Wednesday, May 25, 2011

*சொல் வன்மை

"கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்"

   எனத் திருவள்ளுவர் சொல் வன்மை பற்றிக் கூறுகிறார்.

          இந்த குறளுக்கு விளக்கமாக ஸ்ரீமத் சித்பவானந்தரின் பேச்சாற்றல் அமைந்திருந்தது. இவருடைய பேச்சாற்றலை நேரில் கண்டு அனுபவித்த சந்நியாசினி ஒருவர் கூறுவதாவது: " சுவாமிஜியுடன் நாங்கள் சிலர் கேரள நாட்டுக்குப் பயணம் சென்றிருந்தோம். அங்குள்ள பக்தர் சிலரின் அழைப்பை ஏற்று அவர்கள் வீட்டுக்குச் சென்றோம். பக்தர்கள் இவரை வரவேற்பதில் பேரார்வமும், பெருமகிழ்ச்சியும் காட்டினார்கள். அவர்களின் பக்தி எத்தகையதாக இருந்தது என்பதை நேரில் கண்டு அனுபவித்தோம். அங்கிருந்து நாகர்கோயில் சென்றிருந்தோம். அங்கு ஒரு கல்லூரியில் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரை அழைத்திருந்தார்கள். நாங்கள் அங்கு சென்றவுடன் கல்லூரி நிர்வாகி இவரிடம் 'உங்களுடைய பேச்சைக் கேட்பதற்கு நாங்கள் ஆர்வமுடையவர்களாக இருக்கிறோம். உங்களுடைய பேச்சு மாணாக்கர்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் பயன்படும் என்று நினைத்துத் தங்களை அழைத்தோம். ஆனால் மாணாக்கர்களோ எதிர்ப்புத் தெரிவிக்கின்ற பாங்கில் இருக்கின்றார்கள். ஒரு வேளை கலவரத்தை உண்டுபண்ணிவிடுவார்களோ என்று அஞ்சுகின்றோம். தாங்கள் மாணவர்களுடைய நிலையை அறிந்து, அதற்கேற்றவாறு பேச வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம்.' என்று சொன்னார்கள். சுவாமிஜி அதற்கு 'அப்படியா?' என்று கூறிச் சிரித்துக்கொண்டார். கம்பீரமாக மேடையின் மீது நின்று ஆற்றல், அன்பு, அறிவு என்பனவற்றை விளக்கும் விதமாக ஒரு மணி நேரம் உணர்வோடு கூடிய அறவுரை ஆற்றினார். கடவுளைப் பற்றி பேச்சே எடுக்கவில்லை. இவர் ஆரம்பிக்கும்பொழுது மாணாக்க மாணாக்கியர் சிலர் மன்றத்தின்  உள்ளேயும் சிலர் வெளியே உள்ள மரத்தின் மேலேயும்  அமர்ந்திருந்தார்கள். பேசத் தொடங்கிய சிறிது நேரத்தில் மரத்தின் மேலிருந்த மாணவ மாணவிகள் மரத்திலிருந்து கீழே இறங்கி வந்து மன்றத்தினுள் அமைதியாக அமர்ந்து சொற்பொழிவை மிக்க ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்கள். சொற்பொழிவு முடிந்த பிறகு நிர்வாகியும் கல்லூரி முதல்வரும், 'தங்கள் பேச்சை மாணவர்கள் ஆழ்ந்து கேட்டனர். தாங்கள் அடிக்கடி வந்து இங்கு பேச வேண்டும்' என்று பணிவுடன் கேட்டுக்கொண்டார்கள். அவர்கள் எங்களிடம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது அவசியம் சுவாமிஜியை அழைத்து வரவேண்டும் என்னும் கருத்தை தெரிவித்துக்கொண்டார்கள். சுவாமிஜியுடைய பேச்சைக் கேட்டதும் மாணவர்களின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியதைப் பார்த்தோம்".

No comments:

Post a Comment