Thursday, June 9, 2011

*சக்திகளின் சங்கமம் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்

கடுமையான சாதனைகள் மூலம் மகாசக்திகள்  கைவரப் பெற்றும் அவை குறித்து எள்ளளவும்  பெருமைப்படாமல் ''விட்டேன் என்ற எண்ணத்தை விட்ட" மகாபுருஷர் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.
   
எல்லாம் வல்ல அன்னை பராசக்தியின் மூன்று திருக்கோலங்களை பக்தர்கள் ஆனந்தக்களிப்போடு வழிபடுவார்கள்.  ஸ்ரீ மகாசரஸ்வதி, ஸ்ரீ மகாலக்ஷ்மி, ஸ்ரீ மகாகாளி ஆகியோர் அந்தத் திருவடிவங்கள். ஸ்ரீமத் சுவாமிகளிடம் இந்த மூன்று சக்திகளும் நிறைந்து இணைந்து வாழ்ந்திருந்தனர்.

தமிழ்நாட்டில் நாத்திகம் தலைவிரித்தாடிய காலம், தெய்வ நம்பிக்கை மட்டுமல்ல நமது புராணங்கள், தெய்வ வடிவங்கள், உபநிடதங்கள், தேவார திருவாசங்கள், ஸ்ரீமத் பகவத் கீதை ஆகிய அனைத்தின் மீதும் அவநம்பிக்கையும் வெறுப்பையும் வளர்க்க கேலியும், கிண்டலும் நிறைந்த புயல் வேக பிரசாரம் நடந்துவந்த காலம்;சம்ஸ்க்ருத மொழியின் மீது குரோதம் நிறைந்த அருவெறுப்பை வளர்த்துவிட்டிருந்த காலம், ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அந்தர்யோகம் என்ற ஒரு புதிய முறையை உருவாக்கினார். சத்சம்பாஷணை, சந்தேகம் தெளிதல் போன்ற முறைகளின் மூலம் தெய்வ வடிவங்களின் தத்துவங்கள், ஹிந்து சமயத்தின் அருமை பெருமைகள், யோகம், தியானம் முதலியவற்றின் நுட்பங்கள், ஸ்ரீ ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் மாண்புகள் முதலிய பல்வேறு விஷயங்களை குழந்தைகளுக்கும் புரிகிற விதத்தில் விளக்கி வந்தார். அவரது தவம் அவர்களது சொற்களின் மூலம் வெளிப்பட்டது. அலங்காரமும், ஆரவாரமும் இல்லாத இந்த சொற்கள் உள்ளத்தின் அடிவாரத்திலிருந்து புறப்பட்டு கேட்போருடைய நெஞ்சத்தில் நேராகச் சென்று பதியும். ஸ்ரீமத் பகவத்கீதைக்கு அவர் எழுதியுள்ள விளக்கவுரை அற்புதமானது. திருவாசகம், தாயுமானவர் பாடல்கள் முதலியவற்றிற்கு அவர் எழுதியுள்ள விளக்க நூல்கள் லட்சக்கணக்கான மக்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் இடம்பெறுகின்றன.
     
ஸ்ரீமகா சரஸ்வதி அவர் மூலம் அரிய ஞானத்தை வாரி வழங்கி வந்தார். அவர் நிறுவியுள்ள கல்லூரிகளும் கல்விக்கூடங்களும் இன்றும்கூட கலைமகளின் உறைவிடங்களாகத் திகழ்கின்றன. நல்ல தொண்டுகளுக்காக அவர் நிதிகோரியபோதெல்லாம் செல்வம் வந்து குவிந்தது. அவரது பணிகளைக் கூர்ந்து கவனித்து வந்த மக்கள் அள்ளி வழங்கினர். செழிப்பான வயல்கள், அழகிய பசுக்கள், பூஞ்சோலைகள் பூத்துக்குலுங்கும் இடத்தில் அவர் நிறுவியுள்ள குருகுலக் கல்விக்கூடங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. அவரது கல்விநிலையங்களில் வழங்கப்படும் ஆரோக்கியமான உணவு அங்கு கல்விபெறும் குழந்தைகளையும், இளைஞர்களையும் சத்துவகுணம் வாய்த்தவர்களாக ஆக்குகிறது. கட்டுபாட்டிற்கு அங்கே முதலிடம். சுவாமிகள் கடுமையான கட்டுப்பாட்டை வலியுறுத்துவார்கள். அதே நேரத்தில் சிறுவர்களுடன் அன்பாக விளையாடுவார்கள்.
   
அரிய புத்தகங்களை மலிவு விலையில் பக்தர்களுக்கு வழங்க அவர் செய்துள்ள ஏற்பாடு அற்புதமானது. நிதி அவரைத் தேடி வந்தது. திருமகள் அவருடன் அனந்தமாக நிலைத்து நின்றாள்.
      
ஸ்ரீ சுவாமிகள் அச்சம் என்பதையே அறியாதவர். அவரை எங்கும் மிரட்டி பணியவைக்க முடியாது. பல ஆண்டுக்காலம் அவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஊன்றி கவனித்து வந்தார். நாட்டு முன்னேற்றத்துக்கு சங்கம் கொடுக்கின்ற பயிற்சி ஒன்றுதான் அருமருந்து என்பதை உணர்ந்தவுடன் அதற்கு உறுதுணையாக நின்றார்.  

நல்லது என்று தோன்றுகின்ற காரியங்களை செய்யும்போது அவரது உறுதி அசாதாரணமானது. அவரது அஞ்சாநெஞ்சம், துணிவு ஆகியவை நமக்கு இன்றும் வழிகாட்டும்.

தாயினும் கனிந்த உள்ளம்
தளர்விலா தீரவீரம்
தீயினைபோன்ற தூய்மை
தென்றலைப்போன்ற தன்மை
மாயையும் அஞ்சும் ஞானம்

என்றெல்லாம் சுவாமி விவேகானந்தரை வர்ணிப்பார்கள். அவரை தரிசிக்க பாக்கியமற்ற நாம் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரில் அந்த பிரதிபலிப்பை முழுமையாகக் கண்டோம். அவர் மறையவில்லை, நமது நெஞ்சங்களில் குடிகொண்டு விளங்குகிறார். இனி தோன்றாத் துணையாக, ஒளிவிளக்காக அவர் நமக்கு வழிகாட்ட நமது தகுதியை வளர்த்துக்கொள்வோமாக.

No comments:

Post a Comment