Saturday, February 2, 2013

*வீரனது பாங்கு!


சென்ற நூற்றாண்டில் நிகழப்பெற்ற ஒரு காட்சி. இந்தியாவின் பெருநகரில் ஒரு பள்ளிக்கூடம். அங்கு ஒரு வகுப்பில் பாடம் நடந்து கொண்டிருந்தது. ஆசிரியர் தமது முழுக் கவனத்தையும், போதனையில் செலுத்தி மிகுந்த ஆர்வத்துடன் பாடம் சொல்லிக் கொடுத்து வந்தார். மாணவர் சிலர் பாடத்தில் சிரத்தை கொள்ளாது தமக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். இந்த ஒழுங்கீனத்தைக் கண்ட ஆசிரியர் சினமுற்றவராய் அம்மாணவர்களைச் சுட்டிக்காட்டி, ‘நான் என்ன சொன்னேன் என்பதைக் கூறுவீர்களாக’ என்று ஆக்ஞாபித்தார். குற்றம் செய்த மாணவர்கள் பதில் கூறத் தெரியாது திகைத்து நின்றனர். ஏனெனில் அவர்கள் பாடத்தைக் கவனித்து வரவில்லை. உபாத்தியாயர் கூறியது அவர்கள் காதில் விழவில்லை. மனதிற்குள் புகவில்லை. இவ்வாறு குற்றம் புரிந்த மாணவருள் ஒருவன் அதிமேதாவி, மகா புத்திசாலி, வலிவு நிறைந்த உடலும், புத்தியின் கலை மிகுந்த முகமும் கொண்டவன். கண்டோர் மனத்தைக் கொள்ளை கொள்ளும் வசீகர சக்தியுடைய சிறுவன். அவனை அக்குற்றக் குழுவினில் கண்ட ஆசிரியரின் மனம் நொந்தது. ஆனாலும் பிழைக்கேற்ற பிராயச்சித்தத்தை அவனும் ஏற்றுத்தானே ஆகவேண்டும்! ‘உன்னாலும் பதில் கூற முடியாதோ?’ என்றார் ஆசிரியர், அவனைப் பார்த்து. அந்த மாணவனோ திகைக்கவில்லை. வாயைத் திறந்து கணீர் என்ற குரலில் வெகு தெளிவாக ஆசிரியர் சிறிது முன்னர் சொல்லி வந்த விஷயங்கள் யாவையும் அப்படியே ஒப்பித்துவிட்டான்.

மாணவர்களுக்கு இது பெருவிந்தையாக இருந்தது. ஏனெனில் அந்த கும்பலில் அதிகமாகப் பேசிக்கொண்டிருந்தவன் அந்த வசீகர சக்தியுடைய சிறுவன்தான். ஆனால் அவன் ஓர் அதிசயப் பிறவி. அவன் இளைஞன் உடல் போர்த்திய ஒரு மகாபுருஷன். இதை யாரும் அப்பொழுது அறியார்! அந்தச் சிறுவனே அதைத் தெளிவாக அறியான். ஆனாலும் அவனுடைய மனம் ஒரே சமயத்தில் பல விஷயங்களில் ஈடுபடக் கூடிய பேராற்றல் பெற்றிருந்தது. சாதாரண மனிதருடைய மனம் ஒரு சமயத்தில் ஒரு காரியத்தைத்தான் செய்ய வல்லது. ஆனால் அவனுடைய வாய் பேசிக்கொண்டிருந்தது; காது கேட்டுக்கொண்டும் இருந்தது.

ஆசிரியருக்கு எல்லாம் பெருவியப்பாக இருந்தது. அதிகமாகப் பேசியவன் வசீகரமான மாணவனே என்று மற்ற மாணவர்கள் சாதித்தனர். அவனோ கேட்ட கேள்விக்கு விடை கூறிவிட்டான். பதில் கூறாத மாணவர்களைத் தண்டிக்கும் முறையில் ஆசிரியர் அவர்களை நிற்கும்படிப் பணித்தார். அவர்களுடன் அவனும் எழுந்து நின்றான். ‘நீதான் பதில் கூறிவிட்டாயே. நீ நிற்க வேண்டாம்’ என்றார் ஆசிரியர். ‘மிகப் பேசியவன் நானே. ஆதலால் நான் மற்றவர் போல நிற்கக் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்று கூறி அவனும் மற்றவர் போலவே நின்று பிழையைக் கழித்தான்.

பிழை செய்வது மனித இயல்பு. ஆனால் குற்றத்தை மறைப்பது கோழையின் பாங்கு; அதை ஏற்றுக்கொள்வது வீரனது பாங்கு.

மேலே குறிப்பிட்ட அந்த சிறுவன் பின்னாளில் உலகம் போற்றும் விவேகானந்த சுவாமிகள் ஆனான். விவேகானந்தரிடமிருந்து வெளிப்போந்த ஆப்த வாக்கியம் ஒன்று இதோ உள்ளது:

“யாவற்றிற்கும் மேலாகப் பலம் கொண்டவராக இருங்கள். ஆண்மை மிகுந்தவர்களாக இருங்கள்! ஒருவன் துஷ்டனாக இருந்தாலும்கூட, அவன் ஆண்மை மிகுந்தவனாய், பலம் பொருந்தியவனாய் உள்ளவரையில் நான் அவனைக் கௌரவிப்பேன். ஏனெனில் அவனுடைய பலமானது என்றோ ஒரு நாள் அவனுடைய துஷ்டத்தனத்தை விட்டுவிடுமாறு செய்யும். சுயநல நோக்குடைய கர்மங்கள் யாவையுமேகூட அவன் தியஜித்து விடுமாறும் கூடச் செய்யும்; இறுதியில் சத்திய நிலைக்கு அவனை இட்டுச் செல்லவும் செய்யும்”.

சுவாமி விவேகானந்தர்

இன்று(3.2.2013, ஞாயிறு) சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி தினம் ஆகும். இந்த கட்டுரையானது ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் இயற்றிய ‘மாணவருக்கு ஒரு சொல்’ என்ற புத்தகத்திலிருந்து எடுத்து, சிறிது மாற்றம் செய்து  பதியப்பட்டுள்ளது. சுவாமி விவேகானந்தர் சொன்ன கருத்துக்களை அவருடைய ஜெயந்தியன்று மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment