Wednesday, July 13, 2011

* "மகாபுருஷ் மகராஜ்"

"மகாபுருஷ் மகராஜ்" சுவாமி சிவானந்தர்
 
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு சீடர்கள் மொத்தம் பதினாறு பேர்கள். அதில் அடங்கும் ஒவ்வொரு சீடரும் குருதேவர் என்ற பட்டை தீட்டப்பெற்ற வைரத்தின் ஒவ்வொரு கோணம். இங்கு நாம் தெரிந்துகொள்ளப்போவது நமது பெரிய சுவாமிஜி சித்பவானந்தரின் குருநாதராகிய சுவாமி சிவானந்தருக்கு மகாபுருஷ் மகராஜ் என்ற பெயர் அமையக் காரணமான ஒரு நிகழ்ச்சியைப் பற்றி...

நிகழ்ச்சி - I

 சுவாமி சிவானந்தரின் பூர்வாசிரமப் பெயர் தாரக்நாத் என்பதாகும். திருமணம் புரிந்து சிறிது காலத்திற்குள்ளாகவே எதிர்பாராதவிதமாக நோய்வாய்ப்பட்டு தாரக்நாத்தின் மனைவி நித்யகாளிதேவியும் இறந்தார். மனைவியின் மறைவால், இல்வாழ்க்கைப் பிணைப்பு அறவே அற்று வீழ்ந்தது.


சுவாமி விவேகானந்தர் அவரை தாரக்தா(தாரக் அண்ணா) என்று மிகவும் மரியாதையுடன் அழைப்பார். சுவாமி விவேகானந்தர் அன்பாக சுவாமிகளுக்கு சூட்டிய ஓர் அழகான பெயர்தான் 'மகாபுருஷர்' என்பது. அது ஓர் உன்னதமான நிகழ்ச்சி. ஒரு நாள் சுவாமி சிவானந்தர் பலராம் பாபுவின் இல்லத்திற்குச் சென்றார்.  அங்கு குருதேவரைப்பற்றி உரையாடல் எழுந்தது. சுவாமி விவேகானந்தர் உரையாடலின் நடுவே, 'ஸ்ரீ ராமகிருஷ்ணர் மட்டுமே காமத்தை வென்றவர். திருமணத்திற்குப் பின்னரும் காமனை வெற்றி கொள்வது முடியாத ஒன்று' என்றார். அதைக் கேட்ட சிவானந்தர் அடக்கமாக, 'ஸ்ரீ ராமகிருஷ்ணர் என்னுள் ஏற்படுத்திய சக்தியின் ஆற்றலால் எனக்கு காம ஜெயம் சாத்தியமாயிற்று' என்று கூறினார். சுவாமிகளின் வார்த்தைகளில் இருந்த சத்தியத்தை உணர்ந்த சுவாமி விவேகானந்தர் வியப்பின் எல்லைக்குச் சென்றார்.  உடனே அவர் சுவாமிகளிடம், 'அப்படியா? அப்படியானால் நீங்கள் ஒரு மகாபுருஷர்தாம், சந்தேகமில்லை' என்று போற்றினார். அன்றிலிருந்து அடியார் கூட்டம் சுவாமி சிவானந்தரை "மகாபுருஷ் மகராஜ்" என்ற பெயராலேயே அழைக்கத் தொடங்கியது.

நிகழ்ச்சி - II

சுவாமிகளை "மகாபுருஷர்" என்று சுவாமி விவேகானந்தர் அழைத்ததற்கு இன்னுமொரு காரணமும் இருப்பதாகக் கூறப்படுகிறது. சுவாமி விவேகானந்தர், சுவாமி அபேதானந்தர், சுவாமி சிவானந்தர் ஆகிய மூவரும் புத்தகயா சென்று ஆன்ம சாதனை புரிந்தனர். புத்தரின் துறவற உணர்வில் தம்மை இழந்திருந்த சுவாமி விவேகானந்தர், புத்தரின் காட்சி கிடைக்க இரவுபகலாகத் துடித்தார். அந்தச் சமயத்தில் சுவாமி விவேகானந்தருக்கு புத்தரின் திருக்காட்சி கிட்டியது. அக்காட்சி கொடுத்த ஆனந்தத்தில் திளைத்தார் விவேகானந்தர். சற்று நேரத்திற்கெல்லாம் புத்தரின் திருவுருவம் மெல்ல மெல்ல மறைந்து சுவாமி சிவானந்தரின் தேகத்துடன் கலந்தது. இந்த அற்புதக் காட்சியைக் கண்ட பின்னரே சுவாமி விவேகாந்தர், சுவாமி சிவானந்தரை, "மகாபுருஷர்" என்று அழைக்கத் தொடங்கினார்.

No comments:

Post a Comment