Saturday, May 21, 2011

*எண்ணிப் பார்க்கிறோம்......

Dr. V.C. பழனியப்பன்,
மனநல மருத்துவர்,
கோவில்பட்டி 628 501,
தூத்துக்குடி மாவட்டம்.
 

தபோவன பழைய மாணவர், 
1958-58 - 1965-66

        ஆத்ம ஞானத்தில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை - 639 115, ஸ்தாபகர் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்களிடமிருந்து பரமஞானத்தையும், இதுவரை அவர்கள் அனுபவிக்காத அனுபவத்தையும் பெறுவார்கள். தபோவன செல்வங்கள்/குழந்தைகள் என்று சுவாமிஜி அவர்களால் அன்புடனும் பாசமுடனும் கூறப்பட்ட தபோவனத்தில் பயின்ற நாங்கள் பெற்ற அனுபவம் மேலும் பெற்ற பேறு அளவிட முடியாதது.
     
        தற்போது திருக்குற்றாலத்தில் பருவ அந்தர்யோகம் நடந்துகொண்டு இருக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமம், ஐந்தருவி ரோடு, குற்றாலம் என்ற ஸ்தாபனத்தை நிறுவ பொருளாதார உதவியும் உடல் தொண்டும் நல்கிய இலஞ்சி சைவத்திரு குற்றாலிங்கம் பிள்ளை அவர்களுடன் என் தகப்பனார் தொடர்பு இருந்த காரணத்தால் அவருடைய பேரன் திரு. I.K. சுப்பிரமணியனும் நானும் 1957-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தபோவனத்தில் சேர்ந்தோம். 8 வயது நிரம்பிய 4 ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்ட நான் எங்களின் பெற்றோரின் பிரிவை மறக்கச் செய்ய, சுவாமிஜி அவர்கள் எங்கள் மீது அதிக அன்பும், பாசமும் செலுத்தினார். இந்த பாச உணர்வு எங்கள் கல்வியில் நாட்டம் செலுத்த பெரிதும் உதவியது.
     
        காலையில் எங்களை படுக்கையிலிருந்து எழுப்பிவிடும் சுவாமிஜி அவர்கள் உடற்பயிற்சிக்குப் பிறகு எங்களுடன் பள்ளி வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்திற்கு வந்து நடைபயிற்சி செய்வார்கள். பெற்றோர்கள் உதவியில்லாமல் குளிக்கும் எங்களுக்கு குளிக்க உதவி செய்வார்கள். காவிரிக்கரையில் இருந்த காரணத்தால் கண்டிப்பாக நீச்சல் பழக வேண்டும். அந்த கலையை அழகாக நயமாக சொல்லிக்கொடுத்து தேர்ச்சி அடைய செய்தனர்.
     
        வகுப்புவாரியாக சுழற்சி முறையில் நீச்சல் குளத்தில் குளிக்க வேண்டும். குதிக்கத் தயார் நிலையில் அல்லது தயங்கிய நிலையில் கரையில் நிற்கும் எங்களை எங்களுக்குத் தெரியாமல் பின்பக்கமாக தண்ணீரில் தள்ளிவிடுவார்கள். தள்ளிவிட்டது யார் என்று கோபத்துடன் நீருக்கு மேல் வரும் எங்களை அன்புடன் பரிவாக நோக்குவார்கள். காலை உணவுக்குப் பிறகு விடுதியில் படித்துக் கொண்டிக்கும்போது வகுப்புவாரியாக சுவாமிஜி அவர்களை அவர்களுடைய அறையில் சந்திக்கும்போது வருகையை குறித்துக்கொண்டு தேங்காய் உருண்டை பிரசாதம், மிட்டாய் வழங்கி கன்னத்தில் தட்டி உற்சாகப்படுத்துவார்கள்.
     
         விடுதியில் மதிய உணவு எடுக்கும்போது எல்லோருடைய தட்டிலும் உணவு பரிமாறும் வரை 'நாமஜபம்' செய்ய வேண்டும். உணவுடன் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்கிறார்களா எனக் கவனித்து ஒவ்வொரு வரிசையாக கண்காணிப்பார்கள். உணவு தேவையானால் மீண்டும் மீண்டும் பரிமாறுவார்கள். ஆனால் உணவை மீதம் வைக்கக்கூடாது என்பதில் அதிக கண்டிப்பு உண்டு. உணவுத் தட்டை கழுவுவதற்கு முன்பும் உணவை சுத்தமாக உண்டு இருக்கிறோமா என்று உணவுக்கூட வாசலில் நின்று கவனிப்பார்கள். மாலையில் வகுப்புகளுக்குப் பிறகு பள்ளி வளாகத்தில் சிற்றுண்டி வழங்கப்படும். பிறகு 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மைதானத்தில் நடைபெறும் விளையாட்டில் ஈடுபடவேண்டும். நேரம் கிடைக்குபோது சுவாமிஜி அவர்களும் விளையாட்டில் சேர்ந்துகொள்வார்கள். உடற்தகுதி பயிற்சி மையம் (ஜிம்னேசியம்) கொடுக்கும் பயிற்சிகளை ஆய்வு செய்வார்கள்.
     
         இரவு உணவுக்குப் பிறகு பகவத்கீதை, வாழிய வகுப்பு 9.30 மணி வரை நடக்கும். இடைப்பட்ட பகுதியில் சுவாமிஜி அவர்களுடைய அறைக்குச் செல்லுவோம். அவர்களுடன் 4,5 வகுப்பு மாணவர்கள் அவருடைய தோளிலும் மடியிலும் ஏறி விளையாட முயன்றால் அனுமதிப்பார்கள். சிரித்த முகத்துடன் இனிமையாக கேட்பதற்கு பதில் கூறுவார்கள். அதே நேரத்தில் 8, 9, 10 வகுப்பு மாணவர்களுடன் செஸ் விளையாடுவார்கள் அல்லது சொல்லித்தருவார்கள். இரவு 8.40 மணிக்கு மணியடித்ததும் சுவாமிஜி அவர்கள் 'உம்' என சத்தம் கொடுத்ததும் யாவரும் கலைந்து அடுத்த வகுப்பிற்கு சென்றடைய வேண்டும்.
     
          சனிக்கிழமை வார ஓய்வு. ஞாயிறு அன்று சூரிய பகவானுக்கு உகந்த நாளாக இருப்பதால் வார நிகழ்ச்சியை ஆரம்பித்து செம்மையாக இருக்க வேண்டும் என்பதில் கருத்தாக இருப்பார்கள். சனிக்கிழமை மதிய உணவுக்குப்பிறகு குழுவாகப் பிரிந்து விடுதியில் ஒவ்வொரு இடத்தையும் சுத்தம் செய்ய பொறுப்பு வழங்கப்படும். மறு சனிக்கிழமை வேறு பணி வரிசைப்படி வழங்கப்படும். முடியும் தருவாயில் எப்படி சுத்தமாக முடித்திருக்கிறார்கள் என ஆய்வு செய்து மதிப்பெண்கள் வழங்குவார்கள். பணி செய்யும்போது வந்து, நாங்கள் சரியாக பணி செய்யாமல் இருந்தாலோ, செய்யத் தெரியாமல் இருந்தால் அவர்களே அந்தப் பணியைச் செய்து வழி காட்டுவார்கள். பணி என்பது கழிவறை சுத்தத்தில் இருந்து தங்கும் இடம், படுக்கும் இடம், உணவுக்கூடம், பூஜை அறை வரையில் அடங்கும். 5-6 மாதத்திற்கு ஒரு தடவை வழங்கப்பட்ட அணிகளின் மதிப்பெண்களை ஆய்வு செய்து, தரம்பிரித்து, தேனீர் விருந்து வழங்கி பணிக்கு ஒரு ஊக்கம் கொடுப்பார்கள். நாங்கள் பயின்ற தபோவன பயிற்சி எங்கள் வாழ்க்கையில் யாரையும் எதிர்பார்க்காமல் இருக்கும் இடத்தை சுத்தமாக பேணிக்காக்க தற்போதும் இயலுகிறது.
    
        சுவாமிஜி அவர்களை நாங்கள் பல நேரங்களில் சந்தித்திருப்பதால் எங்களைப்பற்றியும், எங்கள் முன்னேற்றம் பற்றியும், நிலைமை பற்றியும் அவருக்கு நன்கு தெரியும். ஆதலால் கால இடைவெளிகளுக்குப் பிறகு அவரை சந்தித்தபொழுது, எங்களுக்கு குருகுலத்தில் கொடுத்த பயிற்சிப்படி சுவாமிஜியை வணங்கியபின், அறிமுகத்தேவை ஏதும் இன்றி உடன் கலந்துரையாடுவார்கள்.
     
          4, 5 வகுப்பு காலத்தில் விடுப்பின்போது தபோவனத்தில் இருந்து சொந்த ஊருக்கு(திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகில்) தனியாக போவதும் திரும்புவதும் பாதுகாப்பற்றது என்ற காரணத்தால் அந்தப் பகுதியைச் சார்ந்த பெற்றோர்களின் துணைகொண்டு பயணம் செய்யவேண்டும். விடுமுறை முடியும் தருவாயில் திருக்குற்றாலத்தில் சுவாமிஜி அவர்களுக்கு நிகழ்ச்சி இருந்தால் எங்களுடைய பெற்றோர்களுக்குப் பதிலாக சுவாமிஜி அவர்களுடன் தொடர்வண்டியில் (ரயில்) திரும்பினோம். பயணம் தொடங்கியவுடன் ரயில் பெட்டியில் கூட்டம் இல்லாத நேரத்தில் எங்களை விளையாடவிட்டு ரசிப்பார்கள். நாங்கள் சோர்வடைந்து அவர்கள் அருகில் அமரும்போது கதை சொல்வார்கள். உணவு உண்டபின் அவர்களின் மடியில் படுத்து உறங்குவதற்கும் அனுமதிப்பார்கள். திருச்சிராப்பள்ளி சந்திப்பு வந்ததும் எங்களை எழுப்பி தயார் நிலையில் உள்ள ஈரோடு விரைவு வண்டியில் ஏற்றிவிடுவார்கள். தூக்கம் தொடரும். எலமனூர் ரயில் நிலையம் வந்தவுடன் அவர்களுடன் இறங்குவோம். பைகளைத் தூக்கிக்கொண்டு தபோவனம் வரை அன்னாரின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடப்போம். தபோவனத்தை அடைந்ததும், எங்களை உறங்க வைத்துவிட்டு சுவாமிஜி அவர்கள் ஓய்வடுக்கச் சென்றுவிடுவார்கள். அன்று கிடைத்த அனுபவத்தை உரிமைகளை மறுநாள் பயன்படுத்த அனுமதிக்கமாட்டார்கள். அவர்களுக்கு எல்லாக் குழந்தைகளும் ஒன்றுதான்.
     
        சமஸ்கிருதம் 7வது வகுப்பில் இருந்து படிக்க வேண்டும். ஸ்ரீமத் பகவத்கீதை பாராயணம் தொடங்கிவிடுவார்கள். வகுப்புவாரியாக அத்தியாயங்களைப் படிப்பதில் தேர்வுபெற்று குழுவாக சுவாமிஜி அவர்களிடம் பிழையின்றி படித்துக்காட்ட வேண்டும். தேர்ச்சிபெறத் தவறியவர்களுக்கு மீண்டும் சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்வார்கள். பலமுறை வாய்ப்புக் கொடுத்தும் தேர்ச்சி பெறத் தவறியவர்களை விடுமுறைக்கு ஊருக்குச்  செல்லாமல் விடுதியில் இருந்து படிக்கவும், தேர்வு பெறவும் வற்புறுத்துவார்கள்.
     
          அதிக குறும்பு செய்யும்போது பிரம்பால் அடித்துத்தான் திருத்தவேண்டும் என்ற நிலைமை வரும்போது ஏனைய மாணவர்களும் அதே தவற்றைச் செய்யக்கூடாது என்ற நோக்கத்துடன் மாலை பிரார்த்தனைக்குப் பிறகு எல்லோர் முன்பும் தண்டனை வழங்கப்படும். தண்டனை அடைந்தோர் மறுநால் காலை தபோவன மருந்தகத்திற்குச் சென்று சிகிச்சை பெற்று, இரவு உணவுக்குப் பிறகு மருந்தகக் குறிப்புகளுடன் சுவாமிஜி அவர்களை, அவர்களுடைய அறையில் சந்திக்க வேண்டும். தண்டிக்கப்பட்டவனை சுவாமிஜி அவர்கள் பரிவுடன் விசாரித்து மருந்து போடுவார்கள்; அறிவுரை வழங்குவார்கள். மறுதினம் உணவுக்கூடத்தில் சுவாமிஜி அவர்களின் எதிரில் உட்கார வேண்டும். தேவைப்பட்டால் ஊட்டச்சத்து உணவுடன் வழங்கப்படும். "அடிப்பதும், அணைப்பதும் நீதானையா".
     
       ஸ்ரீமத் பகவத்கீதை பாராயணம் தினமும் மேற்பார்வையுடன் நடக்கும். சுவாமிஜி அவர்களிடம் பகவத் கீதையை பொருள் தெரியாமல் வாசிக்கிறோம், ஏன் அர்த்தம் சொல்லிக்கொடுக்கக்கூடாது என்று வினா எழுப்பினோம். அதற்கு அவர்கள் புன்னகை மாறாமல் இளம் வயதில் ஆர்வத்துடன் மனதில் செலுத்தி 'மனப்பாடம்' செய்வது எளிது. வயது முதிர்ந்த பிறகு மனதில் நிறுத்துவது கடினம். மேலும் அர்த்தங்களைக் கூறினால் புரிந்துகொள்வது கடினம். ஆகையால் இளம் வயதில் மனதில் நிறுத்தி பின்வரும் காலகட்டத்தில் அர்த்தங்களை கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள் என பகன்றார்கள்.
     
     காலம் பொன்னானது என்ற கருத்தை நாங்கள் குருகுலத்தில் மாணவர்களாக இருக்கும்போது உணர்ந்து, செயல்பட வேண்டும் என்ற காரணத்தால் அட்டவணைப்படி செயலாற்ற எங்களை நடத்திச் செல்வார்கள். பொதுவாக சுவாமிஜி அவர்கள் எந்த நிகழ்ச்சியையும் குறிப்பிட்ட நேரத்தில் யாரையும் எதிர்பார்க்காமல் தொடங்கி முடிப்பார்கள். இந்த இனிய பழக்கம் தற்போதும் குறிப்பிட்ட பணியை குறிப்பிட்ட நேரத்தில் காலம் கடத்தாமல் எங்களை செயல்பட வழிவகுக்கிறது.
      
          பள்ளிப்படிப்பு முடிந்த பிறகும் சுவாமிஜி அவர்களை சந்திக்கும் ஒவ்வொரு சமயத்திலும் எங்களுடைய முன்னேற்றத்தை அறிந்து மகிழ்ச்சி அடைவார்கள். தேவையான ஊக்கத்தை நல்குவார்கள். அறிவுறைகளை வழங்குவார்கள். குடும்பத்தாருடன் தபோவனத்திற்கு வந்து செல்லவேண்டும் என விரும்புவார்கள்.
      
        சுவாமிஜி அவர்கள் அடிக்கடி கூறுவது போல தபோவனச் செல்வங்களாகிய நாங்கள் பாக்கியவான்கள்தான்.

No comments:

Post a Comment