Sunday, March 10, 2013

இந்திய இலக்கியச் சிற்பிகள் – ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்


ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்களின் தவ வாழ்வை ‘பராய்த்துறை மேவிய பரம்புருஷர்’ என்ற நூலிலும், ஆங்கிலத்தில் ‘Tapovana Tapasvi’ என்ற நூலிலும் வாசித்திருக்கிறோம். இந்திய மொழிகளில் இலக்கியமும், இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் எண்ணத்தோடு துவக்கப்பட்ட அமைப்பாகிய சாகித்திய அகாதெமியில் இந்திய இலக்கியச் சிற்பிகள் என்ற பிரிவின் கீழ் ‘சுவாமி சித்பவானந்தர்’ என்ற நூலாக மு. பழனி இராகுலதாசன் அவர்கள் நமது பெரியசாமியைப் பற்றி எழுதியுள்ளார் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. அந்த நூலில் சுவாமிஜியின் சிறப்புக்களையெல்லாம் ஆராய்ச்சி செய்துள்ளார். நூலாசிரியர் பெரிய சாமியை முதன்முதலாக சந்தித்தது, முதன்முதலாக பெரியசாமியிடம் உரையாடியது, நூலை எழுத உதவி செய்தவர்கள், பலர் தங்களுக்கு பெரியசாமியிடம் ஏற்பட்ட அனுபவங்களைச் சொன்னது, குறிப்புகளைக் கொடுத்து உதவியது என்பனவற்றை முன்னுரையில் சொல்கிறார். பின்பு, 8 தலைப்புக்களின் கீழ் சுவாமிஜியைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறார். அந்த முன்னுரையை மட்டும் இங்கு பதிந்துள்ளோம்.

ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்

அந்த நூலின் முன்னுரையில் நூலாசிரியர் நமது சுவாமிஜியின் நோக்கம் என்னவாக இருக்கும்? என்று ஒரு கேள்வியை எழுப்பிவிட்டு அவரே அதற்கு விடையும் இறுத்துள்ளார். அந்த விடை அர்த்தமுள்ள நற்செய்தியாகும். அந்த செய்தியை சுவாமி சித்பவானந்தரின் பிறந்த நாளான இன்று தெரிந்துகொள்வது மற்றொரு அர்த்தமுள்ள செயலாகும். 

மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோவில் ஆடி வீதியில் நூல் அரங்கேற்றம்; அரங்கேறிய நூல் ‘திருவாசக விளக்கம்’ நூலாசிரியர் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்கள். மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர்கள் சிலர் கூட்டத்தில் இருந்தோம். விளக்க உரையின் உன்னதங்களையெல்லாம் தமிழ்க்கடல் ராய.சொ. அவர்களுக்கே உரிய பாணியில் எடுத்து உரைத்தார்கள். இறுதியில் ஏற்புரையாகிய நூலாசிரியர் உரை; ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் எழுந்தார்கள்; எளிமை, வலிமை, இனிமை இம்மூன்றும் சரிவிகிதமாய்க் கலந்து ஒளிவீசிய ஓர் அற்புதத் தோற்றம்; ஓர் அற்புதப் பேச்சு. அதுதான் ஸ்ரீமத் சுவாமிகளை முதன்முதலாக நேரில் காணக்கிடைத்த தரிசனம்!

எனது சொந்த கிராமமான நெடுங்குளம் என்னும் சிற்றூர், திருவேடகம் ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்துக்கு அருகில் இருக்கிறது. என் பெரியப்பாவும், எங்கள் கிராமத்துக்கு ஓர் ஆரம்பப் பள்ளிக்கான கட்டிடத்தைக் கட்டிக் கொடுத்து கல்விக்கு வழிவகுத்தவருமான உயர்திரு தனுஷ்கோடித் தேவரின் மகன், என் தம்பி, த. பெருமாள் என்ற பிச்சை, அப்போது திருவேடகம் ஆஸ்ரமத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். “மடத்தில் ஒரு நாள் அந்தர்யோகம் நடக்கிறது, போவோம்” என்று என்னை அழைத்துப்போனார். கலந்து கொள்பவர்கள் எல்லாரும் வரிசையில் நின்று பதிவு செய்து கொள்ளும் நேரம். யாரோ ஒரு முக்கியமான மனிதர் ஒருவர் எனக்கு அடுத்து நிற்பதுபோல உணர்ந்தேன். அன்றைய சட்டமன்ற உறுப்பினர் டி.எல். சசிவர்ணம், அவரை அடுத்து மதுரை மாவட்டக் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள், சர்வோதய இயக்கத் தலைவர்கள், ஆசிரியப் பெருமக்கள் என்று பல முக்கியஸ்தர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அந்த ‘ஒரு நாள் அந்தர்யோகத்தில் ஸ்ரீமத் சுவாமிகளின் அழகும் எளிமையும் மிகுந்த ஆன்மீக உரையைக் கேட்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. மதியம், பிற்பகல் உணவு வேளைகளின்போது ஸ்ரீமத் சுவாமிகள் எல்லாருடனும் சேர்ந்து அமர்ந்து எல்லாருக்குமான உணவு எதுவோ அதையே உண்டார்கள்; ஆஸ்ரமத்தின் தலைவர் அல்லது அந்தர்யோக நிகழ்ச்சியை நடத்துபவர் என்பதான பிரத்தியேக வேறுபாடு எதுவும் இல்லை. அந்த எளிவந்த அற்புதம் இன்றும் நினைக்க நினைக்க நெஞ்சுக்குள் பெருவியப்பை அளிப்பதாகவே உள்ளது.

பின்னர் பல ஆண்டுகள் கழித்து, நான் தேவகோட்டை ஸ்ரீசேவுகன்-அண்ணாமலை கல்லூரியில் தமிழ்த்துறைப் பயிற்றுநராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். திருவேடகம் ஆஸ்ரமத்திலிருந்து, கல்லூரி ஆசிரியர்களுக்காக ஒரு சுற்றறிக்கை வந்தது. “ஒரு வாரகால இந்திய கலாச்சாரச் சந்திப்பு” (Indian Cultural Meet) கல்லூரி ஆசிரியர்களுக்காக நடைபெற உள்ளது என்றும், முன்பதிவு செய்துகொண்டு ஆசிரியர்கள் பங்கேற்கலாம் என்றும், நிகழ்ச்சிகளுக்கு ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் தலைமை ஏற்கிறார்கள் என்றும் சுற்றறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது. கல்லூரி நிர்வாகத்திடமிருந்து முறையான அனுமதி பெற்று அந்த கலாச்சாரச் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். நிகழ்ச்சிகளைப் பேராசிரியர் வேதாந்த வித்தகர் மதிப்பிற்குரிய வி.எஸ். நரசிம்மன் அவர்களும், ஆளுமைத் திறமும் எழுத்தாற்றலும் மிக்க ஆங்கிலப்பேராசிரியர் கே. சுப்ரமணியம் அவர்களும் முன்னின்று நடத்திக்கொண்டிருந்தனர். இந்த இரு பெருமக்களுடன் சற்று நெருங்கிப் பழகும் வாய்ப்பு அங்கே எனக்கு அமைந்தது. “பக்கத்து ஊர்க்காரன்” என்ற கூடுதலான உரிமையும் எனக்கு உதவிகரமாக இருந்தது. நிகழ்ச்சிக்கு இடையில் ஒரு நாள், பேராசிரியர் நரசிம்மன் அவர்களிடம் “சுவாமிஜி அவர்களைச் சந்தித்து தரிசனம் பெற வேண்டும்” என்று என் விருப்பத்தைத் தெரிவித்தேன். எளிமையும் அன்பும் சகோதர வாஞ்சையும் மிக உடைய பேராசிரியர் நரசிம்மன், துளியும் தயக்கமின்றி, “பேஷாய்ப் பார்க்கலாமே” என்று கூறி ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்களிடம் என்னை அழைத்துப்போனார். ஆஸ்ரமத்துக்குள் உள்ளே போகும் வாசலுக்கு இடது பக்க அறையில், சுவாமிகள், ஸ்தோத்திரங்களை உச்சரித்தவாறு சுவர்களின் ஓரமாகச் சிறுநடை நடந்துகொண்டிருந்தார்கள். உள்ளே போய்த் தாள் பணிந்து எழுந்து நின்றேன். பேராசிரியர் நரசிம்மன், என்னை அறிமுகம் செய்யும் வகையில், “தேவகோட்டைக் கல்லூரியில் பணியாற்றுகிறார்; நமது நிகச்சிக்கு வந்திருக்கிறார்; பக்கத்து ஊர்க்காரர்” என்று உரைத்தார். நடையைச் சிறிது நிறுத்திய சுவாமிகள் என்னைப் பார்த்து ஆசிகள் கூறி, “சந்தோஷம், அடிக்கடி வந்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்றார்கள். மூன்றவது முறையாக அமைந்த இந்த சந்திப்பில் சுவாமிகளின் வாழ்த்துக்களைப் பெற்று என் மனம் உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைந்தது. கலாச்சாரச் சந்திப்பின் நிறைவு நாளன்று, கலந்துகொண்ட ஒவ்வொருவரும் தமது கருத்தைச் சுருக்கமாகத் தெரிவித்து சுவாமிகள் வழங்கும் அன்பளிப்பு நூல்களைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று நிகழ்ச்சி நிரல் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனக்குரிய வாய்ப்பு வந்தபோது, “இது எங்களின் ஆன்மாவுக்கு விருந்தளித்த ஆன்மிக வாரம்” என்று சுருக்கமாகக் குறிப்பிட்டு, சுவாமிகளிடமிருந்து  நூல்களைப் பெற்றுக்கொண்டேன். பின்னர் சுவாமிகளின் நூல்களை வாசிக்கத் தொடங்கினேன்; வாய்ப்பு அமைந்தபோதெல்லாம் ‘அந்தர்யோகம்’ நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். இவ்வாறு அவ்வப்போதும், சில சந்தர்ப்பங்களிலும் சுவாமிகளின் எழுத்துக்களைப் படிக்க நேர்ந்தபோதும், உரைகளைக் கேட்க நேர்ந்தபோதும், “ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் ஏதோ ஒரு மிக முக்கியமான நோக்கம் கருதியே போராடிக்கொண்டிருக்கிறார்கள்” என்று மட்டும் எனக்குப் புரிந்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விரிவாகப் படித்தபோதுதான், மகாகவி பாரதியார் குறிப்பிட்டாரே, “வியன் உலகு அனைத்தையும் அமுது என நுகரும் வேத வாழ்வினைக் கைப்பிடிப்போம்” என்று. அப்படி, ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்களும் இருண்டு கிடக்கும் இந்திய மண்ணில், ஒரு வேத வாழ்வைக் கொண்டுவரப் பாடுபடுகின்றார்கள் என்பது எனக்குத் தெளிவாகப் புலப்படலாயிற்று.

இந்த மண்ணில் ஒரு மறுமலர்ச்சி நிகழவேண்டும் என்றும், அது மானுடனை அறியாமையிலிருந்தும், மூடநம்பிக்கைகளிலிருந்தும் விடுதலை செய்து, மனிதன் என்ற நிலையிலிருந்து ஒரு தெய்வீக நிலைக்கு உயர்த்துவதாக இருக்க வேண்டும் என்றும் திட்டமிட்டு, பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை சாரதாமணிதேவி, சுவாமி விவேகானந்தர் முதலானோர் வழியில், நைஷ்டிக பிரம்மச்சர்யம் ஏற்று வாழ்க்கை முழுவதும் தளர்வின்றி உழைத்த ஒரு பரமபுருஷரின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் அரிய வாய்ப்பு கிடைத்தது. எனக்குக் கிட்டிய பெரும் பாக்கியமே ஆகும். இந்த வாய்ப்பை எனக்கு அளித்த சாகித்திய அகாதெமியின் தமிழகப் பொறுப்பாளர் பெருமக்களுக்கும், புதுதில்லியின் தலைமைப் பொறுப்பாளர் பெருமக்களுக்கும் எனது கடப்பாடுமிக்க நன்றியறிதலைப் புலப்படுத்திக்கொள்கிறேன்.

சாகித்திய அகாதெமிக்காக ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதப்போகிறேன் என்று அப்போதைய திருவேடகம் ஆஸ்ரமத்தின் தலைவர் சுவாமி திவ்யானந்தரிடம் நான் தெரிவித்தபோது, என்னைக் கூர்ந்து கவனித்து, “அவ்வளவு சுலபமாக எழுதிவிட முடியுமா?” என்று வியப்புத் தெரிவித்தார்கள். சுவாமி திவ்யானந்தரின் வினாவில் அர்த்தம் உள்ளது; ஆழமும் உள்ளது. சிறிது நேரம் திகைத்துப்போய் நின்றேன்; பின்னர் தயங்கியபடியே “என்னால் இயன்ற அளவு செய்வேன்” என்று பதிலிறுத்தேன். எனது பணிவான உரையால் சுவாமி திவ்யானந்தர் சிறிது நம்பிக்கை கொண்டவராக, ஆசி உரையும் அனுமதி உரையும் வழங்குவது போல, “சரி செய்யுங்கள்” என்றார்கள்; செய்திருக்கிறேன்; எனது இந்த முயற்சி முழுமையானது என்று சொல்லும் தைரியம் எனக்கு இல்லை; ஆனால் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் மீது கொண்டிருக்கும் மரியாதையால் மேற்கொண்ட எளிய முயற்சி இது என்று மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். “வானத்தைச் சங்கிலியால் அளக்கலாமோ?” என்பான் பாரதி. ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் என்ற அகண்ட ஞானப் பிரகாசத்தை எழுத்துக்குள் அளந்துகாட்ட யாரால்தான் முடியும்?

இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்று அறிந்ததும், என்னை உற்சாகப்படுத்தி நீண்ட கடிதம் எழுதியவர் கோவை ‘ஓம் சக்தி’ இதழின் பொறுப்பாசிரியர், தேசியக் கவிஞர் பெ. சிதம்பரநாதன் ஆவார். யார், யாரைச் சந்திக்க வேண்டும், எந்தெந்த நூல்களைப் பயில வேண்டும், அவை எங்கெங்கே கிடைக்கும் என்றும் வழிகாட்டியதோடு, சுவாமிகள் பற்றிய பத்திரிக்கைக் கட்டுரை ஒன்றையும் நகல் அச்சு செய்து அனுப்பி உதவினார்.

என் மதிப்பிற்குரிய பேராசிரியர் சன்மார்க்க சீலர் சுப. அண்ணாமலையார், “சித்பவானந்தரைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றால் உபநிடதங்களைப் படிக்க வேண்டும்; சித்பவானந்தரின் பிரம்மச்சரிய வாழ்க்கை போற்றுதற்குரிய வாழ்க்கை; தேசியக் கல்விக்கு அவர்களது சேவை மகத்தானது” என்று குறிப்பிட்டு வழிகாட்டினார்கள்.

ஸ்ரீமத் சித்பவானந்த சுவாமிகள் மீது பெருமதிப்பு கொண்ட தேவகோட்டை இளைய ஜமீன்தார் திருப்பணிச் செம்மல் சோம. நாராயணன் செட்டியார் தேவக்கோட்டை கல்வி விழாவுக்கு ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் மிகக் குறித்த நேரத்துக்கு வருகை தந்தது பற்றிக் குறிப்பிட்டு “சுவாமிகளது காலந்தவறாமைப் பண்பும், கல்விச் சேவையும் மகத்தான அம்சங்கள்” என்று சுட்டிக் காட்டினார்.

தேவகோட்டை ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வ. தேனப்பன் திருப்பராய்த்துறையில் பயின்ற மாணவர், ஸ்ரீமத் சுவாமிகள் பற்றிக் கூறும்போது, “கருணையும் கண்டிப்பும் ஒருங்கே இணைந்தவர் எங்கள் சுவாமிஜி” என்று தனது பள்ளிக்கால அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

நூல்கள் பெறுவதற்காகத் திருவேடகம், திருப்பராய்த்துறை ஆஸ்ரமங்களுக்குச் சென்றபோது அங்கே விற்பனைப்பிரிவுகளின் பொறுப்பாளர்கள் அரிய உதவிகள் செய்தார்கள்.

திருப்பராய்த்துறையில் பணியாற்றும் வார்டன் திரு K. சண்முகம் ஸ்ரீமத் சுவாமிகள் குறித்தும், சுவாமிகளின் அந்தர்யோகம் என்னும் அமைப்பின் சிறப்புக்கள் குறித்தும் பல கருத்துக்களைத் தெரிவித்தார்.

தேவகோட்டை உயர்திரு பி.சு. கோபால கிருஷ்ண சாஸ்திரிகளின் குடும்பம் ‘தர்ம சக்கரம்’ இதழின் வாசகக் குடும்பம். சாஸ்திரிகளின் புதல்வரும் என் மாணவருமாகிய கோ. கணேசன் சில அரிய பழைய ‘தர்ம சக்கரம்’ இதழ்களைத் தேடி எடுத்துக் கொடுத்தார். இவர்கள் அனைவரும் அவரவருக்கும் இயைந்த வழியில் பேருதவி செய்தமையாலேதான் இந்த நூலைச் சிறப்பாக எழுத முடிந்தது என்பதை மிகுந்த நன்றியுணர்வோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நான் பார்த்த அளவில், படித்த அளவில் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்களின் அந்தர்யோக சொற்பொழிவுகள், அழகிய முன்னுரைகள், ஆன்மிக ஜெயந்தி விழாக்களில் ஆற்றிய பேருரைகள் பலவும் இன்னும் நூல்வடிவில் ஆக்கம் பெறவில்லை என்றே உணர்கிறேன்.  அவை அனைத்தும் ஒன்று திரட்டப்பட்டு நூலாக்கப்படுவது எதிர்கால இளைய சமுதாயத்துக்குப் பெரும்பயன் விளைவிக்கும் என்ற என் விருப்பத்தை இந்தச் சந்தர்ப்பத்தில் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
-மு. பழனி இராகுலதாசன்.

நூலைப்பற்றி:
ISBN: 81-260-2633-3
இந்திய இலக்கியச் சிற்பிகள்
ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்
விலை ரூபாய் 40.

கிடைக்கும் இடம்:
குணா பில்டிங்ஸ்,
443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை,
சென்னை – 600 018.
Phone: 044-24311741.
Email: sahityaakademichennai@gmail.com

நூலாசிரியரைப் பற்றி:
மு. பழனி இராகுலதாசன் இந்த நூலின் ஆசிரியர். ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியர். இராமகிருஷ்ண, விவேகானந்தர் தத்துவங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். அகாதெமிக்காக ஏற்கனவே இரண்டு மொழிபெயர்ப்பு நூல்களும், பி.எஸ். ராமையா வாழ்க்கை வரலாற்று நூலும் எழுதிய அனுபவம் உள்ளவர். ‘பாரதி ஞானம்’ என்ற தனிச்சுற்றுச் சிற்றிதழ் இதழாசிரியரும் ஆவார்.

No comments:

Post a Comment