Sunday, May 22, 2011

*'கீதை உபதேசம் செய்த கண்ணன் பால் வார்த்து வழியனுப்பியுள்ளான்'

          ஆன்மீக வாழ்வு வாழ்ந்தவர்களுக்கு மரணகாலத்தில் இறைவன் அவர்கள் விரும்பிய வடிவத்தில் காட்சி கொடுக்கின்றான். அன்பர் ஒருவர் தம்முடைய இறுதிக்காலத்தில் 'ஞானி ஒருவரின் பார்வை என் மீது பட வேண்டும்; அதற்கு ஏற்பாடு செய்வாயா?' என்று தம் மகளிடம் கேட்டுக்கொண்டார். மகளும் அப்பாவின் இறுதி எண்ணத்தை நிறைவேற்றிவைக்க எண்ணியபோது ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் நினைவு வந்தது. நேராகவே அவர் மகள் சுவாமிஜிக்குக் கடிதம் எழுதினார். கடிதத்தைப் பார்த்ததும் மரணத் தறுவாயில் இருப்பவர் தம் பக்தர் என்பதையும் அவருடைய இறுதி இச்சையை நிறைவேற்றி வைக்கவேண்டும் என்பதையும் உணர்ந்தார். அந்த அன்பர் தம் வாழ்க்கையில் தூத்துக்குடியிலேயே சிறந்த பக்தர்-இயக்கம் ஒன்றை உருவாக்கியவர் என்பதும் சுவாமிஜிக்குத் தெரியும். ஆகவே, தம் வருகையையும் தாம் வரும்போது குடும்பத்தார் எல்லாரும் வீட்டில் இருக்கவேண்டும் என்பதையும் கடிதம் மூலம் தெரிவித்தார். உரிய காலத்தில் அந்த அன்பர் இல்லத்துக்குச் சென்றார். சுவாமிஜி எழுதியபடி இல்லத்தில் எல்லாரும் கூடி இருந்தனர். அப்போது அங்கு நிகழ்ந்ததை அவர் மகள் கூறியதாவது: "ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் மௌனமாக எங்கள் அப்பாவைப் பரிவுடன் நோக்கி அன்புடன் பால் வார்த்தார். எங்கள் அம்மாவிடம், "உங்கள் கணவரின் ஆத்மா மேல்நோக்கிச் செல்கிறது. அதற்குத் தடங்கல் செய்யாமல் அமைதியுடன் இருக்க வேண்டும். ஏதாவது கேட்டால், 'கீதை உபதேசம் செய்த கண்ணன் பால் வார்த்து வழியனுப்பியுள்ளான்' என்று கூறுங்கள்" என்றார். இவர் பால் வார்த்துச் சென்றதும் அப்பாவிடம் அவர் மகள் இப்போது 'உங்களுக்கு திருப்திதானே' என்று கேட்டார். சிறிது நேர  மௌனத்திற்குப் பிறது அவர் தந்தையார், 'ஏதோ தெய்வீக நிகழ்ச்சி நடந்தது' என்று மட்டும் கூறி மிகவும் ஆழ்ந்த அமைதியுடன் இருந்தார். அன்று இரவே அவரின் உயிரும் மெல்ல மெல்ல அமைதியாகப் பிரிந்தது".

No comments:

Post a Comment