கடவுளுக்கு எல்லாக் குழந்தைகளும் சமம். அவரிடத்துப் பாரபட்சம் என்பது இல்லை. ஒவ்வோர் உயிரும் தன்னிடந்தான் கடவுள் அன்பாக இருக்கிறார் என்று நினைக்கின்றது. ஆனால், கடவுள் எல்லா உயிர்களிடத்தும் ஒரே மாதிரியான அன்பைச் செலுத்துகிறார். ஸ்ரீமத் சித்பவானந்தரிடம் பயிற்சி பெற்று வந்து துறவியர்களுள் ஒருவர் கூறுவதாவது: “நான் ஸ்ரீமத் சித்பவானந்தரிடம் பேரன்பு வைத்திருந்தேன். ஆனால் நெருங்கிப் பழகுவதில்லை. நிர்வாகத்தைக் குறித்து இவரிடம் பேசுவதற்குத் துறவிகள் சிலர் அடிக்கடி இவரைச் சந்திப்பார்கள். இவரோடு நீண்ட நேரம் கலந்துரையாடுவார்கள். அப்பொழுதெல்லாம் நான் சாதாரணமானவன்; என்னிடத்தில் இவர்க்கு அன்பு இருக்க முடியாது என்று நினைத்துக்கொள்வது உண்டு. ஆனால் நான் அப்படி நினைத்தது தவறு என்பதைப் பல நிகழ்ச்சிகளில் இவர் நிரூபித்திருக்கிறார். சாதனைக்காக நான் உத்திரகாசி சென்று ஆறுமாதம் இருந்துவிட்டு வருகிறேன் என்று கேட்டபொழுது, “அப்படியா! நல்லது. அவ்வாறே அங்கு சென்று சாதனை செய்துவிட்டு வா” என்று கூறி அனுமதி வழங்கினார். பிறகு ஒருமுறை பரிவ்ராஜகனாகச் சிறிது காலம் வாழ்ந்து வர விரும்புகிறேன் என்று கேட்டபொழுது, “அவ்வாழ்வினால் உனக்கு ஒரு பயனும் ஏற்பட்டுவிடாது. போனால் புரிந்துகொள்வாய். போய்விட்டு வா” என்று என் விருப்பத்தை ஆமோதித்தார். அவர் கூறியது முற்றிலும் மெய்யானது என்பது என் பரிவ்ராஜக வாழ்க்கையில் எனக்கு அனுபவம் ஆயிற்று. யார்டத்திலும் ஒரே மாதிரியான அன்பு கொண்டிருந்தார் என்பதையும் இவருக்கு வேண்டியவர் வேண்டாதவர் இல்லை என்பதையும், இவர் யாரையும் புறக்கணிப்பதில்லை என்பதையும் இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் நான் அறிந்துகொண்டேன்”.
No comments:
Post a Comment