Tuesday, June 26, 2012

*வீரத்துறவி விவேகானந்தர் – பாகம் 2


(முதல் பாகத்தின் தொடர்ச்சி)
தந்தையாரின் மறைவு:
வார விடுமுறை நாட்களில் தனது நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று வருவது நரேந்திரனது வழக்கம். சில வேளைகளில் ஆங்கு அவன் இரண்டொரு நாட்கள் தங்குவதும்  உண்டு. அவ்விதமே ஓரிரவு தனது இல்லத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தூரத்திலிருந்த தோழன் ஒருவனது வீட்டிலே தங்கியிருந்தான். நரேந்திரனது வீட்டினின்றும் வேலைக்காரன் ஒருவன் ஓடோடி வந்து மூச்சிறைக்க நின்றான். நிகழ்ந்தது யாதென்று இளைஞன் ஆவலுடன் கேட்க, “தகப்பனார் காலமாய்விட்டார்” என்று கூறி, வந்தவன் அழுதான். நம்பவொண்ணாத அச்செய்தியைக் கேட்டு இளைஞன் வீட்டுக்கு விரைந்தோடினான். தான் கேள்வியுற்றது உண்மைதான். மாரடைப்பால் தந்தை மாண்டுபோனார் என அறிந்தான்! ஆண் மக்களிலே முதலானவனாகிய நரேந்திரனால் தகனக்கிரியை முதலானவை முறையே செய்து முடிக்கப்பட்டன.
வறுமை சூழ்நிலை:
குடும்ப பாரம் இப்போது இளம் நரேந்திரன் மீது வீழ்ந்துவிட்டது. காலமாகிவிட்ட விஸ்வநாத தத்தர் தம் குடும்பத்திற்கு ஆஸ்தி எதுவும் தேடி வைத்துவிட்டுப் போகவில்லை. அப்போது நரேந்திரன் சட்ட கலாசாலையில் படித்துக்கொண்டிருந்தான். அன்றன்றைக்கு வேண்டிய சாப்பாட்டுக்குங்கூட வகையில்லாதவாறு வறுமைநோய் அவர்கள் பால் வந்துவிட்டது. கலாசாலைக்கு வண்டி வைத்துக்கொண்டு போவதை அறவே நிறுத்திவிட்டான். குடை, பாதரட்சை போன்றவை அவனுக்குக் கிட்டாத பெருமிதங்களாயின. தரிக்கும் உடையும் நாளடைவில் பழுதுபட்டதாயும் எளியதாயும் மாறிவிட்டது. அன்ன ஆகாரம் சிறிதேனுமின்றி அவன் கழித்த நாட்கள் எத்தனையெத்தனையோ!
இந்த இன்னல்களுக்குக்கிடையில் மற்றொரு அல்லல் வந்து அலைகழித்தது. அவர்கள் வசித்து வந்த வீட்டின் பெரும்பகுதி தங்களுக்கு சொந்தமென்று ஏதோ காரணம் எடுத்துக்காட்டி, நரேந்திரனது தாயாதிகள் நீதிமன்றத்திலே வழக்கு தொடுத்துவிட்டார்கள். போதாதற்கு அவ்வழக்கானது நெடுநாளாகத் தொடர்ந்து நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. நியாயஸ்தலத்தில் நரேந்திரன் கொடுத்த வாக்குமூலத்தின் தெளிவையும், சாதுரியத்தையும் கவனித்த வழக்கறிஞர்கள் அவன் ஒரு தேர்ந்த நியாயவாதியாவான் என்று மிக மெச்சிப் பேசினார்கள். கடைசியாக வழக்கும் அவனுக்கு அனுகூலமாகவே முடிந்தது. நரேந்திரனது பெருமுயற்சியால் தத்தர் குடும்பம் வறுமைப் பிணியினின்று ஒருவாறு மீளலாயிற்று.
பிரம்ம சமாஜம்:
பிரம்ம சமாஜம் என்பது வங்க நாட்டிலே ஒரு பெரிய லௌகிக வைதிக சீர்திருத்த மகாசங்கம். இதை ஸ்தாபித்தவர் இராஜாராம் மோகன்ராய். சமுதாயத்திலும், மதத்திலும் இருக்கிற ஊழல்கள் பலவற்றைப் போக்கடிக்க இச்சங்கம் முயன்று வந்தது. மேல் நாட்டிலிருந்து படையெடுத்து வந்த கிறிஸ்தவ மதத்துக்கு முதன்முதல் முட்டுக்கட்டைப் போட்டது இச்சங்கம்தான். கேசவ சந்திரசேனர் நரேந்திரனது ஜீவித காலத்தில் தலைமை வகித்து வந்தார். பிரம்ம சமாஜத்தின் அமைப்பும் நடைமுறையும் இனிதாயிருந்தபோதிலும் நரேந்திரனுக்கு அத்திருக்கூட்டம் நிரந்தர சமாதானத்தை நல்கவில்லை. கடைசியாக பிரம்மசமாஜத்தின் தலைவராகத் திகழ்ந்த மகரிஷி தேவேந்திரநாத தாகூரிடம்(கவி வேந்தரான ரவீந்திரநாத தாகூரின் தந்தையார்) மெய்ஞ்ஞான வேட்கை கொண்டிருந்த நமது இளம்யோகி சென்றார். அவர் தியானத்தில் அமர்ந்திருந்தபொழுது அவருடைய அனுமதியை நாடாமலேயே இளைஞன் அவரது அறைக்குள் நுழைந்தார். மகரிஷி கண் விழித்ததும், “ஐயா! நீவிர் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?” என்று ஆர்வத்துடனும் பதைபதைப்புடனும் வாலிபர் வினவினார். உள்ளத்தைப் பீறிட்டு வந்த இக்கேள்வி மகரிஷியைத் திடுக்கிடச் செய்தது. எவ்வித விடையும் பகர அவருக்கு நா எழவில்லை. ஞான தாகத்தால் பொறி பறக்க ஒளி வீசிய இளைஞரது கண்களை காணலுற்ற மகரிஷி, “நீ ஒரு பெரிய யோகியாவாய்” என்று மட்டும் பகர்ந்தார். ஆனால் நரேந்திரனுக்கு அந்த விடை திருப்தியுண்டாக்கவில்லை.
மகரிஷி தேவேந்திரநாத தாகூர்
 தக்ஷிணேஸ்வரம் செல்ல இசைதல்:
நெருங்கிய உறவினர் ஒருவர் அவரை அழைத்து, “நீ ஏன் பிரம்மசமாஜத்துக்கும் வேறு பல இடங்களுக்கும் வீணாய் ஓடி அலைகின்றாய்? கல்காத்தா நகருக்கு அருகாமையில் கங்காதீரத்திலே திகழும் தக்ஷிணேசுவர ஆலயத்துக்குள் செல்க. காளிகா தேவியின் அருட்பிரசாதத்தைப் பருகிப் பரவசமடைந்திருக்கும் பெரியார் ஒருவர் அங்கு இருக்கிறார். தமக்கு ஊக்கம் அளித்த அந்த நல்ல செய்தியைக் கேட்டு நரேந்திரர் அங்கே சென்று வர இசைந்தார்.

தக்ஷிணேசுவரம்
 குருதேவரின் முதல் சந்திப்பு:
தக்ஷிணேசுவரம் செல்லுமாறு ஏவப்பட்ட நரேந்திரரும் 1880ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலே புறப்பட்டார். பரமஹம்ஸ தேவரது சன்னிதானத்துக்கு இவ்விளைஞர் சென்றதும் பரமஹம்ஸர் பரவசமடைந்துவிட்டார். பழைய நண்பன் ஒருவனைக் கண்டவர் போல் அவர் பிரியம் மிகப்பூண்டு உரையாடினார். “எத்தனை நாள் நான் ஆவலுடன் உனக்காகக் காத்திருப்பது!” என்று இரங்கிக் குறை கூறினார்.

நரேந்திரரைப் பாடும்படி அவர் வேண்ட பாடல் ஒன்று பாடினார். அவரது கானத்தைக் கேட்டுப் பரமஹம்ஸர் திரும்பவும் பரவசமடைந்தார். நெடுநாளாக நரேந்திரரது உள்ளத்தை வாட்டிவந்த கேள்வி இப்பொழுது அவரது மனதில் முன்னணியில் வந்து நின்றது. “நீவிர் கடவுளைக் கண்டதுண்டா?” என்று இவரிடத்தும் நரேந்திரர் வழக்கம்போல வினவினார். “ஆம். நான் அவரை இடையறாது கண்டு வருகிறேன். வேண்டுமானால் அவரை உனக்கும் காட்டுகிறேன்” என்றார் பரமஹம்ஸர். நரேந்திரரது உள்ளம் பூரித்தது; உடல் நடுங்கியது; உரோமம் சிலிர்த்தது. ஆனால், “நன்கு ஆராயுமுன் நாம் இவரை நம்பிவிடலாகாது” என்று அவர் தீர்மானித்தார்.
சிவமும், சக்தியும்:
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்
ஸ்ரீ ராமகிருஷ்ணரது விருப்பத்துக்கு இணங்க நரேந்திரர் அடிக்கடி தக்ஷிணேசுவரம் போய் வருவாராயினார். மூன்றாம் முறை தக்ஷிணேசுவரம் போயிருந்தார். உயர்நிலை எய்தியிருந்த பரமஹம்ஸர் நரேந்திரரது முகத்தை ஏறிட்டுப் பார்த்துவிட்டுப் பிறகு புறத்தே அவரை அழைத்துச்சென்றார். ஆங்கு, “உன் திருமேனியில் திகழ்வது சிவம்; என் உள்ளத்து உறைவது சக்தி” என்று அவர் இரகசியமாக எடுத்தோதினார். கேட்டவர், “இதென்ன பைத்தியம்!” என்று மனதிலே எண்ணினார்; வெளியில் பேசவில்லை.
நரேந்திரர் வேண்டிய வரம்:   
தமக்குற்ற வறுமை நோயைக் களைய ஏதாவது ஓர் உபாயம் செய்யவேண்டுமென்று நரேந்திரர் குருதேவரிடம் விண்ணப்பித்துக்கொண்டார். தமக்காக ஜகதீசுவரியிடம் பிரார்த்திக்க வேண்டுமென்று வேண்டினார். ஆனால் குருதேவர், “நீயே தேவியின் சந்நிதி சென்று அவ்வரம் வேண்டிக்கொள்” என்று அனுமதித்தார். கோயிலுக்குச் சென்று குளிர்ந்த மனதுடன் திரும்பி வந்தார். அங்கு நிகழ்ந்தது யாதோ என ஸ்ரீ ராமகிருஷ்ணர் வினவ, “பக்தியும் ஞானமும் எனக்குக் கடாட்சித்தருள வேண்டுமென்று அம்பாளிடம் வேண்டினேன்” என்று நரேந்திரர் விடை விடுத்தார். “உனக்குற்ற தரித்திரத்தைப் போக்க வேண்டுமென்று நீ ஏன் கேட்கவில்லை? மறுபடியும் போய் அவ்வரம் வேண்டி வா” என்றார் அண்ணல். நரேந்திரர் இரண்டாம் முறையும் தமது வறுமை நோய் நீங்குதற்பொருட்டு வரம் கேட்க மறந்துவிட்டார். ஆதலாம் மற்றுமொருமுறை அதே ஞாபகத்துடன் கோயிலுக்குப் போகும்படி பரமஹம்ஸரிடமிருந்து ஆக்ஞை பிறந்தது. இப்போது தமது வறுமைப்பற்றி அவர் நினைத்திருந்தார் எனினும், தேவியிடம் அத்தகைய வரம் கேட்க அவருக்கு மனம் எழவில்லை; நாவும் எழவில்லை; பெறுதற்கரிய பக்தியையும் ஞானத்தையும் மட்டும் அவர் ஆர்வத்துடன் வேண்டி நின்றார்.
பவதாரிணி
குருபக்தி:
நரேந்திரர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரை அணுகி ஆண்டுகள் நான்கு ஆகிவிட்டன. “நாணயம் மாற்றுபவன் ஒவ்வொரு காசையும் நன்கு பரீட்சித்து ஏற்பது போன்று நீயும் என்னை வேண்டியவாறெல்லாம் சோதித்த பின்னரே நம்புவாயாக” என்று பரமஹம்ஸர் பகர்ந்தார். நுண்ணறிவோடு கூடிய ஆராய்ச்சியாளராகிய நரேந்திரரும் அவ்வாறே செய்தமையால் பரமஹம்ஸ தேவரது மாண்பு சோதிக்கப்பட்ட சொர்ணமென மிளிரலாயிற்று. நரேந்திரருக்கும் அவர் மீது மெய்யான குருபக்தியும் விசுவாசமும் தோன்றலாயின.
உத்தமனின் திறவுகோல்:
ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் சென்று தமக்கு வேறொன்றும் வேண்டாமென்றும் தாம் யாண்டும் சமாதியிலே சொக்கியிருக்க அருளினாற்போதுமென்றும் பிரார்த்தித்தார். அதைக் கேட்ட பகவான் ராமகிருஷ்ணர் திடுக்கிட்டவர் போலச் சீடரைப் பார்த்து, “பிள்ளாய், நீ உன் முக்தியை மட்டும் நாடுவது சுயநலமாகும். உன் போன்ற உத்தமன் ஒருவனுக்கு அது தகாது. நீ அடைந்திருக்கும் பிறவிப்பயனை உலகத்தவருக்கும் எடுத்து வழங்க வேண்டும். அவர்கள் ஈடேறுதற்கேற்ற வழியைக் காட்டிய பின்னரே நீ திரும்பவும் இந்த உயர்ந்த சமாதிநிலை எய்துவாய். அது பரியந்தம் இது உன்னிடமிருந்து ஒதுக்கி மூடி வைக்கப்பட்டுள்ளது. இதைத் திரும்பவும் மீட்டெடுப்பதற்கான திறவுகோல் என் கைவசம் உள்ளது. அறிந்தாயா?” என்றார். சிஷ்யரும் குருவின் ஆக்ஞைக்கு உட்பட்டவராகக் கீழ்ப்படிந்து வணங்கினார்.
குருதேவரின் அந்திம காலம்:
காசிப்பூர் தோட்ட வீட்டில் நரேந்திரர்
பரமஹம்ஸ தேவரது ஆக்கைக்கு அந்திய காலம் நெருங்கிவிட்டது. பாரமார்த்திக விஷயங்களைப் பற்றி அவர் மட்டுக்கு மிஞ்சிப் பேசிக்கொண்டிருந்தமையால் தொண்டையிலே ஒரு வித வலியுண்டாகி, பிறகு அது கண்டப்பிளவையாக மாறிற்று. நரேந்திரரும் மற்ற சிஷ்யர்களும் வைத்தியத்தின் பொருட்டுக் கல்கத்தாவுக்கு அருகில் காசிப்பூர் தோட்டத்தில் இருந்த ஒரு மாளிகைக்கு குருதேவரை அழைத்துச் சென்று அங்கே வசித்திருக்கப் பண்ணினர். வீட்டு வாடகைக்கும், வைத்தியத்துக்கும் ஆகும் செலவை கிரகஸ்த சிஷ்யர்கள் தங்களது பொறுப்பாக ஏற்றுக்கொண்டனர்.
குருதேவரின் தபோபலன்:
ஒரு நாள் ஸ்ரீ ராமகிருஷ்ணர் தமது அருட் செல்வரைத் தனியாகத் தமது அறைக்குள் வரவழைத்து நிஷ்டையில் உட்கார வைத்தார். சிறிது நேரத்திற்குள் இருவரும் சமாதிநிலை எய்திவிட்டார்கள். பிறகு இருவருக்கும் சமாதி கலைந்தபோது பரமஹம்ஸதேவர் முத்துமுத்தாகக் கண்ணீர் சிந்திக்கொண்டு, “குழந்தாய்! இத்தரணியில் தர்மத்தை நிலைநாட்டுதற்கென எனது தபோபலன்களையெல்லாம் இன்று உன்பால் ஒப்படைத்துவிட்டேன். முழு மனதுடன் இப்பெருங்கடனை ஆற்றுவாயாக” என்று அருளினார்.
குருதேவர் உடல் அருகில் சிஷ்யர்கள் 
(Photo date: 16 August 1886)
இச்சம்பவம் நிகழ்ந்த இரண்டு மூன்று நாட்களில் அதாவது ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் தமது ஊனுடலை நீத்து அகண்ட சத்-சித்-ஆனந்தத்தில் மூழ்கி மகா சமாதியடைந்தார்.
சிஷ்யர்களை ஒன்று திரட்டுதல்:
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் காலமானதும் அவருடன் வாழ்ந்து வந்த வாலிப சிஷ்யர்களுள் தாங்கள் இனி என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது. அவர்கள் தத்தம் வீடு போய்ச் சேரட்டும் என்று சில கிரகஸ்தர்கள் புத்தி புகட்டினார்கள். கல்லூரிப்படிப்பு முடிந்த பின்னர் எல்லாம் யோசிக்கலாம் என எண்ணிய சிலர் அவ்வாறே வீடு போக எத்தனித்தனர். வேறு சிலர் தவம்புரிய தீர்த்தங்களுக்குப் போகலாமென்று எண்ணினர். ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும் திருக்கூட்டம் கலையாதிருக்க வேண்டுமென்று தீர்மானித்தவர் நரேந்திரர் ஒருவரே. கல்கத்தாவுக்கு அருகாமையில் ஜன சஞ்சாரம் அதிகம் இல்லாதிருந்த வாரநகர் என்னுமிடத்தில் குடியிருக்கத் தகுதியற்றிருந்த பாழுங் கட்டிடமொன்றில் இவர்கள் குழுமியிருந்து தவம் புரியத் தீர்மானித்தனர்.
இடைஞ்சல்கள்:
ஆனால் இவர்கள் கொண்ட நோக்கம் வயது முதிர்ந்த சிலருக்குப் பிடிக்கவில்லை. உணவில்லாது பட்டினி கிடந்து சாகத்தான் நேருமென்று அவர்கள் பயமுறுத்தினார்கள். இத்துடன் இந்த இளந்துறவிகளுக்குப் பெற்றோர்களால் நேர்ந்த இடைஞ்சல்கள் கணக்கற்றவை. “பிள்ளைகளின் போக்கு வரவர கெட்டுப் போய்விட்டதற்கும், அதன் பயனாக நேர்ந்துள்ள குழப்பத்திற்கும் காரணம் நரேந்திரர்” என்பதாகப் பழி முழுதும் நரேந்திரர் மீது சுமத்தப்பட்டது.
வாரநகரில் புரிந்த தவம்:
வாரநகர் மடம் 1886
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்குப் பதிலாக நரேந்திரர் தலைவராகத் தோன்றியிருந்தது அத்துறவிகள் மாட்டுப் பேரூக்கத்தை ஊட்டி வந்தது. உலகப்பற்று யாவையும் நீத்துவிட்டதற்கு அறிகுறியாக இப்போது அவர்கள் அனைவரும் காவியுடை தரித்துக்கொண்டார்கள். உணவைப் பற்றிய கவலை அறவே ஒழிந்துபோய்விட்டது. உணவேயில்லாது கழிந்த நாட்கள் எத்தனை எத்தனையோ! பிக்ஷையாய்க் கிடைத்த அரிசியையும், குளக்கரையில் காடாக வளர்ந்து கிடந்த கீரையையும் அவர்கள் சமைத்துப் புசித்துப் பசிப்பிணியைத் துடைத்து வந்தார்கள். உடுக்கப் போதுமான உடையில்லாமல் பெரும்பாலோர் கோவணதாரிகளாய் மாறிவிட்டார்கள்.
இது போன்ற எளிய வாழ்வுக்கிடையே அவர்கள் புரிந்து வந்த தவம் போற்றுதற்குரியது. உறக்கத்தில் கழிந்த நேரம் மிகச் சிறிதேயாம். அதை அறவே விலக்கியிருந்த நாட்கள் பலப்பல. இரவென்றும், பகலென்றும்  உணராது அவர்கள் ஆழ்ந்த நிஷ்டை புரிந்தார்கள். உண்ணும்போதும், உலாவும்போதும் கடவுளது திருநாமமே அவர்களின் நாவில் குடிகொண்டிருந்தது. தும்புரு ஒன்றை மீட்டிக்கொண்டு நெடுநேரம் பரவசமடைந்து பஜனை பண்ணுவார்கள்.
வாரநகரில் தவச்சீலர்கள் 1886
நூல்கள் ஆராய்தலிலும் பரமஹம்ஸதேவரின் சிஷ்யர்கள் பேரூக்கம் கொண்டிருந்தார்கள். இந்துமதத்தின் பல சமயக் கொள்கைகள், அவைகளுக்கு அடிப்படையாயிருக்கும் வேதாந்தம், சங்கரர், புத்தர், ஏசுநாதர், முகமது நபி போன்ற மகாபுருஷர்களின் அவதாரம், ஆஸ்திகம், நாஸ்திகம், மேல் நாட்டுப் புலவர்களின் கொள்கைகள், தேச சரித்திரம், பௌதிக சாஸ்திரம், சமுதாய ஏற்பாடு இவைபோன்ற அரும்பெரும் விஷயங்களைப்பற்றி நரேந்திரர் விளக்கமாக பேசுவார்.
ஆன்ம சகோதரர்கள் தங்களையறியாமலே இந்த ஞானங்களனைத்தையும் அவரிடமிருந்து பெற்று வந்தனர். பிற்காலத்தில் அவரைப் பின் தொடர்ந்து தர்மப் பிரசாரம் பண்ணுவதற்கும் அவர்கள் இப்போது சுவாமிகளால் பயிலுவிக்கப்பட்டு வந்தார்கள்.
பரதகண்டத்தின் வரலாற்றைச் சரித்திர வாயிலாக அறிந்திருந்தது போதாதென்று அவர் கருதினார். அதன் நாடு நகரங்களையும் ஜனத்திரளையும் அவர்களது பாங்கையும் கண்கூடாகப் பார்க்க அவருக்கு அவாவுண்டானது. குருதேவரின் அருட்பிரசாதத்தை அவர் பாரெங்கும் வழங்குதலுக்கு உற்ற தருணமும் அணுகிவிட்டது. எனவே, வெளியேகும் வண்ணம் ஏதோ ஒரு பரமசக்தி அவரது உள்ளத்தினின்று அவரைத் தூண்டி வந்தது. கட்டுக்கடங்காத மிருகேந்திரனைப் போல் அவர் உலகெங்கும் உலவிச் சஞ்சரிக்க விரும்பினார்.


(இதன் தொடர்ச்சி 28.06.2012, வியாழக்கிழமை அன்று இடம்பெறும்)

No comments:

Post a Comment