Saturday, March 10, 2012

*சுவாமி சித்பவானந்தர் வாழ்வில் ஏற்பட்ட திருப்பங்கள்


(சுவாமி சித்பவானந்தரின் பிற்கால வாழ்க்கை நம்மில் பெரும்பாலோர் அறிந்துள்ளோம். பூர்வாஸ்ரமத்தைப் பற்றி நாம் அறிந்தது குறைவே. அவரது முற்கால வாழ்க்கைக் குறிப்புகள் சிலவற்றை அவரது பிறந்த நாளை முன்னிட்டு பதிவேற்றுகிறோம். சுவாமி சித்பவானந்தர் தமது வாழ்க்கையை ஆன்மீக நெறியில் செலுத்துவதற்கு ஏதுவாய் அமைந்த முக்கியமான நிகழ்ச்சிகளை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். இதில் இடம்பெற்றுள்ள நிகழ்ச்சிகள் யாவும் சுவாமி நித்தியானந்தர் எழுதிய ‘பராய்த்துறை மேவிய பரமபுருஷர்’ புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.)
பாரமார்த்திக வாழ்வு வாழ்ந்து பரதத்துவத்தை உலகுக்கு விளக்கிய அருளாளர் பலரைத் தோற்றுவித்த பெருமை தமிழ்நாட்டுக்குப் பெரிதும் உண்டு. தொழில் வளமும், பொருள் வளமும் நிறைந்த கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சிக்கு அருகில் செங்குட்டைப் பாளையம் என்னும் சிற்றூர் உள்ளது.
அங்கு வாழ்ந்த பெரியார் பெரியண்ணன் என்பார் பெருஞ்செல்வர் சித்த வைத்தியத்தில் தேர்ச்சி பெற்றிருந்தார். வானசாஸ்திரம், ரசவாதம் போன்ற அரிய கலைகளிலும் வல்லுநர் ஆவார். பாரமார்த்திக வாழ்வில் அவர் பற்று கொண்டிருந்ததை மக்கள் அறிந்திலர். புறவுலக மக்களுக்கு சாதாரண மனிதர் போன்று அவர் தோற்றமளித்தார். அவர் உள்ளத்தில் யோகத்தன்மை விழிப்புற்றிருந்ததை அறிந்த மகாபுருஷ் மகராஜ் சுவாமி சிவானந்தர், அவரை “குப்த யோகி” எனப் புகழ்ந்தார்.
அவருக்கு நஞ்சம்மை என்னும் உத்தமி வாழ்க்கைத் துணையாக வாய்த்திருந்தார். குடும்ப பொறுப்புக்களையெல்லாம் தாமே ஏற்றுத் தம் குழந்தைகளையும் உற்றார் உறவினர்களையும் அவர் நன்கு பராமரித்து வந்தார். ஓய்வு ஒழிவு இல்லாமல் தம் அலுவல்களைக் கவனித்து வந்தார். குடும்பம் பெரியது; உறவினர் பலர்; கிராமத்து வீடு ஆகையால் வசதிகள் குறைவு. ஆனால் பொறுப்புகள் மிக அதிகம். மலர்ந்த முகத்தினராய் அவர் யாவர்க்கும் நன்மைகள் பல செய்து வாழ்ந்து வந்தார்.
இவர்களுக்கு ஏழாம் மகவாக ஹேவிளம்பி ஆண்டு பங்குனி மாதம் மூன்றாம் நாள் அதாவது மார்ச் மாதம் 11ஆம் தேதி 1898ஆம் ஆண்டு நமது சுவாமிஜி சித்பவானந்தர் தோன்றினார். இவருடைய பிள்ளைத் திருநாமம் சின்னு என்பது.
செங்குட்டைப்பாளையத்துக்கு அருகில் ஆத்துப்பொள்ளாச்சி என்னும் சிற்றூரிலும் பொள்ளாச்சியிலும் இவர் தம் ஆரம்பக் கல்வியைக் கற்றுத் தேர்ந்தார். கோவை ஸ்டேன்ஸ் உயர்நிலைப்பள்ளியில் உயர்தரக் கல்வி பெறச் சேர்ந்தார். அக்காலத்தில் ஸ்டேன்ஸ் ஆங்கிலேயர்கள் படித்து வந்த பள்ளியாகும். சின்னு, ஊத்துக்குளி ஜமீன்தாரின் இளைய குமாரர் நடராஜ காளிங்கராயர் ஆகிய இருவர் மட்டுமே அந்த வகுப்பில் பயின்ற இந்தியர் ஆவர். 4.6.1912 முதல் 31.12.1918 வரை கோயம்புத்தூர் ஸ்டேன்ஸ் ஆங்கிலேயர் பள்ளியில் படித்த சின்னு, மிகவும் கடினமான தேர்வாகிய சீனியர் கேம்பிரிட்ஜ் என்னும் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பல்லாரி, குடகு, மலபார், ராயலசீமா போன்ற பல மாநிலத்துப் பகுதிகளும் அடங்கிய அக்கால சென்னை ராஜதானியில் ஏழாம் தரம் பெற்று அவர் பள்ளிக்குப் பெருமை தேடித்தந்தார். 1919-ல் வெளிவந்த பள்ளி ஆண்டு மலரில் இச்செய்தி மிகவும் பெருமையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளியைத் தோற்றுவித்த சர்.ராபர்ட் ஸ்டேன்ஸ் அடிமை நாட்டவரான சின்னுவுடன் சமமாக அமர்ந்து நிழற்படம் எடுத்துக்கொண்டார்.
சின்னு தாம் படிக்கின்ற காலத்தில் விடுமுறையின் போது குழந்தைகளுக்குச் சிரிப்பூட்டுவதோடு பெரியவர்களையும் சிரிக்க வைத்துவிடுவார். தம் தமையனாரின் மைந்தர் சி. சுப்பிரமணியம், சகோதரியின் மைந்தர் வேலுசுவாமி போன்றவர்களுக்கு ஆங்கிலம், கணக்கு போன்ற பாடங்களை எளிதில் விளங்கும்படி சொல்லித் தருவார்.
ஒருமுறை இவர் தந்தையார் “ஒவ்வொரு சிசுவும் கர்ப்பத்தில் பிரம்ம ஞானம் பெற்று விளங்குகிறது; இவ்வுலகத்துக்கு வந்த பிறகு மாயை அதனைச் சூழ்ந்துகொள்கிறது” என்று முதியவர் ஒருவரிடம் உரையாடிக்கொண்டிருந்தார். பள்ளிச் சிறுவரான இவர் தற்செயலாக கேட்க நேர்ந்தது. இவர் தம் தந்தையாரிடம் எவ்விதத் தயக்கமுமின்றி கேட்டார்... “நீங்கள் கூறுவது சரியானால் ஒரு வேளை சிசு கருப்பையில் அழிந்துபோனாலோ, அழிக்கப்பட்டாலோ அது ஜீவன் முக்தி அடைந்து விடுமா?”  இக்கேள்வி சின்னுவின் தந்தையாரைத் திகைப்பில் ஆழ்த்தியது. அவர் மறுமொழி ஏதும் கூறவில்லை.
          சிறுவயது முதற்கொண்டே சாதுக்களின் பழக்கம் சின்னுவுக்கு இருந்து வந்தது. தியாகசீலர்களான உண்மையான துறவிகளைச் சந்திக்கும் பாக்கியம் இவர் பெற்றிருந்தார். இவர் பழகிய சாதுக்களுள் சற்குருசுவாமிகள், சட்டி சுவாமிகள், பழநி சாது சுவாமிகள் ஆகியோரைக் குறிப்பாகச் சொல்லலாம்.
          1914ஆம் ஆண்டு சற்குருசுவாமிகளின் தரிசனம் கிட்டியது. அடிக்கடி ‘சற்குரு மஹாதேவ்’ என்று கோஷமிடுவார் அந்த சுவாமிகள். ஊத்துக்குளி ஜமீன்தாரின் குடும்பத்தார் கிறிஸ்துமஸ் விடுமுறையின்போது பழனிக்கு சென்றபோது சின்னுவையும் வரவேண்டுமென்று வற்புறுத்தி அழைத்துச் சென்றனர். அப்பொழுது இவர் சற்குரு சுவாமிகளுக்கு அறிமுகமானார். தம்மைச் சூழ்ந்து நிற்கும் சிறுவர்களுக்கு வாழைப்பழம் கொடுத்து அவர்களை விரட்டிவிடுவார் சற்குருசுவாமிகள். ஆனால் இவரை மட்டும் அடிக்கடி அழைத்துத் தம் அருகில் வைத்துக்கொண்டு இவருடன் உரையாடுவார். ஞான நூல்களை சின்னுவின் கையில் கொடுத்துத் தமக்காக உரக்கப்படிக்கும்படி கூறுவார். அவர் கௌபீனம் மட்டும் தரித்திரிப்பார். “தில்லையம்பலம், திருச்சிற்றம்பலம், நாலுகோபுரம், நடுவில் அம்பலம்” என்று உரத்த குரலெடுத்து அடிக்கடி பாடுவார்.       
          ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்ட பள்ளியில் பயின்று வந்ததால் சின்னுவுக்கு தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் போதிய பயிற்சி ஏற்படவில்லை. ஒருமுறை சற்குருசுவாமிகளிடம் ஆன்மீக நூலொன்றைப் படித்துக்காட்டியபோது அதில் ‘ஸ்திரீ’ என்னும் வார்த்தை வந்தது. அதை ‘ஸ்ரீ’ என்று படித்தார். ‘சரியாகப்படி’ என்று உடனே உரத்த குரலில் சற்குருசுவாமிகளிடமிருந்து உத்தரவு பிறந்தது. அவ்வுத்தரவு இவரின் உள்ளத்தில் ஆன்மீகத் துறையிலும் மொழித்துறையிலும் ஆற்றலை வளர்க்கும் சக்தியாக அமைந்தது.
          சற்குருசுவாமிகள், தம் குருநாதர் வெள்ளியங்கிரி மலையில் இருந்ததால் அவரை தரிசிக்கும்பொருட்டு ஓரிருமுறை பழனியிலிருந்து பயணம் மேற்கொண்டார். அப்பொழுது கோயம்புத்தூரில் சில நாட்கள் அவர் தங்கியிருக்கையில் சின்னு அவரைத் தரிசித்தார். இவர் வாழ்க்கையை ஆன்மீக நெறியில் செலுத்துவதற்கு ஏதுவாய் அமைந்த முக்கியமான நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த சந்திப்பில்தான் சற்குரு சுவாமிகள், “சரீரத்தை தேவாலயமாக வைத்துக்கொள். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேச மொழிகளைப் படித்து அதன்படி நட” என்று ஆக்ஞாபித்தார். பரமஹம்சரைக் குறித்தும் அவர் பெயரால் இயங்கி வந்த பேரியக்கத்தைக் குறித்தும் முதன்முதலில் இவர் அறிந்துகொள்வதற்கு இந்நிகழ்ச்சி ஏதுவாயிற்று. “வேதாந்த தத்துவத்துக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய வாழ்க்கையே விளக்கமாகும். சாதனைகள் அனைத்தையும் செய்து முடித்த மகான் அவர். இக்காலத்துக்கு அவரே ஏற்றவர்” என்று ஸ்ரீ ராமகிருஷ்ணரை சின்னுவுக்கு அறிமுகம் செய்து வைத்த சற்குரு சுவாமிகளைத் தம்முடைய முதல் ஞான குருவாக ஆயுள் முழுவதும் உள்ளத்தில் வைத்துப் போற்றி வந்தார் சுவாமி சித்பவானந்தர்.
          பழனி சாதுசுவாமிகள் யோக சித்தி மிக்கவர். பார்க்கும் பார்வையிலேயே காந்தம்போல் கவரும் சக்தி சாதுசுவாமிகளுக்கு இருந்தது. பரவசநிலையில் ஆழ்ந்த தியானத்தில் லயித்திருக்கையில் அவரைத் தரிசிக்கும் பேறு சின்னு பெற்றார். பழநியில் மூன்று வாரங்கள் தங்கி அவரது அதீத நிலையை நேரிற்கண்டு இன்புற்றார் சின்னு. பழனி ஆண்டவர் திருக்கோயிலில் அவருக்குச் செல்வாக்குண்டு. ஒருமுறை சின்னு தெய்வ தரிசனம் முடித்துக்கொண்டு படியிறங்கி வருகையில் சாதுசுவாமிகள் எதிர்பட்டார். இவரை சாதுசுவாமிகள் தம்முடன் சன்னிதிக்கு அழைத்துச் சென்றார். அர்த்த மண்டபத்தில் அமர்ந்து அரைமணி நேரம் ஆழ்ந்த ஜபத்தில் ஈடுபட்டார். அவர் வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும்போது ஒருவரும் மண்டபத்தில் நுழையத் துணியமாட்டார்கள். அந்த அருட்சூழ்நிலைக்குத் தாங்கள் இடையூறு செய்யலாகாது என்று பயபக்தியுடன் ஓரமாக ஒதுங்கி நிற்பார்கள். ஜபம் முடிந்தவுடன் இறைவனுடைய ராஜ அலங்காரத்தை மாற்றி சின்னு விரும்பியவாறே ஆண்டிக் கோலத்தை இருவரும் தரிசித்து ஆனந்தித்தார்கள். அன்று இருநூறு சாதுக்களுக்குச் சமாராதனை செய்வித்தார் சாதுசுவாமிகள்.
          சட்டி சுவாமிகள் என்னும் மகான் தமது பிக்ஷாபாத்திரத்தை அடிக்கடி தலையின் மீது கவிழ்த்துக்கொள்வார். தக்ஷிணாமூர்த்தி சின்முத்திரை தாங்கி மௌனோபதேசத்தினால் சகல ஞானங்களையும் அருளிச் செய்தவாறு சட்டிசுவாமிகளும் தமது உள்ளக்கிடக்கையைப் புலப்படுத்துவார். அவருடைய எளிமையையும் தூய பக்தியையும் கண்டு சின்னு அவரை மிகவும் உயர்வாக மதிக்கலானார்.
          தமக்கு துறவற தீட்சை தந்தருளிய மஹாபுருஷரிடம் இவர் தம்மைச் சிறுவயதில் வலியவந்து ஆட்கொண்ட மகான்களைப் பற்றிக் குறிப்பிட்டார். மகாபுருஷ் மகராஜ், “அவர்கள் மஹாத்மாக்கள். அவர்களுடைய அருளாசியினால்தான் நீயும் சாதுக்கள் திருக்கூட்டத்தில் சேர நேர்ந்தது” என்று மூவரைக் குறித்தும் கூறி மகிழ்ந்தார்.
          சின்னு கப்பற்பயணச் சீட்டுக்கும், பாஸ்போர்ட்டுக்கும் ஏற்பாடு செய்ய சென்னைக்குச் சென்றார். சென்னை தாம்சன் அண்டு கம்பெனி என்னும் அச்சகத்தில் விசிட்டிங் கார்டு அச்சடித்துத் தருமாறு கூறிவிட்டு வெளியே வந்தபொழுது புத்தகங்கள் விற்றுக்கொண்டிருந்தவன் ஒருவனைப் பார்த்தார். அவனிடமிருந்த 12 காசு விலையுள்ள புத்தகம் ஒன்று சின்னுவின் கண்ணில் பட்டது. ‘சுவாமி விவேகானந்தரின் சென்னைச் சொற்பொழிவுகள்’என்பது அப்புத்தகத்தின் பெயராகும். அதை இரண்டரை அணா கொடுத்து விலைக்கு வாங்கினார். ஊருக்குத் திரும்பி வந்து சேர்ந்ததும் ‘நம் முன் நிற்கும்பணி’ என்னும் முதல் கட்டுரையை இவ படிக்கலானார். அக்கட்டுரை சின்னுவிடத்தில் மனமாற்றத்தை ஏற்படுத்தியது.
1920ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் எப்.ஏ.(F.A.) வகுப்பில் கணிதத்தையும், விஞ்ஞானத்தையும் முக்கிய பாடங்களாக எடுத்துப் படித்தார். அதே கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் தத்துவத்தை முக்கியப் பாடமாக எடுத்துக்கொண்டார். தாம் படித்த கல்லூரியின் முதல்வரைக் குறித்து சின்னு கூறியது:- “எங்கள் முதல்வர் ஈ.ஈ.பெரி (E.E. Berry) மாணவர்களிடையே உள்ள திறமையைக் கண்டறிந்து அத்திறமையை அவர்களிடம் வளர்ப்பதில் வல்லவராக இருந்தார். அவர் மாணவர்களைக் கௌரவமாக நடத்துவார். மாணவர்கள் குற்றம் செய்தால் அக்குற்றத்தைக் கண்டுபிடித்து அதற்குரிய தண்டனையைத் தருவார். எனினும் அவர் எப்பொழுதும் மாணவர்களைக் கண்ணியமாக நடத்துவார். பாடங்களில் உள்ள ஐயங்களைக் கேட்டுப் போக்கிக்கொள்ளவும் தங்களுடைய கருத்துக்களைத் தங்குதடையின்றி வெளிப்படுத்தவும் மாணவர்களுக்கு அவர் சுதந்திரம் தந்தார். அவர் தலைசிறந்த பண்பட்ட ஆசிரியராகத் திகழ்ந்தார். எளிய வாழ்க்கை, உயர்ந்த லக்ஷியம், தெளிந்த மனம், திறமையாகப் போதிக்கும் ஆற்றல், மாணாக்கரிடத்து அன்பு, நல்லொழுக்கம் முதலிய நல்லியல்புகளை அவர் பெற்றிருந்தார்”.
முதல்வர் பெரி சின்னுவுக்கு, “எமர்சனின் கட்டுரைகள்” என்னும் புத்தகத்தைப் பரிசாகத் தந்தார். எமர்சன் அமெரிக்க நாட்டின் சிறந்த தத்துவ ஞானி.
சின்னு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபொழுது தாயார் நஞ்சம்மையார் 1921ஆம் ஆண்டு உடல் வாழ்வை நீத்தார். தாயின் மறைவு சின்னுவுக்கு பெரும் துக்கத்தைத் தந்தது. ஆனால் அவர் துக்கத்தை புறத்தில் காட்டிக்கொள்ளவில்லை. மனச்சாந்திக்காக சின்னு சாதுக்களுடைய தொடர்பைப் பெறும் பொருட்டு சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துக்குச் சென்று வந்தார். விக்டோரியா விடுதியில் தங்கியிருந்தபொழுது தம் அறையில் விவேகானந்தர் படம் ஒன்றை வைத்திருந்தார். நூலகங்களிலிருந்து விவேகானந்தருடைய நூல்களை வாங்கிப் படித்து வந்தார். திரு. கிருஷ்ணன் நம்பூதிரி, திரு. அவினாசிலிங்கம் ஆகியோர்களை நண்பர்களாகப் பெற்றிருந்தார். சின்னுவும், அவினாசிலிங்கமும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்குச் சென்று ஸ்ரீமத் பிரம்மானந்த சுவாமிகளை அடிக்கடி தரிசித்து வந்தார்கள்.
இவர்கள் இருவரும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்குப் போனபோதெல்லாம் ஸ்ரீமத் பிரம்மானந்த சுவாமி ஒருவித பரவச நிலையில் இருப்பார். அவர் பரவச நிலையில் இருந்துகொண்டே முற்றத்தைச் சுற்றி நடந்துகொண்டு வருவார். இவ்விருவரையும் நோக்கி வரும்போதெல்லாம் இவர்கள் வீழ்ந்து வணங்குவார்கள். அவரோ ஓர் அதீத நிலையில் இருந்தவண்ணம் நடந்துகொண்டே இருப்பார். தாங்கள் வீழ்ந்து வணங்கியதை அவர் ஏற்றுக்கொண்டாரா என்று இருவருக்கும் தெரியவில்லை. ஒருமுறை விடியற்காலையில் சென்றபொழுது வழக்கம்போல் பழமோ புஷ்பமோ எடுத்துச் செல்லாமல் வெறுங்கையுடன் சென்றனர். சின்னு, பிரம்மானந்த சுவாமிகள் முன்னர் வீழ்ந்து வணங்கினார். வழக்கத்திற்கு மாறாக அன்று பிரம்மானந்த சுவாமி, “இன்றைக்குப் பழமாவது, புஷ்பமாவது கொண்டு வரவில்லையா?” என்றார். அதைக் கேட்டதும் சின்னு அதிர்ச்சி அடைந்தார். ஒவ்வொரு முறையும் அவர் முன் சமர்பித்த கனியையும், புஷ்பத்தையும் அவர் அங்கீகரித்துக்கொண்டார் என்பது அப்பொழுதுதான் சின்னுவுக்கு விளங்கியது.
சின்னு ஒரு சமயம் கல்லூரியிலிருந்து விடுதிக்குத் திரும்பிக்கொண்டிருக்கையில் மரத்தின் கீழ் ஒருவன் பழைய புத்தகங்களை விற்றுக்கொண்டிருப்பதைக் கண்ணுற்றார். ‘ஸ்ரீ ராமகிருஷ்ண உபதேசம்’ என்னும் நூல் அவனிடம் இருப்பதைக் கண்டார். மஹேந்திரநாத குப்தர் அந்நூலின் ஆசிரியராவார். சின்னு அந்த நூலை ஒரு ரூபாய் விலை கொடுத்து வாங்கினார்.
கல்லூரிக் காலத்தில் சென்னையில் ஸ்ரீ சுப்பையா சுவாமி என்னும் ஒரு மஹான் இருந்தார். அவருடைய பூர்வீகம் பொள்ளாச்சிக்குப் பக்கத்திலுள்ள வேட்டைக்காரன்புதூர் ஆகும். அவர் சிறு வயதிலிருந்தே விக்னேசுவர வழிபாடு செய்து வந்தார். துறவற நெறிக்கு வந்த பிறகு கோவிலூர் மடத்திலும், காசியிலும் தங்கி வேதாந்த நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். சென்னை சூளையில் உள்ள ஆனந்தாஸ்ரமத்தையும், திருவாரூரில் தக்ஷிணாமூர்த்தி மடத்தையும் ஸ்தாபித்தார். அவர் அசையாது சிலைபோல் அமர்ந்திருந்து பல மணி நேரங்கள் தொடர்ந்து தத்துவக் கருத்துக்களைப் பேசுவார். சொல்லுகிறவருக்கும், கேட்பவருக்கும் களைப்பு ஏற்படாது. கௌபீனதாரியாக இருந்த அவரின் குரல் மிகவும் இனிமையாக இருக்கும். அவர் ஸ்தாபித்த மடத்துக்கு ஏராளமான சொத்துக்கள் இருந்தபொழுதிலும் பல வீடுகளில் மதுக்கரி பிக்ஷை ஏற்று உண்டு வந்தார். ஹிந்தி, சம்ஸ்க்ருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றவர். சின்னுவின் குடும்பத்தார் ஸ்ரீ சுப்பையா சுவாமிகளிடம் பெருமதிப்பு வைத்திருந்தார்கள். பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் மடத்தின் ஆண்டு விழாவில் சுப்பையா சுவாமிகள் அருளுரை வழங்குவது வழக்கம். சின்னுவும், குருநாதர் சுவாமி சிவானந்தரும் அவரிடத்தில் தொடர்பு வைத்திருந்தார்கள். 1931ஆம் ஆண்டு ஸ்ரீமத் சுப்பையா சுவாமிகள் சமாதி அடைந்தார்.
1923ஆம் ஆண்டு பி.ஏ. இறுதி வகுப்பில் சின்னு படித்துக் கொண்டிருந்தார். இறுதித் தேர்வு எழுதுவதற்கு ஓரிரண்டு மாதங்கள் இருந்தன. அப்பொழுது சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திலிருந்த ஸ்ரீமத் அகிலானந்த சுவாமி பூரியிலுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்து விழாவுக்குச் செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்தார். அப்பொழுது சின்னு கல்லூரிப் படிப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ஸ்ரீமத் அகிலானந்த சுவாமிகளிடம் தம்மையும் அழைத்துக்கொண்டு போகவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். தமக்கு சம்ஸ்கிருதம் படிப்பதில் ஆவல் அதிகமாக இருப்பதால் கல்கத்தாவுக்குச் சென்று சில காலம் தங்கியிருக்க வேண்டுமென்றும், சாது சங்கத்தில் சில காலம் இருப்பதற்கு விரும்புவதாகவும் தந்தைக்கு கடிதம் எழுதிவிட்டு பேலூர் மடத்துக்கு ஸ்ரீமத் அகிலானந்த சுவாமிகளுடன் சின்னு புறப்பட்டுப் போனார்.
பேலூர் பயணத்தின் நடுவே புவனேஷ்வரத்தில் நின்றபோது மகாபுருஷ் மகராஜ் சுவாமி சிவானந்தரை சந்தித்து ஸ்ரீ ராமகிருஷ்ண பேரியக்கத்தில் தம்மையும் சேர்த்துக்கொள்ளும்படி விண்ணப்பித்தார், சின்னு. தாம் துறவியாக வேண்டும் என்ற எண்ணத்தையும் தெரிவித்தார். சிவானந்த மகராஜ் சின்னுவைத் தம் சீடராக ஏற்றுக்கொண்டு பேலூர் மடத்துக்கு அழைத்துச் சென்று பிரம்மச்சரிய தீக்ஷை செய்து “திரையம்பக சைதன்யர்” என்னும் நாமத்தைச் சின்னுவுக்கு அளித்தார்.
1924ஆம் ஆண்டு தம் குருநாதரின் அனுமதியைப் பெற்று திரையம்பக சைதன்யர் தென்னாட்டில் யாத்திரை மேற்கொண்டார். ரயில் பயணத்தின் போது நட்பு கொண்ட ஒருவர் மூலமாக கர்மயோகியாகவும், தவசீலராகவும் விளங்கிய வ. வே. சு. ஐயர் பற்றி கேள்விப்பட்டார். திருநெல்வேலிக்கு அருகில் சேரன்மஹாதேவியில் பரத்வாஜ ஆஸ்ரமம் ஒன்று அமைத்து ஐயர் வாழ்ந்து வந்தார். தனிமையில் இருந்து தவம் செய்ய இடம் தேடி வருவதை திரையம்பக சைதன்யர் ஐயரிடம் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாசம் என்னும் இடம் அதற்கேற்றது என்று ஐயர் அவர்கள் கூறினார். திரையம்பக சைதன்யர், ஒரு குடில் அமைத்து பாபநாச தீர்த்தத்தில் நீராடி சிவலிங்கத்தை பூஜித்து இரண்டு மாத காலம் தவ வாழ்வு வாழ்ந்தார்.
திரையம்பக சைதன்யர் பாபநாசத்தில் தவம் புரிந்து வந்தபொழுது வ. வே. சு. ஐயர் ஒரு நாள் தம் குழந்தைகளை அழைத்துக்கொண்டு அருவியில் ஸ்நானம் செய்ய வந்தார். தமது உடைமைகள், துளசி மாலை, விபூதி டப்பா முதலியவற்றை திரையம்பக சைதன்யரிடம் வைத்துவிட்டு அருவிக்கு மேலுள்ள கல்யாண தீர்த்தத்தில் குளிக்கும்பொழுது அவர் மகளை நீர் அடித்துக்கொண்டு போயிற்று. மகளின் உயிரைக் காப்பாற்றச் சென்ற ஐயர் அவர்களும் மகளுடன் சேர்ந்து அருவி நீரில் மூழ்கிவிட்டார்கள்.
1926ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் நாள் பௌர்ணமி நன்னாளில் ஊட்டி ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி சிவானந்தர்  திரையம்பக சைதன்யருக்கு சன்னியாச தீக்ஷை தந்து சுவாமி சித்பவானந்தர் என்னும் நாமத்தைச் சூட்டினார்.

No comments:

Post a Comment