்காவுக்குப் போக வேண்டிய அவசியத்தைப் பற்றி அவ்வூர்ப்பெருமக்களும் பலவாறு எடுத்தியம்பினர்.
குருதேவர் மற்றும் அன்னையாரின் அனுமதி:
ஒருவாறு இசைந்தவராக சுவாமிகள் மீண்டும் சென்னை வந்து சேர்ந்தார். தாம் இருக்குமிடம் இன்னதென்று தமது குரு சகோதரர்களுக்குத் தெரிவிக்காமலேயே இருந்தார் சுவாமிகள். இப்பொழுது அதை மறைக்க முடியவில்லை. சுவாமி சாரதானந்தருக்கு அவர் ஒரு கடிதம் எழுத வேண்டியதாயிற்று. தாம் அமெரிக்கா போய்வருவதைக் குறித்து அன்னை சாரதா தேவியார் என்ன அபிப்பிராயம் கொள்கிறார் என்பதை அறிந்து தமக்கு தெரிவிக்க வேண்டுமென்பது அக்கடிதத்தின் உட்பொருளாகும்.
இப்படி இருக்கையில் ஒருநாள் தம்மை ஆட்கொண்ட பெம்மான் குருதேவர் ராமகிருஷ்ணர் திடீரென்று தம் எதிரே பிரசன்னமாவதைப் பார்த்தார். தம்மைப் பின்பற்றும்படி சைகையால் அன்னவர் அறிவித்துவிட்டுச் சமுத்திரத்தினுட் சென்று மறைந்தார். இந்த அருட்காட்சியைப் பெற்ற பின்பே புறநாடு செல்வதைப் பற்றிய எண்ணத்தை அவர் ஊர்ஜிதப்படுத்தினார். தமக்கு உத்தரவு கிடைத்துவிட்டதென்று கருதி விவேகானந்த சுவாமிகளும் வெளிநாடு புறப்படச் சம்மதம் கொடுத்து சென்னை அன்பர்களைத் திருப்திபடுத்தினார்.

அன்னை சாரதாதேவியார்
இதற்குள்ளாக அன்னை சாரதாதேவியாரின் பூரண அனுமதியும், ஆசியும் அடங்கிய மறுமொழிக் கடிதமும் வந்து சேர்ந்தது.
  
பெல்காமில் எடுக்கப்பட்ட புகைப்படம் 1892 October
 

(இதன் தொடர்ச்சி 30.06.2012, சனிக்கிழமை அன்று இடம்பெறும்)

Tuesday, June 26, 2012

*வீரத்துறவி விவேகானந்தர் – பாகம் 2


(முதல் பாகத்தின் தொடர்ச்சி)
தந்தையாரின் மறைவு:
வார விடுமுறை நாட்களில் தனது நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று வருவது நரேந்திரனது வழக்கம். சில வேளைகளில் ஆங்கு அவன் இரண்டொரு நாட்கள் தங்குவதும்  உண்டு. அவ்விதமே ஓரிரவு தனது இல்லத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தூரத்திலிருந்த தோழன் ஒருவனது வீட்டிலே தங்கியிருந்தான். நரேந்திரனது வீட்டினின்றும் வேலைக்காரன் ஒருவன் ஓடோடி வந்து மூச்சிறைக்க நின்றான். நிகழ்ந்தது யாதென்று இளைஞன் ஆவலுடன் கேட்க, “தகப்பனார் காலமாய்விட்டார்” என்று கூறி, வந்தவன் அழுதான். நம்பவொண்ணாத அச்செய்தியைக் கேட்டு இளைஞன் வீட்டுக்கு விரைந்தோடினான். தான் கேள்வியுற்றது உண்மைதான். மாரடைப்பால் தந்தை மாண்டுபோனார் என அறிந்தான்! ஆண் மக்களிலே முதலானவனாகிய நரேந்திரனால் தகனக்கிரியை முதலானவை முறையே செய்து முடிக்கப்பட்டன.
வறுமை சூழ்நிலை:
குடும்ப பாரம் இப்போது இளம் நரேந்திரன் மீது வீழ்ந்துவிட்டது. காலமாகிவிட்ட விஸ்வநாத தத்தர் தம் குடும்பத்திற்கு ஆஸ்தி எதுவும் தேடி வைத்துவிட்டுப் போகவில்லை. அப்போது நரேந்திரன் சட்ட கலாசாலையில் படித்துக்கொண்டிருந்தான். அன்றன்றைக்கு வேண்டிய சாப்பாட்டுக்குங்கூட வகையில்லாதவாறு வறுமைநோய் அவர்கள் பால் வந்துவிட்டது. கலாசாலைக்கு வண்டி வைத்துக்கொண்டு போவதை அறவே நிறுத்திவிட்டான். குடை, பாதரட்சை போன்றவை அவனுக்குக் கிட்டாத பெருமிதங்களாயின. தரிக்கும் உடையும் நாளடைவில் பழுதுபட்டதாயும் எளியதாயும் மாறிவிட்டது. அன்ன ஆகாரம் சிறிதேனுமின்றி அவன் கழித்த நாட்கள் எத்தனையெத்தனையோ!
இந்த இன்னல்களுக்குக்கிடையில் மற்றொரு அல்லல் வந்து அலைகழித்தது. அவர்கள் வசித்து வந்த வீட்டின் பெரும்பகுதி தங்களுக்கு சொந்தமென்று ஏதோ காரணம் எடுத்துக்காட்டி, நரேந்திரனது தாயாதிகள் நீதிமன்றத்திலே வழக்கு தொடுத்துவிட்டார்கள். போதாதற்கு அவ்வழக்கானது நெடுநாளாகத் தொடர்ந்து நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. நியாயஸ்தலத்தில் நரேந்திரன் கொடுத்த வாக்குமூலத்தின் தெளிவையும், சாதுரியத்தையும் கவனித்த வழக்கறிஞர்கள் அவன் ஒரு தேர்ந்த நியாயவாதியாவான் என்று மிக மெச்சிப் பேசினார்கள். கடைசியாக வழக்கும் அவனுக்கு அனுகூலமாகவே முடிந்தது. நரேந்திரனது பெருமுயற்சியால் தத்தர் குடும்பம் வறுமைப் பிணியினின்று ஒருவாறு மீளலாயிற்று.
பிரம்ம சமாஜம்:
பிரம்ம சமாஜம் என்பது வங்க நாட்டிலே ஒரு பெரிய லௌகிக வைதிக சீர்திருத்த மகாசங்கம். இதை ஸ்தாபித்தவர் இராஜாராம் மோகன்ராய். சமுதாயத்திலும், மதத்திலும் இருக்கிற ஊழல்கள் பலவற்றைப் போக்கடிக்க இச்சங்கம் முயன்று வந்தது. மேல் நாட்டிலிருந்து படையெடுத்து வந்த கிறிஸ்தவ மதத்துக்கு முதன்முதல் முட்டுக்கட்டைப் போட்டது இச்சங்கம்தான். கேசவ சந்திரசேனர் நரேந்திரனது ஜீவித காலத்தில் தலைமை வகித்து வந்தார். பிரம்ம சமாஜத்தின் அமைப்பும் நடைமுறையும் இனிதாயிருந்தபோதிலும் நரேந்திரனுக்கு அத்திருக்கூட்டம் நிரந்தர சமாதானத்தை நல்கவில்லை. கடைசியாக பிரம்மசமாஜத்தின் தலைவராகத் திகழ்ந்த மகரிஷி தேவேந்திரநாத தாகூரிடம்(கவி வேந்தரான ரவீந்திரநாத தாகூரின் தந்தையார்) மெய்ஞ்ஞான வேட்கை கொண்டிருந்த நமது இளம்யோகி சென்றார். அவர் தியானத்தில் அமர்ந்திருந்தபொழுது அவருடைய அனுமதியை நாடாமலேயே இளைஞன் அவரது அறைக்குள் நுழைந்தார். மகரிஷி கண் விழித்ததும், “ஐயா! நீவிர் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?” என்று ஆர்வத்துடனும் பதைபதைப்புடனும் வாலிபர் வினவினார். உள்ளத்தைப் பீறிட்டு வந்த இக்கேள்வி மகரிஷியைத் திடுக்கிடச் செய்தது. எவ்வித விடையும் பகர அவருக்கு நா எழவில்லை. ஞான தாகத்தால் பொறி பறக்க ஒளி வீசிய இளைஞரது கண்களை காணலுற்ற மகரிஷி, “நீ ஒரு பெரிய யோகியாவாய்” என்று மட்டும் பகர்ந்தார். ஆனால் நரேந்திரனுக்கு அந்த விடை திருப்தியுண்டாக்கவில்லை.
மகரிஷி தேவேந்திரநாத தாகூர்
 தக்ஷிணேஸ்வரம் செல்ல இசைதல்:
நெருங்கிய உறவினர் ஒருவர் அவரை அழைத்து, “நீ ஏன் பிரம்மசமாஜத்துக்கும் வேறு பல இடங்களுக்கும் வீணாய் ஓடி அலைகின்றாய்? கல்காத்தா நகருக்கு அருகாமையில் கங்காதீரத்திலே திகழும் தக்ஷிணேசுவர ஆலயத்துக்குள் செல்க. காளிகா தேவியின் அருட்பிரசாதத்தைப் பருகிப் பரவசமடைந்திருக்கும் பெரியார் ஒருவர் அங்கு இருக்கிறார். தமக்கு ஊக்கம் அளித்த அந்த நல்ல செய்தியைக் கேட்டு நரேந்திரர் அங்கே சென்று வர இசைந்தார்.

தக்ஷிணேசுவரம்
 குருதேவரின் முதல் சந்திப்பு:
தக்ஷிணேசுவரம் செல்லுமாறு ஏவப்பட்ட நரேந்திரரும் 1880ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலே புறப்பட்டார். பரமஹம்ஸ தேவரது சன்னிதானத்துக்கு இவ்விளைஞர் சென்றதும் பரமஹம்ஸர் பரவசமடைந்துவிட்டார். பழைய நண்பன் ஒருவனைக் கண்டவர் போல் அவர் பிரியம் மிகப்பூண்டு உரையாடினார். “எத்தனை நாள் நான் ஆவலுடன் உனக்காகக் காத்திருப்பது!” என்று இரங்கிக் குறை கூறினார்.

நரேந்திரரைப் பாடும்படி அவர் வேண்ட பாடல் ஒன்று பாடினார். அவரது கானத்தைக் கேட்டுப் பரமஹம்ஸர் திரும்பவும் பரவசமடைந்தார். நெடுநாளாக நரேந்திரரது உள்ளத்தை வாட்டிவந்த கேள்வி இப்பொழுது அவரது மனதில் முன்னணியில் வந்து நின்றது. “நீவிர் கடவுளைக் கண்டதுண்டா?” என்று இவரிடத்தும் நரேந்திரர் வழக்கம்போல வினவினார். “ஆம். நான் அவரை இடையறாது கண்டு வருகிறேன். வேண்டுமானால் அவரை உனக்கும் காட்டுகிறேன்” என்றார் பரமஹம்ஸர். நரேந்திரரது உள்ளம் பூரித்தது; உடல் நடுங்கியது; உரோமம் சிலிர்த்தது. ஆனால், “நன்கு ஆராயுமுன் நாம் இவரை நம்பிவிடலாகாது” என்று அவர் தீர்மானித்தார்.
சிவமும், சக்தியும்:
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்
ஸ்ரீ ராமகிருஷ்ணரது விருப்பத்துக்கு இணங்க நரேந்திரர் அடிக்கடி தக்ஷிணேசுவரம் போய் வருவாராயினார். மூன்றாம் முறை தக்ஷிணேசுவரம் போயிருந்தார். உயர்நிலை எய்தியிருந்த பரமஹம்ஸர் நரேந்திரரது முகத்தை ஏறிட்டுப் பார்த்துவிட்டுப் பிறகு புறத்தே அவரை அழைத்துச்சென்றார். ஆங்கு, “உன் திருமேனியில் திகழ்வது சிவம்; என் உள்ளத்து உறைவது சக்தி” என்று அவர் இரகசியமாக எடுத்தோதினார். கேட்டவர், “இதென்ன பைத்தியம்!” என்று மனதிலே எண்ணினார்; வெளியில் பேசவில்லை.
நரேந்திரர் வேண்டிய வரம்:   
தமக்குற்ற வறுமை நோயைக் களைய ஏதாவது ஓர் உபாயம் செய்யவேண்டுமென்று நரேந்திரர் குருதேவரிடம் விண்ணப்பித்துக்கொண்டார். தமக்காக ஜகதீசுவரியிடம் பிரார்த்திக்க வேண்டுமென்று வேண்டினார். ஆனால் குருதேவர், “நீயே தேவியின் சந்நிதி சென்று அவ்வரம் வேண்டிக்கொள்” என்று அனுமதித்தார். கோயிலுக்குச் சென்று குளிர்ந்த மனதுடன் திரும்பி வந்தார். அங்கு நிகழ்ந்தது யாதோ என ஸ்ரீ ராமகிருஷ்ணர் வினவ, “பக்தியும் ஞானமும் எனக்குக் கடாட்சித்தருள வேண்டுமென்று அம்பாளிடம் வேண்டினேன்” என்று நரேந்திரர் விடை விடுத்தார். “உனக்குற்ற தரித்திரத்தைப் போக்க வேண்டுமென்று நீ ஏன் கேட்கவில்லை? மறுபடியும் போய் அவ்வரம் வேண்டி வா” என்றார் அண்ணல். நரேந்திரர் இரண்டாம் முறையும் தமது வறுமை நோய் நீங்குதற்பொருட்டு வரம் கேட்க மறந்துவிட்டார். ஆதலாம் மற்றுமொருமுறை அதே ஞாபகத்துடன் கோயிலுக்குப் போகும்படி பரமஹம்ஸரிடமிருந்து ஆக்ஞை பிறந்தது. இப்போது தமது வறுமைப்பற்றி அவர் நினைத்திருந்தார் எனினும், தேவியிடம் அத்தகைய வரம் கேட்க அவருக்கு மனம் எழவில்லை; நாவும் எழவில்லை; பெறுதற்கரிய பக்தியையும் ஞானத்தையும் மட்டும் அவர் ஆர்வத்துடன் வேண்டி நின்றார்.
பவதாரிணி
குருபக்தி:
நரேந்திரர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரை அணுகி ஆண்டுகள் நான்கு ஆகிவிட்டன. “நாணயம் மாற்றுபவன் ஒவ்வொரு காசையும் நன்கு பரீட்சித்து ஏற்பது போன்று நீயும் என்னை வேண்டியவாறெல்லாம் சோதித்த பின்னரே நம்புவாயாக” என்று பரமஹம்ஸர் பகர்ந்தார். நுண்ணறிவோடு கூடிய ஆராய்ச்சியாளராகிய நரேந்திரரும் அவ்வாறே செய்தமையால் பரமஹம்ஸ தேவரது மாண்பு சோதிக்கப்பட்ட சொர்ணமென மிளிரலாயிற்று. நரேந்திரருக்கும் அவர் மீது மெய்யான குருபக்தியும் விசுவாசமும் தோன்றலாயின.
உத்தமனின் திறவுகோல்:
ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் சென்று தமக்கு வேறொன்றும் வேண்டாமென்றும் தாம் யாண்டும் சமாதியிலே சொக்கியிருக்க அருளினாற்போதுமென்றும் பிரார்த்தித்தார். அதைக் கேட்ட பகவான் ராமகிருஷ்ணர் திடுக்கிட்டவர் போலச் சீடரைப் பார்த்து, “பிள்ளாய், நீ உன் முக்தியை மட்டும் நாடுவது சுயநலமாகும். உன் போன்ற உத்தமன் ஒருவனுக்கு அது தகாது. நீ அடைந்திருக்கும் பிறவிப்பயனை உலகத்தவருக்கும் எடுத்து வழங்க வேண்டும். அவர்கள் ஈடேறுதற்கேற்ற வழியைக் காட்டிய பின்னரே நீ திரும்பவும் இந்த உயர்ந்த சமாதிநிலை எய்துவாய். அது பரியந்தம் இது உன்னிடமிருந்து ஒதுக்கி மூடி வைக்கப்பட்டுள்ளது. இதைத் திரும்பவும் மீட்டெடுப்பதற்கான திறவுகோல் என் கைவசம் உள்ளது. அறிந்தாயா?” என்றார். சிஷ்யரும் குருவின் ஆக்ஞைக்கு உட்பட்டவராகக் கீழ்ப்படிந்து வணங்கினார்.
குருதேவரின் அந்திம காலம்:
காசிப்பூர் தோட்ட வீட்டில் நரேந்திரர்
பரமஹம்ஸ தேவரது ஆக்கைக்கு அந்திய காலம் நெருங்கிவிட்டது. பாரமார்த்திக விஷயங்களைப் பற்றி அவர் மட்டுக்கு மிஞ்சிப் பேசிக்கொண்டிருந்தமையால் தொண்டையிலே ஒரு வித வலியுண்டாகி, பிறகு அது கண்டப்பிளவையாக மாறிற்று. நரேந்திரரும் மற்ற சிஷ்யர்களும் வைத்தியத்தின் பொருட்டுக் கல்கத்தாவுக்கு அருகில் காசிப்பூர் தோட்டத்தில் இருந்த ஒரு மாளிகைக்கு குருதேவரை அழைத்துச் சென்று அங்கே வசித்திருக்கப் பண்ணினர். வீட்டு வாடகைக்கும், வைத்தியத்துக்கும் ஆகும் செலவை கிரகஸ்த சிஷ்யர்கள் தங்களது பொறுப்பாக ஏற்றுக்கொண்டனர்.
குருதேவரின் தபோபலன்:
ஒரு நாள் ஸ்ரீ ராமகிருஷ்ணர் தமது அருட் செல்வரைத் தனியாகத் தமது அறைக்குள் வரவழைத்து நிஷ்டையில் உட்கார வைத்தார். சிறிது நேரத்திற்குள் இருவரும் சமாதிநிலை எய்திவிட்டார்கள். பிறகு இருவருக்கும் சமாதி கலைந்தபோது பரமஹம்ஸதேவர் முத்துமுத்தாகக் கண்ணீர் சிந்திக்கொண்டு, “குழந்தாய்! இத்தரணியில் தர்மத்தை நிலைநாட்டுதற்கென எனது தபோபலன்களையெல்லாம் இன்று உன்பால் ஒப்படைத்துவிட்டேன். முழு மனதுடன் இப்பெருங்கடனை ஆற்றுவாயாக” என்று அருளினார்.
குருதேவர் உடல் அருகில் சிஷ்யர்கள் 
(Photo date: 16 August 1886)
இச்சம்பவம் நிகழ்ந்த இரண்டு மூன்று நாட்களில் அதாவது ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் தமது ஊனுடலை நீத்து அகண்ட சத்-சித்-ஆனந்தத்தில் மூழ்கி மகா சமாதியடைந்தார்.
சிஷ்யர்களை ஒன்று திரட்டுதல்:
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் காலமானதும் அவருடன் வாழ்ந்து வந்த வாலிப சிஷ்யர்களுள் தாங்கள் இனி என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது. அவர்கள் தத்தம் வீடு போய்ச் சேரட்டும் என்று சில கிரகஸ்தர்கள் புத்தி புகட்டினார்கள். கல்லூரிப்படிப்பு முடிந்த பின்னர் எல்லாம் யோசிக்கலாம் என எண்ணிய சிலர் அவ்வாறே வீடு போக எத்தனித்தனர். வேறு சிலர் தவம்புரிய தீர்த்தங்களுக்குப் போகலாமென்று எண்ணினர். ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும் திருக்கூட்டம் கலையாதிருக்க வேண்டுமென்று தீர்மானித்தவர் நரேந்திரர் ஒருவரே. கல்கத்தாவுக்கு அருகாமையில் ஜன சஞ்சாரம் அதிகம் இல்லாதிருந்த வாரநகர் என்னுமிடத்தில் குடியிருக்கத் தகுதியற்றிருந்த பாழுங் கட்டிடமொன்றில் இவர்கள் குழுமியிருந்து தவம் புரியத் தீர்மானித்தனர்.
இடைஞ்சல்கள்:
ஆனால் இவர்கள் கொண்ட நோக்கம் வயது முதிர்ந்த சிலருக்குப் பிடிக்கவில்லை. உணவில்லாது பட்டினி கிடந்து சாகத்தான் நேருமென்று அவர்கள் பயமுறுத்தினார்கள். இத்துடன் இந்த இளந்துறவிகளுக்குப் பெற்றோர்களால் நேர்ந்த இடைஞ்சல்கள் கணக்கற்றவை. “பிள்ளைகளின் போக்கு வரவர கெட்டுப் போய்விட்டதற்கும், அதன் பயனாக நேர்ந்துள்ள குழப்பத்திற்கும் காரணம் நரேந்திரர்” என்பதாகப் பழி முழுதும் நரேந்திரர் மீது சுமத்தப்பட்டது.
வாரநகரில் புரிந்த தவம்:
வாரநகர் மடம் 1886
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்குப் பதிலாக நரேந்திரர் தலைவராகத் தோன்றியிருந்தது அத்துறவிகள் மாட்டுப் பேரூக்கத்தை ஊட்டி வந்தது. உலகப்பற்று யாவையும் நீத்துவிட்டதற்கு அறிகுறியாக இப்போது அவர்கள் அனைவரும் காவியுடை தரித்துக்கொண்டார்கள். உணவைப் பற்றிய கவலை அறவே ஒழிந்துபோய்விட்டது. உணவேயில்லாது கழிந்த நாட்கள் எத்தனை எத்தனையோ! பிக்ஷையாய்க் கிடைத்த அரிசியையும், குளக்கரையில் காடாக வளர்ந்து கிடந்த கீரையையும் அவர்கள் சமைத்துப் புசித்துப் பசிப்பிணியைத் துடைத்து வந்தார்கள். உடுக்கப் போதுமான உடையில்லாமல் பெரும்பாலோர் கோவணதாரிகளாய் மாறிவிட்டார்கள்.
இது போன்ற எளிய வாழ்வுக்கிடையே அவர்கள் புரிந்து வந்த தவம் போற்றுதற்குரியது. உறக்கத்தில் கழிந்த நேரம் மிகச் சிறிதேயாம். அதை அறவே விலக்கியிருந்த நாட்கள் பலப்பல. இரவென்றும், பகலென்றும்  உணராது அவர்கள் ஆழ்ந்த நிஷ்டை புரிந்தார்கள். உண்ணும்போதும், உலாவும்போதும் கடவுளது திருநாமமே அவர்களின் நாவில் குடிகொண்டிருந்தது. தும்புரு ஒன்றை மீட்டிக்கொண்டு நெடுநேரம் பரவசமடைந்து பஜனை பண்ணுவார்கள்.
வாரநகரில் தவச்சீலர்கள் 1886
நூல்கள் ஆராய்தலிலும் பரமஹம்ஸதேவரின் சிஷ்யர்கள் பேரூக்கம் கொண்டிருந்தார்கள். இந்துமதத்தின் பல சமயக் கொள்கைகள், அவைகளுக்கு அடிப்படையாயிருக்கும் வேதாந்தம், சங்கரர், புத்தர், ஏசுநாதர், முகமது நபி போன்ற மகாபுருஷர்களின் அவதாரம், ஆஸ்திகம், நாஸ்திகம், மேல் நாட்டுப் புலவர்களின் கொள்கைகள், தேச சரித்திரம், பௌதிக சாஸ்திரம், சமுதாய ஏற்பாடு இவைபோன்ற அரும்பெரும் விஷயங்களைப்பற்றி நரேந்திரர் விளக்கமாக பேசுவார்.
ஆன்ம சகோதரர்கள் தங்களையறியாமலே இந்த ஞானங்களனைத்தையும் அவரிடமிருந்து பெற்று வந்தனர். பிற்காலத்தில் அவரைப் பின் தொடர்ந்து தர்மப் பிரசாரம் பண்ணுவதற்கும் அவர்கள் இப்போது சுவாமிகளால் பயிலுவிக்கப்பட்டு வந்தார்கள்.
பரதகண்டத்தின் வரலாற்றைச் சரித்திர வாயிலாக அறிந்திருந்தது போதாதென்று அவர் கருதினார். அதன் நாடு நகரங்களையும் ஜனத்திரளையும் அவர்களது பாங்கையும் கண்கூடாகப் பார்க்க அவருக்கு அவாவுண்டானது. குருதேவரின் அருட்பிரசாதத்தை அவர் பாரெங்கும் வழங்குதலுக்கு உற்ற தருணமும் அணுகிவிட்டது. எனவே, வெளியேகும் வண்ணம் ஏதோ ஒரு பரமசக்தி அவரது உள்ளத்தினின்று அவரைத் தூண்டி வந்தது. கட்டுக்கடங்காத மிருகேந்திரனைப் போல் அவர் உலகெங்கும் உலவிச் சஞ்சரிக்க விரும்பினார்.


(இதன் தொடர்ச்சி 28.06.2012, வியாழக்கிழமை அன்று இடம்பெறும்)