- தவத்திரு யதீஸ்வரி விஷ்ணுப்ரியாம்பா
முன்னாள் பொறுப்பாளர்,
ஸ்ரீ சாரதா ஸமிதி,
மன்னார்குடி.
கண்டிப்பாக நடந்துகொள்ளும் நம் பெரிய சுவாமிஜி சில அன்பு உள்ளங்களுக்கு எப்படி விட்டுக்கொடுக்கிறார் என்பதையும் நான் சொல்கிறேன். கொடைக்கானலில் ஒரு பார்சி பெண்மணி இருந்தார். அவர் மிக நன்றாக நடனம் ஆடுவார். அந்த பார்சி பெண்மணி சுவாமிஜியின் சொற்பொழிவுகளைக் கேட்க வருவார். அந்த பெண்மணி நாங்கள் எல்லோரும் ஒரு நாள் அவர்களின் இல்லத்திற்கு வரவேண்டும் என்று அழைத்தார்கள். நாங்கள் எல்லோரும் ஆறு மணிக்கெல்லாம் அங்கே சென்றுவிட்டோம். பெரியம்பா, நான், சுவாமிஜி, இன்னொருவர் எல்லோரும் சென்றோம். அப்போது அந்த பெண்மணி குளிர் பிரதேசத்துக்கு இதமாக டீ கொண்டு வந்து கொடுத்தார்கள். சுவாமிஜி “எனக்கு டீ குடிக்கும் பழக்கம் கிடையாது. மன்னித்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் பால் கொடுங்கள்” என்று கூறினார். “பால் இல்லையே. நான் எல்லாப் பாலையும் டீயில் கலந்துவிட்டேனே” என்று அவர் அழுதுகொண்டே சொன்னார்கள். அப்படியே கீழே உட்கார்ந்து அழுதுவிட்டார்கள். உடனே சுவாமிஜி “உங்கள் திருப்திக்காக ஒரு துளி சாப்பிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு எங்களுக்கெல்லாம் கப் நிறைய கொடுத்துவிட்டு சுவாமிஜி ஒரு துளி முதலில் சாப்பிட்டுவிட்டு மீதியை அந்த அம்மாவிடம் “பிரசாதமாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று சொல்லிக் கொடுத்தார். எத்தகைய கடினமான கொள்கையையும் நல்ல அன்பான உள்ளங்களுக்காக சுவாமிஜி விட்டுக்கொடுத்து உள்ளார்கள் என்று நினைக்கும்போது அவருடைய பெருந்தன்மையான குணம் நம்மை அப்படியே ஆட்கொள்ளும்.
No comments:
Post a Comment