Sunday, May 22, 2011

*ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் சான்றோர் சந்திப்பு - 2

 நாராயணகுரு
    
          ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தருக்கு, சிறந்த ஞானியாக விளங்கிய நாராயணகுரு, காந்தல் ஓம்பிரகாச சுவாமிகள் முதலிய பெரியோர்களிடம் பழக்கமும், பக்தியும் உண்டு.

        நாராயணகுரு கேரளத்தில் பிறந்தவர். தாழ்ந்த குலத்தில் பிறந்த ஈழவர்களூக்குச் சிறந்த சேவை  செய்துள்ளார். தமிழ் நூல்களை நன்கு கற்றிருந்தார். ஒரு முறை நாராயண குருவை சந்தித்தபோது, 'நீ என்ன படித்துக்கொண்டிருக்கிறாய்' என்று அவர் கேட்டிருக்கிறார். 'தாயுமானவர் பாடல்' என்று சுவாமிஜி கூறியிருக்கிறார். 'சாதனத்திற்கு தாயுமானவர் பாடல்; சொரூப விளக்கத்திற்கு திருவாசகம். நீ திருவாசகம் படி' என்று நாராயண குரு சொல்லியிருக்கிறார். ஸ்ரீமத் சித்பவானந்தர் திருவாசகத்தை ஆழ்ந்து கற்பதற்கு நாராயணகுரு தூண்டுகோலாக இருந்தார். அதன் பின்புதான் சுவாமிஜி திருவாசகத்திற்கு விளக்கம் எழுத ஆரம்பித்தார். மஹாஞானியான நாராயணகுருவின் தொடர்பால் இவர் அருட்சக்தி மேலும் ஒளிர்வதாயிற்று.

   காந்தல் மடத்து ஓம்பிரகாச சுவாமிகள் வேதாந்தத்திலும் யோகசாதனையிலும் வல்லவர். ஊட்டியிலிருந்து ஐந்துகல் தொலைவிலுள்ள காந்தல் மடத்துக்கு அவர் தலைவராக இருந்தார். அவரிடம் இவர் இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்பு வைத்திருந்தார். காந்தல்மடம் ஹரிஜனங்களுக்குத் தொண்டு செய்வதில் முன்னணியில் நின்றது.

No comments:

Post a Comment