Thursday, May 26, 2011

*ஏழைகளுக்கு இரங்கும் இதயம்!

தபோவனத்து சந்நியாசி ஒருவர் தமது அனுபவத்தை கூறியது:
"தபோவனத்துக்குச் சொந்தமான படுகை நிலத்தில் நெல் விளைந்து அறுவடை செய்து 500 நெல் மூட்டைகள் களத்தில் இருந்தன. திடீரென்று காவிரியில் வெள்ளப்பெருக்கெடுத்து மிக விரைவில்  படுகைக்குள் புகுந்துவிட்டது. நெல் மூட்டைகளை எல்லாம் களஞ்சியத்துக்குள் வைத்து நீர் புகாதவாறு அதன் வாயிலையும் அடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. வேலை முடிவதற்குள் வெள்ளம் அளவுக்கு மீறி வந்துவிட்டது. நானும், ஆட்களும் நீந்தி  கரை சேர்ந்தோம். பள்ளியிலிருந்த மேஜை, நாற்காலிகளெல்லாம் வெள்ளத்தில் மிதந்து சென்றன. நெல் மூட்டைகளை மட்டும் அந்த வெள்ளப் பெருக்கு விட்டு வைத்துச் செல்லுமா? சுமார் 600 மூட்டைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீணாயின. இவ்வளவு நாட்களாகப் பாடுபட்டுச் சேகரித்த நெல் ஒரு நொடியில் வெள்ளத்தால் பாழாய்விட்டதே என்று என் மனம் வேதனை அடைந்தது. இதே நிகழ்ச்சி நான் குடும்பத்தில் இருந்தபோது ஏற்பட்டிருந்தால் இறந்தே போயிருப்பேன். என் மன ஆறுதலுக்காக இந்நிகழ்ச்சியை இவரிடம் கூற வந்தேன். இந்த வெள்ளம் திருப்பராய்த்துறையைச் சுற்றியுள்ள  ஐந்தாறு கிராமங்களில் புகுந்து அந்த கிராம மக்கள் சுமார் 2000 பேர் திருப்பராய்த்துறை கோயிலில் வந்து அடைக்கலம் புகுந்திருந்தார்கள். படுகை நெல்லுக்கும் பள்ளிச் சாமான்களும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தைப் பெருந்துன்பத்துடன் இவரிடம் கூறி இவ்வளவு நஷ்டமாகப் போய்விட்டதே என்று வருந்தினேன். அதற்கு சுவாமிஜி 'படுகை நெல் போனது உனக்குப் பெருநஷ்டமாகப்போய்விட்டதா? ஏழை மக்கள் 2000 பேருக்குமேல் வீடு, வாசல்களை இழந்து உணவுக்கு வழியில்லாமல் திண்டாடுகிறார்கள். அவர்களைப்பற்றி நீ சிந்திக்கவே இல்லை. இப்போது கள்ஞ்சியத்தில் எவ்வளவு அரிசி மிச்சமிருக்கிறது? இருக்கிற அரிசியைச் சமைத்துக் கோயிலில் த்ங்கியுள்ள மக்களுக்குக் கொடுக்க முதலில் ஏற்பாடு செய்' எனக் கட்டளை இட்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் இவர் பரந்த உள்ளமும் ஏழைகளுக்கு இரங்கும் இதயமும் பெற்றிருந்தார் என்பது வெளிப்படையன்றோ!"

No comments:

Post a Comment