Sunday, May 22, 2011

*ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் சான்றோர் சந்திப்பு - 3

 மகாத்மா காந்தியடிகள்
          
          காந்தியடிகள் ஓய்வுக்காக நீலகிரிக்கு ஒரு வார காலம் சென்றிருந்தார். அவர் குன்னூரில் தங்கியிருந்தபொழுது அவரை பார்ப்பதற்குக் கடிதத்தின் மூலம் அனுமதி பெற்றுக்கொண்டு ஸ்ரீமத் சித்பவானந்தர் குன்னூருக்குச் சென்று காந்தியடிகளைச் சந்தித்தார். வாழ்வில் ஒவ்வொரு வினாடியையும் பயனுள்ள வகையில் காந்தியடிகள் பயன்படுத்தி வருவதை ஸ்ரீமத் சித்பவானந்தர் நேரில் கண்டார். வர்ணாச்ரம தர்மத்தைக் குறித்தும் கீதையின் தத்துவங்களைக் குறித்தும் இவரும், காந்தியடிகளும் தங்கள் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள். ஊட்டியிலுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துக்கும் காந்தல் மடத்துக்கும் எழுந்தருள வேண்டுமென்று இவர் காந்தியடிகளைக் கேட்டுக்கொண்டார். காந்தியடிகளும் இவரின் அழைப்பை ஏற்றுக்கொண்டு அவ்விரு மடங்களுக்கும் வரச் சம்மதம் தெரிவித்தார். ஊட்டியிலுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துக்கு காந்தியடிகள் வந்தபொழுது மடத்தில் உயர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், ஹரிஜனங்களும் சேர்ந்து பஜனை செய்துகொண்டிருந்தார்கள். காந்தியடிகள் பஜனையில் கலந்துகொண்டு பெருமகிழ்ச்சி அடைந்தார். அங்கிருந்து காந்தல் மடத்துக்கு ஸ்ரீமத் சித்பவானந்தர், காந்தயடிகளை அழைத்துச் சென்றார். அங்கு கூட்டம் ஒன்று பெரிய அளவில் கூடி இருந்தது. அந்த கூட்டத்தினரைக் காண்பதற்கு வாய்ப்பளித்த ஸ்ரீமத் சித்பவானந்தருக்குக் காந்தியடிகள் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்தார். அங்கிருந்து கோடப்பமந்து விநாயகர் கோவிலுக்கு இவர் காந்தியடிகளை அழைத்துச் சென்றார். காந்தியடிகள் அங்கு ஹரிஜனங்களுக்கு ஆலயப் பிரவேசம் செய்து வைத்தார். ஸ்ரீமத் சித்பவானந்தர் வாழ்க்கையில் காந்தியடிகளுடன் நீலகிரியில் சில இடங்களுக்குச் சென்றது ஓர் அற்புத நிகழ்ச்சியாக அமைந்திருந்தது.

No comments:

Post a Comment