1926ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26-ஆம் தேதி பௌர்ணமி நன்னாளில் “மகாபுருஷ் மகராஜ்” ஸ்ரீமத் சிவானந்த சுவாமிகள் உதகை(கோடப்பமந்து) ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திலேயே திரையம்பக சைதன்யருக்கு(சின்னுவுக்கு) சந்நியாச தீட்சை கொடுக்க முடிவு செய்தார். அன்றைக்கு திரையம்பக சைதன்யர் உபவாசமிருந்து சந்நியாச தீட்சை பெறுவதற்கு முன்பு பித்ருக்களுக்குப் பிண்டம் போடும் சடங்கினைச் செய்தார். திரையம்பக சைதன்யர் பிண்டம் போட்ட அதே நேரத்தில் பொள்ளாச்சியில் இவருடைய தந்தையார் திரு. பெரியண்ணன் சாய்வு நாற்காலியில் இருந்தபடியே உயிர் துறந்தார். சந்நியாச ஆஸ்ரமம் ஏற்றுக்கொள்வதற்கு முன்பு பிண்டம் போடுகிற நேரத்தில் தந்தை உயிர் துறப்பது ஓர் அரிய செயல். தந்தைக்குப் பிண்டம் போடும்பொழுது தந்தை காலமாவது ஒருவருடைய வாழ்க்கையில் நிகழ்வது அரிது. இந்த அரிய செயல் திரையம்பக சைதன்யர் வாழ்க்கையில் நிகழ்ந்தது. இதைக் கேள்வியுற்ற ஸ்ரீமத் சுவாமி சிவானந்தர் திரையம்பக சைதன்யரிடம், “நீங்கள் இருவரும் பாக்கியசாலிகள். உன் தந்தையின் மரணம் சற்று (பிண்டம் போடும்) முன் நிகழ்ந்திருக்குமாகில் உனக்கு சந்நியாசம் தருவது ஓர் ஆண்டு தள்ளிப்போட நேரிட்டிருக்கும். உன் தந்தை உடலை உகுக்கையில் உன் கையால் பிண்டம் பெற்றுச் சென்றது அவர் செய்த பாக்கியமாகும்”. என்று பகர்ந்தார்.
ஸ்ரீமத் சுவாமி சிவானந்தர் திரையம்பக சைதன்யருக்கு சந்நியாச தீட்சை தந்து சுவாமி சித்பவானந்த என்னும் சந்நியாச நாமத்தையும் சூட்டினார்கள். சுவாமி சித்பவானந்தர் சந்நியாச தீட்சை பெற்ற அன்று திரு.சதாசிவம்பிள்ளை என்னும் அன்பரின் வீட்டுக்குச் சென்று பிக்ஷை ஏற்றார்.
No comments:
Post a Comment